அஸ்கிரிய மகாநாயக்க தேரரின் இறுதிக்கிரியை இன்று கண்டியில்
அஸ்கிரிய மகாநாயக்க தேரரின் இறுதிக்கிரியை இன்று கண்டியில்
பூரண அரச மரியாதை: தேசிய துக்க தினமாகவும் பிரகடனம்
(எம்.கே.முபாரக் அலி)
கண்டி அஸ்கிரிய பௌத்தபீட மாநாயக்க தேரர் சங்கைக்குரிய கலகம ஸ்ரீஅத்ததஸ்ஸி தேரரின்
திருவுடலுக்கு பிரமுகர்கள், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் என அனைத்துத் தரப்பினரும்
தமது இறுதி அஞ்சலியை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அன்னாரது இறுதிக் கிரியைகள்
இன்று 13 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இன்றைய தினத்தை நாட்டின் தேசிய துக்கதினமாகவும் அனுஷ்டிப்பதற்கு அரசாங்கம்
அறிவித்துள்ளது. அத்துடன் சகல அரச கட்டடங்களிலும் தேசியக் கொடி அரைக் கம்பத்தில்
பறக்க விடப்பட வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள்
ஜனாதிபதிகளான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ச ஆகியோரும்
அமைச்சர்களும் அஞ்சலி செலுத்தினர்.
அஸ்கிரிய பௌத்த பீடத்தில் 28 ஆவது மாநாயக்க தேரராக பதவியேற்ற கலகமே ஸ்ரீ அத்ததஸ்ஸி
தேரர் கடந்த புதன்கிழமை பிற்பகல் வேளையில் குளியல் அறையில் வழுக்கி விழுந்த நிலையில்
கண்டி வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
எனினும் அவர் மாரடைப்பின் காரணமாகவே சுயநினைவிழந்து கீழே விழுந்ததாக
தெரிவிக்கப்பட்டுள்ளது. வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் அன்றைய தினம் இரவு
9.00 மணியளவில் உயிரிழந்தார்.
மாநாயக்க தேரரின் மறைவினையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக கண்டி மாநகர்
முழுவதும் மஞ்சள் நிறகொடியும் பதாதைகளும் காட்சியளிக்கப்பட்டுள்ள அதேவேளை
வாகனங்களிலும் மஞ்சள் கொடிகள் கட்டப்பட்டுள்ளன. கண்டி மாநகரெங்கும் சோகமயம்
பரவியுள்ளது.
இறுதிக் கிரியைகள் இன்று 13 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில்
பூரண அரச மரியாதையுடன் அஸ்கிரிய பொலிஸ் மைதானத்தில் மேற்கொள்வதற்கு
தீர்மானிக்கப்பட்டுள்ளது. வாகன ஊர்வலத்துடன் விசேட வாகனத்தில் தேரரின் திருவுடல்
எடுத்துச் செல்லப்படுவதற்கும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.