புத் 67 இல. 33

மன்மத வருடம் ஆடி மாதம் 31 திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 துல்கஃதா பிறை 01

SUNDAY AUGUST 16 2015

 

கிரிக்கெட் வாழ்வுக்கு விடைகொடுக்கும் சங்கா

கிரிக்கெட் வாழ்வுக்கு விடைகொடுக்கும் சங்கா

15 வருட கிரிக்கெட் வாழ்க்கையிலிருந்து இன்னும் சில தினங்களில் ஓய்வு பெறவுள்ளேன். அதைப் பற்றி நான் கவலைகொள்ளவும் மாட்டேன். நான் ஓய்வுபெற வேண்டிய சரியான தருணம் இதுவாகும் என்று இலங்கை அணியின் முன்னாள் தலைவரும், நட்சத்திரத் துடுப்பாட்ட வீரருமான குமார் சங்கக்கார தெரி வித்தார்.

தனது ஓய்வு குறித்து பத்திரிகையாளர்களிடம் கருத்துத் தெரி வித்த சங்கக்கார மேலும் கூறியதாவது

நான் டெஸ்ட் போட்டிகளில் ஆரம்பம் முதல் விக்கெட் காப்பாளனாக கடமையாற்றியவன். ஆனால் 2006ல் இருந்து டெஸ்ட் போட்டிகளில் விக்கெட் கீப்பிங்கிலிருந்து விலக எண்ணியிருக் கவில்லை. ஆனால் கிரிக்கெட் தேர்வாளர்கள் இப்பொறுப்பிலிருந்து நீங்கள் விலகி முழுமை யாக துடுப்பட்டத்தில் கவனம் செலுத்தலாமே. அது இலங்கை அணயின் துடுப்பாட்டத்துக்கு வலு சேர்க்கும் என்றார்கள். ஆரம்பத்தில் நான் அதை விருப்பாவிட்டாலும், பின் அவர்களின் அம்முடிவை ஏற்றுக் கொண்டேன். அதன் பின் என் துடுப்பாட்டம் முன்பை விட நன்றாக அமைந் தது. நான் எடுத்த சதங்களுக்கும், குவித்த ஓட் டங்களுக்கும் இம்முடிவு துணையாக இருந்தது. சங்கக்காரவின் டெஸ்ட் துடுப்பாட்ட சராசரி 58.49 ஆகும். ஆனால் அவர் விக்கெட்காப்பாளர் பொறுப்பிலிருந்து விலகியதன் பின் விளையாடிய போட்டிகளில் அவரின் ஓட்ட சராசரி 68.05 ஆக அதிகரித்திருந்தது.

2013ம் ஆண்டு திடீரென ஒரு நாள் எனது தந்தை தொலைபேசியில் ஏன் இன்னும் கிரிக் கெட் விளையாடுகிaர். இப்போது வேறு ஏதா வது துறையில் ஈடுபடலாம் தானே என்று கேட்டார். திடீரென அவர் இப்படிக் கேட்டது ஆச்சரியமாக இருந்தது. என்றாலும் அன்று தந்தை சொன்னதைப் பற்றி சிந்திக்க ஆரம்பித்தேன். அப்போதுதான் நான் ஓய்வு எடுக்கும் வயது வந்து விட்டதை உணர்ந்தேன். மேலும் என்னுடன் விளையாடும் ரங்கன ஹேரத், சரே அணியில் விளையாடும் சக வீரர் கரத் பெட்டியைத் தவிர மற்றவர்கள் அனைவரும் 26 வயதுக்குட்பட்டவர்கள். அவர்களின் துடிப்பான ஆட்டமும் சுறுப்பும் என்னை சிந்திக்கவைத்தது. இந்த வருட ஆரம் பத்தில் நடைபெற்ற உலகக் கிண்ணத் தொடருடன் ஓய்வுபெறலாம் எனத் தீர்மானித்தேன். ஆனால் இலங்கை கிரிக்கெட் சபையுடன் ஏற்பட்ட புரிந்துணர்வுக்கமைய இன்னும் நான்கு டெஸ்ட் போட்டியில் விளையாடத் தீர்மானித்தேன்.

நான் எச்சந்தர்ப்பத்திலும் என் பெற்றொருடன் இணைந்தே இருக்கிறேன். அவர்களுக்கு கிரிக்கெட் அவ்வளவாக முக்கியமில்லை. நான் சந்தோஷமாக உள்ளேனா? நான் விளையாடும் போது திறமையாக விளையாடுகிறேனா என்றுதான் அவர்கள் கவனம் செலுத்துவார்கள். என் வருமானம், என் ரசிகர்கள் பட்டாளம் பற்றி எல்லாம் அவர்கள் அலட்டிக் கொள்வதில்லை. என் ஓய்வு முடிவுபற்றி என் மனைவியுடனும் கலந்துரையாடி முடிவெடுத்தேன் என்றும் சங் கக்கார தெரிவித்தார்.

மஹேல ஜெயவர்தனவைத் தொடர்ந்து நானும் ஓய்வுபெறுவதால் இலங்கை அணி பலவீன மடையுமே. இப்போதுள்ள அணி இரண்டாதர அணி என்ற பரவலான கருத்து நிலவுகிறது. அது பற்றி சங்கக்கார கூறுகையில், இப்போதுள்ள அணியானது பல துடிப்பான இளம் வீரர்களைக் கொண்ட திறமையான அணி. டெஸ்ட், மற்றும் ஒருநாள் போட்டிகளிலும் திறமையாக விளையாடக் கூடியவர்கள். அவ்வணியே தொடர்ந்து பல போட்டிகளில் விளையாடினால் எதிர்காலத்தில் நல்ல அணியாக மிளிரக் கூடிய வாய்ப்பேற்படும் என்றார்.

தொடர்ந்து சங்கக்கார கூறுகையில்: அரசியலகுக்கு வருவதற்கு எண்ணமும் இல்லை. அப்படி வரும்படி அழைப்புகளும் இன்னும் வர வில்லை என்றும் அரசியல் பற்றி கேட்டதற்கு இவ்வாறு தெரிவித்தார்.

நான் கிரிக்கெட்டைத் தவிர சிறுவயது முதல் டென்னிஸ், பெட்மின்டன் நன்றாக விளையாடு வேன். இப்பொழுதும் நேரம் கிடைக்கும் வேளையிலெல்லாம் டென்னிஸ் விளையாடுவேன். ஆனால் இப்போது வயதாவதால் கொஞ்ச நேரம் விளையாடியதும் கால் வலி மூட்டுவலிகள் ஏற்படுகின்றன.

ஆனால் பயிற்சிகளில் ஈடுபடும் போது நீண்ட தூரம் ஓட வேண்டும். பாரம் தூக்க வேண்டும். மேலும் விளையாட்டு வீரனுக்குத் தேவையான வேறு பல விளையாட்டுகளில் ஈடுபடுகிறேன். இப் பயிற்சிகளின் மூலம் மன உறுதி, உடல் உறுதி இரண்டும் கிடைக்கின்றது. இது எனனைப் போன்ற விளையாட்டு வீரர்களுக்கு முக்கியதான தாகும் என்றும் குமார் சங்கக்கார தெரிவித்தார்.

என் பிறந்தகமான கண்டியில் கடைசியாக விளையாடவே ஆசைப்பட்டேன். ஆனால் அதற்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. கிரிக்கெட் சபையும் அங்கு நடத்த பல முயற்சிகளையும், பிரயணத்தனங் களையும் செய்தனர். ஆனால் வேறு காரணங் களுக்காக அங்கு எனது இறுதி டெஸ்ட்டை நடத்த இயலாமல் உள்ளது. கண்டி நகரில்தான் என் கிரிக்கெட் வாழ்க்கை ஆரம்பமானது. என் ரசிகர்கள் மத்தியில் பல டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் திறமையாக விளை யாடியுள்ளேன். கண்டி எனக்குப் பிடித்தமான நகரம். நான் எதிர் காலத்தில் கண்டியிலேயே வாழ விரும்புகிறேன். எனது ஆரம்ப பயிற்சியாளர் சுனில் பர்னாந்து அவர்களுககு இச்சந்தர்ப்பத்தில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் கண்டிக்கும் கண்டி இரசிகர்களுக்கும் நன்றி. எனது கடைசி போட்டியை உங் கள் முன்னிலையில் விளையாட முடியாததையிட்டு உங்களிடம் மன்னிப்புக் கேட்கிறேன் என்றும் சங்கக்கார தெரிவித்தார்.

தனது 15 வருட கால கிரிக்கெட் வாழ்க்கையில் மறக்கமுடியாத நிகழ்வுகள், நிறைவேறாத மற்றும் மகிழ்ச்சிகரமான சம்பவங்கைளப் பற்றி சங்கக்கார கூறுகையில்,

கடந்த வருடம் இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் போட்டித் தொட ரைக் கைப்பற்றியது மிகவும் மகிழ்ச் சிகரமான மறக்க முடியாத நாளாகும். அதே போல் 2010 ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய மண்ணில் வைத்து ஒரு நாள் தொடரைக் கைப்பற்றிய நாளும் என் கிரிக்கெட் வாழ்க்கை யில் சிறந்த நாட்களாகும்.

2009 ஆம் ஆண்டு பாகிஸ்தானுடன் நடை பெற்ற டெஸ்ட் போட்டியின் போது மைதா னத்தை நோக்கி நாங்கள் பயணம் செய்த பஸ் வண்டி பயங்கரவாதிகளின் துப்பாக்கிப் பிரயோகத்துக்கு இலக்கான அந்தப் பயங்கரமான நாளை மறக்கவே முடியாது. சக வீரர் திலான் சமரவீர அத்தாக்குதலில் படுகாயமடைந்தது என் மனதை மிகவும் பாதித்தது.

கிரிக்க்கெட் வாழ்க்கையில் நிறைவேறாத எண்ணங்களைப் பற்றி சங்கக்கார குறிப்பிடும் போது, தான் பங்குபற்றிய உலகக் கிண்ணத் தொடர்களில் இரு முறை இறுதிப் போட்டிவரை வந்தும் கிண்ணத்தைக் கைப்பற்ற முடியாமல் போனமையும், மற்றும் இந்திய மண்ணில் இந்திய அணியுடன் தொடர் வெற்றியும், அவுஸ்திரேலிய மண்ணில் அவுஸ்திரேலிய அணியுடன் ஒரு டெஸ்ட் போட்டியில் கூட வெல்ல முடியாமல் போனமையாகும் என சங்கக்கார கூறினார்.

20ம் திகதி பி. சரவணமுத்து விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள இந்தியாவுடனான 2வது டெஸ்ட் போட்டியுடன் ஓய்வுபெறவுள்ள சங்கக்கார இதுவரை 132 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 11 இரட்டை சதங்களைப் பெற்றுள்ளார். இது கிரிக்கெட் ஜாம்பவான் அவுஸ்திரேலிய வீரர் சேர். டொனல் பிரட்மன் பெற்ற 12 இரட்டை சதங்களுக்கு அடுத்த கூடிய இரட்டை சதங்களாகும. சங்கக்கார விளையாடும் கடைசி டெஸ்ட் போட்டியில் இச்சாதனையை சமன் செய்யும் வாய்ப்பும் சங்கக்காரவுக்கு உண்டு. ஏனெனில் அவர் ஏற்கனவே தனது இறுதி டுவண்டி-20 போட்டிகளிலும், ஒருநாள் சர்வதேச போட்டிகளிலும் சாதனைபடைத்துள்ளார்.

2014ஆம் ஆண்டு பங்களாதேஷில் நடைபெற்ற டுவண்டி- 20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் திறமையாக விளையாடி ஆட்டநாயகன் விருதுபெற்று டுவண்டி-20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றார். அதேபோல் ஒருநாள் போட்டியிலும் கடந்த உலகக் கிண் ணத் தொடருடன் ஓய்வுபெற்ற சங்கக்கார அத் தொடரில் தொடர்ந்து 4 சதங்கள் அடித்து சாதனை படைத்தார். அதே போல் அவரின் கடைசிப் போட்டியான 20ம் திகதி இந்தியாவுடனான டெஸ்ட் போட்டியிலும் சாதனை படைப்பார் என எதிர்பார்க்கலாம்.

 

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.