புத். 68 இல. 11

மன்மத வருடம் மாசி மாதம் 30ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஜமாதுல் ஆகிர் பிறை 03

SUNDAY MARCH 13, 2016

 

ஒன்றுபட்டால்தான் வெற்றி என்பதை புரிந்து கொள்ளவே மாட்டார்களா?

ஒன்றுபட்டால்தான் வெற்றி என்பதை புரிந்து கொள்ளவே மாட்டார்களா?

தமிழ்க் கட்சிகள் தமக்கிடையேயும், முஸ்லிம் கட்சிகள் தமக்குள்ளும் முதலில் ஒன்றுபட்டு தத்தமது சமூகத்திற்கான உரிமைகளை வென்றெடுக்கும் அதேவேளை தமிழ்பேசும் சிறுபான்மை மக்கள் எனும் ரீதியில் ஒன்றுபட்டு தமக்கான உரிமைகளையும், சலுகைகளையும் பெற்றுக் கொள்ள வேண்டும். இந்தக் கருத்தை வலியுறுத்தி இதே ஆசிரியர் தலையங்கத்தில் பல தடவைகள் எழுதியிருந்தும் அவை இக்கட்சிகளின் செயற்பாடுகளில் செவிடன் காதுகளில் ஊதிய சங்கின் ஒலியாகவே இருந்து வருகிறது. இந்தக் கருத்தை இரு சமூகங்களினதும் ஓரிரு கட்சிகள் புரிந்து கொண்டாலும் ஏனைய பிரதான கட்சிகள் கண்டு கொள்வதாக இல்லை என்பது கவலை தரும் விடயமாக உள்ளது.

அதற்காக இவ்விடயத்தினை இப்படியே விட்டுவிட முடியாது. அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்பதுபோல இக்கருத்தை நாம் தொடர்ந்தும் வலியுறுத்த வேண்டும். தாம் அரசியல் கட்சிகளை நடத்துவது தமக்காகவும், தமது சொகுசு வாழ்விற்காகவும் அல்ல அது மக்களுக்காக, மக்களது குறைகளைக் களைவதற்காகவே என்பதை அரசியல்வாதிகள் உணரும்வரையில் எமது கருத்துக்களை நாம் திணித்துக் கொண்டே இருக்க வேண்டும். மக்களது முன்னேற்றத்திற்காகவே தாம் அரசியலில் ஈடுபடுவதாக எந்தவொரு அரசியல் தலைவராவது நினைத்திருந்தால் தமது சமூகத்திலிருக்கும் கட்சிகள் சிதறுண்டு பல கூறுகளாக செயற்படுவதை ஒருபோதும் விரும்பியிருக்கமாட்டார்கள்.

போட்டி அரசியல் நடத்தி தானொரு அரசியல் கட்சியின் தலைவன் எனும் மிடுக்குடன் மக்கள் முன்பாக வீதியுலா வருவதே இன்றுள்ள பெரும்பாலான சிறுபான்மை அரசியல் கட்சிகளின் தலைவர்களது விருப்பாக உள்ளது. இதனை எவராலும் இல்லையென்று மறுதலிக்க முடியாது. ஏனெனில் இதுவே யதார்த்தம், இதுவே உண்மை. இந்நிலையையே வடக்கு கிழக்கிலுள்ள தமிழ்க் கட்சிகளிலும், முஸ்லிம் கட்சிகளிலும், தலைநகர் உட்பட மலையகத்திலுள்ள தமிழ்க் கட்சிகளிலும் காணக்கூடியதாக உள்ளது. இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் விடயத்திலிருந்து தற்போது அரசியலமைப்பு சீர்திருத்த மாற்றம் தொடர்பான கருத்துக்களை முன்வைப்பது வரையான செயற்பாடுகளில் இந்த நிலையையே காண முடிகிறது.

இப்படியே போனால் தமிழ், முஸ்லிம் சமூகங்களின் எதிர்கால நிலை என்னவாகப் போகின்றது எனும் கேள்வி கற்ற சமூகத்தினர் மத்தியில் எழுந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது. அரசியல்வாதிகளைப் பொறுத்தவரையில் அவர்களுக்கு எவ்விதமான பாதிப்புக்களும் ஏற்பட வாய்ப்பில்லை. பெரும்பாலான அரசியல்வாதிகள் தமது பிள்ளைகளை மற்றும் நெருங்கிய உறவுகளை வெளிநாடுகளில் மிகவும் வசதியாகக் குடியமர்த்தி வைத்திருக்கிறார்கள். தமது விடுமுறைகளை அங்கேயே சென்று கழித்தும் வருகிறார்கள். இங்கு அரசியலில் ஏதாவது சறுக்கல் நிலை ஏற்பட்டால் வெளிநாட்டு குடியுரிமையில் அங்கு சென்று அந்நாட்டுப் பிர​ைஜகளாகிவிடுவர்.

இந்நிலையில் இந்நாடே எமக்குத் தஞ்சம் என வாழ்ந்துவரும் மக்களுக்கு இந்த அரசியல்வாதிகள் ஏதாவது செய்தே ஆக வேண்டும். அதற்கு முதலில் தக்குள் இவர்கள் ஒற்றுமைப்பட வேண்டும். கட்சி மற்றும் பிரதேச பேதங்களை மறந்து தமக்கு வாக்களித்து தம்மை அரசியல்வாதிகளாக்கி சொகுசாக வாழ வைத்த மக்களுக்காக ஒன்றுபட்டு நியாயமான தீர்வுகளை அரசாங்கத்திடமிருந்து பெற்றுக் கொடுக்க வேண்டும். ஒரு கட்சிக்குத் தலைவராக இருப்பதைவிடவும் மக்களது மனங்களில் தலைவனாக இருப்தையே ஒரு உண்மையான அரசியல்வாதி பெருமையாகக் கொள்ள வேண்டும். தலைவன் என்ற பதவி இல்லாத பல அரசியல்வாதிகள் பல்வேறு மக்கள் பணிகளை முன்னெடுத்து வருகிறார்கள். அத்தகையவர்களிடம் தலைமைப் பதவிகள் செல்லுமாயின் அவர்கள் மக்களுக்காக நிச்சயம் ஒன்றுபட முன்வருவார்கள்.

வடக்கு கிழக்கு தமிழ்க் கட்சிகளைப் பொறுத்தவரையில் அவற்றில் பெரும்பாலான முதன்மைக் கட்சிகள் இன்று மக்களிடையே செல்வாக்கை இழந்து வருவதை அவதானிக்க முடிகிறது. இதற்குக் காரணம் இக்கட்சிகள் தேர்தல் காலங்களில் அளித்த வாக்குறுதிகளில் பலவற்றை இதுவரை நிறைவேற்றவில்லை. குறிப்பாக நல்லாட்சி காலத்தில்கூட இவர்களால் அரசாங்கத்துடன் பேசி தமது அடிப்படைப் பிரச்சினைகளைக்கூடத் தீர்க்க முடியாமலுள்ளது என்ற மனக்குறை அம்மக்களிடையே காணப்படுகிறது. இது உண்மை. அந்த மக்கள் எதிர்பார்க்கின்ற விடயங்களை நிறைவேற்ற முடியாமற் போவதற்கு அங்குள்ள தமிழ்க் கட்சிகளிடம் காணப்படும் ஒற்றுமையின்மையே பிரதான காரணமாக அமைகின்றது. இக்கட்சிகள் தமக்கிடையே போட்டி போடுவதால் தீர்வு விடயத்தில் ஒரு தீர்க்கமான முடிவை எடுக்க முடியாத நிலைமை காணப்படுகிறது. புதிது புதிதாகத் தோன்றும் கட்சிகள் தமக்கே மக்களது ஆதரவு உள்ளது என்பதாகப் பிரசாரம் செய்து வருவதால் தெற்கில் மத்திய அரசாங்கம் குழம்பிப் போயிருக்கிறது.

இதேபோன்றதொரு நிலைமையையே முஸ்லிம் கட்சிகளின் விடயத்திலும் காண முடிகின்றது. தலைமைப் பதவிப் போட்டி காரணமாக ஒருவரையொருவர் சந்திக்கு இழுக்கும் சம்பவங்களைக் காண முடிகின்றது. அண்மையில்கூட முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பின் அவசியம் தொடர்பாகப் பலராலும் பேசப்பட்டது. இதனைப் புத்திஜீவிகள், கல்விமான்கள், சமூக அமைப்பக்களின் தலைவர்கள் எனப் பலரும் வரவேற்றனர். ஆனால் அரசியல்வாதிகள் பலர் இதனை விரும்பவில்லை. அவ்வாறு ஒரு கூட்டமைப்பை ஏற்படுத்தினால் தமது கட்சியின் பெயர் பின்தள்ளப்பட்டுவிடும், தனது தலைவர் என்ற பதவி இல்லாமற்போய்விடும் என்று பல அரசியல் தலைவர்கள் அஞ்சுகிறார்கள். இவர்களுக்குத் தாம் ஒற்றுமைப்பட்டுச் சமூகத்திற்கு நன்மைகளைப் பெற்றுக் கொடுப்பதிலும் பார்க்க தமது பதவிகளும், கட்சிகளுமே முக்கியமாகத் தென்படுகின்றன.

மலையகத்திலும் பெரும்பாலும் இதேநிலைதான் என்றாலும் அங்கு முன்னர் இருந்த போக்கில் ஒருவித மாற்றம் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது. தமிழ் முற்போக்கு முன்னணி எனும் கூட்டுக் கட்சியில் பிரதான மலையகக் கட்சிகள் பல இணைந்து ஒற்றுமையுடன் செயற்படுகின்றன. இதனை உண்மையில் வரவேற்க வேண்டும். இவர்களது ஒற்றுமையான ஒன்றிணைவு காரணமாக அங்கு முன்னெப்போதும் இல்லாதவாறு பல அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. மலையகத்தில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸே பலமான மக்கள் சக்தி கொண்ட அமைப்பாக இருந்துவரினும் அக்கட்சி இப்போது எதிர்க்கட்சியாக உள்ளது. அப்படியிருந்தும் அதன் தலைமை மலையகத்தில் ஏனைய கட்சிகள் செய்கின்ற அபிவிருத்தித் திட்டங்களுக்கு எவ்விதமான இடையுறுகளையும் ஏற்படுத்துவதில்லை. இதனால் மலையகத்தில் தற்போது ஒருவிதமான வளர்ச்சிப் போக்கைக் காணக் கூடியதாக உள்ளது.

எனவே இப்போது வடக்கு கிழக்கிலுள்ள தமிழ்க் கட்சிகளும், முஸ்லிம் கட்சிகளுமே தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும். தமக்கிடையே ஒற்றுமைப்பட்டால் மட்டுமே எதிலும் வெற்றி கிடைக்கும் என்பதை அக்கட்சிகளின் தலைமைகள் புரிந்து கொள்ள வேண்டும். சிறுபான்மைக் கட்சிகளிடையே பிரிவினைகளை ஏற்படுத்தி அதில் குளிர்காய்ந்த பெரும்பான்மைத் தலைமைகளின் கடந்த காலங்கள் எப்போதோ மலையேறி விட்டமையினால் தற்போது நல்லாட்சியில் சிறுபான்மைக் கட்சிகளின் தலைமைகள் தமக்கிடையேயான தலைமைப் பதவிப் போட்டிகளை ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு இனியாவது மக்களுக்காக சேவையாற்ற முன்வர வேண்டும் என்பதே எமது கருத்தாகும்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2016 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.