புத் 67 இல. 37

மன்மத வருடம் ஆவணி மாதம் 20 திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 துல்கஃதா பிறை 21

SUNDAY SEPTEMBER 06 2015

 

 
காதோடு காதாக...

காதோடு காதாக...

* தம்பி குமார் தமிழில் ஒரு வார்த்தை

பேசியிருந்தால் சிக்கல் வந்திராது

தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்துப் பாராளுமன்றத்தில் ஆற்றிய கன்னி உரையின் போது தனிச் சிங்கள மொழியில் பேசியதாக ஒரு இளம் உறுப்பினர் மீது சில ஊடகங்கள் தேவையில்லாது வசை பாடியுள்ளன.

வசைபாடி வரும் அதே ஊடகங்களில் அவர் ஐந்து இலட்சம் ரூபாவிற்கும் அதிகமாகச் செலவு செய்து அழகாகத் தமிழில் நன்றி தெரிவித்த விளம்பரங்களை பிரசுரித்தமையை அந்த ஊடகங்கள் மறந்து செயற்படுவதை நினைக்கையில் கவலையாக உள்ளது. ஆனாலும் தம்பி குமாரவேலன் தமிழில் ஒரு வார்த்தை பேசியிருந்தால் இந்த மாதிரி சிக்கல் எதுவுமே வந்திராது.

* பொரும்பான்மையின அரசியல்வாதிகளை

உண்மையில் நாமும் பாராட்ட வேண்டும்

சம்பந்தன் ஐயாவிற்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி கிடைத்தையிட்டுப் பலர் மகிழ்ச்சியடைந்து வாழ்த்துத் தெரிவித்தாலும் வயிற்றெரிச்சலில் புழுங்கிய பலரும் இருக்கத்தான் செய்கின்றனர். இன்னும் சிலர் தமது கவலையை வெளியே காட்டாது வாழ்த்துக்களை அறிக்கைகளாக ஊடகங்களில் தெரிவித்துமுள்ளனர்.

ஆனால் எது எப்படியோ தமிழரைப் பற்றிய பலரது உண்மையான உள்ளக் கிடக்கைகளை ஐயாவிற்குக் கிடைத்த இந்தப் பதவி தெளிவாக வெளிக்காட்டி விட்டது. ஐயாவைப் பாராட்டிய பெரும்பான்மையின அரசியல்வாதிகளை உண்மையிலேயே நாமும் பாராட்ட வேண்டும்.

* தேசியப் பட்டியல் வழங்கப்பட்டிருந்தால் இந்தக் கதையை கசிய விட்டிருப்பாரோ?

புலிகளின் தலைவர் பிரபாகரனை வைத்து தமக்குப் பிரசாரம் தேடுவது இப்போது சிலருக்கு அரசியல் தேவையாகி விட்டது. முதலில் கருணா அம்மான் ஏதோ கதை சொன்னார். இப்போது கே.பி. ஐயாவும் கதை சொல்ல ஆரம்பித்திருக்கிறார்.

ஆனால் இவற்றை நம்புவதற்கு மக்கள் தயாராக இல்லை போலவே தெரிகிறது. நேர்மையானவர்கள் என்றால் இதுவரை காலமும் ஏன் இவ்விடயங்களைப் பொத்தி வைத்திருக்க வேணும் என்பது மட்டுமில்லாது அம்மானுக்கு தேசியப் பட்டியலில் இடம் வழங்கப்பட்டிருந்தால் இந்தக் கதையை அவர் சகிய விட்டிருப்பாரோ எனவும் நாமல்ல பொது சனம் கேட்குது.

* எமது பாடசாலைகளின் கல்வி நிலை

எப்படியுள்ளது என்று பாருங்களேன்?

கொழும்பில் ஒரு தமிழ்ப் பெண்கள் பாடசாலையில் அடுத்த வருடத்திற்கான முதலாமாண்டு மாணவர்களைச் சேர்ப்பதில் பல தில்லுமுல்லுகள் நடக்குதாம். அரசாங்கப் பாடசாலையாக இருந்தும் அதுக்கு இதுக்கு எனக்கூறி பணமும் கறக்கப்படுகுதாம். பிள்ளைகளை எப்படியாவது சேர்ப்பதில் மட்டுமே பெற்றோர்கள் குறியாக இருப்பதால் இவைகள் பற்றி வெளியே கூறுவதில்லையாம்.

அதிலும் அந்தப் பாடசாலையின் அதிபாரக இருக்கும் பெண்மணி இந்த மக்குகளைக் கட்டி மாரடிக்க முடியாதுள்ளதாக புதிதாகச் சேர வரும் சின்னஞ் சிறுசுகள் முன்பாக எரிந்து விழுகிறாராம். மாரடிப்பதென்றால் என்ன என அந்தச் சிறுசுகள் பெற்றோரிடம் விளக்கம் கேட்கின்றனவாம். எப்படியுள்ளது எமது கல்விக் கூடங்களின் நிலை?

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.