புத். 68 இல. 06

மன்மத வருடம் தை மாதம் 24ம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ரபீஉல் ஆகிர் பிறை 27

SUNDAY FEBRUARY 07, 2016

 

 

'இந்திய வம்சாவளி மலையக தமிழர்கள்' என அடையாளப்படுத்தப்பட வேண்டும்

'இந்திய வம்சாவளி மலையக தமிழர்கள்' என அடையாளப்படுத்தப்பட வேண்டும்

- ம. ம. மு. செயலாளர் நாயகம் ஏ. லோறன்ஸ்

மலையக மக்கள் உரியவாறு அடையாளப்படுத்தப்படாமையின் காரணமாக பாதகமான விளைவுகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்கள் என்ற பொது வரையறையின் மூலம் மலையக மக்கள் அடையாளப்படுத்தப்பட வேண்டும் என மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் ஏ.லோறன்ஸ் தெரிவித்தார். அதிகாரப் பகிர்வு மற்றும் அரசியல் யாப்பு சீர்திருத்தத்திற்கான தமிழ் முற்போக்கு கூட்டணியின் முதலாவது அமர்வு கடந்த செவ்வாய்க்கிழமை மலையக புதிய கிராமம், உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சில் இடம்பெற்றது. நிபுணர் குழுவின் தலைவர் பெ. முத்துலிங்கம் தலைமையில் இடம்பெற்ற இவ்வமர்வு குறித்து கருத்து வினவியபோதே லோறன்ஸ் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், அரசியல் யாப்பு சீர்திருத்த நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருகின்ற நிலையில் மலையக மக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டிய தேவை காணப்படுகின்றது. சீர்திருத்த விடயத்தில் எம்மவர்கள் அசமந்தப் போக்குடன் நடந்து கொண்டால் பின்னாளில் அதற்காக வருத்தப்பட வேண்டிய நிலைமை உருவாவதை தவிர்க்க முடியாது.

அரசியல் யாப்பு சீர்திருத்த விடயத்தில் மலையகம் சார்ந்த பல்வேறு கருத்துக்களையும் முன்வைப்பதற்கு தனி மனிதர்களும் குழுக்களும் தயாராகி வருகின்றன. இந்நிலையில் இது தொடர்பில் ஆராயும் பொருட்டு தமிழ் முற்போக்கு கூட்டணி நிபுணர் குழுவை அமைத்துள்ளது. இக்குழுவின் முதலாவது அமர்வு கடந்த செவ்வாயன்று நிறைவு பெற்றுள்ள நிலையில் நாம் பல்வேறு விடயங்கள் குறித்தும் ஆராய்ந்திருக்கின்றோம்.

மலையக மக்கள் இந்நாட்டின் மிகப்பெரும் சக்திகள். இவர்களது அடையாளம் உரியவாறு உறுதிப்படுத்தப்பட வேண்டும். இல்லாதபட்சத்தில் பல்வேறு பாதக விளைவுகள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. மலையக

மக்களை அடையாளப்படுத்துவதில் குழப்ப நிலை காணப்படுகின்றது.

மலையக மக்கள், இந்திய வம்சாவளி தமிழர்கள் என்றெல்லாம் இவர்கள் அடையாளப்படுத்தப்பட்டு வருகின்றார்கள். இவை மாற்றப்பட்டு ஒரே பெயரில் மலையக மக்கள் அடையாளப்படுத்தப்பட வேண்டும். மலையக மக்களின் உண்மையான சனத்தொகை 4.3 சதவீதம் என்று சில ஆவணங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

எனினும் மலையக மக்களின் தொகை ஏழு சதவீதமாக உள்ளது என்பதே உண்மையாகும். இத்தகைய நிலைமைகள் குளறுபடியினை தோற்றுவிக்கும். எனவே, மலையக மக்களை பொதுவான வரையறையின் கீழ் இந்திய வம்சாவளி மலையக தமிழர்கள் என்றவாறு அடையாளப்படுத்தப்படுவது பொருத்தமாகும். இந்த அடையாளத்தின் ஊடாக நாம் எமது பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்திக் கொள்வதோடு மேலும் பல நன்மைகளையும் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும்.

இலங்கையில் பல்லின மக்கள் வாழ்கின்றனர். அவர்களின் உரிமைகள் யாப்பு ரீதியாக உறுதிப்படுத்தப்பட வேண்டும். பாராளுமன்றத்தில் மேல்சபை, கீழ்சபை என இரு சபைகள் உருவாக்கப்படுதல் வேண்டும் என்ற கருத்தும் நிபுணர் குழுவின் அமர்வின்போது முன்வைக்கப்பட்டது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸும் நிபுணர்கள் குழு ஒன்றினை ஏற்படுத்தியுள்ளது.

எனவே கருத்துகள் ஆராயப்பட்டு பொதுவான இணக்கப்பாடுகள் எட்டப்படுவது வரவேற்கத்தக்கதாகும். பல்வேறு தரப்பினரும் முன்மொழிவுகளை அரசியல் யாப்பு சீர்த்திருத்தக் குழுவிடம் முன்வைப்பது அவசியமாகும். ஒத்த கருத்துகளை முன்வைப்பதும் மிகவும் முக்கியமாகும். தமிழ் முற்போக்கு கூட்டணியின் நிபுணர் குழுவில் எதிர்வரும் காலங்களில் மேலும் பல விடயங்கள் இது தொடர்பில் ஆராயப்பட உள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2016 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.