புத் 65 இல. 40

சர்வதாரி வருடம் ஆவணி மாதம் 08ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ஷஃபான் பிறை 22

SUNDAY OCTOBER 06 2013

 

 

வளர்ச்சியடைந்து வரும் மலையகக் கல்வி

வளர்ச்சியடைந்து வரும் மலையகக் கல்வி

மலையக மக்களின் வரலாறு 200 வருடங்களைக் கடந்து விட்டபோதிலும் கல்வியைப் பொறுத்தவரையில் ஏனைய சமூகத்தினருடன் ஒப்பிடும்போது 30 வருடங்கள் பின்தங்கிய நிலையிலிருந்தமை ஆய்வாளர்களால் சுட்டிக்காட்டப்பட்டு வந்தது.

இந்நிலையில் 1977 ஆம் ஆண்டிற்குப் பின்னரே தோட்டப் பாடசாலைகள் அனைத்தும் அரசாங்கப் பாடசாலைகளாக உள்வாங்கப்பட்டதன் பின்னர் படிப்படியாக வளர்ச்சியடைந்து வருகிறது. அத்துடன் பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் இம்மக்களின் வாழ்க்கை இன்று முன்னேற்றம் அடைந்து வருகின்றது. அதில் குறிப்பாக கல்வியில் ஏற்பட்டு வரும் முன்னேற்றமானது, இச்சமூகத்தின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்பதற்கான அறிகுறியாகும்.

2013 ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் நுவரெலியா கல்வி வலயத்தில் கோட்டம் 1 இலிருந்து 25 மாணவர்களும், கோட்டம் 2 இலிருந்து 62 மாணவர்களும் கோட்டம் 3 இலிருந்து 34 மாணவர்களுமாக மொத்தமாக 121 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர். இவ்வருடம் இவ்வலயத்தின் பெறுபேறானது கடந்த வருடம் 3 மூ இலிருந்து 7 மூ மாக அதிகரித்துள்ளது. கோட்டம் 2 இல் தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலய மாணவன் கே. யாகேஸ் 184 புள்ளிகளைப் பெற்று நுவரெலியா கல்வி வலயத்தில் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்.

எமது மாணவர்களும் தேசிய ரீதியில் போட்டிபோடக்கூடிய தகுதி நிலையை கடந்த பல வருடங்களாக தக்க வைத்ததுக்கொண்டிருப்பது பாராட்டத்தக்க விடயமாகும். இவ்வருடம் மேற்கூறியப் பரீட்சையில் ஹைலன்ட்ஸ் கல்லூரி மாணவன் 193 புள்ளிகளையும், சென். பொஸ்கோ கல்லூரி மாணவன் 191 புள்ளியையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இம்மாணவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களையும் வழிகாட்டி ஆலோசனை வழங்கியவர்களையும் எமது சமூகத்தினர் பாராட்டி கௌரவிக்க வேண்டும். இம் மாணவர்கள் தான் எமது எதிர்கால சமூகத்தின் தலைவர்களாகும். இவர்களுக்கு சரியான வழிகாட்டல் ஆலோசனை தொடர்ச்சியாக கிடைக்கும் போது, இவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமையும் என்பதில் ஐயமில்லை.

இப்பரீட்சையில் இம்மாவட்டத்திற்கான வெட்டுப் புள்ளியான 153 புள்ளிகளைப் பெற்று சித்திப் பெற்ற மாணவர்களை பாராட்டும் அதேவேளை, 153 புள்ளிகளுக்கு குறைவான புள்ளிகளைப் பெற்றுக்கொண்ட மாணவர்களையும் அவர்களின் பெற்றோர்களையும் பாராட்டி ஊக்கப்படுத்த வேண்டும். அரசாங்க அறிவித்தலின் படி 74 புள்ளிகளைப் பெற்றுக் கொண்ட மாணவர்கள் அனைவரும் இப்பரீட்சையில் ஏதோ ஒரு வகையில் சித்தி பெற்றவர்களா கவே (தேர்ச்சி மட்டத்தை அடைந்தவர்க ளாக) கருத முடியும் எனக் குறிப்பிடப்படுகி றது.

ஒரு சமூகத்தின் “முதலீடு” கல்விதான் கல்விக்காக ஒரு சமூகம் தன்னையும், மக்களையும் எவ்வளவு அர்ப்பணித்துக் கொள்கின்றதோ, அந்த அளவிற்கு அச் சமூகத்தின் வளர்ச்சியும், உயர்ச்சியும், முன்னேற்றமும் இருக்கும் என்பதில் ஐயமில்லை. எந்தப் பிரச்சினை எந்த வடிவத்தில் வந்தாலும் அவற்றையெல்லாம் ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு எமது கல்விப் பயணத்தை தொடர வேண்டும்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.