புத் 67 இல. 33

மன்மத வருடம் ஆடி மாதம் 31 திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 துல்கஃதா பிறை 01

SUNDAY AUGUST 16 2015

 

 

இராசம்மா

இராசம்மா

காதல் புனிதமானது
காதல் வயது கோளாறு
காதலாவது கத்தரிக்காயாவது
காதல் யாரையும் கேட்டு வருவதில்லை
காதல் யாரையும் கேட்டுப் போவதுமில்லை
காதலிக்காதவன் கவிஞனில்லை
காதலையும் முதல் முத்தத்தையும் வாழ்நாளில் மறக்க முடியாது.

இப்படி காதலைப் பற்றி எத்தனையோ கருத்துக்கள். யார் எப்படிச் சொன்னாலும் கடைசியாக சொல்லப்பட்ட கருத்தினை நான் உண்மையென சாட்சியம் கூறுவேன்.

முதன் முதல் ஏற்பட்ட காதல் உணர்வு இலேசாக இன்ப வேதனையளித்தவாறு மனத்திலே காலமெல்லாம் ஊர்ந்து கொண்டேயிருக்கும்.

இன்று நான் பவளவிழாக் கொண்டாட வேண்டியவன் கொண்டாடவில்லை. எனது பேரப்பிள்ளைகள் பதினைந்து பேரும் பவள விழாக் கொண்டாட வேண்டுமென்று குத்தாட்டம் போடுகிறார்கள் எனது பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் பூட்டிப் பிள்ளைகள் யாருக்கும் எனது காதல் உணர்வு பற்றி எதுவும் தெரியாது தெரிய வேண்டிய அவசியமும் இல்லை.

ஆனால் எனது மனைவிக்கு எனது முதல் காதல் உணர்வு பற்றி எதுவும் தெரியாது. நான் கவிஞனல்லவா? எங்கோ ஓரிடத்தில் எதுவும் நடந்திருக்கலாம், என்ற எண்ணப் பாங்குண்டு அவளுக்கு என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

எனக்கு பதின் மூன்று வயதான போது எதிர்பால் உறவு ஒன்று விதைபோல மனத்திலே விழுந்து முளைவிட்டு வளரத் தொடங்கியது என்னவோ உண்மைதான். எனது கிராமத்தில் அதுவும் எனது குறிச்சிக்குப் பக்கத்தில் கூப்பிடு தூரத்தில் பதினெட்டுச் சாதியினரும் குடியிருந்தார்கள்.

இக்குடியிருப்பு தமிழ்க் குறிச்சி என அழைக்கப்பட்டது. ஒவ்வொரு சாதியின் பெயரிலும் வட்டைகள் எனக் குறிக்கப்பட்டுப் பதினெட்டுப் பிரிவுகள் இருந்தன. எனது குடியிருப்புக்கு மிக அருகாமையில் இருந்த வட்டை வண்ணார வட்டை.

இந்த வண்ணாரவட்டை குளக்கரையை அண்டியது. இப்படி குளக்கரையை அண்டியிருப்பது இவர்களது தொழிலுக்கு வசதி. இந்த வண்ணாரவட்டையில் மாலையன் என அழைக்கப்பட்ட ஒருவர் இருந்தார்.

இவர் சலவைத் தொழில் செய்யும் கூட்டத்திற்கு வண்ணக்கராக இருந்தார்.

இவர் தலைமையில்தான் இவர்களது கோயில் நடவடிக்கைகள் இடம்பெறும். இவர் கூத்துக் கலையின் அண்ணாவியாகவும் இருந்தார். இவரது காலத்தில் வைரக்கல் பதித்த தங்கக் கடுக்கன் மின்னியவாறு இருக்கும்.

வாட்ட சாட்டமான தோற்றம். நகைச்சுவை நடிகர் என எஸ்.கிருஷ்ணன் போன்ற தோற்றம் உடையவர். இவரது வீட்டின் அருகே குளத்தோரத்தில் இரண்டு ஏக்கர் நெற்காணி இவருக்கு சொந்தமாக இருந்தது. அதனால் இவர் சலவைத் தொழிலை பிரதான தொழிலாகச் செய்வதில்லை. முஸ்லிம் குறிச்சிகளில் உள்ளது. ஒரு சிலரிடமே தொழில் செய்வார்.

எங்கள் குடும்பத்திற்கும் மாலையன் தான் சலவைத் தொழிலாளி. இவரை எங்களூரில் உள்ளவர்கள் ‘மாலையன்’ என்று அழைப்பதில்லை. ‘அர்’ என்று அழைப்பதில்லை. ‘மாலையர்’ என்றே அழைப்பார்கள். இவரது வீடு ஓடு போட்ட பெரிய கல்வீடு. இவரது அந்தஸ்திற்கு இந்தப் பெரிய வீடும் ஒரு காரணம் எனலாம்.

இவருக்கு ஆணும் பெண்ணுமாக இரு பிள்ளைகள். இவர்கள் இருவரும் என்னோடு பக்கத்தில் இருந்த பாடசாலையில் ஐந்தாம் வகுப்புவரை படித்தார்கள்.

மாலையரின் பிள்ளைகள் இருவரும் ஐந்தாம் வகுப்போடு படிப்பை நிறுத்திக் கொண்டார்கள். ஐந்தாம் வகுப்பிற்கு மேல் படிப்பை தொடர விரும்புகிறவர்கள் கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை, அல்லது கொன்வென்ட் பாத்திமாக் கல்லூரி அல்லது கல்முனை சாஹிராக் கல்லூரிக்குச் செல்ல வேண்டும்.

அப்பொழுது சாஹிரா கல்லூரி சாய்ந்த மருது ஜூனியர் ஸ்கூல் என அழைக்கப்பட்டது. நான் சாய்ந்தமருது ஜூனியர் ஸ்கூலுக்கு ஆறாம் வகுப்புப் படிக்க சென்றுவிட்டேன்.

எனது தாயார் அவசரத் தேவைக்காக எனது சேட்டினை கழுவித் தருவார். அதனை அப்படியே அணிந்து கொள்ள நான் விரும்பவில்லை.

அதனை ஸ்திரி பிடித்து அழகாக அணிய விரும்பினேன். அதற்குரிய வசதிகள் அப்பொழுது எனது வீட்டில் இருக்கவில்லை. அதனால் பக்கத்தில் உள்ள மாலையர் வீட்டிற்கு எடுத்துச் சென்று அங்கு ஸ்திரிக் பிடித்து அழகாக அணிந்து கொள்வேன். எனக்கு எனது சேட்டினை மாலையரின் மகள் என்னோடு படித்த ‘ராசம்மா’ தான் ஸ்திரிக்கை பிடித்துத் தருவாள். அதற்காக பணம் எதுவும் அவள் பெற்றுக்கொள்வதில்லை.

பாடசாலை நட்பு இதற்குக் காரணமாகலாம். ஹமீத் என்று எனது பெயர் சொல்லியே அவள் அழைப்பாள். ‘ராசம்மா’ தோற்றத்திலும், அழகிலும் கன்னடத்துப் பைங்கிளி என அழைக்கப்படும் நடிகை சரோஜாதேவியைப் போன்றவளே.

நான் எனது உடுப்புக்களை ஸ்திரிக் செய்து கொள்ள அடிக்கடி ராசம்மாவின் வீட்டிற்குச் செல்வதுண்டு. ராசம்மாவும் சிரித்த வண்ணம் வரவேற்று உதவுவாள். ஒருநாள்,

எனது சேட்டை ராசம்மா ஸ்திரிக்கை செய்யும் போது ஸ்திரிக்கை பெட்டியின் முனை என்கையிலே பட்டதும் ‘ஆய்’ எனக் கத்திவிட்டேன்.

எரிகாயத்தை ராசம்மா மிக வேதனையோடு தடவிப்பார்த்து விட்டு உள்ளே சென்று பேனையில் ஊற்றும் மையை கொண்டுவந்து எனது எரிகாயத்தில் பூசியது மட்டுமல்லாமல் என் கையைப் பிடித்துக்கொண்டே எரியிதா எரியிதா என்று கேட்டவாறு மன்னிக்குமாறு பல தடவை கேட்டுக் கொண்டாள். அவள் பட்ட வேதனை இன்றும் என் மனத்தில் காட்சி தருகிறது.

சேட்டிற்கு ஸ்திரிக்கை பிடிக்கத் தேவையில்லாத போதும் அவள் வீட்டிற்கு சென்றுவர ஆசைப்பட்டேன். அடிக்கடி அவளைச் சந்திக்க வேண்டும் போல் இருந்தது.

ராசம்மாவை நான் சிலவேளைகளில் ‘சரோஜா தேவி’ என அழைப்பதுண்டு. கல்யாணப் பரிசு படத்தில் சரோஜாதேவியும், ஜெமினி கணேசனும் ஒன்றாக இருக்கும் படமொன்று ‘பிலிம்பயர்’ எனும் சஞ்சிகையில் பிரசுரமாகி இருந்தது.

அதனை வெட்டி எடுத்து ராசம்மாவிடம் கொடுத்தேன். பக்கத்தில் இருப்பது நீங்களா? எனக் கேட்டுச் சிரித்தவாறு பத்திரமாக அதனை வாங்கிக் கொண்டாள். காலம் கொஞ்சம் கொஞ்சமாக காற்றிலே கரையும் கற்பூரம் போலக் கரைந்து கொண்டிருந்தது.

நான் 57 இல் ஆசிரிய நியமனம் பெற்று கொழும்பு சென்று விட்டேன். 57இல் வெள்ளம் ஏற்பட்டபோது நான் கொழும்பில், சில நாட்களின் பின் ஊர் வந்த போது தான் ராசம்மாவின் தாய் வெள்ளத்தில் இறந்த செய்தி கேள்விப்பட்டு பார்க்கச் சென்றேன்.

ராசம்மா தாய் இறந்ததையும் படம் தண்ணீரில் கரைந்துவிட்டதையும் சொல்லி அழுதாள். நான் ஆறுதல் கூறிவிட்டு, கொழும்பு சென்றுவிட்டேன்.

60ஆம் ஆண்டு எனது ஊரில் நடைபெற்ற கிராமச்சங்க தேர்தலின் போது ஒரு சில அசம்பாவிதங்கள் நடந்தன. “”தமிழ்க் குறிச்சியில் உள்ளவர்கள்தான் எங்கள் தோல்விக்குக் காரணம், இது ஒவ்வொரு தேர்தலிலும் நடைபெறுவது வழக்கமாகிவிட்டது. எனக் கூறிக் கொண்டு அவர்களது வீடுகளுக்கு நெருப்பு வைத்து விட்டனர். அதனால் அகதிகளாக வேறு ஊர்களுக்குச் சென்று விட்டார்கள். இந்தக் கலவரம் நடந்த போதும் நான் இந்தியாவில், எனது தகப்பனார் தமிழர்களுக்கு உதவினார் என்பதற்காக எங்களது வீட்டையும் ஒருசிலர் கல்லெறிந்து தாக்கியுள்ளனர்.

நான் ஊர் வந்து சேர்ந்த போது தமிழ்க் குறிச்சி யாருமில்லாது வெறிச்சோடிக் கிடந்தது. ராசம்மா எந்தவூருக்கு அகதியாகப் போனாள் என்று கண்டுபிடிக்க முடியாது அந்தரப்பட்டேன். இது பற்றி யாரிடமும் விசாரிக்கவும் முடியவில்லை.

ஏற்கனவே தமிழர்களுக்கு நாங்கள் உதவியது பற்றிய குற்றச்சாட்டு வேறு இருந்தது. ஒருசில வீடுகளோடு உயிர்களும் எரிந்து விட்டதாகவும் தகவல். ராசம்மாவின் வீடும் எரிந்து காணப்பட்டது. குமுறும் உள்ளத்தோடு கொழும்பு சென்றுவிட்டேன்.

நானும் திருமணம் செய்து குடும்பமாகி பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் எனச் செல்வம் பெருகிற்று. கொழும்பில் இருந்து வட்டாரக் கல்வியதிகாரியாக நியமனம் பெற்றுக் கொண்டு கல்முனை வந்து சேர்ந்தேன். எனது கல்வி வட்டாரத்தில் பெரிய நீலாவணையும் அடங்கும்.

இங்குள்ள பாடசாலையொன்றைத் தரிசிப்பதற்காகச் சென்று பாதையோரத்தில் காரை நிறுத்தி விட்டு காரில் இருந்து இற்கி பாடசாலைக்குள் செல்கிறேன்.

அதிபர் கணேசபிள்ளை உடன் வர வகுப்புக்களை பார்வையிட்டு விட்டு வெளியே வந்ததும் “ஐயாவோட நான் கொஞ்சம் கதைக்கப் §¡றன்” என்று ஒரு பெண்ணின் குரல் கேட்டு திரும்பிப் பார்த்தேன். அதிபர் “கடலை விற்கிற மனிசி இந்த ஊருக்கு அகதியாக வந்தவ, சும்மா கென்டீன் காரனோடு பிரச்சினைப்படுகிறா” என்றதும் கூர்ந்து பார்க்கிறேன்.

கரண்ட் பட்டது போன்று இருந்தது. என்னைத்திடப்படுத்திக் கொண்டேன். “பாடம் படித்து நிமிர்ந்த விழி பட்டுத் தெறித்தது மானின்விழி” என்ற பாரதிதாசன் கவிதை வரிகள் நினைவு வந்தது.

அவள் முந்திக் கொண்டு “ஐயா நீங்க ஹமீது தானே!” என்கிறாள். என்னால் ஏதும் பேச முடியவில்லை. என் மனத்தினுள்ளே, சரோஜாதேவி ராசம்மாவின் கோலமா இது எனக் கலங்கிய என் கண்களைப் பார்த்துக் கலங்கியவளாக தனது கடலை பெட்டியை நோக்கி நடக்கிறாள்.

அதிபர் தனது கந்தோர் அறைக்குச் சென்றுவிட்டார். நான் அவளை நோக்கி நடந்தவாறே “ராசம்மா” என அழைக்கிறேன். அவள் கடலைப் பெட்டியைத் தூக்கிக் கொண்டு என் அருகே வந்து 57 வெள்ளத்தில் எனது தாய் போனதோடு தந்த படமும் போய்விட்டது. சூறாவழியில் என் தந்தை போய்விட்டார். எல்.ரி.ரி.ஈ கலவரத்தில் எனது இரண்டு ஆண்பிள்ளைகளையும் இழந்துவிட்டேன். பிள்ளைகளை இழந்த ஏக்கத்தில் என் கணவரும் இறந்துவிட்டார். கடலை விற்றுப் பிழைக்கலாம் என்று இங்கு வந்தேன். துரத்துகிறார்கள்.

எத்தனையோ துன்பங்கள் துரத்தியும் களைக்காது ஓடிக்கொண்டிருக்கின்றேன். கன்டீன்காரன் துரத்தலுக்கு நான் பயப்படவா போறன். அது சரி நீயும் உன் பிள்ளைகுட்டிகளும் சுகமா?

நான் ஒருதரம் நம்மிட ஊருக்கு போய்ப்பார்த்தேன். உன்ட வீட்டுப்பக்கமும் போனேன். ஊடு பூட்டிக்கிடந்தது. நீ கொழும்பிலே இருப்பதாகச் சொன்னார்கள்.

எங்கட வீட்டுப் பக்கம் போனேன் எங்கட வீடு இருந்த இடத்தில் பாடசாலையும் தொழுகிற பள்ளியும் கட்டியிருக்காங்க. எங்கட வீடு இருந்த இடத்தில் நன்மையான காரியம் நடந்திருக்கு எனச் சந்தோஷப்பட்டுக்கொண்டேன். நம்ம ஊரில என்னை யாரும் அடையாளம் காணவில்லை.

சொர்க்கமே என்றாலும் சொந்த ஊர் போல் ஆகுமா என்ற சினிமாப் பாட்டு ஞாபகம் வந்ததோடு நீயும் ஞாபகம் வந்தாய், ஸ்திரிக்கை பெட்டி சுட்டபோது ஆய் எனக் கத்தியதும் ஞாபகம் வந்தது.

நான் இப்ப இருக்கிற ஊருக்கு திரும்பிவிட்டேன், உன் பிள்ளைகளுக்குத் தருவதற்கு என்னிடம் ஒன்றுமில்லை. இந்த கடலையைக் கொண்டுபோய் உன் பிள்ளைகளிடம் கொடு என் கடதாசியில் சுற்றி என்னிடம் கொடுத்தாள்.

நான் எனது சட்டைப் பைக்குள் கையைவிட்டு கிடந்ததை எடுத்து அவளிடம் கொடுத்தேன். இதையா நான் உன்னிடம் எதிர்பார்த்தேன். இல்லையே என்றதும் நான் அவளது பெட்டியில் போட்டுவிட்டு, அதிபரிடம் சென்று, கடலை விற்பதை தடுக்காதீர்கள் எனச் சொல்லிவிட்டு காரில் ஏறிக்கொண்டேன். அவள் என் காரின் கதவைப் பிடித்தவாறு நின்று என்னைப் பார்த்தாள். அவள் கண்களில் இருந்து நீர் தாரை தாரையாக ஓடியது.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.