ஹிஜ்ரி வருடம் 1434 ஷவ்வால் மாதம் பிறை 15
விஜய வருடம் ஆவணி மாதம் 07ம் திகதி வெள்ளிக்கிழமை
FRIDAY, AUGUST , 23 , 2013
வரு. 81 இல. 200
 

2013 ஜ{ன் மாதத்திற்கு பின் இறக்குமதி செய்யப்பட்ட பால்மாக்களில் DCD இல்லை

2013 ஜ{ன் மாதத்திற்கு பின் இறக்குமதி செய்யப்பட்ட பால்மாக்களில் DCD இல்லை

ஐ.ரி.ஐ. நிலையத்தின் ஆய்வில் ஊர்ஜpதம்: சர்வதேச தரத்தில் ஆய்வுகூடம்

நியூசிலாந்திலிருந்து கடந்த வருடம் இறுதியில் இறக்குமதி செய்யப்பட்ட பால்மா மாதிரிகளில் டிசிடி இரசாயனப் பதார்த்தம் கலந்திருந்த போதிலும் இவ்வருடம் ஜூன் மாதம் இறக்குமதி செய்யப்பட்டு துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பால்மா மாதிரிகளில் டிசிடி இல்லாமை தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் ITI பரிசோதனைகள் மூலம் நிரூபணமாகியுள்ளதென தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

இதன்படி, 2013 ஜுன் முதல் வெளி வரும் புதிய பால்மா மாதிரிகளில் டி. சி. டி. கலப்படம் இருக்காது என்ற நியூசிலாந்து அரசாங்கத்தின் உறுதிமொழி யுடன் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் இணங்குகின்ற போதிலும் இறக்குமதி செய்யப்படுகின்ற அனைத்து பால்மா வகைகளினதும் வெவ்வேறு காலப் பகுதிக்குரிய மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் செயன்முறையை நிறுவனம் கைவிடப் போவதில்லையெனவும் அமைச்சர் சுட்டிக் காட்டினார்.

டி. சி.டி. இரசாயனத்தை பருகுவதன் மூலம் உடலில் ஏற்படக் கூடிய பாதிப்புக்கள் குறித்து இதுவரை திட்டவட்டமாக கண்டறியப்படாத போதிலும் அதனை கண்டுபிடிப்பதற்கான பரிசோதனை கூட எலிகளாக எமது பிள்ளைகளை பலிகொடுக்க முடியாது என்பதில் நாம் உறுதியாகவுள்ளோம்.

மேலும் பல்வேறு தரப்பினரும் குற்றஞ்சுமத்துவது போல் இல்லாமல் எமது தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் சகலவிதமான இரசாயன பரிசோதனைகளையும் முன்னெடுக்கக் கூடிய வசதிகளும் திறமையான விஞ்ஞானிகளும் உள்ளனர் என்றும் அமைச்சர் ஆணித்தரமாக கூறினார்.

கொழும்பு 07 இல் அமைந்துள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் இறக்குமதி செய்யப்பட்டுள்ள பால்மா மாதிரிகளின் டி. சி. டி. இரசாயன கலப்படம் தொடர்பிலான சர்ச்சை குறித்து விளக்கமளிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்றுக் காலை நடைபெற்றது. இதன் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

இம்மாநாட்டில், நிறுவனத்தின் தலைவர் பணிப்பாளர் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் தம்மால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகள் மற்றும் அதற்கூடாக கண்டு பிடிக்கப்பட்டவை குறித்தும் செய்தியாளர்களுக்கு விளக்கமளித்தனர்.

நியூசிலாந்தில் கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு செப்டம்பர் வரையில் கறவை மாடுகள் உண்ணும் புற்களுக்கு களைநாசினியாக டி. சி. டி. என்னும் இரசாயனப் பதார்த்தம் பயன்படுத்தப்பட்டுள்ளது. டி. சி.டி. உபயோகத்தினால் பால் உற்பத்திக்கு எந்தவொரு பாதிப்பும் வராது என்ற கொள்கையடிப்படையிலேயே இது பயன்படுத்தப்பட்ட போதிலும் பால்மாவில் இதன் தாக்கம் குறித்து அறியப்பட்டதைத் தொடர்ந்து அந்நாட்டின் அரசாங்கம் இதன் பாவனையை தடைசெய்துள்ளது.

2012 செப்டம்பருடன் இதன் பாவனை நிறுத்தப்பட்ட போதிலும் அதனுடைய தாக்கத்தின் விளைவாக அதே வருடம் அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் ஆகிய மாதங்களில் குறித்த இலக்கத்தின் கீழ் ‘பேட்ச் நம்பர்) இறக்குமதி செய்யப்பட்ட பால்மா மாதிரிகள் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் கீழ் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதன்போது, அங்கர் முழு ஆடை பால்மா, அங்கர் 1 பிளஸ், மலிபன் ஆடை நீக்கப்பட்ட பால்மா, டயமன்ட் ஆகிய 04 பாலமா வகைகளிலும் டி. சி. டி. யினளவு 0.6 இலும் சற்று அதிகமாகக் காணப்பட்டது.

இதனையடுத்தே சுகாதார அமைச்சின் உணவுக் கட்டுப்பாட்டுக் குழுவின் பரிந்துரைக்கமைய மேற்படி பால்மா கம்பனிகளும் பொதுச் சுகாதார அதிகாரிகளும் நாடு முழுவதுமுள்ள விற்பனை நிலையங்களிலிருந்த 2012 அக்டோபர் முதல் டிசம்பர் வரையான காலப்பகுதிக்குரிய பால்மாக்கள் உடனடியாக அகற்றப்பட்டன.

இந்நிலையில், 2013 ஜூன் மாதம் முதல் நியூசிலாந்திலிருந்து வரும் பால்மாக்களில் டி. சி. டி. கலப்படம் இருக்காது என அந்நாட்டு அரசாங்கம் உறுதி மொழி வழங்கியிருந்தது. இருப்பினும், சர்ச்சையைத் தொடர்ந்து பாதுகாப்புக் கருதி இறக்குமதி செய்யப்படும் எந்தவொரு பால்மாவையும் நாட்டுக்குள் அனுமதிக்க வேண்டாமெனவும் சுகாதார அமைச்சு ஏற்கனவே அறிவித்திருந்தது.

இதற்கிடையில், சுகாதார அமைச்சினால் கடந்த வாரம் துறைமுகத்திலிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட பால்மா மாதிரிகள் தகவல் தொழில் நுட்ப நிறுவனத்தின் சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. இதன்போது அந்நாட்டு அரசாங்கம் கூறியது போன்று, 2013 ஜூன் மாதத்தில் இறக்குமதி செய்யப்பட்ட பால்மா மாதிரிகளில் டி. சி.டி. காணப்படவில்லை.

இருந்தபோதிலும், வெவ்வேறு காலப் பகுதிக்குரியவை. தனியார் இறக்குமதியாளர்களினால் எக்காலத்திற்குள்ளும் நாட்டிற்குள் கொண்டு வரப்படலாம். ஆகையினால் இறக்குமதி செய்யப்படும் அனைத்து ‘பட்ச்’ இயக்கங்களும் கட்டம் கட்டடாக சோதனைக்குட்படுத்தப்பட்ட பின்னரே நுகர்வுக்கு அனுமதிக்கப்படுமாகையினால் பொதுமக்கள் இது குறித்து வீணாக அச்சமோ கலக்கமோ அடையத் தேவையில்லை எனவும் அமைச்சர் கூறினார்.

டி. சி. டி. நச்சுப் பதார்த்தமா?

மெலமைன் நச்சுப் பதார்த்தம் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அதன் மூலக்கூற்றில் ஒரு பகுதியே டி. சி. டி. யாகும். டி. சி. டி. நஞ்சா என்பதும் அதனால் உடலில் ஏற்படக் கூடிய அறிகுறிகள் மற்றும் பின்விளைவுகள் இதுவரை கண்டறியப்படாத உண்மை. இருப்பினும், இது மெலமைனின் ஒரு மூலக் கூறு. ஆகையினால் இதுவும் நஞ்சாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

டி. டி. டி. என்னும் களைநாசினி, க்ளோறோ ப்ளோறோ காபனினால் ஓஸோன் படையில் துவாரம் ஏற்படல் ஊள்ளிட்ட பல விடயங்கள் சுமார் 30 வருட ஆராய்ச்சியின் பின்னர் உடலுக்கும் பூமிக்கும் தீயவையென்பது நிரூபிக்கப்பட்டது. அவ்வாறு நீண்ட காலத்துக்குப் பின்னர் டி. சி. டி. யின் உண்மைத்தன்மையும் கண்டறியப்படக் கூடும். அதுவரை காலமும் எமது குழந்தைகளை பரிசோதனைக்கூடத்தின் எலிகளாக்க எம்மால் இடம்கொடுக்க முடியாது.

ஒரு அமைச்சராகவன்றி ஒரு தந்தை என்னும் வகையிலும் எமது நாட்டுக் குழந்தைகள் சந்தேகத்திற்கிடமான இரசாயனப் பதார்த்தம் கலந்த பாலை வழங்குவதற்கு தனியார் நிறுவனங்களுக்கு இடம் வழங்க முடியாது.

இதுவே டி. சி. டி. கலந்த பால்மாவை தடை செய்வதற்குரிய காரணமேயின்றி பலரும் குற்றஞ்சாட்டப்படுவது போல் தனியார் நிறுவனங்களின் வளர்ச்சியை வீழ்த்துவதற்கும் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதற்குமான சூழ்ச்சி கிடையாது எனவும் அமைச்சர் பதிலளித்தார்.

தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் ஆய்வுகூடம்

எந்தவொரு ஆய்வினையும் உபகரணங்களை வைத்துக் கொண்டு உடனடியாக ஆரம்பித்து விட முடியாது. அதற்கென விசேட ஒழுங்கு முறையொன்றினை எமது விஞ்ஞானிகள் கைவசம் வைத்திருக்கவில்லை.

எனவே, கடந்த முறை இதே சர்ச்சை ஏற்பட்டிருந்த போது எம்மால் இதுகுறித்து ஆய்வு செய்ய முடியாது எனக் கூறியதற்கான காரணம் இதுதான். தற்போது எமது விஞ்ஞானிகள் டி. சி. டி. கண்டறிவதற்கான ஒழுங்குமுறையொன்றினை ஸ்தாபித்துள்ளனர். எமது ஆய்வுகூடம் ஐ. எஸ். ஓ. தரச் சான்றிதழைப் பெற்றுள்ளது. நான்கு விசேட நிபுணத்துவம் பெற்ற விஞ்ஞானிகளின் கீழேயே அனைத்து சோதனைகளும் முன்னெடுக்கப் பட்டன. பரிசோதனைக்கென நியூசிலாந்தில் பயன்படுத்தும் டி. சி. டி. இரசாயன பதார்த்தம் அமெரிக்காவிலிருந்து கொண்டு வரப்பட்டது எனவும் கூறினார்.

அதேவேளை, பரிசோதனைக்குட்படுத்த ப்பட்ட அங்கர், லக்ஸ்பிரே, லங்கா ச. தோ. ச., மில்குரோ, ரத்தி, மலிபன், நெஸ்பிரே, ஹைலண்ட், பெலவத்த ஆகிய பால்மாக்களில் டி. சி.டி. கலப்படம் இல்லையென்பதும் நிரூபணமாகியுள்ளது.

நிறுவனத் தலைவர் பேராசிரியர் டபிள்யு. அபேவிக்ரம, மற்றும் பணிப்பாளர் டாக்டர் ஜி. ஏ. எல். பிரேமகுமார ஆகியோர் தாம் மேற்கொண்ட பரிசோதனைகள் குறித்து இதன்போது பூரண விளக்கமளித்தனர்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி