ஹிஜ்ரி வருடம் 1434 ஷவ்வால் மாதம் பிறை 15
விஜய வருடம் ஆவணி மாதம் 07ம் திகதி வெள்ளிக்கிழமை
FRIDAY, AUGUST , 23 , 2013
வரு. 81 இல. 200
 

1,11,333 தபால் மூல வாக்குச்சீட்டுகள் தபாலில் அனுப்பி வைப்பு

1,11,333 தபால் மூல வாக்குச்சீட்டுகள் தபாலில் அனுப்பி வைப்பு

வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களின் 10 நிர்வாக மாவட்டங்களுக்குமான தபால்மூல வாக்கெடுப்பிற்கான வாக்குச் சீட்டுக்கள் நேற்று தபால் திணைக்களத்தில் காப்புறுதி அஞ்சல் செய்யப்பட்டது.

தபால் மூல வாக்களிப்புக்கு தகுதி பெற்ற அனைவருக்குமான வாக்குச் சீட்டுக்கள் அடங்கிய ஒரு இலட்சத்து 11 ஆயிரத்து 333 பொதிகள் தேர்தல்கள் திணைக்களத்தினால் காப்புறுதி அஞ்சல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் பிரதி ஆணையாளர் எம். மொஹமட் தெரிவித்தார்.

தேர்தல்கள் திணைக்களம் உத்தியோகபூர்வ தபால்மூல வாக்களிப்பு நடைபெறும் தினங்களாக செப்டம்பர் 09 மற்றும் 10 ஆகிய திகதிகளை ஏற்கனவே பிரகடனம் செய்துள்ளது.

வாக்குச்சீட்டுக்கள் அடங்கிய பொதிகள் மாவட்ட செயலகங்கள் தோறுமுள்ள அலுவலகங்களின் அத்தாட்சி அலுவலகர்களது பெயர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். அதனை அவர்கள் தமது காப்பறையில் பாதுகாப்பாக வைத்து செப்டம்பர் 09 ஆம் திகதியன்று கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் இரகசிய வாக்கெடுப்பு நடத்துவர்.

அன்றைய தினம் வாக்களிக்க முடியாதவர்கள் 10 ஆம் திகதியன்று வாக்களிக்க முடியும். அடையாளமிடப்பட்ட வாக்குச் சீட்டுக்கள் பொதி செய்து கடித உறையினூடாக தபால் தெரிவத்தாட்சி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். அடையாளமிடப்படாதவை மாவட்ட தேர்தல் அலுவலகங்களுக்கு அனுப்பிவைக்கப்படும். மேற்படி இரு தினங்களிலும் வாக்களிக்க முடியாதவர்கள் தமது மாவட்ட தேர்தல் அலுவலகங்களுக்குச் சென்று தமது ஆள் அடையாளத்தை நிரூபித்து 21 ஆம் திகதிக்கு முன்னர் வாக்களிக்க முடியும்.

அனைத்து வாக்குச் சீட்டுக்கும் 21 ஆம் திகதி மாலை 4 மணிக்கு முன்னர் தெரிவத்தாட்சி அதிகாரிகளை சென்றடைய வேண்டும். அதற்கேற்ற வகையில் தபால்மூல வாக்களிப்பு பூர்த்தி செய்யப்பட வேண்டுமெனவும் பிரதி தேர்தல்கள் ஆணையாளர் கேட்டுக்கொண்டார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி