புத் 63 இல. 12

விரோதி வருடம் பங்குனி மாதம் 07ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1431 ர. ஆகிர் பிறை 04

SUNDAY MARCH 21, 2010

 
.

பெண்ணியச் சாரதி

பாரதி...

பெண்ணியச் சாரதி

பெண்ணடிமை பேசுகின்ற
பேதைமை உள்ள நாட்டில்
மண்ணடிமை தீராதென்று
மாதரின் மறுமலர்ச்சிக்காய்
பண்ணிசைத்தப் புகழ்ந்த
பாரதியே! பெண்ணியல் தேரின்
சாரதியே!
உன்னிடம் கேள்வியொன்று;

கண்மூடித் தனமாகக்
காரிகையை வதைசெய்த
எண்ணிலா ஆதாரங்கள்
எம் இலக்கியத்தில் இருக்க;
விண்ணளாவக் கவிபடைத்த நீ...
அவற்றை எல்லாம்
மண்ணளவும் தொட்டுக்
கண்டிக்காமல் விட்டதென்ன?

கணவனே கண்கண்ட தெய்வமாய்க்
காலடியில் துவண்ட
கற்புக்கொடி அகலிகை
தோதமனின் கோபத் தீயில்
கோரமாய் எரிந்து
கல்லாய்ச் சமைந்தாள்!

மாமுனியின் சாபத் தீ
மறைவதாயின், - கல்மேல்
இரமைபிரான் ஸ்பரிசம்
இழையோட வேண்டும்!
ஆண்வர்க்க மேலாண்மை
ஆட்சியேற - ஆதாரம்
இதுவொன்றே போதும்

சீதையைக் கவர்ந்திழுத்துச்
சிறையில் வைத்தாண்ட
இராவணன் - அந்த
மாதரசி மயக்கத்தில்
மனமழிந்தாலும்,
மாசு மறுவற்ற கற்பரசிக்குப்
பாதகனாய் மாறாமல்,
பத்திரிகையைச் சேவித்தான்
ஆனால்,
பட்டாபி ராமனோ...
பதிவிரதையைச் சந்தேகித்தான்

கோகிலத்தில்,
கோபியரைக் கொஞ்சிக் குலாவிய
கோபால கிருஷ்ணன் தானே...
கோதண்ட ராமனாக -
கோதை சீதா மணாளமாகக்
கோலோச்சினான்...
கம்பன் காவியத்தில்
- இராமன் ஏகபத்தினி விரதன்
சீதையோ,
சிறையில் இருந்து
சிறுமைப் பட்டாள் எனத்
தீக் குளிக்க வேண்டிய நிர்ப்பந்தம்!
இது கற்பொழுக்க சரிதம்
என்னா நீதியென்று
ஏடும் போடவில்லை
பாரதியே - நீ
ஏன்கான்இதைச் சாடவில்லை

மாதவிபால் ஆசைகொண்டு
மதியிழந்த கோவலன்,
மாதவத்தாள் கண்ணகியை
மறந்து நின்றான் - அவளைத்
துறந்து சென்றான்
கானல் வரி
கோணல் வரி இசையான போதுதான்
கண்ணகியின்
கற்பொழுக்கம் புலப்பட்டதேர்...
கோவலனுக்கு...!
கற்பரசி கண்ணகி
கதவைச் சாத்தவில்லை - இதயக்
கதவையே திறந்து,
காற்சிலம்பைக் கறந்து தந்தாள்
கையறு நிலையைப் போக்க

இப்படியாய் -
இலக்கியத்தில் பெண்டிரை
இம்சித்த கனவான்களை
இடுப்பொடியும் படி நீ...
இரண்டொரு ‘பா’ சீ சரங்களைத்
தொடுத்திருக்கக் கூடாதா...?
பாரதியே! - நீ
பெண்ணியத்தின் சாரதியா?
 

ஏறாவூர் நிவேதா

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


 
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2010 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.