புத் 67 இல. 33

மன்மத வருடம் ஆடி மாதம் 31 திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 துல்கஃதா பிறை 01

SUNDAY AUGUST 16 2015

 

 

பல்வேறு குறைபாடுகளுடன் இயங்கி வரும் மஸ்கெலியா அரசினர் வைத்தியசாலை

பல்வேறு குறைபாடுகளுடன் இயங்கி வரும் மஸ்கெலியா அரசினர் வைத்தியசாலை

மக்கள் செறிந்து வாழும் மஸ்கெலியா, சாமிமலை பகுதியிலுள்ள சுமார் 165 தோட்ட பிரிவுகளை சேர்ந்த தோட்டப் பகுதி மற்றும் கிராம மக்கள் சிகிச்சைபெற்று வரும் மஸ்கெலியா அரசினர் வைத்தியசாலையானது ஆளணி மற்றும் கட்டிட வசதிகளின்றி பல்வேறு குறைபாடுகளுடன் இயங்கி வருகிறது.

இலங்கையில் நீர்மின் உற்பத்திக்காக மவுசாக் கலை நீர்தேக்கம் ஒன்றை அமைக்க அன்றைய அரசு நடவடிக்கை மேற்கொண்ட போது மஸ்கெலியா நகரம் வேறு இடத்திற்கு மாறியது இத்திட்டம் 1960ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 1964ஆம் ஆண்டு வேலைகள் துரிதமாக நடைபெற்றன.

நீர்மின் திட்டம் ஏற்படுத்தப்பட்டதன் பின்னர் புதிதாக மஸ்கெரியா நகரம், வைத்தியசாலை, அஞ்சல் அலுவலகம், பொலிஸ் நிலையம், பஸ் தரிப்பிடம், மின்சார சபை காரியாலயம், நீர் வடிகாலமைப்பு திணைக்களம், பாடசாலை, புனித ஸ்தலங்கள், சந்தைப்படுத்தும் திணைக்களத்திற் கான கட்டிடத் தொகுதியும் 160 பேர்ச் காணியும் அப்போதைய அரசாங்கத்தினால் வழங்கப்பட்டது.

ஐக்கிய தேசியகட்சி அப்போது ஆட்சியில் இருந்ததால், மஸ்கெலியா நாடாளுமன்ற உறுப்பினர் எட்மன் விஜயசூரியவின் வேண்கோளுக்கிணங்க மஸ்கெலியாவில் வாழும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு வைத்தியசாலையும் 165 படுக்கைகள் கட்டணம் செலுத்தி சிகிச்சை பெற தனியான 12 படுக்கை வசதிகளை கொண்ட 06 அறைகளும் அமைக்கப்பட்டன. அத்துடன் சத்திர சிகிச்சை கூடம், பல் வைத்தியகூடம், மருந்தகம், வெளிநோயாளர் பிரிவு, 24 மணித்தியாலய சேவைக்கென வைத்திய பிரிவு, மாவட்ட வைத் திய அதிகாரி காரியாலயம், வைத்தியசாலை காரியாலம், தேநீர்சாலை, அம்பியூலன்ஸ் வண்டி, வாகன தரிப்பிடம், சவச்சாலை, ஆய்வுகூடம், வைத் தியர் விடுதிகள் உட்பட தாதிமார், ஊழியர்கள் மற்றும் சிற்றூழியர்கள் தங்குவதற்கான 40 விடுதிகளும் நிர்மானிக்கப்பட்டன.

1970இல் நடைபெற்ற பொதுத் தேர்தலையடுத்து ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆட்சியமைத்தது. அப்போதைய சுகாதார அமைச்சரான ஆரியதாச இவ்வைத்தியசாலையை 1972ஆம் ஆணடு வைபவ ரீதியாக திறந்து வைத்தார்.

இக்காலப்பகுதியில் மாவட்ட வைத்திய அதிகாரி உட்பட இரண்டு பதிவு செய்யப்பட்ட வைத்தியர் களும், பல் வைத்தியர், ஆய்வுகூட வைத்தியர், 21 தாதிகள் மற்றும் 40 சிற்றூழியர்கள் சேவையில் ஈடுபட்டனர். குறைபாடுகளின்றி வைத்தியசாலை இயங்கிவந்த போதிலும் கடந்த சில வருடங்களாக வைத்தியர், தாதிகள், சிற்றூழியர்கள், மருந்தகர், ஆய்வு கூட வைத்தியர், பல் வைத்தியர் பற்றாக் குறை நிலவி வருகின்றது. இது தொடர்பாக மாவட்ட வைத்திய அதிகாரிகளுக்கு எழுத்து மூல மாக பல்வேறு கோரிக்கைகள் விடுக்கப்பட்ட போதும் எதுவித பயனுமில்லை.

குறிப்பாக பல்வைத்தியர், ஆய்வுகூட வைத்தியர் வெற்றிடங்கள் நிலவுவதால் ஆய்வு கூட வைத் தியரை தேடி நுவரெலியா, நாவலப்பிட்டி ஆகிய ஆதார வைத்தியசாலைகளுக்கே செல்ல வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு உள்ளாகியுள்ளனர். இப்பகுதி வாழ் மக்கள். நிரந்தரமாக ஓர் ஆய்வு கூட வைத்தி யர் நியமிக்கப்பட்ட வேண்டும். பல் வைத்தியர் வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே பணிக்கு வருவதால் மக்கள் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகின்றனர். எனவே நிரந்தரமாக ஒருவரை நியமிக்க வேண்டும். தற்போது வெற்றிடமாகவுள்ள தாதியர் பற்றாக் குறையை நீக்க 21 பேர் நியமிக்கப்பட வேண்டும்.

மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் ஆளணி பற்றாக்குறை பாரிய அளவில் நிலவி வருகின்றது. மாவட்ட வைத்திய அதிகாரி ஒரு வரும் வைத்திய அதிகாரி இருவரும் நான்கு தாதி யரும் 16 சிற்றூழியர்கள் மட்டுமே சேவையாற்றி வருகின்றனர். இவ்வைத்தியசாலைக்கு மாவட்ட வைத்திய அதிகாரி ஒருவரும், நான்கு வைத்திய அதிகாரிகளும், பதிவு 4 பதிவுசெய்யப்பட்ட வைத்தியர்களும், மருந்தகர், 24 தாதியர், 46 சிற்றூழியர்கள், அம்புலன்ஸ் வண்டி சாரதி 2 பேர் உட்பட இரண்டு அம்புலன்ஸ் வண்டிகளும் தேவைப்படுவதாக தெரியவருகிறது.

கடந்த சில வாரங்களுக்கு முன் பணியிலிருந்து அம்புலன்ஸ் வண்டி சாரதியும் ஓய்வு பெற்றுள்ள நிலையில் அவசர தேவைக்கு அம்புலன்ஸ் வண்டியை செலுத்தக்கூட சிரமப்பட வேண்டி யிருக்கிறது.

சுமார் 10 ஏக்கர் காணியில் அமைக்கப்பட்ட இவ்வைத்தியசாலையை சூழவுள்ள பகுதிகள் செடிகள், புற்கள் வளர்ந்து காடுகளாக மாறியுள்ளன. இதனால் காட்டு மிருகங்களின் தொல்லையும் அதிகரித்துள்ளதால் மக்கள் பெரும் செளகரியங்க ளுக்கு உள்ளாகின்றனர். இக்காணியிலுள்ள பற்றைக்காடுகளை அகற்றினால் மேலதிமாக விடுதிகள் அமைக்கக்கூடியதாக இருக்கும்.

மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலை ஆதார வைத்தியசாலையாக தரமுயர்த்தப்பட வேண்டும். இதனால் இப் பகுதியைச் சேர்ந்த சுமார் 80 ஆயிரம் மக்கள் நன்மையடைவர். வைத்தியசாலை உரிய முறையில் இயங்காததன் காரணமாக வெகு தொலைவில் இருக்கும் நாவலப்பிட்டி ஆதார வைத்தியசாலைக்கே நோயாளிகள் செல்ல வேண்டியுள்ளது. நாவலப்பிட்டி ஆதார வைத்தியசாலையானது மஸ்கெலியாவில் இருந்து 50 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ளது. நாவலப்பிட்டி நகரிலிருந்து 12 கிலோ மீற்றர் தூரத் தில் கம்பளை ஆதார வைத்தியசாலையும், 12 கிலோ மீற்றர் தூரத்தில் பேராதனை போதனா வைத்தியசாலையும் அதனையடுத்து 3 கிலோ மீற் றர் தூரத்தில் கண்டி போதான வைத்தியசாலையும் அமைந்துள்ளன.

தோட்டப்பகுதி மக்கள் செறிந்து வாழும் மஸ்கெலியா தேர்தல் தொகுதியில் மட்டுமே ஆதார வைத்தியசாலைகள் இல்லாத நிலை காணப்படுகிறது. தற்போது இந்திய அரசாங்கத் தின் உதவியுடன் கிளங்கன் வைத்தியசாலையை ஆதார வைத்தியசாலையாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

கடந்த காலங்களில் ஒவ்வொரு தோட்டத்திலும் வைத்தியசாலையும் மகப்பேற்று பிரிவும் இயங்கி வந்தது. அந்த வைத்தியசாலைகளில் கர்ப்பிணித் தாய்மார் குழந்தைகளை பிரசவித்தனர். கடந்த சில வருடங்களாக வைத்திய அதிகாரிகள் கர்ப்பிணி தாய்மாருக்கான பரிசோதனைகளை மேற்கொள் ளாத நிலையில் மகப்பேற்று பிரிவுகள் மூடப்பட்டு அரச வைத்தியசாலைகளில் மட்டுமே குழந்தை பிரசவிக்கலாம் எனும் நடைமுறையும் இருந்தது.

டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலை ஆரம்பித்த பின் கர்ப்பிணித் தாய்மார்கள் பரிசோதனை மேற்கொள்ளும் V.O.G விசேட வைத்தியர் கர்ப் பிணி தாய்மார்கள் அனைவரையும் கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு பணிக் கப்பட்டுள்ளது. ஆனால் காலை 7 மணி முதல் 12 மணி வரை வைத்தியர்கள் கடமையில் இருப்பர். அவ்வேளையில் மட்டும் கர்ப்பிணித் தாய்மாருக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப் படுகின்றது. மக்களின் வசதிக்கேற்ப கடந்த காலங்களைப் போல் கர்ப்பிணித் தாய்மார் மகப்பேற்றை மேற்கொள்ள மத்திய மாகாண சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அண்மையில் கர்ப்பிணித்தாயொருவர் மகப் பேற்றுக்காக மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது அதிகளவு இரத்தப் பெருக்கு ஏற்பட அவரை டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் மகப்பேற்று வைத்தி யர் இல்லாமல் மிகவும் சிரமத்துக்குள்ளாகி குழந்தை பிரசவிக்கின்றாள்.

பெருந்தோட்ட பகுதிகளிலுள்ள நூற்றுக் கணக்கான கர்ப்பிணித்தாய்மாரை ஸ்கேன் செய்வதற்காக பெருந்தொகையான பணம் செலவு செய்யவுள்ளதால் வறுமையின் கோட்டின் கீழ் வாழும் கர்ப்பிணித் தாய்மாருக்கென இவ் வைத்தி யசாலைக்கு குறைந்தபட்சம் 2 ஸ்கேன் இயந் திரங்கள் மற்றும் அதற்கான உபகரணங்களை மத் திய மாகாண சுகாதார அமைச்சுகள் அல்லது வேல்ட் விஷன் போன்ற நிறுவனங்கள் உதவ முன்வரவேண்டுமென பாதிக்கப்பட்ட தாய்மார்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

நுவரெலியா மாவட்டத்தின் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர், மாகாணசபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் என பலர் இருந்தும் இவ் வைத்தியசாலையின் குறைபாடுகளை நேரில் பார்வை இட்டு குறைபாடுகளை தீர்க்க முன்வர வில்லை. இவ்வைத்தியசாலை குறைபாடுகளை தீர்க்க வேண்டியது நுவரெலியாவில் உள்ள சுகாதார உயர் அதிகாரியினதும் மத்திய மாகாண சுகாதார அமைச்சினதும் கடமையாகும்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.