புத் 67 இல. 33

மன்மத வருடம் ஆடி மாதம் 31 திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 துல்கஃதா பிறை 01

SUNDAY AUGUST 16 2015

 

கவிதை மஞ்சரி

உனக்காக ஒரு பாடல்

- வேதா இளந்திரையன் -

மனமே!
எழுது எழுது என்கிறாய்
என் தந்தையைப்போல்
எதனை எழுதுவது
என் மனத்தில் பொதிந்துள்ள
எண்ணத்தை எழுதுவதா
சின்ன வயதில்
நான் கற்ற சித்தாந்தங்கள்
எண்ணில் அடங்கா
என்னில் அடங்கியதெல்லாம்
எவருக்கும் தெரியாது
உன்னை நினைத்தால்
கவிதை வரும்
என்னை நினைத்தால்
கண்ணீர் வரும்
உள்ளதைச் சொன்னால்
உருகிப் போவாய்
நல்லதைச் செய்தும்
நலிவே மிகுதி
உள்ளத்தின் வலியை
உரைத்தால் அழுவாய்
என்றாலும்
எண்ணத்தில் உள்ள
எல்லாக் கிடக்கையையும்
நல்ல கவிகளாய்
நான் தருவேன் பொறு
கனவும் காதலும்
கனத்த நாட்களில்
நினைவும் நிலவும்
நிம்மதி தொலைத்ததை
ரணமாய் மனத்தில்
பதிந்து கிடப்பதை
உனக்காய் படைப்பேன்
உளத்தைத் திறப்பேன்
எனக்காய் என்றும்
விளக்காய் இருப்பாய்
தட்டிக்கொடுத்தே
தகையாய் மிளிர்வாய்
என்னில் நீயே
நானாய் இருக்க
உலகம் செழிக்க
உரைப்பேன் கவிதை!

சாபக்கேடுி

- பூகொடையூர், அஸ்மா மஜிஹர்

மற்றவன் குடலைக்
கோத்து கயிறு திரிப்பர்...

பெற்றவளையும்
உற்றவிலை கிட்டின்
விற்றிடுவர்

உறவுகளைப்
புதைத்துவிட்டு
பணத்தோடு
பந்தம் கொள்வர்...

குற்றம் என்னவென்று
சற்றும் பாராமல்
சுற்றிச் சுழன்று
வாழ்ந்து முடிப்பர்

புற்றிலிருக்கும்
பாம்பையும்
புதையலாக்கப்
பாடுபடுவர்

குருதியோடு
சலவை செய்து
சமாதிகளின்
மண்டையோடுகளில்
பணம் பதுக்குவர்

ஆயுத முனை காட்டி
வங்கிக் கொள்ளை!
முகமூடியணிந்து
நகைக்கடைத் திருட்டு
விரையும் வண்டியோடு
வழிப்பறி...!

ஆடையணிந்த
ஐயறிவுகளின் ஈனத்தனத்திற்கு
அளவேயில்லாமல்
இறுதியாக,
இடியாய் வந்த சேதி
“பாடசாலையில்
பணம் திருட்டு”
கல்விக் கூடத்தில்
களவாடிய
இந்த அற்பனை
கற்பனை செய்யவே
சகிக்கவில்லை!

தொடரணும் உன் பணி

- கிராமத்தான் கலீபா, பொத்துவில்

தொடரணும் உன்பணி தொடர்ந்திடு கைப்பணி
தூற்றுவோர் விழிகளுள் தூளியாய் ஆடுநீ!
எப்பணியாற்றினும் இதம்தரும் நற்பணி
கலைப்பணி யொன்றே!
ஏன் கவிஞன் நீ கலங்குகின்றாய்?
களைப்பை நீ போக்கிடு - தினம்
கவிப்பணி யாற்றிடு...

இராசிக்கு என்னவுண்டு? தொட்டதெல்லாம் பொன்னாக
கெட்டழிந்து விட்ட நிலை - மது
விட்டொழிந்து மீண்டும் வந்தாய்
பட்டதெல்லாம் பெரும் துயர்தான் - பதவியில்
உயர்வு மட்டும் பற்றா வுனக்கு?

கலையினில் சிறப்புவரும் காரியமாற்று
நாளை விலையிலா சொத்தென்றுன்னை
செத்தபின் னுலகம் போற்றும்!
கவிஞனே!
நிதி தனம் தேடிவரும்; வாழ்வில் நிம்மதிதான் வருமா?
கொடுநிலை மாறிவரின் -உன்
கொள்கைகள் வீழ்ந்திடுமா?

மனக் கிடங்குள் புழுங்குகின்ற மயக்கங் களேராளம்
பிணக் கிடங்குள் வாழும் நிலையெண் - நம்
பிரிய மெல்லாம் வீணாகும்!!

காலத்தைக் கையில் எடு

- பன். பாலா -

நண்பனே!
மலை நண்பனே
நாட்கள் நகர்கின்றனவே
நாட்கள் மட்டுமா...? இல்லை
நாகரிகம் மாறி சிந்தனைகளும்
சீரியதாக தேறுகின்றன
சிற்றறிவும் பேரறிவும்
சில்மிஷமாக

பகுத்தறிவு பேறு கொள்கிறது
கைக்குள் உலகத்தைக் கவர்ந்து
கக்கத்தில் வைத்திருக்கிறது
கணனி
விசை அழுத்தினால்
விநாடிப் பொழுதில்
விலாவாரியாக விவரணங்கள்
வரைபடத்தைப் பார்த்தபடி
வட்டமிட
சர்வதேச வலைப் பின்னல்
வல்லமை காட்ட ஏவுகணை
வான்மனை மேவி
உள்ளமைச் சொல்ல செய்மதி
வீட்டுக்குள் உலகம் வந்து
வெகு நாளாகி விட்டது.
நண்பனே!
இதில் நீ எங்கு
நிற்கிறாய்
நிற்பதற்கு உனக்கு
நேரம் தான் ஏது!
நில்லாமல் ஓடி உண்ணாமல்
உழைப்பதில் நீ வல்லவன் தான்.
குருதி மலையாய்க் குவிந்து
கிடக்கும் தொல்லைகள்
உறுதி குலையாமல்ஓட
வேண்டியவன் தான் நீ!
ஏழ்மை உனக்கு
ஏக உறவு
அறியாமை இம்மட்டும்
அன்பு வரவு
பேயும் பிசாசும்
ஆலமரமும் அத்திமரமும்
புத்திகெட்ட மனிதனுக்கு
இன்னும் உனக்கெதற்கு

நாளும் கோளும் என்
செய்யும் என்று
ஞான சம்பந்தன் சொன்னது
சத்தியம்

அதது அதனது பாட்டில்
ஒரு நேர் கோட்டில்
ஊர் வலம் வரும்போது
கூர் கெட்டு நீ மட்டும்
ஏன் குழம்புகிறாய்

சாங்கியமும் சடங்கும்
நாளும் நட்சத்திரமும்
நாசூக்காக இருக்கட்டும்
அதுவே
சுகவாழ்வின் சூட்சுமமென
சும்மா நீ சுதாகரிக்காதே
காற்று கறுப்பு எல்லாம்
பொறுப்புள்ளவர் போக்கல்ல

சினிமா ஒரு கனவு
மடம்
அதில் தரிக்க நினைப்பவன்
மனம் முடம்
உலகத்தைத் திரும்பிப்
பார்க்காதே!
திருப்பிப் பார்
அது
உன்னை விட்டு வெகு தூரம்
போய்விட்டது போலிருக்கும்
யதார்த்தம் அதுதான்

நீ
காலத்தைக் கையில்
எடு!
சிந்தி!
கொஞ்சம் வெளியே
வா!
கூர்ந்து பார்!
உலகம்
உன் வீட்டுக் கூரையிலும்
கூவி நிற்கிறது
கதவைத் திறந்தால்
போதாது
மனதைத் திற!
மற்றவை எல்லாம்
மற்றவை எல்லாம்
உன் மடியில்

நிசப்தங்களின் சப்தங்கள்!

- ஜெமஸ்த் -

உன்னத இதழ்கள்
கூடிப்புணர்ந்தாலும்
ஸ்கலிதமாவதோ
நிசப்தங்கள்தான்...!

விற்புருவங்களின்
மற்போர் சாயலில்
கற்றசொற்களும்
பரிபாஷைகள் தான்....!

முயலாக துள்ளும்
அயலாத மொழிகள்
ஆமையிடம் வீழ்கையில்
ஊமை விழிகள்தான்...!

பேசும் ஓசைகளின்
ஆசை பூஜைகளை
அழைக்கும் மணிகளும்
அடித்து முடிக்கின்றன
அமைதியாய்த்தான்....!

வெயிலை பார்க்கையில்
ஒளியில் வார்த்தைகள்
வெளிவர முனைகையிலும்
மூடி மறைக்கின்றன
மெளனங்கள்தான்....!

உஷ்ணம் பஸ்பமாக்கி
உன்கையில் நான்
அஸ்தியாக ஆகியும்
அப்போதும்
உன் அழுகையோ
“உஷ்” என்றுதான்...!

வார்த்தை வாசனை
யாசித்திருக்கிறேன் நீ
வரும் சாலையில், ஆனால்
வாசிகசாலை சுவர்
வாசகமாய் உன்
“அமைதி”...!

சந்தி ஒன்றில்
சந்திக்க நிற்க
சிந்தித்து நீ
சிந்திச் சென்றதும்
சாந்திதான்...!

அணையா விளக்கு

- கற்பிட்டி வஹாப் -

பாரதத் தாயின்
தவப்புதல்வன்
அணு உலகின்
பொறியியல் மேதை
அரசியல் வழிகாட்டி
மாணவர்கள் ஆசான்
குழந்தைகள் நேசன்
இந்திய தீபகற்பத்தின்
அணையா விளக்கு
மாண்புமிகு மாமனிதர்
“பாரதரத்னா” அப்துல்கலாம்
உலகை விட்டும்
விடைபெறும் துயர நாள்

விழி நிறை கண்ணீரோடும்
அகம் நிறை விசனத்தோடும்
அன்னவரின் சுவனவாழ்வுக்காய்
பேதமின்றி பிரார்த்திப்போம்

நிரபராதி

- எம். ஏ. றமீஸ் -

பரீட்சைப் பெறுபேறுகள் போல
உன் காதலும்-
எதிர்பார்ப்புகளை
ஏமாற்றியடி!

உன் நினைவுகளில்
சிக்கிக் கொள்ளவே
பறந்து வருகின்றன
என் எண்ணங்கள்
பார்வைகளால்
கைது செய்த என்னை
இதயச் சிறையில் போட்டு
சித்திரவதைகள் பல
செய்கிறாய்!

எல்லாக் குற்றங்களையும்
செய்து விட்டு
நிரபராதி என்கிறேன்-
குற்றம் செய்வதற்கு முன்
நீ என்னை
தண்டித்ததால்!!

சொற்களுக்குள் சிக்காத அர்த்தங்கள்

- அஷ்ரபா அலிறிஷாப், அக்குறணை.

நீண்ட இரவுகளில்
மனதின் வார்த்தைகள்
பெளர்ணமிகளாக
விழித்துக் கொண்டே
பார்த்திருக்கிறேன்

சொற்களுக்குள்
சிக்காத
அர்த்தங்களை
அர்த்த ராத்திரியின்
அமைதிப் பொழுதுகள்
எனக்குள்
வார்க்க
முயல்கின்றன...

அந்நொடி
என்னால்
பூக்களின் மெளனத்தை
மொழி பெயர்க்க
முடிகிறது...
மின்மினிகளின்
முனகல்களை
கேட்க முடிகிறது...
இருளின்
இதிகாசங்களை
படிக்க
முடிகிறது.

சில சமயங்களில்
நிதர்சனங்களின் தரிசனம்
உணரப்படுவதால்
மனதால்
சிரிக்கவும்
மெளனங்களால்
அழவும்
முடிகிறது...

உன்னைச் சுற்றி

- இறக்காமத்து நிலா -

கனவுகளைச் சுமந்த என் இதயம்
வெற்றுக் காகிதமாய்!
ஓரிரு வரிகளில் வாழ்திடக் கூட
என் தாய்க்கு நேரமில்லை...

விழிகள் முழுக்க நீரால்...
ஒரு முறையேனும் கண்சிமிட்ட மாட்டேன்
என் கண்ணீர் துளிகளை நீ கண்டு
கொள்ளக் கூடாதென்று!

என் உயிர் அழும் மெளன
மொழிகள் கூட
உன்னை வந்தடையக் கூடாதம்மா!
ஏனென்றால் உன் இமைகள்
ஈரழித்தால்; என் இதயம்
துடிக்காமல் நின்று விடும்....

நீ வெறுத்தாலும் என் உலகம் உன்னைச் சுற்றியே....
அமையும்!

எல்லாமே போச்சு

- மஜீத் ராவுத்தர், கிண்ணியா -

மனம் நொந்து நொந்து
மரத்துப் போச்சி
இனம் வெறுத்து வெறுத்து
உறவு போச்சு

வாழ்வு செழிக்கும் செழிக்கும்
வாடிப் போச்சு
வீழ்ச்சி தொட்டுத் தொட்டு
வையம் போச்சு

துவேஷம் பார்த்துப் பார்த்து
தூய்மை போச்சு
சந்தேகம் பெருகிப் பெருகி
சந்தோசம் போச்சு

மனிதன் பாராமல் பாராமல்
மனிதம் போச்சு
புனிதம் போற்றாமல் போற்றாமல்
புண்ணியம் போச்சு

சண்டை பெருகிப் பெருகிப்
சமாதானம் போச்சு
தண்டம் குறுகிக் குறுகி
தீதுபெருகிப் போச்சு

விதி செல்லும் வெல்லும்
மதியே போச்சு
சதி கூடிக் கூடி
சகஜம் போச்சு

அதிர்வு வந்து வந்து
அமைதி போச்சு
எதிர் பார்த்துப் பார்த்து
எல்லாமே போச்சு

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.