புத். 68 இல. 11

மன்மத வருடம் மாசி மாதம் 30ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஜமாதுல் ஆகிர் பிறை 03

SUNDAY MARCH 13, 2016

 

மியன்மாரின் ‘பினாமி’ அரசியல்

மியன்மாரின் ‘பினாமி’ அரசியல்

ஆங் சான் சூக்கியை உலகம் கவனித்தது போல் அவருக்கு அருகில் இருந்தவரை பெரிதாக பார்த்திருக்க மாட்டது. சூக்கி 15 ஆண்டுகள் வீட்டுக் காவலில் இருந்த காலத்தில் எப்போதாவது அவர் தனது வீட்டின் இரும்பு கேட்டில் ஏறி நின்று காட்சி தருவார். அப்போதெல்லாம் ஒருவர் ஆங் சான் சூக்கியுடன் அருகில் இருப்பார். ஆனால் என்ன சூக்கி ஏறி நின்ற கேட் வாயில் அளவுக்குக் கூட அந்த நபர் பேசப்படவில்லை.

வீட்டுக் காவலில் இருந்த காலத்தில் சூக்கிக்கு வெளியே போக அனுமதி கிடைக்கும். அப்போது மேற்​சொன்ன நபர்தான் சூக்கி செல்லும் காரை ஓட்டிச் செல்வார். எனவே, அந்த நபருக்கு சூக்கியின் ஓட்டுநர் என்றே புனைப் பெயர் வந்தது. சூக்கி போகும் இடமெல்லாம் இருக்கிறாரே உண்மையில் இவர் யார் என்று இரண்டு தினங்களுக்கு முன்னரே முழுமையாகத் தெரியவந்தது.

ஆங் சான் சூக்கியின் ஜனநாயத்திற்கான தேசிய லீக் கட்சி கடந்த வியாழக்கிழமை தனது ஜனாதிபதி வேட்பாளரை அறிவித்தது. ஆள் யாரன்று பார்த்தால் எப்போதும் சூக்கிக்கு பின்னாலே இருப்பாரே அவரே தான். பெயர் டின் சியவ். இவருக்கு ஜனாதிபதியாவதற்கு இருக்கும் முக்கியமான தகுதி சூக்கியின் மீதான அதி தீவிரமான விசுவாசம்.

மின்மாரின் இராணுவ ஆட்சிக்கு எதிராக நீண்ட காலம் போராடி நோபல் பரிசைக் கூட பெற்ற ஆங் சான் சூக்கியின் கடைசி இலக்கு மியன்மாரின் தலைவராகுவதாகும். மட்டுப்படுத்தப்பட்ட ஜனநாயம் ஒன்றை நாட்டில் அறிமுகம் செய்த இராணுவம் சூக்கி நாட்டு ஜனாதிபதியாகக் கூடாது என்பதில் மாத்திரம் கண்ணும் கருத்துமாக இருந்தது.

இதனாலேயே 2008 ஆம் ஆண்டு இராணுவ ஆட்சியாளர்கள் எழுதிய அரசியல் அமைப்பில் புதிதாக ஒரு சரத்தை கோத்துவிட்டார்கள். அதாவது வெளிநாட்டு தொடர்புடையவர்களுக்கு ஜனாதிபதியாக முடியாது என்பதே அந்த சரத்து. சூக்கியின் கணவர் பிரிட்டன் நாட்டுக்காரர், அவரது இரு மகன்களும் பிரிட்டன் பிரஜைகள். எனவே, சூக்கியால் தலைகீழாக நின்றாலும் ஜனாதிபதியாக முடியாது என்பதே இராணுவத்தின் நோக்கம். கடைசியில் அதுதான் நடந்தது. கடந்த ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் மக்கள் அள்ளி வாக்களிக்க சூக்கியின் ஜனநாயகத்திற்கான தேசிய லீக் அதிகப் பெரும்பான்மையாக வெற்றிபெற்றது. என்றாலும் தான் ஜனாதிபதியாவதற்கு நெளிவு சுளிவுகளைத் தேடி இராணுவத்துடன் இரகசியமாக பல பேச்சுவார்த்தைகளை நடத்தியபோதும், அவை வெற்றியளிக்கவில்லை போல். கடைசியில் தன்னோடு எப்போதும் இருக்கும் நெருங்கிய விசுவாசிக்கு அந்த பதவியை கொடுக்க முன்வந்திருக்கிறார்.

பாராளுமன்றத்தால் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் வேட்பாளருக்கான வாக்கெடுப்பு இந்த மாத கடைசியில் நடைபெறவிருக்கிறது. சூக்கியின் கட்சி பாராளுமன்றத்தில் பெரும்பான்மையாக இருப்பதால் இராணும் எந்த குழப்பமும் செய்யாமல் இருக்கும் பட்சத்தில் டின் சியவ் 1960க்குப் பின்னர் மியன்மாரின் முதல் ஜனநாயக தலைவராக இருப்பார்.

இப்போதிருக்கும் இராணுவத்திற்கு ஆமா போடுகின்ற ஜனாதிபதி தைன் சைன் அரசின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் முதலாம் திகதி முடிவடைகிறது. அன்றே நீண்ட போராட்டத்திற்குப் பின் ஜனநாயகத்திற்கான தேசிய லீக் கட்சி மின்யமாரில் ஆட்சி அமைக்கும்.

டின் சியவ் எப்போதும் சூக்கியின் பின்னால் சுற்றுகிறவர் என்பதற்காக அவரை சாதாரணமானவராக எடுத்துக் கொள்ள முடியாது. 69 வயது சியவ் மியன்மாரின் செல்வாக்கு மிக்க அரசியல் குடும்பத்தில் பிறந்தவர். அவரது தந்தை பிரபலமான கவிஞர், மனைவி பாராளுமன்ற உறுப்பினர், மனைவியின் தந்தை ஜனநாயகத்திற்கான தேசிய லீக் கட்சியை நிறுவினர்களில் ஒருவர்.

ஒக்ஸ்போர்ட் பட்டதாரியான சியவ் அரசியல் எழுத்தாளரும் கூட. 1972 ஆம் ஆண்டு அவர் ஒக்ஸ்போர்ட்டில் கல்வி கற்றுக்கொண்டிருந்த காலத்திலேயே இங்கிலாந்தில் கணவனுடன் வாழ்ந்த சூக்கியுடன் நெருக்கம் ஏற்பட்டது. அதுவே பிற்காலத்தில் விசுவாசமாக மாறி இப்போது ஜனாதிபதி பதவியை தூக்கி கொடுக்கும் அளவுக்கு வந்துவிட்டது.

எப்படி இருந்தாலும், “நானே நாட்டின் உண்மையான தலைவராக இருப்பேன்” என்று கூறும் சூக்கி ஜனாதிபதி கூட எனக்குக் கீழ் இருப்பார் என்று நாட்டு மக்களுக்கு உறுதியாக சொல்கிறார். அதாவது தெரிவாகப் போகும் ஜனாதிபதி வெறுமனே சூக்கியின் கைப்பாவையாக, இல்லையென்றால் பினாமியாக இருப்பார்.

சர்வதேச அரசியலைப் பார்த்தால் இதுவொன்றும் புதிய கதையல்ல. இந்தியாவில் 2004 தொடக்கம் 2014 வரை காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது பிரதமராக இருந்தவர் என்னவோ மன்மோஹன் சிங் தான். ஆனால் அவரை ஆட்டுவித்தவர் காங்கிரஸ் கட்சி தலைவி சோனியா காந்தி.

இவ்வாறானதொரு பாணியில் ஆட்சி நடத்த சூக்கி எதிர்பார்த்திருக்கிறார் போல். என்றாலும் சோனியா காந்தியை விடவும் ஆட்சியில் நேரடி பங்கு வகிப்பவராக சூக்கி இருக்க முயற்சிப்பது நன்றாக தெரிகிறது.

என்றாலும் அவர் எப்படியான கதாபாத்திரத்தை அரசியலில் நடிக்கப்போகிறார் என்பது இன்னும் தெளிவில்லை.

அவர் வெளியுறவு அமைச்சர் போன்று முக்கியமான அமைச்சுப் பதவியை ஏற்று ஆட்சியில் நேரடி பங்காற்றப்போவதாக ஒருசில தரப்புகள் கூறுகின்றன. எனினும் மியன்மாரின் சிக்கலான அரசியல் முறையில் இப்படி தன்னை குறைந்த அந்தஸ்த்தில் காட்டிக்கொள்ள சூக்கி விரும்புவார் என்று எதிர்பார்க்கவும் முடியாது.

பொதுமக்களை பொறுத்தவரை சூக்கி அரச தலைவராக ஆகா முடியாதது பெரிய இழப்பாக இருக்காது. அவர்கள் மாற்றத்தை எதிர்பார்த்தார்கள் எப்படியோ அது ஏற்பட்டிருக்கிறது. அத்தோடு மக்கள் மேலே ஆடும் பட்டத்தை பார்ப்பதை விடவும் அதனை ஆட்டுவிப்பவரை பார்க்கத் தயாராகி விட்டார்கள்.

இந்த சிக்கல் எப்படி இருந்தாலும், சூக்கியினதும் அவரது ஜனநாயகத்திற்கான தேசிய லீக் கட்சியினதும் ஜனநாயக போராட்டம் நாட்டில் ஆட்சிக்கு வந்த பழிக்கு முடிந்து விட்டதாக எடுத்துக் கொள்ள முடியாது. இன்றும் கூட மியன்மாரில் ஆடும் பட்டத்தின் உண்மையான நுலை கையில் வைத்திருப்பவர்கள் இராணுவத்தினராவர். அதிகாரத்தின் அனைத்து மட்டத்திலும் மியன்மார் இராணுவம் தனக்கென ஒரு பங்கை ஒதுக்கிக் கொண்டிருக்கிறது.

பாராளுமன்றத்தைப் பார்த்தால் கால் பங்கான இடங்கள் இராணுவத்திடம் இருக்கிறது.

அமைச்சரவையிலும் பாதுகாப்பு, உள்துறை மற்றும் எல்லை பாதுகாப்பு என்று மூன்று அமைச்சுகள் இராணுவத்திடமே இருக்கும். துணை ஜனாதிபதி பதவி ஒன்று கூட இராணுவத்திற்குத்தான். இந்த இலட்சணத்தில் இராணுவம் தலையாட்டாமல் நாட்டில் எந்த ஒரு முக்கிய முடிவும் எடுக்க முடியாது என்ற நிலையிலேயே சூக்கியும் அவர்களது சகாக்களும் ஆட்சி செய்ய முடியும்.

எனவே மியன்மாரில் நேரடியாக ஆட்சி செய்பவர் எப்போதும் பினாமிகளாக இருக்கும் ஒரு அரசியல் சூழலே ஆங்கு ஏற்பட்டிருக்கிறது.

எஸ். பிர்தெளஸ்

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2016 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.