ஹிஜ்ரி வருடம் 1434 ஷவ்வால் மாதம் பிறை 15
விஜய வருடம் ஆவணி மாதம் 07ம் திகதி வெள்ளிக்கிழமை
FRIDAY, AUGUST , 23 , 2013
வரு. 81 இல. 200
 

கருணைமனு குறித்து தமிழகத்திடம் விபரம் கோருகிறார் பேரறிவாளன்

ராஜீவ் கொலை குற்றவாளி:

கருணைமனு குறித்து தமிழகத்திடம் விபரம் கோருகிறார் பேரறிவாளன்

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு தற்போது வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பேரறிவாளன் தனது கருணை மனு குறித்து பல்வேறு விபரங்களைக் கோரியுள்ளார்.

வீடியோகான் ஃப்ரென்சிங் மூலம் மாநிலத் தகவல் ஆணையத்திடம் தனது கருணைமனு குறித்து பல்வேறு விவரங்களை அவர் நேற்று கோரியுள்ளாரென்று இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

அத்துடன் லீனா மேரி ஜார்ஜ் என்ற ஆராய்ச்சியாளருக்கு தன்னை சிறையில் பேட்டி எடுக்க அனுமதி மறுக்கப்பட்டது ஏன் எனவும் தான் தெரிந்துகொள்ள விரும்புவதாக கேட்டதாக தெரிவிக்கப்படு கின்றது. வேலூர் சிறைக் கண்காணிப்பாளர் அறையிலிருந்தே காணொளி இணைப்பின் மூலம் மாநிலத் தகவல் ஆணையருடன் நேற்றுக் காலை தொடர்புகொண்டு பல்வேறு தகவல்களை அவர் கோரினார் என்றும் அந்த செய்திகளில் தெரிவிக்கப் படுகின்றது. இன்றைய சந்திப்பில் மாநில சிறைத் துறை சார்பில் அதிகாரி ஒருவரும் பங்கேற்றிருக்கிறார்.

விடுதலைப் புலிகளின் தற்கொலை குண்டுதாரியால் 1991 ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார்.

அப்போது பேரறிவாளன் 1999 ஆம் ஆண்டு ஜூன் முதல் தனது கருணை மனு மீது என்னவெல்லாம் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருக்கின்றன, குடியரசுத் தலைவர் தனது மனுவினை நிராகரித்தது தொடர்பான விவரங்கள், தன்னைக் கடந்த ஆண்டு சந்திக்க வந்த ஆராய்ச்சியாளர் லீனா ஜார்ஜுக்கு சிறைத்துறை அனுமதி மறுத்தது குறித்த தகவல்கள், தனது உடல் நிலை குறித்த ஆவணங்கள் எனப் பலவற்றை கோரியிருக்கிறார்.

கோரப்படும் தகவல்களை அரசு துறைகள் மறுக்குமானால் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் ஆணையரை அணுகலாம் என்ற விதியின் கீழேயே பேரறிவாளனின் தற்போதைய முயற்சிகள் வந்துள்ளன என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

அவரது கோரிக்கைகளை மிகவும் அனுசரணையுடன் மாநிலத் தகவல் ஆணைய அதிகாரிகள் கேட்டதாகக் கூறிய பேரறிவாளனின் தரப்பினர், ஆணையத்தின் உத்தரவு பின்னர் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தனர்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி