ஹிஜ்ரி வருடம் 1434 ஷவ்வால் மாதம் பிறை 15
விஜய வருடம் ஆவணி மாதம் 07ம் திகதி வெள்ளிக்கிழமை
FRIDAY, AUGUST , 23 , 2013
வரு. 81 இல. 200
 

ஊடகவியலாளர்கள் மிகவும் பொறுப்புடன் செயற்படவேண்டும்

ஊடகவியலாளர்கள் மிகவும் பொறுப்புடன் செயற்படவேண்டும்

நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பில் செய்திகள் எழுதும் போதும் தகவல்களை வெளியிடும் போதும் ஊடகவியலாளர்கள் மிகவும் பொறுப்புடனும் கவனமாகவும் செயற்பட வேண்டும் என்று பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரி ஜெனரல் ஜகத் ஜயசூரிய கேட்டுக்கொண்டார்.

நாட்டின் தேசிய பாதுகாப்பு மற்றும் தேசிய நலனை கருத்திற்கொண்டே இந்த வேண்டுகோளை விடுப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

நாட்டின் தற்போதை நிலைமைகள் தொடர்பாக விளக்கமளிக்கும் பொருட்டு பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி ஜெனரல் ஜகத் ஜயசூரிய பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பான அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகவியலாளர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

கொழும்பிலுள்ள பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்திலுள்ள பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில்:-

அடுத்து வரும் சில மாதங்களில் எமது நாட்டில் பல்வேறு முக்கிய நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. அவற்றில் பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் மாநாடு, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் நவநீதம் பிள்ளையின் இலங்கைக்கான வருகை, விஷேடமாக வடக்கில் நடைபெறவுள்ள வட மாகாண தேர்தல் என்பனவாகும். இந்நிலையில் எமது நாட்டில் ஏதாவது ஒரு பிரச்சினை ஏற்படுவதை பலர் எதிர்பார்த்துக்கொண்டிரு க்கின்றார்கள். இதனை சந்தர்ப்பமாக பயன்படுத்தி, நாட்டில் தற்பொழுது காணப்படும் சட்டத்தையும், ஒழுங்கையும் சீர்குழைக்க முயற்சிக்கின்றனர்.

எனவேதான் தேசிய பாதுகாப்பு விடயங்கள் தொடர்பில் செய்தி எழுதும் போதும், தகவல்களை வெளியிடும் போதும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.

புலிகள் இராணுவ ரீதியில் தோற்கடிக்கப்பட்டபோதிலும், அவர்களது ஆதரவாளர்கள், புலம்பெயர் அமைப்புகள் இன்றும் எமக்கு எதிராக செயற்பட்டு வருகின்றனர்.

யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர இராணுவத்தினர் மனிதாபிமான நடவடிக்கைகளை முன்னெடுத்த அதே சமயம், ஊடகங்களும் பாரிய ஒத்துழைப்பையும் நடவடிக்கையையும் முன்னெடுத்தன.

எனவே நாட்டின் நலன், எதிர்காலத்தை கருத்திற்கொண்டு தொடர்ந்தும் ஊடகவியலாளர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி