ஹிஜ்ரி வருடம் 1434 ஸபர் மாதம் பிறை 25
நந்தன வருடம் மார்கழி மாதம் 24ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY  ,JANUARY, 08, 2013
வரு. 80 இல. 07
 
ஏமாற்றங்களும் நம்பிக்கைகளும்


 

ஏமாற்றங்களும் நம்பிக்கைகளும்

தமிழின் முன்னணி நடிகர்கள் அனைவருமே விலைமதிப்பற்ற நாயகர்களாக பரிணாம வளர்ச்சி அடைந்திருப்பதை உணர்த்தியபடியே 2012ம் ஆண்டு நிறைவு பெற்றிருக்கிறது.

அஜீத்தின் பில்லா-2, விஜய்யின் துப்பாக்கி, சூர்யாவின் மாற்றான், விக்ரமின் தாண்டவம் ஆகிய அனைத்துப் படங்களின் களமுமே விலைமதிப்பற்ற நகரைத்தான் பின்புலமாகக் கொண்டிருக்கின்றன. தமிழ்ச் சினிமாவின் சந்தை விரிவும், வசூலுக்கான சாத்தியங்களும் பெருகிக் கொண்டு வருவதன் வெளிப்பாடு இது.

ரூபாய் 100 கோடி வசூலை கடந்த இரண்டாவது தமிழ்ப் படம் என்ற பெருமையை துப்பாக்கி பெற்றிருக்கிறது. பழைய கதையை புதிய தொழில்நுட்பத்துடன் சொல்லும் இப்படம் கொமர்ஷியல் திரைப்படங்களுக்கான திரைக்கதையில் ஒரு பாய்ச்சலை நிகழ்த்தியிருக்கிறது என்றாலும் சிறுபான்மை சமூகத்தினரை மட்டுமே தீவிரவாதிகளாக அடையாளப்படுத்தியிருப்பது இப்படத்தின் வெற்றியில் பதிந்த அழிக்க முடியாத கரும்புள்ளி.

நகைச்சுவை என்பதையும் தாண்டி ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படம் நிகழ்த்தியிருக்கும் சாதனை அபாரமானது. சினிமாவின் வேலை கதை சொல்வதல்ல. நிகழ்ச்சி அல்லது சம்பவங்களின் சங்கிலித் தொடர் வழியாக ஒரு பயணத்தை விவரிப்பதே ஸ்கிரிப்ட் என்பதை மீண்டும் அழுத்தமாக நிரூபித்திருக்கும் படம் இது.

ஒருவகையில் கலகலப்புக்கும் இது பொருந்தும். ஒரு இடைவெளிக்குப் பிறகு சுந்தர் சி இயக்கியிருக்கும் இப்படம் துணுக்குத் தோரணம் என்ற அடைமொழியில் இருந்து மைக்ரோ மில்லி மீட்டர் அளவில் தப்பித்திருக்கிறது.

சுந்தர பாண்டியனையும் வெறும் கொமெடி படம் என்ற குடுவையில் அடக்கிவிட முடியாது. சிறு நகரங்களின் பஸ் பயணத்தை, அதன் வழியாக அவர்களது வாழ்வியலை பதிவு செய்ய முயற்சித்துள்ள படம் இது. ஆனால், ஆதிக்க சாதியின் கொடூரமான கரத்தை தன்னையும் அறியாமல் இப்படம் ஆதரிப்பது மைனஸ்.

பெரிய பெரிய நட்சத்திரங்கள் எல்லாம் ரசிகர்களை ஏமாற்றிய இந்த ஆண்டில்தால் பல புதியவர்கள், மிகப்பெரிய மாற்றத்தை தமிழ்ச் சினிமாவில் ஏற்படுத்தியிருக்கிறார்கள். அம்புலி 3டி படத்தை இப்படித்தான் பார்க்க வேண்டியிருக்கிறது. குறைந்த பட்ஜெட்டில் டிஜிட்டல் கெமராவை பயன்படுத்தி ஹொலிவூட் தரத்தில் உருவாக்கப்பட்ட இப்படம். புறக்கணிக்க முடியாத முத்திரையை பதித்திருக்கிறது.

போலவே குறும்படங்களை எடுத்து தங்களை நிரூபித்த பல இளைஞர்கள் பெரிய திரையில் சடுகுடு விளையாடி இருக்கிறார்கள். ‘காதலில் சொதப்புவது எப்படி’ ‘பீட்சா’ ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ ஆகியவை இதற்கு நல்ல உதாரணங்கள். இந்த மூன்று படங்களுமே இதுவரை நம்பப்பட்டு வந்த திரைக்கதைக்கான மரபை அலட்சியமாக மீறியிருக்கின்றன.

அடித்து நொறுக்கியிருக்கின்றன. யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்பது போல வரும் ஆண்டுகளின் புதிய பாணியில் தமிழ் சினிமா ஜொலிக்கப் போவதை இந்த மூன்று படங்களின் வெற்றிகள் உணர்த் துகின்றன. பழைய கர்ணன் வெறும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டதால் மட்டுதே ரீ ரிலிஸ் ஆகி ஓடியது என்று சொல்வது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதற்கு சமம் அந்தப் படம் பேசும் அரசியல், காலம் கடந்தும் நிற்கிறது. வெற்றியின் ஆட்சுமம் அடங்கியிருக்கிறது. வெறும் புராணப்படமாக இல்லாமல், மனித உணர்வுகளின் சங்கமமாக இந்தப் படம் உருவாக்கப்பட்டிப்பதை மனதில் கொள்வது நல்லது.

புறநகர் பகுதியில் வாழும் தலித் மக்களின் வாழ்வியலை நேர்மையாக பதிவு செய்த வகையில் அட்டகத்தி முக்கியத்துவம் பெறுகிறது. கொஞ்சம் பிசகினாலும் பிரசார படமாக மாறியிருக்கும் என்ற ஆபத்தில் இருந்து தப்பித்திருக்கும் சாட்டையை இந்தப் பட்டியலில் இணைக்காவிட்டால் கட்டை வேகாது உயர் நடுத்தர வர்க்கத்தின் மனநிலையையும், உழைக்கும் மக்களின் வாழ்வியலையும் ரத்தமும் சதையுமாக பதிவு செய்துள்ள வழக்கு என் 18/9, தமிழ்ச் சினிமா பெருமைப்பட வேண்டிய படங்களில் ஒன்றுதான்.

டப்பிங் படமாக இருந்தாலும் நேரடியாக எடுக்கப்பட்ட தமிழ்ப் படம் போல் காட்சியளித்த நான் ஈ, ஒரு இயக்கநரின் அர்ப்பணிப்பு எந்த அளவுக்கு ஒரு படத்துக்கு முக்கியத்துவம் என்பதை உரக்க கூவியிருக்கிறது. புளித்துப் போன வழி வாங்கும் கதையை சீட்டின் நுனியில் அமர்ந்து பார்க்கும் வகையில் எடுக்கப்பட்டிருப்பது இப்படத்தின் ப்ளஸ். ஒரு படத்தை எந்தளவுக்கு நேர்மையாக ரீமேக் செய்ய வேண்டும் என்பதற்கு நண்பன் உதாரணம் டைட்டில் கார்டில் திரைக்கதை என்ற தலைப்பின் கீழ் கூட, தன் பெயரை இயக்குநர் ஷங்கர் போட்டுக் கொள்ளவில்லை மற்ற ரீமேக் இயக்குநர்கள் கற்க வேண்டிய பாடம் இது. பல வகைகளில் கடந்த ஆண்டு தமிழ் சினிமாவுக்கு ஏமாற்றத்தை அளித்திருக்கிறது. என்றாலும் புதியவர்களின் வருகை நம்பிக்கை கீற்றாக ஒளிவீசுகிறது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி