ஹிஜ்ரி வருடம் 1434 ஷவ்வால் மாதம் பிறை 15
விஜய வருடம் ஆவணி மாதம் 07ம் திகதி வெள்ளிக்கிழமை
FRIDAY, AUGUST , 23 , 2013
வரு. 81 இல. 200
 

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை முடிவுக்கு கொண்டுவர புதிய யோசனை

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை முடிவுக்கு கொண்டுவர புதிய யோசனை

* மீனவர்களை விடுவித்து வள்ளங்களை தடுத்து வைத்தல்

* கூட்டு நடவடிக்கை குழுவை மீண்டும் செயற்படுத்தல்

* தமிழ் நாட்டு முதலமைச்சரின் இரட்டை நிலைப்பாட்டை களைதல்

அத்துமீறி இலங்கை கடற்பரப்பிற்குள் நுழையும் இந்திய மீன்பிடி வள்ளங்களை கைப்பற்றி தடுத்து வைத்துக் கொண்டு மீனவர்களை மட்டும் உடனடியாக விடுதலை செய்யும் விதத்தில் புதிய நடைமுறையொன்றை கொண்டு வருவது பற்றி கடற்றொழில் அமைச்சு ஆலோசித்து வருவதாக அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ண தெரிவித்தார்.

இது தொடர்பாக சட்டமா அதிபரின் ஆலோசனை பெறப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தமிழக மீனவர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த இதுபோன்ற கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியம் ஏற்பட்டுள்ளது. எனவே மீனவர்களை விடுதலை செய்வதுடன் அவர்களது வள்ளங்களை தடுத்து வைத்துக்கொள்வதற்கு ஏதுவாக நடைமுறை யொன்றை கடைப்பிடிக்க கூடியவாறு தேவையான சட்ட நடவடிக்கைகள் குறித்து சட்ட மா அதிபரிடம் கோரப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சட்டவிரோதமான முறையில் இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து சட்டவிரோத மீன்பிடி உபகரணங்களை உபயோகித்து மீன் பிடிப்பில் ஈடுபடுவதுடன் கடல் வளத்தையும் அழித்து வருகின்றனர். இதனை மத்திய அரசும் ஏற்றுக்கொண்டுள்ளது.

ஆனால், இலங்கையில் வட பகுதியிலுள்ள தமிழ் மக்களின் மனித உரிமைகள் மீறப்படுவதாக குரல் கொடுக்கும் தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, மனித உரிமைகளை மீறுபவர்களுக்கு சார்பாகவும் குரல் கொடுத்துக்கொண்டிருக்கிறார். அவரது இரட்டை வேடம் இதன் மூலம் புலனாகிறது.

தமிழகத்திலிருந்து அத்து மீறி நுழையும் வள்ளங்கள் பெரும்பாலும் தமிழ்நாடு அரசிலுள்ள முக்கிய அமைச்சர்களது என்பதும் எமக்குத் தெரியும். முதலமைச்சர் தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுக்கவில்லை. அவர் வள்ளத்தின் உரிமையாளர்களுக்காக குரல் கொடுக்கிறார்.

பிற்பகல் 2.00 மணியளவில் இலங்கை கடற்பரப்பிற்குள் நுழையும் சுமார் 1000 தமிழக மீன்பிடி வள்ளங்கள் மாலை 4.00 மணி வரை மீன்பிடிப்பில் ஈடுபட்டு திரும்புகின்றனர்.

இவர்களது அத்துமீறல்கள் பற்றி இந்து சமுத்திர சர்வதேச டூனா ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ய முடியும். அவ்வாறு முறைப்பாடு செய்தால் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ள இந்தியா தடை செய்யப்படும். ஆனால் இந்தியா எமது நட்பு நாடு என்ற ரீதியில் நாம் முறைப்பாடு செய்யப்போவதில்லை. இரு நாடுகளுக்கும் இடையேயுள்ள நட்பு ரீதியாக பிரச்சினைக்கு தீர்வு காண்பதையே விரும்புகிறோம்.

அத்துமீறிய இந்திய மீனவர்களின் வருகையை தடுப்பது பற்றியும் தமிழக எல்லைக்குள் இலங்கை மீனவர்கள் அத்துமீறி செல்வதை தடுப்பது பற்றியும் இரு நாடுகளுக்கும் இடையே கூட்டு நடவடிக்கை குழு கடந்த 2012 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நியமிக்கப்பட்டது.

ஒவ்வொரு 6 மாதத்துக்கு ஒரு முறையும் குழு கூடவேண்டும். அடுத்த குழுக் கூட்டம் புதுடில்லியில் கூடியிருக்க வேண்டும். எனினும் இந்தியா இதில் அக்கறை காட்டவில்லை. ஏனெனில் தமிழக மீனவர்களின் அத்துமீறிய நுழைவு உண்மை என்பதை நாம் இந்திய பிரதமருக்கு சான்றுகளுடன் நிரூபித்துள் ளோம்.

குழுக் கூட்டத்தில் இலங்கைக்கு என்ன பதில் அளிப்பது என்பது தான். இந்தியாவின் இன்றைய பிரச்சினையாகவுள்ளது.

எது எவ்வாறு இருப்பினும் இலங்கை கடற்பரைப்பினுள் ஒரு நிமிட மேனும் அத்துமீறி நுழைந்து மீன்பிடிக்க தமிழக மீனவர்களுக்கு அனுமதி அளிக்கப்போவதில்லை. வரும் அத்தனை பேரும் கைது செய்யப்படுவார்கள். சர்வதேச கடல் எல்லைக்கோடு என்பது எமது தணித்துவமானது, அதனை மீற இடமளிக்க முடியாது.

கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்படும்போது அவர்களது வள்ளங்களுடன் விடுதலை செய்யப்படுவதால் மீண்டும், மீண்டும் அவர்கள் வந்துகொண்டே இருப்பார்கள். எனவே தான் வள்ளங்களை மாத்திரம் தடுத்து வைக்க புதிய நடைமுறையை அமுல்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் ராஜித சேனாரட்ண தெரிவித்தார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி