புத் 65 இல. 08

நந்தன வருடம் மாசி மாதம் 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ரபியுல் ஆகிர் பிறை 12

SUNDAY FEBRUARY 24 2013

 

 

இந்திய வம்சாவளி மக்களின் பின்னடைவுக்கு என்ன காரணம்?

இந்திய வம்சாவளி மக்களின் பின்னடைவுக்கு என்ன காரணம்?

விளக்குகிறார் நாளைய மலையக அமைப்பின் தலைவர்

இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளியினர் விகிதாசாரம், அவர்களின் எதிர்காலம் தொடர்பாக ஆராயும் பொருட்டு நாளைய மலையகம் எனும் அமைப்பு கலந்துரையாடல் ஒன்றை அண்மையில் பதுளையில் நடத்தியது. மலையக மக்களின் சனத்தொகை போக்கு எனும் தலைப்பிலான இக்கலந்துரையாடலில் நாளைய மலையக அமைப்பின் தலைவர் ஜோ.தியாகராஜா இந்திய வம்சாவளியினரின் சனத்தொகை வீழ்ச்சியடைந்து வருவது குறித்து தெரிவித்த கருத்துக்கள் இங்கு தொகுத்து தரப்படுகின்றது.

ஆங்கிலேயர் 19ஆம் நூற்றாண்டில் தங்களுடைய பொருளாதாரத்தினை அடிப்படையாகக் கொண்ட தொழில்களுக்காக தென்னிந்தியாவிலிருந்து கூலிகளாக அழைத்து வரப்பட்டவர்களே பெருந்தோட்டத் தொழிலாளர்கள். இவர்கள் கோப்பி பயிர்ச்செய்கை, பாதை அபிவிருத்தி, ரயில் பாதை நிர்மாணிப்பு, சுத்திகரிப்பு பணிகள் போன்றவற்றுக்காக பெரும் எண்ணிக்கையில் இந்திய வம்சாவளியினர் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டனர்.

19ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் இந்தியத் தமிழர்கள் இலங்கையில் வாழ்ந்திருப்பினும் ஒரு சமூகமாக இல்லாமல் ஆங்காங்கே சிறு சிறு குழுவினராக மெட்ராஸ் நிர்வாகத்தின் ஊழியர்களாக, சிறு வியாபாரிகளாக இருந்துள்ளனர். 19ஆம் நூற்றாண்டில் இந்தியத் தமிழர்கள் ஒரு சமூகமாக குடியமர்த்தப்பட்டனர்.

உத்தியோகபூர்வமாக இந்தியத்தமிழர் என்ற பெயரில் அரச கணிப்பீட்டில் உள்வாங்கப்பட்டது. 1911ஆம் ஆண்டிலாகும். அந்த ஆண்டு நடைபெற்ற சனத்தொகை கணிப்பீட்டில் இந்திய தமிழர் சனத்தொகை 530, 983 ஆக காணப்பட்டதுடன் இலங்கையின் சிறுபான்மையினர்களில் முதன்மையிடத்தில் இச்சமூகம் இருந்தது.

2012ஆம் ஆண்டின் சனத்தொகை கணிப்பீட்டின்படி இச்சமூகம் நான்காவது இடத்தில் இருக்கின்றது. அத்துடன் கடந்த சில தசாப்தங்களாக இச்சமூகம் விகிதாசார ரீதியாக வீழ்ச்சியடைந்துள்ளது.

இலங்கையில் பிறந்து வாழ்கின்ற எம்மை ஏன் இந்திய தமிழர்கள் என்று அடையாளப்படுத்த வேண்டும்? என்ற கேள்வி நம்மில் எழுகின்றது. இவ்விடயத்தில் பூர்வீகம் என்பது வேறு. குடியுரிமை என்பது வேறு. நாம் இலங்கையின் குடியுரிமையினைப் பெற்றவர்கள் அதனால் நாம் இலங்கை பிரஜைகள். நமது பூர்வீகம் இந்தியாவாகும். வம்சாவளி தமிழர்கள். சிங்கப்பூர் மலேசியா பிஜி தீவுகளில் உள்ள இந்திய தமிழர்களும் தங்களை இந்திய தமிழர்கள் என்றே அடையாளப்படுத்துகின்றனர். இலங்கையின் போர்ச் சூழல் காரணமாக மேலைத்தேய நாடுகளுக்கு இடம்பெயர்ந்த தமிழர்கள் அந்நாடுகளில் குடியுரிமையினைப் பெற்ற பின்னரும் புலம்பெயர் இலங்கைத் தமிழர்களாக அடையாளப்படுத்துகின்றனர். நமது பூர்வீகத்தின் அடிப்படையில் நம்மை அடையாளப்படுத்துவது தவறான விடயமல்ல.

முதலில் ஆங்கிலேயர்களே இந்திய தமிழர்கள் என அடையாளப்படுத்தினர். இதற்கு பல காரணங்கள் இருந்திருக்கின்றன. 1911 சனத்தொகை கணிப்பீட்டில் இந்திய தமிழர்கள் என்று குறிப்பிட்டதற்கு ஆங்கிலேயரின் பிரித்தாளுகின்ற தந்திரமும், இலங்கைத் தமிழ் அரசியல் தலைவர்கள் அவர்களது இனப்பிரிவில் உள்வாங்குவதனை விரும்பாமையும் காரணமாகும். இது தவிரவும் இந்திய வம்சாவளி மக்களை ஏனைய சமூகங்களிலிருந்து பிரித்து வைத்திருப்பது ஆங்கிலேயர்களுக்கு பல நன்மைகளை கொண்டுவந்தது. இதனால்தான் இந்திய தமிழர்கள் என ஆங்கிலேயர் குறிப்பிட்டனர். இவ்வாறு பிரித்து குறிப்பிட்டதற்கு அப்போதைய தமிழ்த் தலைவர்களின் முரண்பாடான சிந்தனைகளும் காரணமாக அமைந்தன. 1833ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட கோல்புறூக் அரசியல் திட்டத்தின்படி சட்டவாக்க கழகத்திற்கு உறுப்பினர்கள் தெரிவில் இந்தியத்தமிழர்கள் உள்வாங்கப்படவில்லை. இதனை அப்போதைய தமிழ்த்தலைவர்கள் தட்டிக்கேட்கவும் இல்லை. 1910 ஆம் ஆண்டு குறுமக்கலம் சீர்திருத்தம் வந்தபோதும், 1931இல் டொனமூர் சர்வசன வாக்குரிமையை வழங்க முன்வந்தபோதும் தமிழ்த் தலைவர்கள் சர்வசன வாக்குரிமையை கடுமையாக எதிர்த்தனர். அத்துடன் 1948ஆம் ஆண்டு குடியுரிமைச் சட்டம் கொண்டுவரப்பட்ட போது தமது தனிப்பட்ட நலன்களுக்காக அதனை ஆதரித்து சுமார் ஒரு மில்லியனுக்கு மேற்பட்ட இந்தியத் தமிழர்கள் நாடற்றவர்களாவதற்கு சில தமிழ்த் தலைவர்கள் துணை போயிருந்தார்கள். இதற்கு காரணம் அவர்களின் அதிகார மோகம் என்று கூட சொல்லலாம்.

இலங்கை தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களத்தின் அறிக்கையின்படி 1961 ஆம் ஆண்டில் 949,684 ஆக இருந்த இந்திய தமிழர்களின் எண்ணிக்கை 1981இல் 818,656 ஆகவும், 2011இல் 855,025 ஆகவும் கடைசியாக 2012இல் நடந்த கணிப்பீட்டில் 842,323 ஆகவும் குறைவடைந்துள்ளது.

மறுபுறமாக நாட்டின் சனத்தொகையில் இந்திய தமிழர்களின் வீதம் என்று பார்க்கின்றபோது 1981இல் 55ஆக இருந்த இந்திய தமிழர்கள் 2012இல் 4.2 ஆக அதாவது 30 வருடங்களுக்குள் 1.3 வீதத்தினால் குறைவடைந்துள்ளனர். சனத்தொகை வளர்ச்சியில் ஏற்பட்ட பின்னடைவும் ஒரு காரணமாகும். ஏனைய சமூகங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் 1981ல் சிங்களவர்கள் நாட்டின் சனத்தொகையில் 74 வீதமாகவும் தற்போது 74.9 ஆகவும் பதிவாகியுள்ளனர். முஸ்லிம்கள் 7 வீதத்திலிருந்து 9.2 வீதமாக 22 வீதத்தினால் அதிகரித்துள்ளது. ஆனால் இந்திய தமிழர்கள் 5.5 வீதத்திலிருந்து 4.2 வீதமாக குறைவடைந்துள்ளனர். இதனை வீழ்ச்சியென்றே கூறவேண்டும். இந்தியத் தமிழர்களின் சனத்தொகை வீழ்ச்சிக்கு பல காரணங்கள் இருக்கின்றன. கடந்த 4 தசாப்தங்களாக நடைபெற்று வருகின்ற ஆண் மற்றும் பெண் கருத்தடை முறைகள். பிராந்திய ரீதியாக ஒதுக்கப்பட்டுள்ள இந்தியத் தமிழர்கள் தங்களின் பாதுகாப்பு கருதி வேறு இனக்குழுவிற்குள் தங்களை அடையாளப்படுத்துகின்றமை.

இந்த சமூகத்தினரிடையே தங்களின் இன அடையாளம் பற்றிய தெளிவின்மை, இந்த சமூகத்தில் கல்விகற்ற ஒரு சாராரிடையே காணப்படுகின்ற நாம் இலங்கைத் தமிழர் என்ற மனப்பான்மை இந்தியத் தமிழர் என்று தம்மை வெளிப்படுத்துவதனை அவமானமாக கருதுகின்றமை. கடந்த பல தசாப்தங்களாக நடைபெற்றுவருகின்ற சனத்தொகை கணக்கெடுப்பில் கணக்கெடுப்பாளர்களாக பெரும்பான்மையினர் நியமிக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் சராசரி சனத்தொகை வளர்ச்சி வேகம் 1.00 ஆகும். இந்த மட்டத்தினை சிங்களவர்களும் முஸ்லிம்களும் அடைந்துள்ளனர். இலங்கைத் தமிழர்களின் சனத்தொகையின் வளர்ச்சி வேகம் 0.60ஆக பதிவாகியுள்ளது. இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. ஆனால் இந்தியத் தமிழர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக பாரியளவில் நாட்டைவிட்டு வெளியேறவில்லை. யுத்த பாதிப்புக்களோ, இயற்கை அணர்த்தங்களோ பாரிய உயிரழிவுகளோ ஏற்படவில்லை.

இவ்வாறானதொரு சூழலில் இந்திய வம்சாவளியினரின் அதிகரிப்பு வேகம் 0.09 ஆக காணப்படுகின்றது. இது ஏனைய சமூகங்களுடன் ஒப்பிடும்போது இது பாரிய பின்னடைவாகும்.

சனத்தொகை கணிப்பீட்டின்போது தாம் இந்திய வம்சாவளியினர் என்ற அடையாளத்தை இடுவதற்கு பதிலாக இலங்கைத் தமிழர்களாக அடையாளப்படுத்தியுள்ளனர்.

மிகவும் குறைந்த எண்ணிக்கையில் கிராமங்களை அண்டி வாழ்கின்ற இந்திய தமிழர்கள் படிப்படியாக சிங்களவர்களாக தங்களை அடையாளப்படுத்தி வருகின்றனர்.

உதாரணமாக கண்டி மாவட்டத்தில் 2001இல் 52,052 ஆக இருந்த இலங்கைத் தமிழர் சனத்தொகை 2012இல் 71,640 ஆக இருபதாயிரத்தினால் உயர்வடைந்துள்ள அதேவேளை இந்திய தமிழர்கள் 2001இல் 103,622 ஆக இருந்து 83, 734 ஆக இருபதாயிரத்தினால் குறைவடைந்துள்ளனர். இதேநிலைதான் இரத்தினபுரி, கேகாலை போன்ற மாவட்டங்களிலும் இடம் பெற்றுள்ளது.

மறுபுறமாக மொணராகலை, மாத்தளை, காலி, களுத்துறை போன்ற மாவட்டங்களில் படிப்படியாக சிங்களவர்களின் சனத்தொகைக்குள் தங்களை உள்வாங்கிக்கொள்கின்ற போக்கு காணப்படுகின்றது.

மொணராகலையில் 1981இல் 3.2 வீதமாக இருந்த இந்திய வம்சாவளித் தமிழர்கள் 2012இல் ஒரு வீதமாக குறைவடைந்துள்ளனர்.

இந்த நிலை தொடருமானால் இந்தியத் தமிழர் நிலையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். ஏனைய சமூகங்களின் வளர்ச்சி வேகத்திற்கு ஒத்த வேகத்தினை பின்பற்றாவிட்டால் இன்னும் அரை நூற்றாண்டிற்குள் நமது சமூகம் நாட்டின் சனத்தொகையில் 1 வீதம் என்ற நிலைக்கு வந்துவிடும். இந்த நிலை உருவாகுமாயின் கல்வி பொருளாதாரம், அரசியல் என்று எல்லாவிதமான பாதிப்புக்களும் எமது சமூகத்திற்கு ஏற்பட வாய்ப்புண்டு.

நமது சமூகத்தின் பல்வேறு தரப்பினர்களினதும் அசமந்தப் போக்கே காரணமாகும். அரசியல் தலைமைத்துவங்கள், சமூக நிறுவனங்கள், கல்வி கற்ற சமூகம், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள், தொழிற்சங்கங்கள், இந்திய தமிழர்கள் என அனைத்து தரப்பினரும் இதுபற்றி சிந்திக்க தவறிவிட்டார்கள்.

இந்த வீழ்ச்சியிலிருந்து மீள வேண்டுமானால் பிறப்பு வீதத்தினை அதிகரிப்பதுடன், கருத்தடை முறையினை முற்றாக நமது சமூகத்திலிருந்து நீக்க வேண்டும்.

இந்தியத் தமிழர்கள் என்று தங்களை வெளிப்படுத்துவதனை அனைத்து மட்டங்களிலும் வலியுறுத்த வேண்டும். இந்திய தமிழர் என்று குறிப்பிடுவது இன அடையாளமாகும். இது எந்த வகையிலும் எமது குடியுரிமையினை பாதிக்காது என்பதனை மக்களுக்கு உணர்த்த வேண்டும். ஏனைய இனக்குழுவாக தங்களை அடையாளப்படுத்தியுள்ள மக்களை மீள கணிப்பிடுவதற்கான பொறிமுறையொன்றைக் கையாள வேண்டும். அரசியல், கலை, கலாசார ரீதியாக எமது இனத்துவ அடையாளங்களை வெளிக்கொண்டு வரவேண்டும்.


கால்நடைவள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் அவரது அமைச்சின் கீழ் இயங்கும் கால்நடை அமைச்சு, மில்கோ நிறுவனம், தேசிய கால்நடை அபிவிருத்திச் சபை, சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மற்றும், மகாவலி, பெருந்தோட்ட மனிதவள நிதியம் ஆகிய அமைப்புக்களின் உயர் அதிகாரிகளுக்கான ‘நிலைமாற்ற மொழித்திறனாக்கள் தலைமைத்துவம்” எனும் தலைப்பிலான செயலமர்வு அண்மையில் பத்தரமுல்ல வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டல் கேட்போர்கூடத்தில் நடைபெற்றது. இதில் சீல் நிறுவனத்தின் தலைமைத்துவ இயக்குனர்களுக்கு பயிற்சியளிக்கப்படுவதை படங்களில் காணலாம். - ஊடகப்பிரிவு

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.