புத். 68 இல. 06

மன்மத வருடம் தை மாதம் 24ம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ரபீஉல் ஆகிர் பிறை 27

SUNDAY FEBRUARY 07, 2016

 

 

மலையக மாணவர்கள் உயர்தர பாடநெறிகளை தெரிவு செய்வதில் அவதானம் தேவை

மலையக மாணவர்கள் உயர்தர பாடநெறிகளை தெரிவு செய்வதில் அவதானம் தேவை

மலையகப் பாடசாலைகளில் க.பொ.த உயர்தரப் பிரிவுகளுக்கு பாட நெறிகளை தெரிவு செய்வது தொடர்பாக வழிகாட்டல்கள் தேவைப்படுகின்றன.

பின்வரும் விடயங்களை அடிப்படையாக வைத்து இப் பாடத்தெரிவுகள் இடம் பெறுவது காலத்தின் தேவையாகும்.

* குறித்ததொரு பாட நெறியை தெரிவதால் கிடைக்கக் கூடிய பிரதிபலன்கள்

* இன்று மலையகத்தில் தேவையாக உள்ள பிரிவுகள்

* மாணவரின் இயல்பான திறமை, விருப்பு வெறுப்பு போன்றவற்றுடன் மேலும் சில விடயங்களை மையமாக வைத்து க.பொ.த உயர்தர பாட நெறிகள் தெரியப்படலாம்.

கணிதம், விஞ்ஞான பாடநெறிகள் மலையகத்திற்கு கேள்வியாக (demand) உள்ள பாடத்துறைகளாகும். ஸ்ரீபாத தேசிய கல்வியியற் கல்லூரி அனுமதி, பிற ஆசிரியர் கலாசாலை அனுமதிகள், பொதுவான ஆசிரியர் நியமனங்கள் என்பனவற்றில் இப்பாட நெறிகள் மிக அதிகமாக கவனத்திற் கொள்ளப்படுகின்றன. உதாரணமாக ஸ்ரீபாத கல்வியியற் கல்லூரி அனுமதியின்போது போதியளவு மாணவர்கள் இத்துறைக்கு இல்லாமை சுட்டிக்காட்டப்படுகின்றது.

தொழில் என நோக்கும்பொழுது இத்துறைசார் விண்ணப்பதாரிகளுக்கு முன்னுரிமை கிடைக்கின்றது. ஆனால் இத்துறையில் உள்ள பிரச்சினை, பலர் இப்பாடநெறிகளுக்குச் சென்று பின்னடைவை சந்திப்பதேயாகும்.

காரணம் அடிப்படையான நல்ல கணிதம், விஞ்ஞான அறிவு போதாமை, க.பொ.த உயர்தரப் பிரிவுகளில் பல பாடசாலைகளில் உரிய ஆசிரியர்கள் இன்மை, அவ்வாறு இருப்பினும் போதியளவு இத்துறையில் ஆற்றல் இன்மை, விடயம் தொடர்பான ஞானம், கற்பித்தல் முறைமையிலுள்ள குறைபாடுகள் போன்றவற்றைக் கூறலாம்.

இந்நிலையில் மலையக மாணவர்கள் பாரம்பரியமான பாட நெறிகளை தவிர்த்து இன்று தேவையாகவும், தொழில் ரீதியாக தொழில் பெற வாய்ப்பு உள்ளதுமான பாட நெறிகளைத் தெரிவு செய்யலாம். பெருமளவில் பலர் தொடாத அதேவேளையில் தொழில் வாய்ப்புக்களை தரக்கூடிய துறைகளைத் தெரியலாம். தொழில்துறை தொடர்பான வழி காட்டல்கள் மூலம் அதிபர் ஆசிரியர்கள் தொண்டர் நிறுவனங்கள் இதனைச் செய்யலாம். E Tech- எனும் தொழில்நுட்பப் பாடம் பற்றிய விழிப்புணர்வு மேலும் மாணவர் மத்தியில் எடுத்துச் செல்லப்படல் வேண்டும்.

ஸ்ரீ பாத கல்வியிற் கல்லூரி போன்ற கலாசாலைகளுக்கு மாணவர்களைத் தெரிவதில் பிரதேச செயலகப் பிரிவுகளின் அடிப்படையில் தெரியும் புதியமுறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இந்நிலையில் நுவரெலியா போன்ற மாவட்டங்களுக்கு ஐந்து பிரதேச செயலகப் பிரிவுகளிலிருந்து மட்டுமே வெற்றிடமாகவுள்ள பாடங்களுக்கு மாணவர்கள் தெரியப்படுவர்.

இதேவேளை சில மாவட்டங்களில் மிக அதிகமான பிரதேச செயலகப் பிரிவுகள் (DIVISIONAL Secretariat) காணப்படின் அதிக மாணவர்கள் தெரியப்படலாம்.

இந்நிலையில் சில பாடங்களுக்கான வெற்றிடங்கள் நுவரெலியா மாவட்டத்தில் காணப்படாத நிலையில் மாணவர்கள் தெரியப்பட மாட்டார்கள் உதாரணமாக சமூக விஞ்ஞானப் பாடநெறிக்கு வெற்றிடம் இல்லை என்பதால் இது தொடர்பான கற்றலை மேற்கொண்ட மாணவர்கள் தெரியப்பட வாய்ப்பு இல்லை.

இந்நிலைமைகளை க.பொ.த உ/தரப் பாடசாலைகளும் கவனத்திற் கொள்வதுடன் மாணவர், பெற்றோர், கல்வி சமூகத்தினரும் கவனத்திற் கொள்ள வேண்டும்.

தொழிற்றுறை வழிகாட்டல்கள் மட்டுமன்றி, எந்த பாடநெறியைத் தொடர்வது என்பது பற்றியும் மலையகத்தில் புதிய சிந்தனைகளும், தேடல்களும் இத்துறை சார்ந்தோரிடமிருந்து பெறப்படல்வேண்டும். 1 AB, 1C பாடசாலைகளில் இதற்கான செயல் அமர்வுகள் வழிகாட்டல்கள் பாடசாலையினுள்ளே மாணவர்கள் மத்தியில் செய்யப்படல் வேண்டும்.

சித்திரம், மனைப் பொருளியல், விவசாயம் போன்ற பாடநெறிகள் தொடர்பாகவும், மொழிகளை கற்றல் என்பது பற்றியும் தெளிவூட்டல்கள் அவசியம்.

குறிப்பாக பாரம்பரியமான எமது கற்கை நெறிகளும் அதனைக் கற்பிக்கும் ஆசிரியர்களும் மாணவர் திறன், மாணவர் விருப்பு என்பது பற்றி கவனத்திற் கொள்ளாது க.பொ.த சா/தரப் பெறுபேறுகள் வெளிவர முன்னரே தனியார் வகுப்புகளுக்கு மாணவர்களைத் தெரிந்து வகுப்புக்களை ஆரம்பித்து விடுகின்றனர். என்ன அடிப்படையில் குறித்த ஒரு மாணவன் குறித்த ஒரு பாடநெறியினை சிறப்பாக செய்வான் என நம்புவது என்ற கேள்வி எழுகிறது. இதில் பெற்றோர்களும் தமது பிள்ளைகளின் திறமை, விருப்பு பற்றி எண்ணாது தாம் விரும்பும் பாடநெறிக்கு கௌரவம், அந்தஸ்து கருதி திணிப்பதைக் காணலாம்.

அப்பட்டமான பணம் பண்ணும் இந்நடைமுறை கண்டிக்கத்தக்கதாகும். தொடர்ந்தும் மலையக மாணவர்கள் இந்திய வம்சாவளியினர், தோட்டத்தொழிலாளர்களின் பிள்ளைகள் என்ற அடிப்படையில் சலுகை கேட்டுப்பெற முடியாது என்பதனையே பிரதேச செயலகம் (DIVISIONAL LEVEL) அடிப்படையிலான மாணவர் தெரிவு முறை உணர்த்துகின்றது.

இலங்கை எனும் தேசிய ரீதியான கொள்கைகளுக்கு புறம்பாக இந்திய வம்சாவளியினருக்கான சில வழிமுறைகள் என்பது தொடர்ந்தும் பெற முடியாத ஒன்றென்பதை நாம் உணர வேண்டும். அவ்வாறு சில வழிமுறைகளை உருவாக்கக்கூடிய எமது அரசியல் சக்தி எந்தளவு உள்ளது என்பதையும் சிந்தித்தல் நலம் என்றாலும் சுதந்திரத்திற்குப் பின்னர் ஏறத்தாழ முப்பது வருட பின்னோக்கிய மலையக கல்வி வரலாறு பின்தங்கிய ஒன்றென்பதும் உண்மையே. எனினும் தேசிய ரீதியாக நாம் சிறுபான்மையினத்தவர் என்பது இதன் மற்றொரு பக்கமாகும்.

எனவே, மலையகக் கல்வி முன் பல விடயங்கள் உள்ளன. பாடசாலைகள் வெறும் பாடத்திட்டங்களையும், அரசின் கொள்கைத் திட்டங்களையும், மாத்திரம் முன்னெடுப்பதாக இல்லாமல் மலையகத்திற்கான பாடத்தெரிவுகள், பாடநெறித் தெரிவுகள் பற்றி சிந்திப்பது அவசியமாகும்.

கொட்டகலை மொழிவரதன்

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2016 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.