புத். 68 இல. 11

மன்மத வருடம் மாசி மாதம் 30ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஜமாதுல் ஆகிர் பிறை 03

SUNDAY MARCH 13, 2016

 

 

மலையகத்தை மாற்றியமைக்கவிருக்கும் ஐந்தாண்டுத்திட்டம் பிரதமர் தலைமையில் அங்குரார்ப்பணம்

மலையகத்தை மாற்றியமைக்கவிருக்கும் ஐந்தாண்டுத்திட்டம் பிரதமர் தலைமையில் அங்குரார்ப்பணம்

மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்களின் மலையக அபிவிருத்திக்கான ஐந்தாண்டு அபிவிருத்தித் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு கடந்த (10) வியாழனன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்கள் பொறுப்பேற்றதன் பின்னர் அமைச்சரவையின் அங்கீகாரத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டு அமைச்சரவை அங்கீகாரமும் கிடைக்கப்பெற்றது. பத்தாண்டு திட்டத்தினை ஐந்தாண்டு திட்டமாக வரையறை செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வைத்த ஆலோசனைக்கமைய இத்திட்டம் ஐந்தாண்டு திட்டமாக வரையறை செய்யப்பட்டு பிரதமர் முன்னிலையில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் திகாம்பரம், பெருந்தோட்டத்தொழிலாளர்களை பெருபான்மையாகக் கொண்ட மலையக சமூகத்தின் வரலாற்றில் இன்றைய தினம் ஓர் முக்கியமான நாளாகும். முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க காலத்தில் மலையகப் பெருந்தோட்ட மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் பொருட்டு தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு உருவாக்கப்பட்டது. எனினும் மஹிந்தவின் ஆட்சிக்காலத்தில் அந்த அமைச்சு இல்லாமல் ஆக்கப்பட்டதுடன் மலையக அபிவிருத்திக்கான எவ்வித முன்னெடுப்புகளையும் மேற்கொள்ளவில்லை என்றார்.

2005ஆம் ஆண்டு மஹிந்த சிந்தனையில் மலையக மக்களுக்கான தனியான அதிகார சபையொன்று உருவாக்கப்படுமென குறிப்பிடப்பட்டிருந்தது. அதேவேளை 2005ஆம் ஆண்டு தொடங்கி 2015இல் நிறைவு செய்யும் விதத்தில் மலையக அபிவிருத்திக்கென தயாரிக்கப்பட்ட பத்தாண்டு திட்டமும் கைவிடப்பட்டது. அப்போது பெருந்தோட்ட மக்களை அரசியல் பிரதிநிதித்துவம் செய்த மலையக அரசியல் தலைமைகளும் இந்தத் திட்டத்தை முன்னெடுப்பதற்கான எந்தவொரு முயற்சியையும் மேள்கொள்ளவில்லை.

இந்நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் தலைமையில் உருவாக்கப்பட்ட அரசாங்கத்தினால் எனக்கு வழங்கப்பட்ட அமைச்சின் கீழ் நூறு நாள் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதில் மலையக மக்களின் சமூக அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்கான வேலைத்திட்டமொன்றை உருவாக்குவதாகும். கடந்தாண்டு மார்ச்சில் பத்தாண்டுத் திட்டமாக ஆரம்பிக்கப்பட்டு 2016 ஜனவரியில் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டது. அமைச்சரவையின் தீர்மானத்திற்கேற்ப பத்தாண்டுத் திட்டம் ஐந்தாண்டுத் திட்டமாக மாற்றப்பட்டு மக்கள் முன் சமர்ப்பிக்கப்படுகின்றது. இந்தத் திட்டத்தின் மூலம் ஏனைய சமூகங்களுக்கு சமமான நிலைக்கு மலையக மக்களை உயர்த்துவதேயாகும்.

ஐந்தாண்டுகளில் 65000 வீடுகள், பொது தரசாதாரண மற்றும் உயர்தர பரீட்சை பாடங்களில் சித்திபெறுவோரின் எண்ணிக்கையை ஐந்துமடங்காக அதிகரித்தல், கல்வித்துறையில் பல்கலைக்கழகத்தில் இணைத்துக்கொள்வோரின் எண்ணிக்கையை அதிகரித்தல், சுகாதாரத்துறையை மேம்படுத்துதல், பெண்களுக்கான அரசியல்பங்குபற்றலை அதிகரித்தல், தொழில்நுட்ப தகைமைகளுக்கு ஏற்ப வேலை வாய்ப்புகளை உருவாக்குதல், சிறுவர்களின் பாதுகாப்பை அதிகரித்தல் போன்ற விடயங்கள் இத்திட்டத்தின் முக்கிய குறிக்கோளாகும்.

இந்த திட்டத்தை தயாரிப்பதற்கும் உரியமுறையில் வெளியிடுவதற்கும் ஒத்துழைப்பு வழங்கிய UNDP நிறுவனத்திற்கு நான் நன்றிசொல்ல கடமைப்பட்டுள்ளேன்.

இந்த திட்டம் வீடமைப்பு துறைக்கே முக்கியஅழுத்தம் கொடுக்கிறது. இந்த ஐந்தாண்டு திட்டத்தை நடைமுறைபடுத்த ஏறக்குறைய 100 பில்லியன் அல்லது 10,000 கோடி ரூபாய் மொத்தமாக தேவைப்படுகின்றது. அதில் 80 வீதத்திற்கும் மேலாக தேவைப்படுவது வீடமைப்பு, நீர் வழங்கல், சுத்திகரிப்பு மற்றும் உட்கட்டமைப்பு போன்றவற்றுக்கானது.

சமீபத்தில் உலகவங்கி வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றின்படி இலங்கையில் 40வீதமான மக்கள் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்றார்கள். அதேநேரம் தோட்டப்புறங்களில் அந்தத்தொகையானது 60 வீதமாக காணப்படுகின்றது. உலகவங்கி அறிக்கையில் இந்த சமூகமே சமூக அபிவிருத்தியின் எல்லா அம்சங்களிலும் பின் தங்கிய நிலையில் உள்ளதை ஏற்றுக்கொண்டுள்ளது. ஆகவே உலகவங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, ஐரோப்பிய யூனியன் போன்ற நிதிநிறுவனங்கள் இம்மக்களை ஒருசமத்துவ நிலையில் அபிவிருத்தி செய்வதற்கு போதிய நிதிமற்றும் தொழிநுட்ப உதவிகளை வழங்குவார்கள் என்ற நம்பிக்கையிருக்கிறது.

இலங்கையில் பொதுவாக பலதிட்டங்கள் தீட்டப்பட்டாலும் அவை முழுமையாக நடைமுறைபடுத்தப்படுவதில்லை. திட்டம் என்பது ஓர் இலக்கு நோக்கி செயற்படுவதாகும். அந்த இலக்கை எந்தளவு அடைந்து கொள்கிறோமே அந்தளவிற்கே அத்திட்டத்தின் வெற்றி தங்கியுள்ளது. இவற்றை செய்து முடிப்பதற்கு 100 பில்லியன் ரூபாயை அரசாங்கம் முழுமையாக வழங்க முடியாது. எனவே அதிகமான அளவு வெளிநாட்டு உதவியிலேயே தங்கியுள்ளது. அதை நடைமுறைபடுத்த சம்பந்தப்பட்ட அமைச்சுகள், மாகாண சபைகள், மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் போன்றவர்களின் பங்களிப்பு அவசியமாகும். இத்திட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த உங்கள் அனைவரின் ஒத்துழைப்பை நான் வேண்டிக்கொள்கிறேன் என்றார் அமைச்சர் திகாம்பரம்.

இந்நிகழ்வில் அமைச்சர்கள் ரவி கருணாநாயக்க, மனோகணேசன், நவீன் திசாநாயக்க, கல்வி இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஷ்ணன், பாராளுமன்ற உறுப்பினர்களான எம். திலகராஜ், அ. அரவிந்தகுமார், வடிவேல் சுரேஸ்,வேலு குமார், அமைச்சின் செயலாளர் ரஞ்சினி நடராஜபிள்ளை, ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித்திட்ட இலங்கைக்கான உதவி வதிவிடப் பிரதிநிதி கனேசராஜா, பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி பொறுப்பின் தலைவர் வீ. புத்திரசிகாமணி, கல்விமான்கள், புத்திஜீவிகள், மத போதகர்கள் உட்பட பலரும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

பி.வீரசிங்கம்

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2016 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.