புத் 67 இல. 33

மன்மத வருடம் ஆடி மாதம் 31 திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 துல்கஃதா பிறை 01

SUNDAY AUGUST 16 2015

 

இரவு பகலை குழப்பும் நேர அரசியல்

இரவு பகலை குழப்பும் நேர அரசியல்

தாவது தப்பாகிப்போனால் நேரம் சரியில்லை என்று தப்பிப்பதற்கு சொல்வது எல்லோருக்கும் வழக்கம். இந்த நேரம் என்பதே சர்வதேச அரசியல் விளையாட்டு என்பது பலருக்கு தெரியாது. யாருடனாவது இருக்கும் கோபத்திற்கெல்லாம் இந்த நேரத்தை வம்புக்கு இழுப்பார்கள். இதற்காக விஞ்ஞான கோட்பாடுகள், ஜன்ஸ்டைன் தத்துவங்களை எல்லாம் குற்றம் சொல்ல முடியாது.

வட கொரியா அண்மையில் இப்படி ஒரு தலைகால் சம்பந்தம் இல்லாமல் சுவாரஸ்யமான முடிவொன்றை எடுத்தது. செல்வதற்கெல்லாம் தலையாட்டு நாட்டின் மகா ஜனங்களுக்கு தனது கடிகாரத்தில் நிமிட முள்ளை அரை மணிநேரம் பின்னோக்கி திருப்பி வைத்துக் கொள்ளுங்கள் என்று உத்தரவிட்டது. ஏதோ, முன்கூட்டியே உதிப்பதாக சூரியன் லெட்டர் போட்டு அறிவித் தது என்று தப்பாக நினைத்துவிட வேண்டாம். இதுவெல்லாம் ஓர் அரசியல் தான்.

இப்படி கடிகார முள்ளை திருப்பி வைப்பதற்கு வட கொரியா சொன்ன காரணம் வரலாற்றில் பொன்னெழுத்தில் எழுத வேண்டி இருக்கும். ஜப்பானுக்கு எதிராகவே நேரத்தை மாற்றுவதாக, வடகொரிய தலைவர் கிம் ஜொன் உன் குறிப் பிட்டிருந்தது. வடகொரிய தலைவரின் பெயரை போன்று அவர் எடுக்கும் முடிவுகளும் சம்பந்த மில்லாமல் ஏதோ குளறுபடியாக இருக்கும்.

1912ஆம் ஆண்டு ஜப்பான் கொரிய தீபகற்பத்தை ஆக்கிரமித்தது முதல் வட மற்றும் தென் கொரிய நாடுகள், ஜப்பானின் நேரத்தை பின்பற்றி வருகின்றன. எனவே ஜப்பானின் ஏகாதிபத்தியத்தை ஒழிக்க வேண்டும் என்று புரட்சி பாடிய வட கொரியா அதற்காக போயும் போயும் கடிகாரத்தில் கைவைத்திருக்கிறது. ஜப்பானிய ஆட்சியிலிருந்து கொரியா விடுதலை பெற்ற 70ஆம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், அந்த முடிவு எடுக்கப்பட்டதாக வட கொரிய அரசாங்க செய்தி நிறுவனம் இதற்கு காரணம் வேறு சொன்னது. பியொங்யான் நேரம் என்று அழைக்கப்படும் புதிய நேரம் நேற்று சனிக்கிழமை தொடக்கம் வட கொரியாவில் அமுலுக்கு வந்தது. இந்த விடயத்தில் வட கொரியாவை குற்றம் சொல்லவும் முடியாது. உலகெங்கும் இந்த நேர வைத்து அரசியல் செய்யும் வரலாறு இருந்து வருகிறது. சரியென்றால் உலக நேர வலயம் அதன் தூரத்திற்கு ஏற்ப மாறுபட வேண்டும். ஆனால் யதார்த்தத்தில் அப்படியில்லை.

அது எப்படி, கிரீன்விச் இடைநிலை நேரம் 12.00 ஆக இருக்கும் போது லோர்ட் ஹோ நேரம் (லோர்ட் ஹோ தீவு நேரம் அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்துக்கு இடையில் உள்ளது) 22.30 ஆகவும் சந்திர நேரம் 17.14 ஆக இருக்க முடிகிறது. ஒன்றும் புரியவில்லை?

ஆரம்பத்தில் ரயில் வண்டிகள் தான் நேரத்தை குழப்பியது. 19ஆம் நூற்றாண்டில் ரயில் போக்குவரத்து பொருளாதாரத்தை பலப்படுத்தும் புள்ளியாக இருந்தது. இப்படி மேம்படுத்தப்பட்ட ரயில்கள் மற்றும் கப்பல்கள் வேகமாக வேகமாக தூர இடைவெளி குறைந்தது. இதனால் ஊருக்கு ஊர் வித்தியாசமான நேரம் இருப்பது அவதானத்திற்கு வந்தது. எனவே ஒரு பொதுவான நேரத்திற்கான தேவை ஏற்பட்டது.

அந்த காலத்தில் அமெரிக்காவை பார்த்தால் ஒவ்வொரு நகரிலும் அவரவர்களுக்கு தேவையான நேரம் கடிகாரத்தில் ஓடியது. இது ரயிலில் பயணிப்பவர்களையும் அதனை இயக்குபவர்களையும் தலைசுற்ற வைத்தது. இதனால் ரயில் ஓட்டுநர்கள் கடிகாரத்தை மாற்றி மாற்றி வைக்க வேண்டி ஏற்பட்டது. கடைசியில் அமெரிக்காவெங்கும் நான்கு நேர வலயங்கள் கொண்டுவரப்பட்டன.

இப்படித்தான் அந்தப் பெரிய இந்தியாவிலும் ஒரு பொதுவான நேரம் பின்பற்றும் மரபு வந்தது. அதாவது பிரிட்டன் ஆட்சியில் ரயில் பயணத்திற்காகத்தான் இந்த நேர மரபு பின்பற்றப்பட்டது. இன்று பார்த்தாலும் இந்தியாவெங்கும் ஒரே நேரம்தான் பின்பற்றப்படுகிறது.

இந்தியாவில் இந்த மரபு பின்பற்றப்படுவதை கொஞ்சமாவது ஏற்றக்கொள்ளலாம். ஆனால் சீனாவும் தனது நாடெங்கும் ஒரே நேர வலயத்தை பின்பற்றுவதுதான் சகிக்க முடியவில்லை. அதாவது நாடு முழுவதும் பீஜிங் நேரம் பின்பற்றப்படுகிறது. நாட்டின் மற்ற முனையில் இருக்கும் மேற்கு மாகாணமான ஷின்ஜியான்கிலும் இதே நேரம் தான். அதாவது கடிகார நேரப்படி பார்த்தால் இந்த மாநிலத்தில் இருக்கும் மக்கள் தனது நாளை தொடங்குவது பகல் உணவு உட்கொண்டு விட்டாகும். இங்கு கோடை காலத்தில் நள்ளிரவில் சூரியன் உதிப்பதை பார்க்கலாம். இது பூகோள பிரச்சினையல்ல வெறுமனே அரசியல் பிரச்சினை.

அதாவது 1949ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட்கள் சீனாவில் ஆட்சியை பிடித்த பின் நாட்டின் ஒருமைப்பாட்டை தக்கவைத்துக் கொள்ள இந்த கிறுக்குத்தனமான முடிவை எடுத்தது. ஷின்ஜியான் பிராந்தியமானது உய்குர் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதி. உய்குர்களை பொறுத்தவரை தனது தனித்துவத்தை பாதுகாக்க போராடும் சமூகம். அவர்களை பழிவாங்கத்தான் சீனா நேர வலயத்தில் கோபத்தை காட்டியிருக்கிறது. இப்படி ஓர் அரசியல் காரணத்திற்காகத் தான் சமோவா தீவு 2011 ஆம் ஆண்டு சர்வதேச திகதிக் கோட்டையே மாற்றியது. அதாவது தனது உற்ற நண்பர்களான அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்தையும் சின்ன விடயங்களிலும் கோபித்துக் கொள்ளக் கூடாது என்றுதான் இந்த தைரியமான முடிவை எடுத்தது. இதனால் சமோவாவுக்கு 2011 ஆம் ஆண்டு டிசம்பர் 30 திகதி வராமலேயே போய்விட்டது.

வேறு எங்கெங்கோ உதாரணத்திற்கு செல்வானேன். 1996ஆம் ஆண்டு மின்சார கொடுக்க முடியாத பிரச்சினை எல்லாம் ஏற்பட்டபோது பகல் நேரத்தை கூட்டி சமாளிக்க நினைத்த இலங்கை அரசு நேரத்தை 30 நிமிடங்கள் முன்னுக்கு நகர்த்தியது. என்றாலும் தனியாக ஆட்சி நடத்திக் கொண்டிருந்த புலிகள் அதனை ஏற்க மறுத்து பழைய நேரத்தையே பின்பற்றியது. பின்னர் அரசியல் காரணங்கள் எல்லாம் சேர்ந்து நேரம் பழையபடியே மாற்றப்பட்டது.

கடந்த ஆண்டு உக்ரைனின் பிராந்தியமான கிரிமியாவை ரஷ்யா தனது ஆட்புலத்திற்குள் சேர்த்ததை அடுத்து அங்கும் நேரப்பிரச்சினை ஏற்பட்டது. அதாவது கிரிமியா ரஷ்யாவுக்குள் வந்ததை அடுத்து 2014 மார்ச் 30ஆம் திகதி அங்கு கடிகாரங்கள் எல்லாம் மொஸ்கோவை பின்பற்றி இரண்டு மணி நேரம் முன்னோக்கி நகர்த்தப்பட்டது.

இப்படித் தான் அடொல்ப் ஹிட்லர் பிரான்ஸை கைப்பற்றியபோது பிரான்ஸின் நேரத்தை ஜெர்மனியின் கடிகார நேரத்தோடு இணைத்தார். ஜெர்மனிக்கு விசுவாசத்தை காட்ட ஸ்பெயின் சர்வாதிகாரி பிரான்கோவும் ஸ்பெயினின் நேரத்தை மாற்றினார். இன்றுவரை ஸ்பெயினால் தனது வழமையான நேரத்திற்கு திரும்ப முடியவில்லை. நாட்டு மக்களும் சர்வாதிகாரி நிர்ணயித்த நேரத்திற்கு பழகிவிட்டார்.

வெனிசூலா கிரீன்விச் இடைநிலை நேரத்தை விடவும் நான்கரை மணி நேரம் பின்னால் இருந் தது. ஆனால் 1965ஆம் ஆண்டு சர்வதேச அளவுகோளின் அடிப்படையில் அது நான்கு மணி நேரமாக மாற்றப்பட்டது. என்றாலும் ஆட்சிக்கு வந்து ஹுகொ சாவெஸ் ஒரு பெருத்த அமெரிக்க எதிர்ப்பாளி. இந்த நேரமாற்றம் எல்லாம் அமெரிக்காவின் ஆதிக்கத்தை காட்டுவதாக கூறி 2007ஆம் ஆண்டு மீண்டும் பழைய நேரத்திற்கு கடிகாரத்தை திருப்பி வைத்தார். என்றாலும் இந்த முடிவால் மக்கள் மாலையில் முன்கூட்டியே விளக்குகளை போடுவதால் நாட்டில் இப்போது மின்சார தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது.

கடக ரேகை, அட்ச ரேகை என்று ரேகைகள் எல்லாம் போட்டுத்தான் உலகுக்குக பொதுவான நேரம் ஒன்று உருவாக்கப்பட்டது. ஆனால் அரசியல் ரேகை பார்த்து நேரங்கள் மாற்றப்பட்டு இரவில் சூரியன் உதிப்பதும் பகலில் சந்திரன் வருவதுமாக மாறிவிட்டது. இந்த அரசியல் குழப்பம் இப்படியே போனால் அயல் வீடுகளுக்கு இடையிலேயே பல மணி நேர வித்தியாசம் ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

 

எஸ். பிர்தௌஸ்...

 

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.