புத் 67 இல. 37

மன்மத வருடம் ஆவணி மாதம் 20 திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 துல்கஃதா பிறை 21

SUNDAY SEPTEMBER 06 2015

 

 
69 ஆவது வருட நிறைவில் ஐ.தே.க

69 ஆவது வருட நிறைவில் ஐ.தே.க

ஐ.தே.க 69 வருட நிறைவு விழா பிரதம அதிதியாக ஜனாதிபதி

ஐக்கிய தேசியக் கட்சியின் 69வது வருட நிறைவு வைபவங்கள் எதிர்வரும் 06ம் திகதி கட்சி தலைமையகமான ஸ்ரீ கொத்தாவில் நடைபெறவுள்ளது. இந்த வைபவங்களின் பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி என்பவற்றின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன கலந்து கொள்ளவுள்ளார்.
குறித்த வைபவத்தின் போது கட்சியின் எதிர்கால செயற்திட்டங்கள், அரசாங்கத்தின் கொள்கை முன்னெடுப்புகள் மற்றும் தற்போதைய அரசியல் சூழல் தேசிய அரசாங்கம் என்பன குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி இலங்கையின் மிகப் பழைய அரசியல் கட்சிகளில் ஒன்றும், ஆட்சி அமைக்கக்கூடிய நிலையிலுள்ள இரண்டு பெரிய கட்சிகளில் ஒன்றுமாகும்.

1948ல் இலங்கை விடுதலை பெற்ற பின்னர் முதலாவது அரசை அமைத்ததுடன் பின்னரும் பல தடவைகளில் ஐ.தே.க ஆளும் கட்சியாக இருந்துள்ளது.

இக் கட்சியின் முதல் தலைவரும், முதல் சுதந்திர அரசின் பிரதமராகவும் இருந்தவர் டி.எஸ். சேனநாயக்க ஆவார்.

கட்சியின் தற்போதைய தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆவார். இவரின் தலைமையின் கீழேயே கட்சி 2002 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றது. பின்னர் 2015 ஆகஸ்டிலும் ஆகக் கூடிய ஆசனங்களைப் பெற்று ஆட்சி அமைத்தது.

ஐக்கிய தேசியக் கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க
நிறுவனர் - டொன் ஸ்டீபன் சேனநாயக்க
செயலாளர் - கபீர் காசிம்
தொடக்கம் - செப்டம்பர் 6 1946
இணைந்தவை - இலங்கை தேசிய காங்கிரஸ், சிங்கள மகா சபை, முஸ்லிம் லீக்,
தலைமையகம் - “சிஸ்ரீகொத்தா இல்லம்” 400 கோட்டே வீதி,பிட்டகோட்டே, கோட்டே
கொள்கை - லிபரல் பழைமைவாதம்
அரசியல் நிலைப்பாடு - மையவலம்
தேசியக் கூட்டணி - ஐக்கிய தேசிய முன்னணி
பன்னாட்டு சார்பு - பன்னாட்டு சனநாயகம் ஒன்றியம்

டி.எஸ். சேனநாயக்க என்னும் டொன் ஸ்டீபன் சேனநாயக்க

(அக்டோபர் 20,1884 மார்ச் 22, 1952) சுதந்திர இலங்கையின் முதலாவது பிரதமரும், இலங்கையின் தேசத் தந்தையும் ஆவார். பெளத்தரான இவர் கொழும்பு புனித தோமையார் கல்லூரியில் பயின்றார்.

பின்னர் சிறிது காலம் நில அளவைத் திணைக்களத்தில் எழுத்தாளராகப் பணியாற்றினார். அதன் பின் தனது தந்தையாருக்கு சொந்தமான இறப்பர்த் தோட்டத்தைக் கவனிக்கச் சென்றுவிட்டார்.

1929ல் இலங்கைச் சட்டவாக்க கழகத்தில் ஓர் உறுப்பினரானார். 1931ல் மாநில அவைக்கு தெரிவு செய்யப்பட்டதுடன் வேளாண்மை, காணி அமைச்சரானார். வேளாண் மறுமலர்ச்சிக்குப் பெரிதும் உழைத்தார். 1946இல் பிரிட்டிஷ் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட றிnight பட்டத்தை மறுத்தார். எனினும் பிரித்தானியருடன் நல்லுறவை விரும்பினார்.

1947 இல் நடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு இலங்கையின் முதலாவது பிரதமரானார். 1948 பெப்ரவரி 4ல் பிரித்தானிய ஆதிக்கம் முடிவுற்றதும் முழு இலங்கையையும் நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்றார். கல்லோயா திட்டத்தினைத் தொடங்கி வைத்தார். 1952 இல் குதிரைச் சவாரியின் போது விழுந்து காயமடைந்து இறந்தார். இவருக்கு பின் இவரது மகன் டட்லி சேனநாயக்க இலங்கையின் பிரதமரானார்.

டட்லி செல்டன் சேனநாயக்க

(19.1911 ஏப்ரல் 13. 1973) இலங்கையின் அரசியல்வாதி ஆவார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக இருந்த இவர் சுதந்திர இலங்கையின் பிரதமராக மூன்று தடவைகள் பதவியில் இருந்தவர்.

டட்லி சேனநாயக்கா 1911 ஆம் ஆண்டில் இலங்கையின் முதலாவது பிரதமர் டி.எஸ். சேனநாயக்காவுக்கும், மோலி டுனுவில ஆகியோருக்கு மூத்த மகனாகப் பிறந்தார். கல்கிசை புனித தோமையர் கல்லூயில் கல்வி கற்றவர்.

பின்னர் கேம்பிரிட்ஜ் கோர்ப்பசு கிறிஸ்டி கல்லூரியில் இயற்கை அறிவியல் துறையில் உயர் படிப்பை மேற்கொண்டார். பின்னர் லண்டன் மிடில் டெம்பிளில் பாரிஸ்டராகப் பணியாற்றினார்.

அரசியல் வாழ்க்கை

இலங்கை திரும்பிய டட்லி டெடிகமை தொகுதியில் இருந்து ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் இலங்கை அரசாங்க சபைக்கு 1936 ஆம் ஆண்டில் தெரிவு செய்யப்பட்டு 10 ஆண்டுகள் பின்வரிசை உறுப்பினராக இருந்தார்.

 இவரது தந்தை அப்போது வேளாண்மைத்துறை அமைச்சராகப் பதவியில் இருந்தார். 1946ஆம் ஆண்டில் டட்லி வேளாண் மைத்துறை அமைச்சரானார்.

சடுதியாக இவரது தந்தையும் அப்போது பிரதமராகவும் இருந்த டி.எஸ் சேனநாயக்கா இறக்கவே 1952 மார்ச் 26இல் இவர் இலங்கைப் பிரதமராக இலங்கை ஆளுநர் சோல்பரி பிரபுவினால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பின்னர் டட்லி பொதுத் தேர்தலுக்கு அழைப்பு விடுத்தார். 1952 தேர்தலில் வெற்றி பெற்றார். இவரது ஆட்சியில் அரிசி விலை அதிகரித்தது. அரசு வழங்கி வந்த மானியங்களின் தொகை குறைக்கப்பட்டது. இதனால் ஓராண்டு காலத்துள் இவரது அரசு மக்களின் செல்வாக்கை இழந்தது.

டட்லி சேனநாயக்கா பிரதமர் பதவியில் இருந்து விலகினார். சேர் ஜோன் கொத்தலாவலை பிரதமரானார். 1953 ஆம் ஆண்டு இடம்பெற்ற பணிப்பகிஷ் கரிப்புகளை அடுத்து டட்லி அரசியலில் இருந்து ஒதுங்கினார்.

1956 தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி பெரும் தோல்வியடைந்ததை அடுத்து மீண்டும் அரசியலுக்கு வந்தார். கட்சித் தலைமைப் பொறுப்பை ஏற்று 1960 மார்ச் தேர்தலில் போட்டியிட்டார். எந்த ஒரு கட்சியும் பெரும்பான்மை பெறாத தொங்கு நாடாளுமன்றமே வாக்காளர்களால் தெரிவு செய்யப்பட்டிருந்தது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஆதரவின்றி எந்தக் கட்சியும் அரசு அமைக்க முடியாத நிலையில் தமிழரசுக் கட்சி முன்வைத்த ஆகக் குறைந்த நான்கு கோரிக்கைகளையும் ஏற்று நடைமுறைப்படுத்துவதற்கு உடன்படும் கட்சிக்கே தமது கட்சி ஆதரவளிக்கும் என அக்கட்சியின் தலைவர் எஸ். ஜே. வி. செல்வநாயகம் அறிவித்திருந்தார்.

டட்லி சேனநாயக்கா அதிக உறுப்பினர்க ளைக் கொண்டிருந்ததால் மகா தேசாதிபதி சேர் ஒலிவர் குணத்திலக்க டட்லியிடம் ஆட்சியைக் கொடுத்தார். இந்நிலையில் நாடாளுமன்றத்தில் அரியணை உரை மீது எடுக்கப்பட்ட முதல் வாக்கெடுப்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஒத்துழைப்புடன் டட்லி சேனநாயக்காவின் அரசு தோற்கடிக்கப்பட்டமை அடுத்து நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.

1960 ஜுலையில் மீண்டும் இடம்பெற்ற தேர்தல்களில் தோல்வியடைந்தார். சிறிமாவோ பண்டாரநாயக்காவின் தலைமையில் இலங்கை சுதந்திரக் கட்சி வெற்றி பெற்றது. டட்லி சேனநாயக்கா எதிர்க்கட்சித் தலைவரானார்.

1965ஆம் ஆண்டில் பண்டாரநாயக்காவின் அரசில் இருந்து 14 உறுப்பினர்கள் வெளியேறியதை அடுத்து அவரது அரசு கவிழ்ந்தது. இதனை அடுத்து இடம்பெற்ற 1965 தேர்தலில் வெற்றி பெற்று மூன்றாவது தடவையாகப் பிரதமரானார்.

6வது நாடாளுமன்றத்தின் முழுமையான காலபகுதிக்கும் பிரதமராக இருந்த டட்லி 1970 தேர்தலில் தோல்வியடைந்தார். அதன் பின்னர் நீண்ட காலம் சுகவீனமுற்றியிருந்தவர் 1973 ஏப்ரல் 13 இல் தனது 61 வது அகவையில் காலமானார்.

சேர் ஜோன் லயன்ஸ் கொத்தலாவலை

(4 ஏப்ரல் 1895-2 அக்டோபர் 1980) இலங்கைப் படைத்துறை அதிகாரியும், அரசியல்வாதியும் ஆவார். இவர் 1953 முதல் 1956 வரை இலங்கையின் மூன்றாவது பிரதமராகாப் பதவியில் இருந்தார்.

ஆரம்ப வாழ்க்கை

சேர் ஜோனின் தந்தை ஜோன் கொத்தலாவலை, மூத்தவர் ஜோன் கொத்தலாவலை ஒரு வளமிக்க குடும்பத்தில் பிறந்தவர். தந்தை ஜோன் கொத்தலாவலை (மூத்தவர்) இலங்கை காவல்துறை அதிகாரியாகப் பணியாற்றியவர். தாயார் அலீஸ் ஆட்டிகலை, ஜோன் 11 வயதாக இருக்கும் போது ஒரு கொலைக் குற்றச்சாட்டை அடுத்து தந்தை தற்கொலை செய்து கொண்டார்.

இதனை அடுத்து பெளத்தராக இருந்த தாயார் கிறிஸ்தவத்துக்கு மதம் மாறினார். தமது நிலங்களையும் காரீய சுரங்கங்களையும் முறையாக மேலாண்மை செய்ததன் மூலம் அவர் பெரும் சொத்துக்களை ஈட்டினார். அவரது சமூக சேவைகளுக்காக அவருக்கு பிரித்தானிய அரசின் விருது கிடைத்தது.

ஜோன் கொத்தலாவலை கொழும்பு றோயல் கல்லூரியில் கல்வி பயின்றார். 1915 ஆம் ஆண்டில் விடுதலைக்கு ஆதரவான சில நடவடிக்கைகளில் பங்குபற்றியமையால் பாடசாலையை விட்டு விலக நேரிட்டது. அதன் பின்னர் ஐரோப்பா சென்றார்.

முதலாம் உலகப் போர்க் காலத்தில் இங்கிலாந்திலும், பிரான்சிலும் ஐந்தாண்டுகள் வரை தங்கியிருந்தார். அக்காலத்தில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் கிறைஸ்ட் சேர்ச் கல்லூரியில் வேளாண்மை துறையில் பட்டம் பெற்றார்.

இளம் வயதில் துடுப்பாட்டம் உட்படப் பலவித விளையாட்டுகளிலும் ஈடுபாடு கொண்டிருந்தார். சிங்களம், ஆங்கிலம், பிரான்சிய மொழிகளில் பெரும் புலமை பெற்றிருந்தார். இலங்கை திரும்பிய அவர் தமது குடும்பத்தின் தோட்டங்களை நிருவகித்து வந்தார்.

ஜோன் கொத்தலாவலை எஃபி டயசு பண்டாரநாயக்கா என்பவரைத் திருமணம் புரிந்து பின்னர் மணமுறிப்புப் பெற்றார்.

ஜூனியஸ் ரிச்சர்ட் ஜயவர்தனா

(செப்டம்பர் 17 1906 நவம்பர் 1 1996) இலங்கையின் இரண்டாவது ஜனாதிபதியும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட முதலாவது ஜனாதிபதியுமாவார். இவர் பெயரின் சுருக்கமான ஜே. ஆர். என பிரபலமாக அறியப்பட்டார்.

இவர் ஜனாதிபதிப் பதவியை ஏற்கும் முன் அரசில் பல பதவிகளை வகித்துள்ளார். இவர் ஐக்கிய தேசியக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தியதோடு அதன் தலைவராகவும் செயலாற்றினார்.

இளமைக் காலம்

இவர் இலங்கையின் சட்டத்துறையில் பிரபலமாக விளங்கிய குடும்பமொன்றில் பிறந்தார். இலங்கையின் தலைமை நீதிபதியாக இருந்த கெளரவ நீதியரசர் இயுஜீன் விப்பிரெட் ஜயவர்த்தனாவுக்கும், இலங்கையின் செல்வந்த வணிகர்களுள் ஒருவரின் மகளான அக்னசு டொன் பிலிப் விஜயவர்தனாவுக்கும் பிறந்த 11 பிள்ளைகளுள் இவரே முதலானவர்.

இராணியின் வழக்கறிஞர் (ஙிவி) ஹெக்டர் வில்பிரெட் ஜயவர்தனா மருத்துவர் ரொலி ஜயவர்தனா ஆகியோர் இவரது தம்பியர்கள், கர்னல் தியடோர் ஜயவர்தனா, நீதியரசர் வலன்டைன் ஜயவர்தனா ஆகியோர் இவரது தந்தையின் உடன்பிறந்தோர்.

பத்திரிகைத் துறையில் பிரபலமான டி.ஆர் விஜேவர்தனா இவரது மாமா.

ரணசிங்க பிரேமதாச

இலங்கையின் 3வது சனாதிபதியாக இருந்த ரணசிங்க பிரேமதாச ஐ.தே.க. தலைவராக பணியாற்றியவர்.

2 1989 மே 1 1993 வரை

ஜனாதிபதியாக பதவிவகித்தார்.

ஜுன் 23 1924 இல் பிறந்தார். மே 1993 இல் அகால மரணமானார்.

தமிழ் ஈழ விடுதலைப் புலிகளினால் வடக்கு, கிழக்கு பகுதிகளில் நடத்தப்பட்டு வந்த யுத்தத்தினாலும், தென் பகுதியில் மக்கள் விடுதலை முன்னணியினரால் நடத்தப்பட்டு வந்த கலவரங்களினாலும் தேசத்திலே ஓர் அமைதியற்ற சூழ்நிலையே இடம் பெற்று வந்ததெனலாம். இலங்கையின் 1வது இலங்கை அரசுத் தலைவர் தேர்தலுடன் ஒப்பு நோக்கும் போது மிகவும் பிரச்சினைக்குரிய காலகட்டமாகவே இக்கால கட்டம் விளங்கியது.

பல ஆண்டுகளாக வடக்குப் பகுதியிலும், 1987 இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை அடுத்து தென் பகுதிகளிலும் வன்முறைகள் தொடர்ந்து கொண்டிருந்தன. இருப்பினும் 1988ல் நடைபெற்ற மாகாண சபைத் தேர்தல்கள் பிரச்சினைகளின் மத்தியிலேனும் நடத்த முடிந்தமையினால் இலங்கை அரசுத் தலைவர் தேர்தலையும் தொடர்ந்து பொதுத் தேர்தலையும் நடாத்துவதில் அரசு உறுதியாகச் செயற்பட்டது. (மறுபுறமாக யாப்பு விதிகளின்படி ஜனாதிபதியினதும், பாராளுமன்றத்தினதும் பதவிக் காலங்களை நீடிக்க முடியாத நிலையும் இருந்தது).

1988ம் ஆண்டின் இறுதி அரைப்பகுதிகளில் நிலைமை மிக மிக மோசமான முறையிலே இருந்தது. மக்களின் அன்றாட வாழ்க்கை நிலை பெரும் பாதிப்புக்குள்ளாகியிருந்தது. போக்குவரத்து, தபால் தந்தி தொலைத் தொடர்பு நடவடிக்கைகள் அரசாங்கத் தினாலும், தீவிரவாதிகளாலும் பிறப் பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவுகள் அரசாங்க இயந்திரத்தை ஸ்தமபிதமடையச் செய்திருந்தன. இலங்கை பூராவும் மக்கள் மத்தியில் ஒருவித நம்பிக்கையற்ற நிலைமையே காண முடிந்தது. இந்தச் சூழ்நிலைகளை எல்லாம் வெகுசாதகமாக முறியடித்தார்.

ஜனாதிபதியாவதற்கு முன்னர் ஜே. ஆர். தலைமையிலான அரசில் பெப்ரவரி 6 1978 தொடக்கம் மார்ச் 3 1989 வரையில் பிரதமராகவும் பணியாற்றினார். யாவருக்கும் புகலிடம் என்ற தொனியில் வீடமைப்பு நிர்மாணத் துறையில் சாதனையை ஏற்படுத்தினார். சர்வதேச வீடமைப்பு தினம் உருவாகுவதற்கு குரல் எழுப்பினார்.

இவர் 1993 இல் மே தின ஊர்வலகத்தின் போது, கொழும்பு ஆமர்வீதியில் தமிbழ விடுதலைப் புலிகள் என சந்தேகிக்கப்படும் தற்கொலைக் குண்டுதாரியால் படுகொலை செய்யப்பட்டார். இவரது நினைவாக இவர் கொலை செய்யப்பட்ட ஆமர் வீதியில் ஒரு நினைவுத்தூபி நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

டி. பி. விஜயதுங்க

இலங்கையில் 4வது ஜனாதிபதி

மே 1 1993 - நவம்பர் 12 1994 வரை

இவர் கண்டியில் பெப்ரவரி 15, 1916 இல் பிறந்தார். செப்டம்பர் 21, 2008 (அகவை 92) இல் இறந்தார்.

டிங்கிரி பண்டா விஜயதுங்க (பெப்ரவரி 15, 1922 - செப்டம்பர் 21, 2008) இலங்கையின் 4வது சனாதிபதியும் மூன்றாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதியுமாவார். சனாதிபதியாவதற்கு முன்னர் ரணசிங்க பிரேமதாச அரசியல் பிரதமராகவும் பணியாற்றினார். இவர் கண்டியை பிறப்பிடமாகக் கொண்டவர்.

ஜனநாயக விழுமியங்களை பாதுகாக்க டி. பி. விஜயதுங்க அர்ப்பணிப்புடன் பணியாற்றியிருந்தாலும் அவரது இனப்பிரச்சினை தொடர்பான கருத்துக்கள் தொடர்பில் தமிழ் மக்கள் திருப்திக் கொள்ளவில்லை.

டி. பி. விஜயதுங்க ஒருபோதும் அரசியல் பதவிகளை நாடிச் சென்றவரல்ல. பிரேமதாச ஜனாதிபதியாகவிருந்த போது பலர் பிரதமர் பதவியில் கண் வைத்திருந்தனர். ஆனால் அப்பதவி விஜயதுங்கவை நாடி வந்தது. அதுபோன்றே பிரேமதாசவின் மரணத்தின்பின் விஜயதுங்க ஜனாதிபதியானார்.

இலங்கையின் ஜனநாயக விழுமியங்களைப் பாதுகாப்பதற்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றிய டி. பி. விஜயதுங்கவின் மறைவு அனைவருக்கும் இழப்பானது.

ரணில் சிறியஸ் விக்கிரமசிங்க

(பிறப்பு - 24 மார்ச் 1949)

இலங்கை அரசியல்வாதியும், பிரதமரும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2015 ஜனவரி 9 முதல் பிரதமராகவும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக 1994 முதலும், 1977 முதல் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராகவும் உள்ளார். இவர் ஐக்கிய தேசிய முன்னணி, நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி ஆகிய அரசியல் கூட்டணிகளின் தலைவராகவும் உள்ளார்.

விக்கிரம சிங்க 1993 முதல் 1994 வரையிலும், பின்னர் 2001 முதல் 2004 வரையிலும் இலங்கையின் பிரதமராகப் பதவியில் இருந்துள்ளார். 1994 இல் காமினி திசாநாயக்கா படுகொலை செய்யப்பட்டதை அடுத்து இவர் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

ஜனவரி, 2015ஆம் ஆண்டில் இலங்கை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மைத்திரிபால சிறிசேன தனது 100 நாள் நல்லாட்சி வேலைத் திட்டத்தின் கீழ் நாடாளுமன்றத்தில் அறுதிப் பெரும் பான்மையற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை இலங்கையின் பிரதமராக நியமித்தார். 2015 ஆகஸ்டில் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ரணில் தலைமையிலான நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி வெற்றி பெற்றது. ஆனாலும், அது அறுதிப் பெரும்பான்மை பெறத் தவறியது.

ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியுடன் செய்து கொண்ட இரண்டாண்டு உடன்படிக்கையை அடுத்து ரணில் மீண்டும் பிரதமராக நியமிக்கப்பட்டார்.

தமிழ் விடுதலைப் புலிகளிற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை வவுனியாவில் கைச்சாத்திடுவதில் ரணில் முக்கிய பங்காற்றினார்.

இலங்கை பல்லின மக்கள் பரந்துபட்டு வாழும் ஒரு நாடாகும். சுதந்திரத்திற்கு முன்னரும் அதன் பின்னரும் கூட நாட்டில் வாழ்ந்த மக்களிடையே இன, மத வேறுபாடுகள் காணப்படவில்லை.

இடையிடையே சிறுசிறு குழுக்களிடையே கிராமிய மட்டத்தில் முரண்பாடுகள் காணப்பட்ட போதிலும் அவை சமரசமாக தீர்வு காணப்பட்டதை வரலாற்று ரீதியில் அவதானிக்கக் கூடிதாகவே உள்ளது.

1947இல் சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்த நாட்டின் தேசபிதா என வர்ணிக்கப்படுகின்ற டி.எஸ். சேனநாயக்க ஆரம்பித்த இயக்கத்தை தனியாக சிங்கள இனமென்றோ பெளத்த மதமென்றோ தனிமைப்படுத்தி நாட்டை சிங்கள நாடென்றோ, பெளத்த நாடென்றோ சிந்திக்க முற்படவில்லை.

1948 சுதந்திரத்தை வென்றெடுப்பதற்கு டி. எஸ். சேனநாயக்க தலைமைத்துவத்தை ஏற்றுக் கொண்ட போது சகல இனங்களையும் ஒன்றிணைத்து தேசிய சபையை (ஜாதிக சபாவ) உருவாக்கிக் கொண்டார். இதில் சேர். பொன்னம்பலம் இராமநாதன், அல்ஹாஜ் ரி.பி ஜாயா போன்ற தமிழ் முஸ்லிம் தலைவர்களையும் இணைத்துக் கொண்டே இதனை ஆரம்பித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியில் அன்று முதல் இன ஐக்கியம் மேலோங்கிக் காணப்பட்டது. வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு என்றில்லாமல் இலங்கையர் என்ற அடிப்படையில் அனைத்து இனமக்களும் ஒரு தாய் பெற்ற மக்களாக வாழ்ந்ததோடு நாட்டின் முன்னேற்றத்துக்காக அனைவரும் இதய சுத்தியுடன் பாடுபட்டனர்.

பிரிட்டிஷ் ஆட்சி எமக்கு சுதந்திரத்தை வழங்கும் போது தமிழ், முஸ்லிம் தலைவர்களிடம் தனியான ஆட்சி வேண்டுமா எனக்கேட்ட போது எமது பிரச்சினைகளை நாம் பேசித் தீர்த்துக் கொள்வோம் எமக்குத் தேவை எமது நாட்டுக்கு பூரண சுதந்திரம் மட்டுமே எனத்தான் பதிலளித்தனர். இது இனங்களுக்கிடையேயான நம்பிக்கையையே வெளிப்படுத்தியது.

அன்று போலவே ஐக்கிய தேசியக் கட்சி வரலாற்று நெடுகிலும் இன ஐக்கியத்தையே வலியுறுத்தி வந்துள்ளது. அக்கட்சி ஆரம்பம் முதல் இன்றுவரையிலும் சகல இன மக்களையும் ஒன்றாகவே இணைத்துக் கொண்டுள்ளது.

மைத்திரிபால, ரணில் தலைமையில் ஆரம்பித்த நல்லாட்சிப் பாதை மீண்டும் நாட்டில் இன நல்லுறவை ஆரம்பித்து விட்டது. இன, மத, மொழி பேதமற்ற ஐக்கிய இலங்கையைக் கட்டியெழுப்பும் மகத்தான பொறுப்பை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி கையேற்றுள்ளது. இன ஐக்கியத்துடனான நல்லாட்சி யுகம் மீண்டும் ஆரம்பித்துள்ளது. இந்த யுகப் புரட்சியில் அனைத்து இன மக்களும் கரம் கோர்க்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.