புத் 67 இல. 37

மன்மத வருடம் ஆவணி மாதம் 20 திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 துல்கஃதா பிறை 21

SUNDAY SEPTEMBER 06 2015

 

கிடைத்த சந்தர்ப்பத்தை தவற விடக் கூடாது

கிடைத்த சந்தர்ப்பத்தை தவற விடக் கூடாது

இலங்கை சுதந்திரமடைந்ததற்குப் பின்னரான அறுபத்தேழு ஆண்டு கால வரலாற்றில் மாறி மாறி ஆட்சியிலிருந்து வரும் பெரும்பான்மையினக் கட்சிகளின் அரசாங்கங்களுடன் அவ்வப்போது முரண்பாடுகள் சிலவற்றுக்கு முகங்கொடுத்து வரும் தமிழர் அரசியல் தலைமைகள் முதற்தடவையாக தாம் விரும்பியவாறானதொரு அரசாங்கத்தை தாமும் இணைந்து அமைத்துள்ளனர் எனக் கூறுமளவிற்கு இன்றைய புதிய பாராளுமன்றம் அமைந்துள்ளது. கடந்த ஜனவரி 08ஆம் திகதி நாட்டில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதில் தமிழ்த் தரப்பு காட்டிய ஆர்வமும், ஆதரவும் இணைந்த தொடர்ச்சியாகவே அவர்களது விருப்பம் போல இந்தப் புதிய பாராளுமன்றமும் அமைந்துவிட்டது.

இந்தப் புதிய அரசாங்கத்தில் வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேரடியாகப் பங்கேற்கா விடினும் இந்த அரசாங்கத்துடன் இணைந்து தமிழர் பிரச்சினைக்களுக்குத் தீர்வினைக் கண்டுவிடலாம் எனும் நம்பிக்கையுடன் செயற்படத் துணிந்துள்ளமையே தமிழர் பிரச்சினையில் ஐம்பது வீதமான பிரச்சினைகள் தீர்ந்து விட்டமை போன்ற உணர்வினைத் தருவதாக உள்ளது. முப்பது நாற்பது வருடங்களாக எதிர்ப்பு அரசியலுக்கு மட்டுமே பெயர்போன தமிழர் தரப்பு அரசியல் இன்று முதற் தடவையாக அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட முன்வந்துள்ளமையை உண்மையிலேயே பாராட்ட வேண்டும்.

தமிழ் மக்கள் தமது உரிமைகளுக்காக அஹிம்சை வழியில் போராடிப் பார்த்தனர். எந்த அரசாங்கமும் தீர்வினைக் காண முன்வரவில்லை. அப்படியே முன்வந்தாலும் அது வெறுமனே கண்துடைப்பாகவே அமைந்து காணப்பட்டது. அதன் காரணமாக அஹிம்சை வழிப் போராட்டம் ஆயுதப் போராட்டமாக மாறியது. முப்பது வருடங்களாக தமிழ் இளைஞர்கள் தமது உரிமைகளை வென்றெடுக்க உயிர்களைக் காவு கொடுத்துப் போராடினார்கள்.

பலனுக்குப் பதில் இனத்தையே அழிக்கும் அளவிற்கு கடந்த அரசாங்கம் துணிந்தது. வெளிநாடுகள் சிலவற்றின் தலையீட்டால் அது தடுத்து நிறுத்தப்பட்டமையினால் போராளிகளில் பலரும், பொது மக்களில் ஒரு தொகையினரும் கொல்லப்பட்டதோடு யுத்தம் முடிவிற்கு வந்தது.

இந்தக் கொடிய யுத்தத்தில் தாம் இழந்த உயிர்கள், காணாமற்போன உறவுகள், மதிப்பிட முடியாத உடமைகள் என்பவற்றிற்காக நியாயம் கேட்டு கடந்த ஐந்து வருடங்களாக மீண்டுமொரு அஹிம்சை வழியிலான போராட்டத்தை நடத்த வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டிருந்த தமிழ் மக்களுக்கு விடிவு ஏற்பட இந்த ஆட்சி மாற்றமே உதவியது.

முதலில் ஜனாதிபதி மாறினார். இப்போது பாராளுமன்றமும் மாற்றம் கண்டுள்ளது. இனி தமிழ் மக்கள் தாம் இழந்தவற்றைத் திரும்பவும் பெறலாம் என நம்பிக்கை கொள்ளுமளவிற்கு புதிய அரசாங்கத்தின் ஆரம்பக் கட்டச் செயற்பாடுகள் அமைந்துள்ளது. இதனைத் தமிழர் தரப்பு அரசியல் தலைமைகளும் சரிவரப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இத்தகையதொரு சந்தர்ப்பம் இனியும் வரும் என்பது சந்தேகமே.

அதனால் தமிழ் அரசியல் தலைமைகள் தமக்கிடையே போட்டி அரசியலை நடத்தி மீண்டும் ஒரு அழிவிற்கு வித்திடாது தாம் சார்ந்த மக்கள் நலன் குறித்துச் சிந்தித்துச் செற்பட முன்வர வேண்டும். இதுவரை காலமும் எதிர்ப்பு அரசியல் நடத்தியது போதும். எடுத்ததற்கெல்லாம் அரசாங்கத்தை வசை பாடியது போதும். இனியாவது தமது பங்களிப்புடன் உருவாக்கப்பட்ட புதிய அரசாங்கத்தின் செயற்பாடுகளில் நம்பிக்கை வைத்துச் செயற்பட முன்வர வேண்டும். அரசாங்கம் முன்வைக்கும் விடயங்கள் ஏதேனும் தமிழ் மக்களைப் பாதிப்பதாக, இருந்தால் அது குறித்துப் பேச்சு நடத்தித் திருத்திக் கொள்ள முனைய வேண்டும்.

அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்த வரையில் அதற்கும், தமிழ் மக்களின் தலைமைத்துத்திற்கும் பொருத்தமானவராக இரா. சம்பந்தன் காணப்படுகின்றார். அரசியலில் முதிர்ச்சியும், ஆளுமையும் கொண்ட அவரது கரங்களைத் தமிழ் மக்கள் பலப்படுத்துவதன் மூலம் தமது உரிமைகளை இலகுவாக வென்றெடுக்கக் கூடியதாக இருக்கும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தமிழ் மக்களது பிரச்சினைகளை தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து தீர்ப்பதில் ஆர்வமாக உள்ளனர். அதனைத் தமிழ்த் தரப்பு தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே எமது கருத்தாகும்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.