புத் 63 இல. 12

விரோதி வருடம் பங்குனி மாதம் 07ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1431 ர. ஆகிர் பிறை 04

SUNDAY MARCH 21, 2010

 
.

வயது வேறுபாடு திருமணத்தின் பின்னர் உறவைப் பாதிக்குமா?

வயது வேறுபாடு திருமணத்தின் பின்னர் உறவைப் பாதிக்குமா?

அக்கா, எனது மகள் பிறப்பிலேயே குறைபாடு உடையவள். இப்போது வயது 22. ஆனாலும் தனக்கு ஏற்படும் எத்தகைய மாற்றங்களையும் அறியாதவளாக இருக்கிறாள். எனக்குப் பின் அவளை யார் பார்த்துக் கொள்வது என்ற பயம் என்னை ஆட்டிப் படைக்கின்றது. உங்கள் ஆலோசனை என்ன?

ராணி,

கொழும்பு - 14

பதில்: உங்கள் மகளுக்குப் பிறப்பில் இருந்தே என்ன குறைபாடு என்பதை நீங்கள் குறிப்பிடவில்லை. நீங்கள் எழுதியதைப் பார்க்கும் போது மன வளர்ச்சிக் குறைபாடாக இருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது.

ஆயினும் உறுதி செய்ய முடியவில்லை. என்ன குறைபாடாக இருப்பினும் முதலில் பொருத்தமான வைத்திய நிபுணரை அணுகி எந்த அளவுக்கு முன்னேற்றத்தைக் கொண்டு வர முடியுமோ அதைச் செய்ய முயற்சி செய்ய வேண்டும்.

நாளை யாருக்கு என்ன நடக்கும் என்பது ஒருவருக்கும் தெரியாது. நன்றாக இருக்கும் பிள்ளைகளுக்கும் நாளை ஒரு வருத்தம் வரலாம். அப்போது அவர்களை யார் பார்ப்பார்கள் என்பது ஒருவருக்கும் தெரியாது.

“பாலத்தை அடைவதற்கு முன்னர் அதைக் கடக்க முயற்சி செய்ய வேண்டாம்” என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு.

எதிர்காலத்தில் வருமோ என்று பயப்படுகிற ஒரு பிரச்சினை பற்றி இப்போது கவலைப்படுவதை விட இப்போது உங்கள் மகளுக்கு எப்படி உதவ முடியும் என்று சிந்திப்பதே ஆரோக்கியமானது. உங்களுக்கு அதிக அளவு பதற்றமாக இருந்தால் ஓர் உளவள ஆலோசகரை நாடலாம்.


அக்கா எனக்கு வயது 28. நான் காதலிப்பவர் என்னிலும் ஆறு வருடங்கள் இளையவர். எங்கள் காதலுக்கு இன்னமும் பெற்றோரின் அனுமதி கிடைக்கவில்லை. இந்த வயது வேறுபாடு திருமணத்தின் பின்னர் எங்கள் உறவைப் பாதிக்குமா?

ஆயிஸா,

கம்பளை.

பதில்: திருமணத்துக்கு முன்னரோ, பின்னரோ உறவை நல்ல நிலையில் வைத்திருப்பது பெரும்பாலும் உங்கள் எண்ணம், உணர்வு, நடத்தை மனப்பாங்கு ஆகியவற்றில் தான் தங்கியிருக்கும்.

“நாங்கள் சந்தோஷமாக இருப்போம்” என்று நீங்கள் உறுதியாக நம்பினால் இருக்கலாம். ஆயினும் சமூகத்தால் பொதுவாக ஏற்றுக் கொள்ளப்படும் விடயங்களைப் பின்பற்றினால் நெருக்கீடுகள் குறைவாக இருக்கும்.

பெற்றோரின் ஆசீர்வாதத்தோடு திருமணம் நடைபெற்றால் புதிய வாழ்வைக் கொண்டு நடத்தத் தேவையான ஆதரவு வலைப்பின்னல் இருக்கும். வயது வித்தியாசம் தொடர்பாகச் சமூகம் விமர்சிக்கலாம்.

அதைத் தாங்கிக் கொள்ளும் வலிமை இருக்க வேண்டும். சாதக பாதகங்களை ஆராய்ந்து முடிவுக்கு வாருங்கள்.


அக்கா, எனக்கு 50 வயது. ஆனால் இன்னமும் மாதவிலக்கு நிற்கவில்லை. அவ்வாறு 50 வயதுக்குப் பின்னர் மாதவிலக்கு நிற்பது சரியில்லை என்கிறார்களே?

கமலா,

நீர்கொழும்பு.

பதில்: மாதவிலக்கு ஆரம்பமாவதும், பின்னர் அது நின்று போவதும் ஒவ்வொரு சாதாரண பெண்ணுக்கும் அவர்களின் வாழ்வுக் காலத்தில் நடைபெறும் உடற் றொழிலியல் மாற்றங்களாகும்.

மாத விலக்கு நின்று போகும் வயது சராசரியாக 48 என்று சொல்வார்கள். ஆயினும் எமது உடலின் ஒவ்வொரு சம நிலைப் பெறுமானங்களும் ஒரு வீச்சு எல்லைக்குள் சாதாரணம் என்று குறிப்பிடப்படுவதை நீங்கள் அறிவீர்கள்.

உதாரணமாக எமது உடல் வெப்பநிலை 98.4 ச ஜீ என்று சொல்லப்பட்டாலும் கூட அது 97ச ஜீ ஆக இருந்தாலோ அல்லது 98.8ச ஜீ ஆக இருந்தாலோ எமக்கு ஒரு அசாதாரண நிலை இருப்பதாகக் கருதப்படுவதில்லை.

அதே போலவே 48 வயதில் சரியாக மாத விலக்கு நிற்க வில்லை என்றால் அது அசாதாரணம் என்று கருத வேண்டியதில்லை.

சில வருடங்கள் முன்பாக மாத விலக்கு நின்று போவதும், சில வருடங்கள் பின்பாக அது நடப்பதும் மிக மிகச் சாதாரணமே. அதில் “சரியில்லை” என்று நீங்கள் நினைப்பதற்கு ஒன்றுமில்லை.

இன்னும் சந்தேகமிருந்தால் ஒரு பெண் நோயியல் வைத்திய நிபுணரைச் சந்தித்து உங்கள் சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ளலாம்.

பெண்கள், தமது உள ரீதியான பிரச்சினைகளையும் சிக்கல்களையும் இந்தப் பகுதியில் வெளிபடுத்தி அவற்றுக்கான ஆற்றுப்படுத்தும் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

கணவன்- மனைவி இடையிலான பிரச்சினைகள், பெண்கள் பொதுவாக எதிர்கொள்ளும் சிக்கல்கள், பயங்கள், சந்தேகங்கள் என்பனவற்றை மனம் திறந்து கடிதம் மூலமாகவோ மின்னஞ்சல் மூலமாகவோ தெரிவிக்கலாம். மடல்கள் சுருக்கமாகவும் தெளிவானவையாகவும் அமைதல் வேண்டும்.

பெயர் முகவரி கட்டாயம் குறிப்பிடப்படவேண்டும். சொந்தப் பெயரைப் பயன்படுத்த விரும்பாதோர் புனைப் பெயரைக் குறிப்பிடலாம்.

எனினும் அலுவலகத் தேவைக்காக உங்கள் சொந்தப் பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம் என்பனவற்றை கடிதத்தில் குறிப்பிடவேண்டும்.

புனைப்பெயரில் மட்டும் வரும் கடிதங்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது. உங்கள் பெயர் முகவரி விவரங்கள் இரகசியமாக வைக்கப்படும்.

சரி, உங்கள் பிரச்சினைகளுக்கு ஆலோசனை வழங்க கோகிலா காத்துக்கொண்டிருக்கிறார்.

கடிதங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

பொறுப்பாசிரியர் பெண்,

வாரமஞ்சரி,

Thinakaran Editorial,
Lake House,
Colombo-10
மின் அஞ்சல்:

[email protected]

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


 
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2010 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.