புத் 64 இல. 29

நந்தன வருடம் ஆனி மாதம் 31ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 ஷஃபான் பிறை 25

SUNDAY JULY 15 2012

 

நாடகப் போட்டியில் சாதனை படைத்த புசல்லாவ இந்து தேசியக் கல்லூரி

நாடகப் போட்டியில் சாதனை படைத்த புசல்லாவ இந்து தேசியக் கல்லூரி

அகில இலங்கை ரீதியில் நடாத்தப்பட்ட கணித நாடகப் போட்டி அண்மையில் ஹங்வெல்ல ராஜசிங்க மத்திய மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது. இதில் ஏழு (07) மாகாணங்கள் பங்கேற்ற நிலையில் மத்திய மாகாணத்திலுள்ள புசல்லாவ இந்து தேசியக் கல்லூரி முதலாம் இடத்தினைப் பெற்று சாதனை படைத்துள்ளது.

கல்லூரி அதிபர் பி.இராமலிங்கம் வழிப்படுத்தலில் கணித, விஞ்ஞான ஆசிரியர்களின் ஒத்துழைப்புடன், ஆசிரியர் எஸ். தர்மதாஸ் எழுத்துருவாக்கத்தில், நாடகமும் அரங்கியலும் துறை ஆசிரியர் சி.கமலதாஸ் மற்றும் ஆசிரியர் ச.தர்மதாஸ் ஆகியோரின் நெறியாள்கை இசையமைப்புடன் “திண்மங்களின் பரப்பளவு” நாடகம் வலய, மாகாண மட்டங்களில் வெற்றியீட்டி முதன் முறையாக அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்றுள்ளது.

கல்வியமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் ஹங்வெல்ல ராஜசிங்க மத்திய மகா வித்தியாலயத்தில் அண்மையில் இடம்பெற்ற பரிசளிப்பு விழாவில் மீண்டும் அமைச்சரின் முன்னிலையில் மேடையேற்றப்பட்ட இந் நாடகம், அமைச்சரால் பாராட்டப் பட்டதுடன் மாணவர்களுக்கு வெற்றிக்கிண்ணமும் சான்றிதழ்களும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

மேலும் ஆசிரியர்களான சி.கமலதாஸ், ச. தர்மதாஸ் ஆகியோர் மேற்கொண்ட முயற்சியின் பயனாக இக் கல்லூரி ஏற்கனவே 2010ஆம் ஆண்டு கல்வியமைச்சும் ஹட்டன் நெஷனல் வங்கியும் இணைந்து அகில இலங்கை ரீதியில் நடாத்தப்பட்ட நாடகப் போட்டியில் இரண்டாமிடத்தையும், 2011ஆம் ஆண்டு அகில இலங்கை ரீதியில் நடாத்தப்பட்ட தமிழ் மொழித் தின நாடகம் போட்டியில் மூன்றாமிடத்தையும் பெற்றமை குறிப்பிடத்தக்கது.


அதிபர்களுக்கான கணனி செயலமர்வு

மத்திய மாகாண பாடசாலை ஆசிரியர்களின் கணனி அறிவை மேம்படுத்தும் நோக்கில் கல்வி அமைச்சு ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியின் கீழ் செயற்படுத்தும் கணனி மற்றும் நவீன தொடர்பாடல் மூலமாக கற்றல் கற்பித்தலை மேம்படுத்தும் செயற்திட்டத்தின் ஓர் அங்கமாக யிntலீl நிறுவனத்தின் அனுசரனையுடன் ஒரு நாள் செயலமர்வு அண்மையில் அட்டனில் நடைபெற்றது. அட்டன் புனித ஜோன் பொஸ்கோ கல்லூரியின் கணனி வள நிலையத்தில் நடைபெற்ற இச்செயலமர்வுக்கு அட்டன் கல்வி வலயத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட பாடசாலை அதிபர்கள் கலந்துகொண்டனர்.

இந்த செயலமர்விற்கு அட்டன் வலய கல்வி பணிப்பாளர் சி.கணபதி, ரிறிஷிஜி நிகழ்ச்சி திட்டத்தின் மத்திய மாகாண பணிப்பாளர் பி.என். டபிள்யூ. எம். என். பொரகொள்ளல, அட்டன் கல்வி வலய யிவிஹி இணைப்பாளர் டபிள்யூ.கே.எம்.போதரகம மற்றும் யிntலீl நிறுவன அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.


இடிந்து விழும் அபாயத்தில்...

ரங்கலைப் பிரதேசத்திலுள்ள தபால் காரியாலயம் மக்கள் சேவைகளைச் சிறந்த முறையில் பெற்றுக்கொள்ள முடியாது, இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.

இத் தபால் காரியாலயத்தின் மூலம் ரங்கலைப் பிரதேசத்திலுள்ள 30 இற்கு மேற்பட்ட தோட்டப் பிரிவுகளிலுள்ள மக்களும், தோட்ட நிர்வாக காரியாலயமும் பிரதேசத்திலுள்ள 07 பாடசாலைகளும் ஏனைய அரச நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மீம்புர போன்ற புராதன கிராமம் வரையிலான சகல இடங்களுக்கும் இத் தபால் காரியாலயம் மூலமே தபால் சம்பந்தப்பட்ட சேவைகள் நடைபெற்று வருகின்றது.

1988 ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட கலவரம் காரணமாக இத் தபால் காரியாலயம் தீக்கிரையாக்கப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை காரியாலய கட்டடத்தில் எஞ்சியுள்ள ஒரு பகுதியிலேயே வேலைகள் இடம்பெற்று வருகின்றது. இத் தபால் காரியாலயத்தில் 9 ஊழியர்கள் தொழில்புரிந்து வருகின்றனர். தற்போது காரியாலய வேலைகளை ஒழுங்காக செய்ய முடியாமல் இவ் ஊழியர்கள் பெரிதும் கஸ்டப்பட்டு வருகின்றனர்.

அத்தோடு இங்கு சேவைகளைப் பெற்றுக்கொள்ள வரும் பொதுமக்கள், வயோதிபர்கள் பெரிதும் அசெளகரியத்திற்குள்ளாகின்றனர். மழைக்காலங்களில் கூரைத்தகடுகள் கழன்று விழுவதனால் காரியாலய ஆவணங்களும் பழுதடைந்து வருகின்றது. கடந்த ஆண்டில் இக்காரியாலயத்தை புனரமைப்பதற்கு அரசாங்கத்தால் ஒரு கோடியே இருபது இலட்சம் ரூபா நிதி ஒதுக்கியும் இன்றுவரை இக்காரியாலய வேலைகள் ஆரம்பிக்கப்படாமல் இருப்பது பெரும் வருத்தத்திற்குறிய விடயமாகும். இப்பிரதேச மக்களின் நலன்கருதி சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்கள் இக்காரியாலயத்தை அமைத்துக் கொடுக்கும்படி பிரதேச மக்கள் கேட்டுக் கொள்கின்றனர்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.