புத். 68 இல. 11

மன்மத வருடம் மாசி மாதம் 30ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஜமாதுல் ஆகிர் பிறை 03

SUNDAY MARCH 13, 2016

 

 
அதிகாரப் பகிர்வு:அச்சங்களும்! ஐயங்களும்!!

அதிகாரப் பகிர்வு:அச்சங்களும்! ஐயங்களும்!!

உத்தேச அரசியலமைப்பு மாற்றத்தின் பின்னணி நோக்கங்களுள் ஒன்று; இனப்பிரச்சினைக்குத் தீர்வாக அதிகாரத்தை மத்தியிலிருந்து பிராந்தியங்களுக்குப் பகிர்வதாகும். 1987 இல் இடம்பெற்ற இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் இலங்கையின் ஒற்றையாட்சியில் முதல் மாற்றம் நிகழ்ந்தது. அவ் வொப்பந்தத்தின்படி மாகாண சபை முறை உருவாக்கப்பட்டு, மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்கள் 9 மாகாணங்களுக்கும் பகிரப்பட்டன. இனப்பிரச்சினைக்குத் தீர்வாக முன்வைக்கப்பட்ட மாகாண சபை முறை, வடக்கு கிழக்கிற்கு மட்டுமன்றி, முழு இலங்கைக்குமான தீர்வாக மாறியது.

சமீப காலங்களில் எந்த மாகாணங்களுக்கு அம்முறை தீர்வுத் திட்டமாக முன்வைக்கப்பட்டதோ அவற்றை விட ஏனைய ஏழு மாகாணங்களிலுமே அம்முறை சிறப்பாக நடைபெற்று வருகின்றமை பெரும் முரண்நகையாகும். வடக்கு கிழக்கு மாகாண அதிகாரங்களில் அவ்வப்போது மத்திய அரசாங்கம் தலையீடு செய்து வருவதும், மக்களாணை பெற்ற முதலமைச்சருக்கு மேலே நியமிக்கப்படும் கவர்னர் (ஆளுநர்) அதிகாரம் கொண்டவராக நீடிப்பதும் மாகாண சபை முறைமையை சிலபோது கேலிக்கூத்தாக்கி விடுகின்றது.

மாகாண சபை முறைமை தமிழர்களின் பிரச்சினைக்கு உரிய தீர்வாக அமையவில்லை என்ற நியாயத்திலிருந்தே தற்போது சமஷ்டித் தீர்வை அவர்கள் மிக உறுதியாக வலியுறுத்தி வருகின்றனர். சமஷ்டித் தீர்வை எட்டுவதற்குள்ள தடைகள் அனைத்தையும் தாண்டி, அத்தீர்வு நடைமுறைக்கு வரும்போது மாகாண சபை முறை போன்று முழு நாட்டுக்குமுரிய தீர்வாகவே அமுலுக்கு வரும் சாத்தியமும் உள்ளது.

ஏனெனில், தென்னிலங்கையில் சிங்கள மக்களிடையே சமஷ்டி பற்றிய ஒரு சந்தேகமும் அச்சமும் நீண்ட காலமாய் நிலவி வருகின்றது. சிங்கள இனத் தேசிய கட்சிகள் கடந்த காலங்களில் மேற்கொண்ட திட்டமிட்ட பிரச்சாரங்களின் மூலம் இந்த அச்சத்தை உருவாக்கியுள்ளன. எவ்வாறாயினும், தென்னிலங்கை சிங்கள மக்கள் சமஷ்டியை சந்தேகத்தோடுதான் பார்க்கின்றனர். உச்ச அளவில் அதிகாரம் பகிரப்பட்ட சமஷ்டிப் பிராந்தியங்கள் நீண்ட காலத்தில் மத்திய அரசாங்கத்திலிருந்து விலகி தனிநாடாய் பிரிந்து போகலாம் என்ற அச்சமே பெரும்பான்மை சிங்கள மக்களை ஆட்கொண்டுள்ளது,

நவீன உலக வரலாற்றில் இதற்கான உதாரணங்கள் மிகவும் குறைவு. எனினும், இலங்கைச் சூழலை முன்னிறுத்தி, இந்த அச்சத்தை விதைப்பதில் சிங்கள தேசியவாத சக்திகள் வெற்றி பெற்றுள்ளனர். தமிழரின் சமஷ்டிக் கோரிக்கை தென்னிலங்கையில் சிங்களவர்களைப் பயமுறுத்தும் பூதமாகவே பார்க்கப்படுகின்றது. எனவே, பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அது பெறுவதும், இறுதியில் சர்வஜன வாக்கெடுப்பில் வெற்றி பெறுவதும் நாம் எண்ணுவது போன்று மிக எளிதான காரியமல்ல.

இன்னொருபுறம், இணைக்கப்பட்ட வடக்கு கிழக்கில் தமிழர்களுக்கு சமஷ்டி பகிரப்பட்டால், முஸ்லிம்களின் எதிர்காலம் என்னவாகும் என்ற அச்சம் முஸ்லிம்களிடையே நிலவுகின்றது. ஏனெனில், இணைப்பின் மூலம் முஸ்லிம்களின் வீதாசாரம் அரைவாசிக்கும் அதிகமாகக் குறைக்கப்படுகின்றது. அதிகாரத்தைப் பகிர்வதில் இது பாரிய சவாலாக மாறக் கூடும்.

1987 க்குப் பிற்பட்ட காலகட்டங்களில் வடக்கு கிழக்கு முஸ்லிம்கள் எதிர்கொண்ட மிகக் கசப்பான அனுபவங்களிலிருந்தே இந்த நியாயமான அச்சம் ஏற்படுகின்றது. தமிழ்- முஸ்லிம் மக்களிடையே பரஸ்பர நம்பிக்கையையும் வெளிப்படைத் தன்மையையும் கட்டியெழுப்புவதன் மூலமே இந்த சந்தேகங்களைக் களைய முடியும். இரு சமூகங்களும் உச்சளவு அதிகாரத்தைப் பெற முடியும்.

இது தொடர்பிலான முடிவுகளை எட்டும் அதிகாரம் அல்லது தனியுரிமை முஸ்லிம் அரசியல் கட்சிகளை மாத்திரம் சார்ந்திருப்பது மிக ஆபத்தானது. சிவில் சமூக நிறுவனங்கள், அமைப்புகள் என்பவற்றின் கருத்துகளும் ஆலோசனைகளும் இது தொடர்பில் உள்வாங்கப்பட வேண்டும். என்னதான் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் தமிழர்களின் கோரிக்கையை ஒருமித்த குரலில் முன்வைக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புப் போன்ற ஓர் அரசியல் கூட்டு முஸ்லிம் சமூகத்திலும் உருவாக்கப்பட வேண்டும்.

தேர்தல் கால தெருச் சண்டைகளுக்கு அப்பால், சமூகத்தின் எதிர்காலத்தோடு தொடர்பான அரசியலமைப்பு மாற்றம் குறித்த பரந்துபட்ட கருத்தொருமைப்பாடு கொண்ட ஒரு தீர்வுத் திட்டத்தை சிவில் சமூகத்தின் அங்கீகாரத்தோடு முன்வைக்கும் ஓர் அரசியல் கூட்டு முஸ்லிம் சமூகத்திலும் உருவாக வேண்டும். இது தொடர்பில் தனித் தீவாய் செயற்படும் முஸ்லிம் அரசியல் கட்சிகள் சீரியஸாக சிந்திக்க வேண்டும்.

முஸ்லிம்களிடையே நிலவும் தமிழ் தரப்பின் கோரிக்கை பற்றிய அச்சத்திலிருந்து முஸ்லிம்களை தமிழர்களே விடுவிக்க வேண்டும். காரணம், தமிழ்- முஸ்லிம் உறவில் ஏற்பட்ட விரிசல்களை வரலாற்று ரீதியில் அணுகும்போது “ஆற்றைக் கடக்கும்வரைதான் அண்ணன், தம்பி. கடந்து விட்டபின் நீ யாரோ, நான் யாரோ” என்பதுதான் தமிழ் அரசியல் தலைமைகளின் மனோநிலையாகவும் செயற்பாடாகவும் இருந்து வந்துள்ளது.

முஸ்லிம்களைப் போன்று சக சிறுபான்மையாக வாழ்ந்த தமிழ் அரசியல் தலைமைகள் முஸ்லிம்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை முழுமையாகக் கவனத்தில் எடுத்த வரலாறில்லை. 1915 இல் நடைபெற்ற கம்பளை முஸ்லிம் - சிங்கள கலவரத்தைத் தொடர்ந்து பொன். இராமநாதன் நடந்துகொண்ட விதம் மற்றும் 1934 இல் சீ.எஸ். ராஜரட்னம் கொண்டு வந்த மாற்று யோசனை என்பனவும் முஸ்லிம்களைப் புறந்தள்ளியதாகவே இருந்தன.

டொனமூர் சீர்திருத்தமும் முஸ்லிம்களின் உண்மையான அரசியல் அபிலாசைகளை கவனத்தில் கொண்டதாகக் கூற முடியாது. ஏனெனில், அதுவரை கைக்கொள்ளப்பட்டு வந்த இனவாரிப் பிரதிநிதித்துவமுறை டொனமூர் மூலம் முற்றாகக் கைவிடப்பட்டு, தேர்தல் தொகுதிவாரியான பிரநிதித்துவ முறை நடைமுறைக்கு வந்தது. இதன் காரணமாக, இலங்கையிலுள்ள சிங்கள, தமிழ் சமூகங்களைப் போன்று பிரதேச ரீதியில் செறிவான குடியிருப்புகள் அற்ற நிலையில், இலங்கை முழுக்கச் சிதறி வாழ்ந்த முஸ்லிம்களால் தங்களுக்கான பிரதிநிதிகளைத் தெரிவு செய்யும் வாய்ப்பு மறுக்கப்பட்டது.

இச்சூழ்நிலையில் தமிழ்த் தலைமைகள் கூட முஸ்லிம் அபிலாஷைகளை கருத்திற் கொள்ளவில்லை. 1934 இல் சீ.எஸ். ராஜரட்னம் முற்போக்குச் சங்கங்களின் கூட்டிணைப்பு எனும் ஸ்தாபனம் ஒன்றை உருவாக்கி, இலங்கைக்கு சமஷ்டி ஆட்சிதான் சிறந்தது என்று ஆங்கிலத் தளதிபதியிடம் அறிக்கையொன்றை சமர்ப்பித்தார். இது இலங்கை அரசியல் வரலாற்றில் பாரிய கவனயீர்ப்பைப் பெறாத போதும், அதிலும் கூட இலங்கை முஸ்லிம்கள் எவ்வித கரிசனையும் கொள்ளப்படாமல் விடப்பட்டிருந்தனர்.

இலங்கையை மூன்று சமஷ்டிகளாகப் பிரிக்க வேண்டும் என்று அதில் ஆலோசனை வழங்கப்பட்டது.

வடகிழக்கை தமிழர்களுக்கும், மத்திய, ஊவா சப்ரகமுக மாகாணங்களை கண்டிச் சிங்களவர்களுக்கும் ஏனைய பகுதிகளை கரையோர சிங்களவர்களுக்குமென ராஜரட்னத்தின் அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. முஸ்லிம்கள் குறித்து அதில் எதுவும் கூறப்படவில்லை.

“தந்திரத்தை உத்தியோகபூர்வமாகக் கையளிப்பதற்கு முன்பாக” தந்திரத்தின் பெயரால் எதிர்காலத்தில் உருவாகப் போகின்ற பெரும்பான்மை ஆட்சியில் சிறுபான்மையினருக்கான அரசியல் காப்பீடுகளையும் பாதுகாப்பினையும் உறுதி செய்ய சிறுபான்மை இனங்களின் சார்பில் அவர்களது பிரதிநிதிகள் தமது நிலைப்பாடுகளையும் பிரேரணைகளையும் முன்வைக்கலாம் என்று சோல்பரி ஆணைக்குழு வேண்டிக்கொண்டது.

அந்த வகையில், சிறுபான்மைச் சமூகத்திடமிருந்து சில பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன. அவற்றுள் ஒன்றுதான், தமிழ் காங்கிரஸ் தலைவர் ஜீ. ஜீ. பொன்னம்பலம் முன்வைத்த 50 : 50 கோரிக்கையாகும். மெனிங், டொனமூர் போன்று பொன்னம்பலத்தின் கோரிக்கையும் முஸ்லிம்கள் தொடர்பில் போதிய கவனம் செலுத்தவில்லை. 50 ஆசனங்கள் சிங்களப் பெரும்பான்மைக்கும் 50 ஆசனங்கள் சிறுபான்மைக்கும் என்று பெரிதாக முன்னிறுத்தப்பட்ட இக்கோரிக்கைக்குப் பின்னணியில் தமிழ் அரசியல் தலைமைகளின் ஆதிக்க மனோநிலையே இருந்தது.

அக்கோரிக்கையில் இலங்கைத் தமிழருக்கு 17, இந்தியத் தமிழருக்கு 13, பரங்கியருக்கு 8, ஏனையோருக்கு 12 என்ற வகையிலேயே ஆசனங்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தன.

(தொடரும்...)

றவூப் ஸெய்ன்

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2016 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.