முயல் வேகத்தில் வந்த தமிழ் மக்கள் பேரவை இப்போது ஆமை வேகத்தில் நகர்வதற்கே
சிரமப்படுகிறதாம். தோற்றுப் போனவையை வைத்து இவர் எப்படி வண்டி ஓட்டப் போகிறார்
பார்ப்போம் எனச் சம்பந்தன் ஐயா கேட்டது சரியாத்தான் போச்சு. வண்டி சரிந்து விட்டது
உறுதி. விரைவில் முற்றாக குடைசாய்ந்து விடும் போலவே தெரிகிறது. தமிழ் ஊடகங்களும்
கைவிட்டுவிட்டன. சம்பந்தன் ஐயா அரசியலில் பழம் தின்று கொட்டை போட்டவர் என்பது
சரிதான்.
மூன்று வருடங்கள் கழித்தாவது
இப்படியொரு யோசனை வந்ததே
வடமாகாண சபையை வினைத்திறன் மிக்கதாக செயற்படுத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
தீர்மானித்திருப்பதாக மாவை ஐயா தெரிவித்திருக்கிறார். மாகாண சபை உருவாகி மூன்று
வருடங்கள் முடியப் போகிறது. இன்னமும் இரண்டு வருடம்தான் இருக்கிறது. ஏதோ இப்போதாவது
இப்படியொரு யோசனை வந்ததே பெரிய விடயம். மாவை இப்படிச் சொன்னால் முதல்வர் விக்கி ஐயா,
இப்ப எனது மாகாண சபை என்ன வினைத்திறன் இவ்லாமலோ இருக்கிறது எனக் கேட்கப் போகிறார்.
நீதிமன்றத்திற்கு பஸ்ஸில் அழைத்து
வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை
பிள்ளையான்பாடு சிக்கல்தான் போலத் தெரியுது. விளக்கமறியல் ஐந்தாவது தடவையாகவும்
நீடிக்கப்பட்டிருக்கிறது. எப்படி இருந்தவர் இப்படியாகிப் போனார். இப்பவெல்லாம் அவரை
நீதிமன்றத்திற்கு அழைத்து வரும்போது எந்தவிதமான ஆர்ப்பாட்டமும் கிடையாது. ஊடகங்கள்
பெரிதாகக் கண்டு கொள்வதில்லையாம். இப்படியே போனால் சிறைக் காவலர்கள் சில ஊர்களில்
கைதிகளை பஸ்ஸில் அழைத்து வருவதைப்போல சி.ரி.பி பஸ்ஸில் அழைத்து வந்தா லும்
ஆச்சரியப்படுவதற்கில்லை.
மலையகத்திற்கு நல்ல தலைவன்
கிடைப்பது உறுதியாக தெரிகிறது
கடந்த புதன்கிழமை பாராளுமன்றத்தில் திலகராஜ் எம்.பி தான் ஹீரோவாகக் காணப்பட்டாராம்.
காணாமற்போனோர் மற்றும் தமிழ் அரசியல் கைதிகள் விடயம் தொடர்பாகப் பலர்
உரையாற்றினாலும் இவரது உரை பலரது நெஞ்சங்களைத் தொட்டதாம். சபையிலி ருந்த வடக்கு
கிழக்கு எம்.பிமார் இவரது உரையால் மலைத்துப் போய்விட்டனராம். ஏதோ சின்னப்பொடியன்,
இலக்கியம் மட்டு ம்தான் அத்துப்படி என நினைத்திருந்தோருக்கு தானொரு அரசியல்வாதி
என்பதை உணர்த்திவிட்டார் திலகர். மலையகத்திற்கு எதிர்காலத்தில் நல்லதொரு
திறமைசாலியான தலைவன் கிடைப்பது மட்டும் உறுதி.
தவறுகளை மறைத்து பொய்யாக
புகழுரைக்க தன்னால் முடியாதாம்
கடந்த வார காதோடு காதாக பகுதியில் வெளியான நயவுரையா அல்லது நயவஞ்சக உரையா என்பதைப்
பார்த்துவிட்ட அந்தப் பேச்சாளர் அங்கு உண்மையில் நடந்தது என்னவென்பதை காதில்
கூறினார். நயவுரை என்பது நூலாசிரியரை புகழ்ந்து தள்ளுவது இல்லை. நூலிலுள்ள குறை
நிறைகளை மதிப்பிட்டு கூறுவது. தவறுகளை மறைத்து பொய்யாக புகழுரைக்கத் தன்னால்
முடியாதாம். அன்று வந்திருந்த அதேமாதிரியான பேச்சாளர்கள் நால்வருள் ஒருவாகத்
தானிருக்க விரும்பவில்லையாம். மேடையில் காத்திருக்கும் பொன்னாடையை தோள்களில்
தாங்குவதற்காக தவறைச் சரியென பொய்யாகக் கூற முடியாதுதான். இவர் உண்மையிலேயே
வித்தியாசமான கலையாற்றல் கொண்ட பேச்சாளர்தான்.
விழா நடத்திய பிறகுதான் கொடுப்பதை
கொடுப்பது என கொடுப்பவர்கள் முடிவு
இம்மாத இறுதியில் இந்தியக் கலைஞர்களுடன் ஒரு கலை நிகழ்ச்சி தடல்புடலாக ஏற்பாடு
செய்யப்பட்டு வந்தது. வழமைபோல கொடைவள்ளல்கள் பலரும் ஐந்து, பத்து பதினைந்து என
அவர்களது தகுதிக்கேற்றவாறு வாரி வழங்கியும் விட்டனராம். இப்போது திடீரென
தவிர்க்கமுடியாத காரணத்தினால் அந்நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக
அறிவிக்கப்பட்டுள்ளதாம். கொடுத்தவர்களுக்கு கடும் எரிச்சலாக உள்ளதாம். இனி எவராவது
கையை நீட்டினால் விழா நடத்திய பிறகுதான் கொடுப்பதைக் கொடுப்பது எனக் கொடுப்பவர்கள்
முடிவெடுத்துள்ளார்களாம். ஆனால் பாவம் விழா நடத்துபவருக்கு என்ன கஷ்டமோ?