புத் 67 இல. 47

மன்மத வருடம் கார்த்திகை மாதம் 06ம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஸபர் பிறை 09

SUNDAY NOVEMBER 22 2015

 

 
அன்று தமிழ் அரசியல் தலைவர்களுக்கிருந்த ஒற்றுமையும் துணிச்சலும் இன்று இல்லையா?

அன்று தமிழ் அரசியல் தலைவர்களுக்கிருந்த ஒற்றுமையும் துணிச்சலும் இன்று இல்லையா?

1977ஆம் ஆண்டு வடக்குக் கிழக்கில் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களில் வடக்கில் கூட்டணியில் தெரிவான அனைவரிலும் அமரர்கள் அமிர்தலிங்கம் (காங்கேசன்துறை), சிவசிதம்பரம் (நல்லூர்), துரைரத்தினம் (பருத்தித்துறை), கதிரவேற்பிள்ளை (கோப்பாய்), யோகேஸ்வரன் (யாழ்ப்பாணம்), நவரத்தினம் (சாவகச்சேரி) ஆகியோர் சட்டத்தரணிகள் என்பதைவிட இவர்களில் பெரும்பாலானவர்கள் பிரபல வழக்கறிஞர்கள் ஆவார்கள்.

வன்னி மாவட்டத்தில் தெரிவான ஆனந்தசங்கரி (கிளிநொச்சி), செல்லத்தம்பு (முல்லைத்தீவு) ஆகியோரும் வழக்கறிஞர்களே. கிழக்கில் திருமையில் முதன்முதல் எம்.பியாக வந்த இரா. சம்பந்தன் சிறந்த வழக்கறிஞராவார்.

பாராளுமன்றத்தில் இவர்களின் வாதத்திற்குப் பதிலளிக்க முடியாமல் ஜே.ஆர்.ஐக்கிய தேசியக் கட்சியின் மேர்வின் டி சில்வா (இன்றுள்ளவர் அல்ல) சிறில் மத்தியூ போன்ற சட்டத்தரணிகள் அல்லாதவர்களை இனவாதத்தைக் கக்கும் வகையில் பேச வைத்திருந்தார். சட்டத்தரணிகள் அல்லாத உடுப்பிட்டி எம்.பி.அமரர் இராசலிங்கம் (முதுமாணி - கல்வி நிருவாகம்) மன்னார் எம்.பி.சூசைதாசன் (பட்டயக் கணக்காளர்), காவலூர் எம்.பி.பண்டிதர் க.பொ.இரத்தினம் ஆகியோரின் பாராளுமன்றப் பேச்சுக்களே புத்தகங்களாயின் அவை மட்டுமே எமது இன அரசியல் வரலாற்றைச் சொல்லும் மண்ணின் அபிவிருத்தி பற்றி ஆலோசனைகளைச் சொல்லும்.

1976ஆம் ஆண்டு வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை யாழ். பேருந்து நிலையத்தில் மக்களுக்கு விநியோகிக்கையில், கைது செய் யப்பட்ட தமிழ் தலைவர்களான அமிர்தலிங்கம், க.பொ.இரத்தினம், துரைரத்தினம், வீ.என்.நவரத்தினம் ஆகியோர் மீது சிறிமாவோ, பீலிக்ஸ் அரசால் கொண்டுவரப்பட்ட யூரிகள் இல்லாத நீதி மன்றத்தில் இவர்களுக்காக வாதிடுவதற்கு 72 தமிழ்ச் சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் முன்வந்தனர்.

அன்று தலைவர் செல்வநாயகமும் ஜி.ஜி.பொன்னம்பலமும் இவர்களுக்குத் தலைமை வகித்தனர். அன்று அரசுக்கெதிராக வாதிடுவதற்கு அந்தத் தமிழ்த் தலைவர்களுக்கிருந்த ஒற்றுமையும் துணிச்சலும் இன்று இல்லாமல் போய்விட்டதா? அல்லது அன்று இருந்த தலைமைத்துவக் கட்டமைப்பு இன்று இல்லாமல் ஆகிவிட்டதா? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கும் இக்கேள்வி பொருந்தும். அன்று கைது செய்யப்பட்டவர்கள் அரசியல் தலைவர்கள். இன்று விவகாரத்திற்கு உரியவர்கள் யாரோ பெற்ற பிள்ளைகளா? அன்று 1977 தேர்தலை நோக்கித்தான் ஜி.ஜி.பேச முயன்றார் என்று வைத்துக்கொள்வோம்.

அப்படியாயின் இன்று அடுத்துவரும் உள்ளூராட்சித் தேர்தலைப்பற்றி இவர்கள் சிந்திக்கவில்லையா? அப்படித்தான் வைத்துக்கொள்வோம். ஜி.ஜி.க்குரிய “தேர்தல் ஞானம்” கூட இவர்களுக்கு இல்லையா? கவலைக்குரிய விடயம். கைதிகள் விடுதலை பற்றியும் பிணை பற்றியும் பேசப்படும் போது சட்டத்தரணிகளைக் கொண்ட எமது அரசியல் கட்சிகள் தகுந்த ஒரு முகாமைத்துவத்தைக் கொண்டிருக்காமையாகும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இரண்டுமே பெரிய சட்ட வல்லுனர்களையும் விரிவுரையாளர்களையும் கொண்ட அணி. சமஷ்டி பற்றியும் 13ஆம் திருத்தம் பற்றியும் உள்ளக வெளியாக விசாரணைகள் பற்றியும் விலாவாரியாக விளக்கக் கூடியவர்களுக்கு இந்தக் கைதிகள் பிணை விடயம் தெரியாமல் போனது ஏன்? பிணையில் கைதிகள் விடப்படுகையில் அவர்களை மீட்பதற்குரிய நடவடிக்கைகளை எடுக்காதவர்கள் இதுவரையில் இது தொடர்பான கட்டமைப்புக்களை ஏற்படுத்தாதது - இரு அணிகளுமே இன்னும் மக்கள் கட்டமைப்பு ஒன்றை உருவாக்கவோ அல்லது ஓர் இளையவர் கட்டமைப்பை உருவாக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளதாகவோ தெரியவில்லை.

நீண்ட காலம் உள்ளேயிருந்து வெளியாகிவரும் கைதிகளின் எதிர்காலம் தொடர்பில் எந்த விதமான அக்கறையும் காட்டாத நிலையில் (இது சாதாரண கைதிகளின் விடயம் அல்ல- அரசியற் கைதிகள் என்பதைக் கருத்திற்கொள்க)

பாராளுமன்ற உறுப்பினர்களோ, மாகாணசபை உறுப்பினர்களோ இது பற்றி ஏதாவது சிந்தனைகளை, திட்டங்களை முன்வைத் திருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

புலம்பெயர் தமிழர்களுடன் குறிப்பாக இளையவர்களுடன் தொடர்புடையவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைவிடவும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என்ற பார்வை அரசியலில் உண்டு. அரசியல் கைதிகள் தொடர்பாக புலம்பெயர் தமிழரின் பிரயோகத்திற்கு இக்கட்சி செய்தது என்ன என்று எதுவும் தெரியவில்லை.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.