புத் 65 இல. 40

சர்வதாரி வருடம் ஆவணி மாதம் 08ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ஷஃபான் பிறை 22

SUNDAY OCTOBER 06 2013

 

 
ஆரோக்கிய வாழ்வுக்கு மூலிகை உணவுகள்

ஆரோக்கிய வாழ்வுக்கு மூலிகை உணவுகள்

கண்டதிப்பிலி

வேறு பெயர்: அத்தித்திப்பலி, ஆனைத்திப்பலி

தாவரவியற் பெயர்: Scindupus officinalis

(சின்டபஸ் ஒபிசினேலிஸ்)

குடும்பம் : Araceae

சிங்களப் பெயர்: கஜதிப்பலி

சமஸ்கிருதப் பெயர்: கஜ பிப்பலி

ஆங்கிலப் பெயர் : Elephant pepper

இது திப்பலியைப் போலவே கொடியாகப்படரும். பீனிசம் என்னும் தும்மல் வியாதி, தொய்வு, முட்டு, குரல்கம்முதல், கரப்பன் என்னும் தோல்வியாதி மற்றும் வாத, கப சம்பந்தமான வியாதிகளுக்கு இது நல்மருந்தாகப் பயன்படுகிறது.

“வாதமறுந் தீபனமா மாறாக் கபங்கரப்பன் ஓது குரற்கம்மலிவை யோடுங்காண் - பூதலத்திற் சோனையை நேர் நாசிநீர் தேலாச் சுவாசமும் போம் யனையினற் றிப்பலியதால்” என்று யானைத் திப்பலியின் குணத்தை எடுத்துக் கூறுகிறது சித்த மருத்துவம் மேலும்,

“தோற்றமாய்ச் சொல்லானைத் திப்பலியதின் குணங்கேள்

சோற்றினைச் செமிக்கப் பண்ணுக்கு சுரத்துடனிருமல் தீர்க்கும்” என்று கூறப்பட்டுள்ளது.

எனவே, அஜீரணம், தடிமன் காய்ச்சல், இருமல், பீனிசம் போன்றவற்றால் பாதிக்கப்படுபவர்கள் கண்டந் திப்பலி எனப்படும் யானைத் திப்பலியை உணவுவாகச் சமைத்துண்பதன் மூலம் நலம் பெறலாம். எப்படி என்று கேட்கிaர்களா? கண்டந் திப்பலியை ரசமாகத் தயாரித்துப் பயன்படுத்தலாம்.

கண்டந் திப்பலி ரசம்

10 கிராம் அளவில் கண்டந் திப்பலி, வாய் விடங்கம் திப்பலி, மிளகு, நற்சீரகம், மஞ்சள் என்பவற்றை வாங்கிக் கொள்ளுங்கள். இவை ஒவ்வொன்றையும் தனித்தனியாக இலேசாக வறுத்து இடித்து தூளாக பொடியாக வைத்துக் கொள்ளவும். இரசம் தயாரிக்கும்போது.

கண்டந்திப்பலி தூள் - 1 மேசைக் கரண்டி

வாய் விடங்கத் தூள் - 1/4 மேசைக்கரண்டி

திப்பலிப் பொடி - 1/4 தேக்கரண்டி

மிளகு தூள் - 2 தேக்கரண்டி

நற்சீரகத் தூள் - 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

உள்ளி - 5 பல்லு

பழப்புளி - தேசிக்காயளவு

உப்பு - தேவையான அளவு

புளியை நன்கு கரைத்து வடித்து அத்துடன் மேற்படி தூள்களை நன்கு கரைத்து தேவையான உப்பும் சேர்த்துக் கொதிக்க வைக்கவும். நன்கு கொதித்ததும் உள்ளியை தட்டிப் போட்டு இறக்கவும். சிறு துண்டு பெருங்காயம் பொரித்துச் சேர்ப்பதும் நன்று. கடுகு, கறிவேப்பிலை தாளித்துச் சேர்க்கவும். இந்த ரசத்தைச் சோற்றுடனோ அல்லது தனித்தோ தினம் இரண்டுவேளை பருகி வர முற் கூறிய வியாதிகள் மாறும்.

சரக்கொன்றை

வேறு பெயர் : கொண்டல், கடுக்கை, கறுக்காய், இதழி, ஆரக்குவதம்

தவரவியற் பெயர்: Cassia Fistula (காசியா பிஸ்ரியுலா)

குடும்பம்: Caesalpinioidiae (சிசால் பினியோய்டியே)

சிங்களப் பெயர் : அகல

சமஸ்கிருதப் பெயர் ஆரக்வதம்

ஆங்கிலப் பெயர்: Golden Shower
உலர்வலயத்தில் பரவலாக எங்கும் காணப்படும் கொன்றைமரம் தமிழர் வாழ்வுடன் மிகவும் நெருக்கமான ஒரு மரமாகும். இம்மலர்கள் சிவனுக்கு மிகவும் பிரியமானதாக உள்ளதால் கொன்றை வேந்தன் என்று அவருக்குப் பெயர் சூட்டி வழிபடப்படுகின்றார். இதன் பூக்கள் மஞ்சள் நிறமாகவும் சரஞ்சரமாகத் தொங்குவதாலும் சரக்கொன்றை என்று அழைக்கப்படுகிறது. கொன்றைமரத்தடியில் பைரவர், பிள்ளையார் போன்ற கடவுளரை வைத்து வழிபடுவதன் மூலம் இம்மரத்தையும் ஒரு தெய்வீக மூலிகை மரமாக இந்துக்கள் பாதுகாத்து வருகின்றனர்.

கொன்றை மரவகுப்புக்குரியது. இதன் இலைகள் கூட்டிலைகள். முட்டைவடிவாக அல்லது முக்கோண வடிவாகச் சிற்றிலைகள் காணப்படும். கொன்றை இலை சிறந்த மலமிளக்கி மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள் இடைக்கிடை இதன் இலை அல்லது துளிர் இலைகளைக் கறிசமைத்துண்பதன் மூலம் நன்மை பெறலாம்.

கொன்றைத்துளிர் அரையல்

கொன்றைத்துளிர் - 1 கைப்பிடி

தேங்காய்ப்பூ - (பாதிதுருவியது)

செத்தல் மிளகாய் - 6

தேசிப் புளி - பாதி

உப்பு - தேவையான அளவு

(தொடரும்...)

கொன்றைத்துளிரை நல்லெண்ணெயில் வதக்கி எடுத்து தேங்காய்ப்பூ, செத்தல்மிளகாய், உப்பு சேர்த்து அரைத்து எடுத்து தேசிப்புளியை விட்டு நன்கு கலந்து கொள்ளவும். சோற்றுடன் சேர்த்துச் சாப்பிட்டுவர மலம் நன்கு கழியும். வாய்வுப் பொருமல், குடற்கிருமி, செரியாமை, வாதக்கோளாறுகள் என்பனவும் நீங்கும்.

கொன்றைத் துளிரைச் சிறிது நீர் விட்டவித்து, கடைந்து கீரைக் கறிபோல சமைத்தும் உண்ணலாம்.

கொன்றைத்துளிரைக் குறுணலாக நறுக்கி பருப்புடன் சேர்த்து பருப்புக் கறியாகவும் சமைத்துக் கொள்ளலாம்.

சரக்கொன்றைப் புளி

சரக் கொன்றைக் காய்கள் பச்சையாகவும் உருண்டு, திரண்டு முருக்கங்காய் போன்று நீளமாகவும் காணப்படும். முதிரும்போது கருமை நிறமாகவும், வித்துக்களுக்கிடையில் காணப்படும் சதைபோன்ற பகுதி பிசுபிசுப்பாகவும் கரு நிறமாகவும் சற்று இனிப்புடன்சேர்ந்த புளிப்புச் சுவையுள்ளதாகவும் இருக்கும் இதனைச் சரக்கொன்றைப் புளி என்று அழைப்பர். இப்புளியானது குழந்தைகள், பெண்கள், மெலிந்தவர்கள், வயதானவர்களுக்கு உகந்ததோர் உணவு மருந்தாகும்.

“வன்னனில மேகமலக் கட்டு குடல் வலி

துன்மலினம் வெப்புத் தோன்றுங்கால் - இன்பம்

தருதமா லப்பரிமனத் தனத்தாய் இந்தக்

கிருதமாலப்புளியைக் கேள்”

என்ற குணபாடப் பாடலிற் கூறியபடி வெள்யை சாய்தல், மலச்சிக்கல், வயிற்றுவலி, குடல்மாசு, உடல் வெப்பு என்பன இப் புளியினால் நீங்கும்.

இப்புளியை அரையல், இரசம் முதலியன தயாரிக்கும்போது தேசிப்புளி அல்லது பழப்புளியுடன் சேர்த்து அல்லது அவற்றிற்குப் பதிலாகப் பயன்படுத்துதல் நன்று. ஆயினும், அதிக அளவில் பாவித்தல் கூடாது

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.