புத். 68 இல. 11

மன்மத வருடம் மாசி மாதம் 30ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஜமாதுல் ஆகிர் பிறை 03

SUNDAY MARCH 13, 2016

 

 
எனக்கு கட்சிதான் முக்கியம், அதனை விட்டுக் கொடுக்கமாட்டேன்

மு.காவை கூறுபோடும் சிலரது பகற்கனவு ஒருபோதும் பலிக்காது

எனக்கு கட்சிதான் முக்கியம், அதனை விட்டுக் கொடுக்கமாட்டேன்:

பாலமுனை மாநாட்டில் நிச்சயம் கலந்து கொள்வேன் என்கிறார் பசீர்

பாலமுனையில் நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய மாநாட்டில் நான் கலந்து கொள்ளமாட்டேன் எனச் சிலர் பொய்யான புரளியைப் பரப்பி விட்டுள்ளார்கள். இது முஸ்லிம் காங்கிரஸின் வளர்ச்சியைப் பொறுக்க முடியாது அதனைச் சிதைத்துக் கூறுபோட வேண்டுமென நினைக்கும் சிலரது மோசமான செயற்பாடு. அவர்களது இந்த எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது. அம்மாநாட்டில் நான் நிச்சயம் கலந்து கொள்வேன் என மு.காவின் தவிசாளரும், முன்னாள் அமைச்சருமான பசீர் சேகு தாவூத் தெரிவித்தார். இணையத்தளங்கள் சிலவற்றில் வெளியான செய்தி ஒன்று தொடர்பாக அவருடன் தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் இவ்வாறு பதிலளித்தார்.

என்னைப் பொறுத்தவரையில் கட்சி முக்கியம். இந்தக் கட்சியின் மூலமாக எமது சமூகத்திற்கு நன்மைகள் பெறப்பட வேண்டும். அதனால் கட்சியின் ஒற்றுமையை நான் எச்சந்தர்ப்பத்திலும் விட்டுக் கொடுக்கமாட்டேன். எனக்கு தேசியப் பட்டியலில் பாராளுமன்ற உறுப்பினர் பதவி தரப்படாமையினால் இத்தகைய செய்திகளைப் பரப்பி என்னைக் கட்சியுடன் முரண்பட வைக்கலாம் எனச் சிலர் பகற்கனவு காண்கின்றனர். அது ஒருபோதும் நடைபெறாது என்பதை அவர்களுக்கு நான் கூறிவைக்க விரும்புகிறேன் எனவும் அவர் கூறினார். கட்சிக்குள் கருத்து வேற்றுமைகள் வந்து போகலாம். அவ்வாறு நடப்பது இயல்பு. அது உள்வீட்டப் பிரச்சினை. அதற்காக கட்சியைக் காட்டிக் கொடுப்பது போலச் செயற்படுவது அல்லது கட்சியிலிருந்து வெளியேறி இன்னொரு கட்சியில் இணைவது அல்லது புதிய கட்சியை ஆரம்பிப்பது எல்லாம் எனது கொள்கை அல்ல. என்னைப் பொறுத்தவரையில் எமது முஸ்லிம் சமூகத்திற்காக உரத்துக் குரல் கொடுத்துச் செயற்படக் கூடிய பாரிய மக்கள் சக்தி கொண்ட கட்சியாக முஸ்லிம் காங்கிரஸ் மட்டுமே உள்ளது. அதனை நாம் பலப்படுத்த வேண்டுமே தவிர பலவீனப்படுத்தக் கூடாது என்றார்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2016 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.