புத். 67 இல. 52

மன்மத வருடம் மார்கழி மாதம் 12ம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ர.அவ்வல் பிறை 15

sunday december 27, 2015

 

 

சில மனிதர்களும் சில நியாயங்களும்

சில மனிதர்களும்

சில நியாயங்களும்

மகேந்திரம் தாஸை நேரில் கண்டபோது மகளின் தெரிவை மனதுக்குள் மெச்சிக்கொண்டார்.

தாஸ் மெதுவாக அவரைப் பார்த்துச் சிரித்துக் கொண்டான்.

“ தம்பி என்னைத் தெரியும் எண்டு நினைக்கிறன். எனக்கு உங்கடை பிரச்சினைபற்றி கொஞ்சம் விரிவாய்ச் சொல்லுங்கோ”

என்று மகேந்திரம் கேட்கவும் தாஸ் சொன்னான்.

“நாங்கள் நாலுபேர் நல்ல நண்பர்கள். சுமந்தன், சுதா, கணன். கணனின் அப்பா நல்ல பணக்காரன். வியாபாரம் அவரின் தொழில். இதனாலை அவருக்கு கனபேர் எதிரிகள். நாங்கள் படிக்கிற காலத்திலை கணன் வீட்டைதான் குரூப் படிப்பு செய்யிற நாங்கள். என்னவோ தெரியாது எங்களுக்குள்ளை நாங்கள் பெரிய அடிகாரர் எண்ட நினைப்பு இருந்து வந்தது.

இதுக்கு கணனின்ரை அப்பாவும் ஒரு காரணம். கணன் கண்ணை மூடிக்கொண்டு செலவழிப்பான். நாங்கள் அவன்ரை காசிலை நல்லாய்க் குளிர் காய்வம். அந்த நேரத்திலை எங்கடை அப்பா அம்மாவையளை விட கணனும் அவன்ரை குடும்பமும்தான் பெரிசாய்த் தெரிந்தது. அப்பிடி எங்களை அவை ஆக்கி வைச்சிருந்தவை. சிலவேளையிலை கணனின்ரை அப்பாவுக்கு வியாபாரத்திலை ஏதாவது பிரச்சினை வந்தால் நாங்கள்தான் அந்த ஆக்களை வெருட்டவேணும்.

எங்களை அவர் ஒரு அடியாட்கள் மாதிரித்தான் வைச்சிருந்தவர். நாங்கள் ஆரையும் அடிச்சிட்டு வந்தால் எங்களுக்குக் காசு தருவார். அந்தக் காசைக் கொண்டுபோய் பப்பிலை சிலவழிச்சுக் குடிப்பம். ” என்று கூறிவிட்டு சில நிமிடங்கள் அமைதியானான். அவன் இப்படி மனந்திறந்து வெளிப்படையாகப் பேசுவது மகேந்திரத்துக்குப் பிடித்திருந்தது.

இவற்றையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த தாஸின் அம்மாவும் அப்பாவும் ஏங்கிப்போயிருந்தனர்.

மகேந்திரம் தாஸைப் பார்த்து

“இப்பிடி அடியாட்களாய் இருந்ததுக்கு உங்களுக்கு வெட்கமாயிருக்கிறதில்லையே.”

“ எனக்கு இப்பதான் எல்லாம் விளங்குது”

“ கணன் ஒண்டிலையும் பங்கு பற்றிறதில்லையே.”

“ எங்களோடை இருந்து கதைப்பான். அப்படிச் செய்வம் இப்படிச் செய்வம் என்டு கதைப்பான். அடிபிடிக்குப் போகேக்கை மறைஞ்சிடுவான்.”

“ அவன்ரை இந்த நடவடிக்கை உங்களுக்குக் கொஞ்சமும் விளங்கயில்லையே”

“இப்பதான் விளங்குது.”

“ சரி அண்டைக்கு என்ன நடந்தது எண்டு சொல்லும்”

“ அண்டைக்குச் செத்தது கணனின்ரை அப்பாவின்ரை கடையிலை வேலை செய்த ஒரு பொடியன்தான். கணன்ரை அப்பாவின்ரை கடைக் கணக்குகளை பார்க்கிறவன்தான் அந்தப் பொடியன். அவர் உண்மையான கணக்கு ஒருநாளும் காட்டிறதில்லை. அதுக்கு இந்தப் பொடியனும் உதவி செய்யிறவன். என்ன நடந்ததெண்டால் இந்தப் பொடியன் ஆரோடையோ கதைக்கேக்கை இந்த விடயத்தைச் சொல்லிப்போட்டான். அதைக் கேட்டதுக்கு வாயடிச்சிருக்கிறான். அதனாலை அவனை வெருட்டி வைக்கத்தான் அவர் சொன்னவர்.

நாலு பேரும்தான் போனனாங்கள். பொடியனுக்கு மேலை ஒரு அடி கூட நான் அடிக்கேல்லை. எனக்கு அந்தப் பொடியனை நல்லாய்த் தெரியும். அவன் ஒரு அப்பாவி. இந்த முறை கணன்தான் அடிச்சவன். அவன் அடிக்கேக்கை அடி படாத இடத்திலை பட்டிருக்க வேண்டும். அவன் மயங்கி விழுந்திட்டான் தட்டித் தட்டிப் பார்த்தம் எழும்பவேயில்லை. நான் அடிக்கேக்கை தடுத்தனான்.

கணன் கேட்கவேயில்லை. பொடியன் இப்ப செத்த உடனை கணன்ரை அப்பாவும் கணனும் நான் தான் அடிச்சதெண்டும் நான் தான் கொலைகாரன் எண்டும் பொலிசுக்குச் சொல்லிப்போட்டினம். என்னோடை நிண்ட மற்றப் பொடியனையும் வெருட்டி வைச்சிருக்கினம்” என்று அவன் கூறி முடிக்கும்போது கண்களிலிருந்து பொலபொலவென்று கண்ணீர் வழிந்தது.

சூழல் அமைதியால் விழுங்கப்பட்டது.

மகேந்திரம் யோசினையில் ஆழ்ந்துவிட்டார்.

எல்லோரும் அவரையே பார்த்துக் கொண்டிருந்தனர்.

தாஸின் அம்மாவின் கண்கள் கண்ணீரைக் கொட்டிக் கொண்டே இருந்தன.

“ அந்த இடத்தை ஒருக்காப் பார்ப்பமே?” என்று கேட்டார்.

தாஸ் தாஸின் அப்பா அம்மா மகேந்திரம் நால்வரும் வந்து காரில் ஏறிக்கொண்டனர்.

கார் சவுத்கோல் வீதியில் போய்க் கொண்டிருந்தது.

அந்த வீதியின் முடிவில் கார் நின்றது. ஒருவரையும் இறங்க வேண்டாம் எண்டு விட்டு மகேந்திரம் மட்டும் இறங்கினார்்.

இடத்தை நன்றாகப் பார்த்தார். சுற்றும் முற்றும் பார்த்தார். மேலே அண்ணார்ந்து பார்த்தார்.

அவரின் கண்களில் கமரா தட்டுப்பட்டது. அவரது முகத்தில் புன் சிரிப்பு வந்தது.

அமைதியாக வந்து காரில் ஏறினார்.

“உங்கடை லோயரை உடனடியாய்ச் சந்திக்கவேணும்.”

தாஸின் அப்பா உடனேயே பாலாவுக்குப் போன் பண்ணி விசயத்தை விளக்கினார்.

பாலாவும் வரச்சொல்ல அப்பிடியே பாலா வீட்டுக்குச் சென்றனர். பாலா சந்தோசமாக மகேந்திரத்தை வரவேற்றார்.

மகேந்திரத்தின் சுகத்தை விசாரித்து நாட்டு நடப்புகளைப்பற்றியும் இருவரும் சந்தோசமாகக் கதைத்துக் கொண்டனர். பாலாவின் மனைவி தேனீர் கொண்டுவர தேனிரை அருந்திக் கொண்டே தாஸின் வழக்கைப் பற்றிய உரையாடல் தொடங்கியது.

பாலா இந்த நாட்டின் வழக்கு பற்றிய விபரங்களைக்கூற மகேந்திரம் அமைதியாகச் சகலதையும் செவிமடுத்தார். வழக்கை முறிப்பதற்குச் சரியான சாட்சியைத் தேடவேண்டும் என்று பாலா கூறினார். அதற்கான வழியை மகேந்திரம் கூறத் தொடங்கினார். 

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.