ஹிஜ்ரி வருடம் 1434 ஸபர் மாதம் பிறை 25
நந்தன வருடம் மார்கழி மாதம் 24ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY  ,JANUARY, 08, 2013
வரு. 80 இல. 07
 
என் உருவத்தை திரையில் பார்த்தபோது உடம்பெல்லாம் சிலிர்த்து போனது -ரஜினி

என் உருவத்தை திரையில் பார்த்தபோது உடம்பெல்லாம் சிலிர்த்து போனது -ரஜினி

அபூர்வராகங்கள் படத்தில் நடித்து முடிக்கும்வரை சிவாஜிராவ் ஆக இருந்தவர். பிறகு ரஜினிகாந்த் ஆக மாறினார். புதிய பெயரை சூட்டியவர் டைரக்டர் கே. பாலசந்தர். இதுபற்றி ரஜினிகாந்த் கூறியிருப்பதாவது:-

அபூர்வராகங்கள் படத்திற்காக, நான் இன்னொரு காட்சியில் நடித்தேன். நானும், ஸ்ரீவித்யாவும் பங்குகொள்ளும் லவ் சீன் இரண்டு பேரும் ஒருத்தர் கையை ஒருத்தர் பிடித்துக்கொண்டு, சிரித்துக்கொண்டும், பேசிக்கொண்டும் வரவேண்டும். அக்காட்சியில் வசனம் கிடையாது. வெறும் உதட்டசைவு மட்டும்தான்.

இதனால், உங்கள் இஷ்டப்படி ஏதாவது பேசிக்கொண்டும், சிரித்துக்கொண்டும் நடந்து வாருங்கள் என்று சொன்னார்கள். நான் கன்னடத்தில் பேச ஸ்ரீவித்யா மலையாலத்தில் பேசினார். இந்தக் காட்சி முடிந்தது. ‘நீங்க வீட்டுக்குப் போகலாம்’ என்றார்கள். நான் மேக்கப்பைக் கலைத்துவிட்டு வெளியே வந்தேன். அபூர்வராகங்கள் படப்பிடிப்பு அத்துடன் முடிவடைந்தது.

என் காட்சிகளுக்கு வசனம் பேச (டப்பிங்) ஜெமினி ஸ்டூடியோவுக்குப் போனேன். அப்போது கமல்ஹாசனும், ஸ்ரீவித்யாவும் ‘டப்பிங்கில்’ வசனம் பேசிக்கொண்டிருந்தார்கள்.

என்னுடைய காட்சி எப்போது வரும் என்று காத்திருந்தேன். திடீரென்று திரையில் ஒரு காட்சி கோட்டு போட்ட ஒரு தாடி ஆசாமி கதவைத் திறந்து கொண்டு வருகிறான். ஏதோ பேசுகிறான். என்னால் அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. அப்புறம்தான் தெரிந்தது அது நான்தான் என்று.

என்னை மறந்து அந்தக் காட்சியைப் பார்க்கிறேன். அதே காட்சி சுற்றிச்சுற்றி வருகிறது. வசனம் பேசுவதை மறந்து அதையே பார்த்துக் கொண்டு இருக்கிறேன். என் உருவத்தைத் திரையில் பார்த்த போது உடம்பெல்லாம் சிலிர்த்துப் போச்சி இதற்காகத்தானே இவ்வளவு நாள் காத்துக்கிட்டிருந்தேன்.

இதை கவனித்துக் கொண்டிருந்த டைரக்டர் பாலசந்தர் சேர் ‘என்ன! வசனத்தைப் பேசலாமா?’ என்று கூறியதும், நான் இந்த உலகத்துக்குத் திரும்பி வந்தேன்.

இந்த சமயத்தில் ஒன்றை சொல்ல வேண்டும். எனக்கு தமிழ் சரிவரத் தெரியாததால் வேறு யாரையாவது எனக்குக் குரல் கொடுக்கச் சொல்லலாம் என்று சிலர் கூறினார்கள். பாலசந்தர் சேர் அதை ஏற்கவில்லை. கூடவே கூடாது ஒரிஜினல் வொய்ஸ்தான் வேண்டும்’ என்று கூறிவிட்டார். அபூர்வராகங்களில் எனக்கு வசனம் கொஞ்சம்தான். அதை எப்படி உச்சரிக்க வேண்டும் என்று பாலசந்தர் சேர் சொல்லிக் கொடுத்தார். அதை அப்படியே பேசினேன். அதை டைரக்டர் ‘ஓகே’ செய்தார். டப்பிங் வேலை முடிந்தது. இவ்வாறு குறிப்பிட்ட ரஜினிகாந்த், தனக்கு அந்தப் பெயர் வந்தது பற்றி சொன்னதாவது:-

1975 ஆகஸ்ட் 15ம் திகதி அபூர்வராகங்கள் படம் வெளிவரும் என்று திகதி குறிப்பிடப்பட்டது.

பாலசந்தர் சேர் என்னை அழைத்தார். ‘டைட்டிலில் பெயர் போட வேண்டும். சிவாஜிராவ் என்ற பெயர் வேண்டாம். ஏனென்றால் ஏற்கனவே நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இருப்பதால், சிவாஜி என்ற பெயர் வேண்டாம். ‘ராவ்( என்கிற பெயரும் தமிழ்நாட்டுக்குப் பெருந்தாது என்றார். “நீங்கள் ஏதாவது பெயர் சொல்லுங்க சேர்” என்று கூறிவிட்டுத் திரும்பினேன். என் நண்பர்களிடம் கலந்து ஆலோசித்தேன். ‘சரத்’ ‘ஆர். எஸ். கெய்க்வாட்’ என்று இரண்டு பெயர்கள் என் மனதில் இருந்தன. அதைச் சொன்னேன். நண்பர்கள் எல்லோரும் ஒட்டுமொத்தமாக ‘நன்றாக இல்லை’ என்று கூறினார்கள்.

மறுபடியும் பாலசந்தர் சேர் கிட்டப் போய் நீங்களே ஆசிர்வாதம் செய்து ஒரு பெயர் வையுங்க! என்றேன். அந்த நாள் என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள். பெளர்ணமி தினம்.

பாலசந்தர் சேர் சொன்னார். என்னுடைய மேஜர் சந்திரகாந்த் நாடகத்தில் சந்திரகாந்துக்கு இரண்டு பிள்ளைகள். ஒருவன் ஸ்ரீகாந்த், மற்றவன் ரஜினிகாந்த். ஸ்ரீகாந்த் என்ற பெயரை ஏற்கனவே ஒருவருக்கு வைத்தாகிவிட்டது. ரஜினிகாந்த் என்ற பெயரை யாருக்கு வைக்கலாம் என்று ரொம்ப நாளா நினைத்துக் கொண்டிருந்தேன். அதை உனக்கு வைக்கிறேன்.

இவ்வாறு பாலசந்தர் சொன்னதும், அவர் காலைத் தொட்டுக் கும்பிட்டேன். “நல்ல வில்லனா வரணும் என்று ஆசிர்வாதம் செய்யுங்க’ என்றேன். ‘வில்லன் எதுக்கப்பா’ நீ பெரிய நடிகனாக வருவே பார்த்துக் கொண்டே இரு’ என்றார் பாலசந்தர் சேர்.

எனக்குத் தாங்க முடியாத உற்சாகம். நேராக மெரீனா கடற்கரைக்கு ஓடினேன். கடற்கரை மணலில் உட்கார்த்து நீலக்கடலை நீண்ட நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன். எனக்கு மனக்கஷ்டம் வந்தாலும் உற்சாகம் வந்தாலும் கடற்கரைக்குச் சென்று தனியாக உட்கார்ந்து சிந்தனையில் மூழ்கிவிடுவேன்.

இவ்வாறு ரஜினி கூறியுள்ளார்.

1975ம் ஆண்டு, ஆகஸ்ட் 15ம்திகதி அபூர்வராகங்கள் ரிலீஸ் ஆயிற்று.

மாறுபட்ட கதை அம்சம் கொண்ட படம். பாலசந்தர் தன் படங்களில் தனி முத்திரை பதித்துக் கொண்டிருந்த காலக்கட்டம்.எனவே, அதை டைரக்டர் படமாகத்தான் ரசிகர்கள் நினைத்தார்கள்.

சென்னை தியாகராய நகரில் உள்ள கிருஷ்ணவேணி தியேட்டரிலும் இப்படம் ரிலீஸ் ஆகியிருந்தது. படம் பார்க்கப் போனார் ரஜினி. டிக்கெட் கிடைக்கவில்லை.

தியேட்டர் மனேஜரை சந்தித்து நான் இந்தப் படத்தில் நடித்திருக்கிறேன் எனக்கு ஒரு டிக்கெட் வேண்டும் என்று கெஞ்சிக் கேட்டுக்கொண்டார். அவரை மேலும் கீழுமாகப் பார்த்த மனேஜர் இரக்கப்பட்டு ஒரு டிக்கெட் கொடுத்தார்.

துள்ளிக்குதித்து ஓடிய ரஜினி திரையில் தன் உருவத்தைப் பார்த்து மகிழ்ந்தார். நம்கனவு நிறைவேறிவிட்டது. வில்லன் வேடங்களாவது தொடர்ந்து கிடைக்கும்” என்று நினைத்தார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி