புத் 64 இல. 29

நந்தன வருடம் ஆனி மாதம் 31ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 ஷஃபான் பிறை 25

SUNDAY JULY 15 2012

 
போரியல் வரலாற்றில் முஸ்லிம் சமூகமும் பாரிய இழப்புகளை சந்தித்துள்ளது

போரியல் வரலாற்றில் முஸ்லிம் சமூகமும் பாரிய இழப்புகளை சந்தித்துள்ளது

கிழக்கு மாகாணம் வரலாற்றுச் சிறப்பு கொண்டது என்கிறார் முன்னாள் மாகாண அமைச்சர் சுபைர்

கேள்வி: அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் முக்கிய பிரமுகராகவும் கிழக்கு மாகாண சபையின் சுகாதார அமைச்சராகவும் இருக்கும் நீங்கள் உங்கள் அரசியல் பிரவேசம் பற்றிக் கூறுவீர்களா?

பதில்: என் இளமைக் காலத்திலேயே அரசியலில் விருப்பமும் நாட்டமும் கொண்டவனாகவே வளர்ந்தேன். சாதாரணமாக அரசியலில் நான் ஈடுபட்டு வந்தேன். ஆயினும் என்னைத் தீவிர அரசியலில் ஈடுபட வைத்த பெருமை முன்னாள் அமைச்சர் அமீர் அலிக்கே உரியது. அரசியலில் பல சந்தர்ப்பங்களிலும் அமீர் அலி அவர்களே வழிகாட்டியாக இருந்து உதவி நல்கினார் என்பதைக் குறிப்பிடாமல் இருக்க முடியாது. அவர் மீது நான் மதிப்பும் நன்றியுணர்வும் கொண்டவனாகவே இருக்கின்றேன். ஆரம்பத்தில் கிழக்கு மாகாண முஸ்லிம் காங்கிரஸ் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் காங்கிரஸின் அமைப்பாளராகப் பணியாற்றியமை எனது திறமையை வெளிப்படுத்தும் சந்தர்ப்பங்களை அளித்தது.

கேள்வி: மாகாண சபைகளுக்கு காணி பொலிஸ் அதிகாரம் தொடர்பாக வழங்கலாம், வழங்கப்படக் கூடாது என இருதரப்பு நியாயங்கள் முன்வைக்கப்படுகின்றன. நிலைப்பாடு என்ன?

பதில்: காணி, பொலிஸ் அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு வழங்கப்படுவது தொடர்பாகச் சில விசயங்களை பார்ப்போம். ஒரு மாகாணத்திலே வாழும் பெரும்பான்மை இனம் சார்ந்து மாகாண சபை அமையுமாயின் அச்சபை அங்கு வாழும் சிறுபான்மை இன மக்களுக்குப் பாதகமான செயற்பாடுகளில் ஈடுபடக்கூடும். காணி உரிமைகளை மறுத்தும் காணிக்கான விண்ணப்பங்களை நிராகரித்தும், சபையின் அதிகாரம் சார்ந்த இனத்துக்கு முன்னுரிமை வழங்கியும், மாற்று இனத்துக்கு குந்தகம் விளைவிக்கலாம் என்ற அச்சம் தான் காணி உரிமை வழங்கக்கூடாது என்பதற்கான நியாயம் எனக்கருதலாம்.

ஆனால் கிழக்கு மாகாணம் ஏனைய மாகாணங்களில் இருந்தும் வேறுபட்ட தன்மை கொண்டது. கிழக்கிலே தமிழ், முஸ்லிம், சிங்கள இனத்தவர்கள் ஏறத்தாழச் சம தொகையில் வாழ்கின்றார்கள். எனவே ஓரினம் மற்றைய இனத்தின் உரிமைகளுக்குப் பாதகம் விளைவிக்கும் என்ற அச்சத்துக்குக் கிழக்கிலே இடமில்லை.

அதாவது மக்கள் சம தொகையாக வாழும்போது சபையிலுள்ள உறுப்பினர்களும் சம தொகைக்கமைவாக தெரிவு செய்யப்படுவர். அதனால் சிறுபான்மை இனம், உரிமைகளை, அபிலாசைகளை இழக்கும் என்ற பயம் தேவையில்லை. மேலும் கடந்த 4 ஆண்டுகளாக கிழக்கு மாகாணசபை நிர்வாகம், இனம் சார்ந்த நடவடிக்கையில் ஈடுபடாது பொறுமை கடைப்பிடித்தமை கிழக்கில் கண்ட வரலாற்றுச் சிறப்பம்சமாகும். எனவே காணி, பொலிஸ் அதிகாரங்கள் கிழக்குக்கு வழங்குவதால் பாதகமில்லை என்பதே என் கருத்து.

கேள்வி: முஸ்லிம்கள் உரிமைப்போரில் ஈடுபடவில்லை. அவர்களுக்கு உரிமை தேவையில்லை என்று அரசியல்வாதியொருவர் பேசியது பற்றி உங்கள் கருத்தென்ன?

பதில்: உரிமைப்போரில் முஸ்லிம்கள் பங்கெடுக்கவில்லையென்பது தவறான கூற்றாகும். போராட்ட இயக்கங்களிலே 600 க்கும் மேற்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் பங்கெடுத்து இறந்துள்ளனர். பிந்திய காலகட்டத்திலே முஸ்லிம் இளைஞர்கள் தமக்கு விசுவாசமாக இருக்கமாட்டார்கள் என்ற எண்ணத்துடன் அவர்கள் அந்த இயக்கங்களாலேயே கொல்லப்பட்டார்கள். வடக்கு - கிழக்கு முஸ்லிம்கள் மீது தமிழ் ஈழ போராட்டத்தில் ஈடுபட்ட இயக்கங்களுக்கு நம்பிக்கையில்லை. ஆனாலும் போருக்கான உதவிகளை பல வழிகளிலும் முஸ்லிம்களிடமிருந்து பெற்றனர். செல்வந்தர்கள், விவசாயிகள், வாகனச் சொந்தக்காரர்கள், மீனவர்கள் எனப் பலதரப்பட்ட முஸ்லிம் சமூகத்திடம் கப்பம் பெற்றார்கள்.

வடபுலத்திலிருந்து ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட குடும்பங்களை விரட்டியடித்து அவர்களுடைய உழைப்பான பணம், நகை, பொருட்கள், வாகனங்களைச் சூறையாடினார்கள். கோழிகள், ஆடு, மாடு, வீட்டுக்கதவு நிலைகள் ஆகியவற்றை விற்றனர். வீட்டுக்கூரை, ஓடு, மண், கல் என்பன பங்கர்களுக்குப் பாவிக்கப்பட்டன. இவ்வாறு தம்மோடு உடனிருந்து வாழ்ந்த இனத்தைத் துவம்சம் செய்தனர். முஸ்லிம்கள் தொழில் இழந்தனர். கல்வி இழந்தனர், உடைமைகள் இழந்தனர். வாழ்வாதாரம் இழந்து அடிமைகளாய், அகதிகளாய், அல்லல்பட்டனர். வடபுல முஸ்லிம்களின் பல பில்லியன் பெறுமதிவாய்ந்த செல்வங்கள் போருக்குப் பயன்படுத்தப்பட்டன என்ற உண்மைகளை அறியாத அரசில்வாதிகள் முஸ்லிம்களுக்கு உரிமை தேவையில்லை என்று கூறுவது முஸ்லிம் சமூகத்தைப் பெரிதும் புண்படுத்தியுள்ளது.

தான் சார்ந்த இனத்தைச் சபாஸ் போட வைத்து மற்றைய இனத்தைச் சீண்டும் எந்தச் சிறுமதி கொண்ட அரசியல் வாதியின் மதிப்பும் நிலைத்ததாகச் சரித்திரம் இல்லை. ஓர் அரசியல்வாதி தமது இனத்தின் நலனுக்காகப் பேசுவது அவரது உரிமையும் கடமையும் கூட. மற்றைய இனத்தைத் தாழ்த்துவதும் இழிவுபடுத்துவதும் இன ஐக்கியத்தைச் சீர்குலைக்கும் என்பதைச் சம்பந்தப்பட்டவர்கள் சிந்திக்கவேண்டும். சிந்தனையற்ற பேச்சு சீரழிவுகளையே உருவாக்கும்.

மேலும் முஸ்லிம்கள் கோழைகள் அல்லர். இஸ்லாமியக் கண்ணோட்டத்திலே உரிமைக்காகப் போரிட இஸ்லாமிய உலமாக்கள் பத்வாக் கொடுப்பார்களாயின் முஸ்லிம்களும் ஆயுதமேந்திப் போரிடத் தயங்கமாட்டார்கள் என்பதைக் கூற விரும்புகின்றேன்.

இனப்போரினால் தமிழ்ச்சமூகம் மட்டுமன்றி முஸ்லிம் சமூகமும் வாழ்விழந்து அழிந்தது என்பதை குறுகிய சிந்தனையாளர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டி இருக்கிறது.

கேள்வி: நீங்கள் சார்ந்துள்ள அரசியல்கட்சி, அதன் தலைமைத்துவம் பற்றிக் கூறுங்களேன்?

பதில்: நான் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சி சார்ந்து நின்று அரசியல் பணி செய்கின்றேன். இக்கட்சி சார்ந்து அரசியல் செய்வதிலே நான் பெருமையடைகின்றேன். எமது கட்சித்தலைவர் ரிசாட் பதியுதீன் ஒரு சுறுசுறுப்பான திறமைமிக்க இளம் அரசியல்வாதி. இருந்தபோதும் ஒரு முதுமையான அனுபவமிக்க அரசியல்வாதி போன்றே அவரது அரசியல் பணிகள் விளங்குகின்றன. இன, மதம் சாராது எல்லோரையும் சமமாகவும் சகோதரர்களாகவும் மதித்தே அவர் சேவை செய்கிறார். குறிப்பிட்ட ஒரு பிரதேசத்துக்கு மட்டும் அவரது அரசியல் பணி மட்டுப்படுத்தப்பட்டதல்ல. அவரது ஒப்பற்ற சேவை நாடெங்கும் வியாபித்து நிற்பதே அவரது சேவைச் சிறப்பாகும்.

போர்க்காலச் சூழலிலே கிழக்கு மக்கள் இடம்பெயர்ந்த போது அமைச்சராய் ஆறுதலளிக்கும் தொண்டனாய், அல்லலுற்ற மக்களை ஆசுவாசப்படுத்தி நிவாரணமளித்தவர். போரினால் இடம்பெயர்ந்த வடக்கிலும் கிழக்கிலும் வாழ்ந்த குடும்பங்களை கூடியளவு விரைவாக மீள்குடியமர்த்தப் பாடுபட்டவர் ரிசாத். அவரது சேவையை மக்கள் மட்டுமல்ல அமைச்சர்களும் சிலாகித்துப்பேசினர்.

அமைச்சர் ரிசாட் வன்னி மாவட்டப் பிரதிநிதி. அந்த மாவட்டத்தின் அனைத்துக் குறைபாடுகளையும் அவர் நீக்கி வருவதால் மக்கள் அவரை மதிக்கின்றனர். அவரது பிரபலமான அரசியல் நிலையைச் சகித்துக் கொள்ளாது காழ்ப்புணர்வு கொண்ட சில சக்திகள் அவரை விமர்சிக்கின்றன.

இந்த விமர்சங்களால் அவருக்கு மக்கள் மத்தியில் உள்ள செல்வாக்குகள் குறைய போவதில்லை. வன்னி மாவட்ட முஸ்லிம்களுக்கு மட்டுமன்றி வடபுல முஸ்லிம்களுக்கும் நேசக்கரம் நீட்டி உதவும் பண்பாளர் அவர். அதேவேளை வடபுல முஸ்லிம்களுக்கு எதிராகச் செயல்டும் சமூக விரோத மனப்பாங்கு கொண்ட தீய சக்திகளை அவர் வெறுப்பதால், அதனை வைத்துக் கொண்டு இன விரோதி எனச் சிலர் கதை சோடிக்கின்றனர்.

நடுநிலையில் சிந்திக்கும் அனைவரும் இதனை நன்கறிவர்.

கேள்வி: வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தாமதப்படுகிறதே?

பதில்: போரின் காரணமாக ஏற்பட்ட இடம்பெயர்வு கிழக்கு முஸ்லிம்களுக்கும் வடக்கு முஸ்லிம்களுக்கும் இடையே பாரிய வேறுபாடுடையது. கிழக்கு முஸ்லிம்கள் போர்க்கால சூழ்நிலையில் உயிரைக் காப்பற்ற இடம்பெயர்ந்த போதும் ஒரு சில மாதங்களுக்குள் மீள் குடியேற்றப்பட்டார்கள். வடக்கு நிலைமை அப்படியன்று. வடபுல முஸ்லிம்கள் 90ஆம் ஆண்டிலே புலிகளால் விரட்டியடிக்கப்பட்டவர்கள்.

சில மணிநேரங்கள் வடபுலத்தை விட்டு வெளியேறுமாறு துவக்கு முனையில் நிர்ப்பந்திக்கப்பட்டதால் வெளியேறியவர்கள். சகல சம்பத்துக்களையும் இழந்து நிர்க்கதிக்குள்ளாக்கப்பட்டவர்கள். அவர்கள் இடம்பெயர்ந்து 22 ஆண்டுகள் கடந்த நிலையிலும் சொந்தப் பூமியில் வாழும் பாக்கியத்தை அம்மக்கள் இழந்து நிற்கிறார்கள்.

இன்று 22 ஆண்டுகள் கடந்த நிலையிலே முஸ்லிம்கள் என்ற இனம் வடக்கில் வாழ்ந்தது. இடம்பெயர்ந்தது என்ற வரலாறு இளம் சந்தaதியினருக்குத் தெரியாது.

இந்த நிலையிலேதான் மீள்குடியேற்றம் சுமுகமாக நிகழ தமிழ் அரசியல்வாதிகளும் நிர்வாகத்தில் பலமட்டங்களிலும் பணிபுரியும் தமிழ் ஊழியர்களும் இன்னும் ஒத்துழைப்பு வழங்காமல் இருப்பது கவலைக்குரிய விடயமாகும். அவர்களின் ஒத்துழைப்பு இன ஐக்கியத்தினை வலுப்படுத்தும் எனலாம்.

கேள்வி: கலைக்கப்பட்ட மாகாணசபையில் கிழக்கு மாகாண சபையின் சுகாதார அமைச்சராகப் பணியாற்றினீர்கள். உங்கள் கடந்தகாலப் பணி பற்றிக் கூறுவீர்களா?

பதில்: கிழக்கு மாகாண சபையின் சுகாதார அமைச்சராக இருந்து மக்கள் நலனுக்காக நாம் முன்னெடுத்த பணிகள் பலவற்றைக் கூறலாம். கிழக்கு மாகாணத்திலே மத்திய அரசின்நிர்வாகத்தின் கீழ் உள்ள வைத்தியசாலைகள் பல உள்ளன. அதேவேளை மாகாண அமைச்சின் நிர்வாகத்தின் கீழுமான வைத்தியசாலைகளும் உள்ளன. 120 வைத்தியசாலைகள் மாகாண அமைச்சின் கீழுள்ளன. இவற்றுக்கான சேவையை நாம் அளித்து வருகின்றோம். கிழக்கிலே வைத்திய வசதியற்றிருந்த பல கிராமங்களுக்கு வைத்திய வசதியளிக்க, புதிய வைத்தியசாலைகள் அமைக்க நடவடிக்கை மேற்கொண்டேன். எமது நிர்வாகத்தின் கீழுள்ள பல வைத்தியசாலைகள் தரமுயர்த்தப்பட்டுள்ளன. வைத்தியர், தாதிமார் மற்றும் சுகாதார ஊழியர்களின் பற்றாக்குறைகள் இனங்காணப்பட்டு நிவர்த்தி செய்யப்பட்டுள்ளன. ஆளணிப்பற்றாக்குறை இல்லாத அளவுக்கு நடவடிக்கைகளை மேற்கொண்டோம். விசேட வைத்தியர்களின் தேவைகள் நிவர்த்திக்கப்பட்டுள்ளன.

வைத்தியப்பணி உயிர்காக்கும் பணி என்பதை அத்துறை சார்ந்த பல மட்டங்களிலும் பணிபுரிவோர் உணர்ந்து மக்கள் பணி செய்யவேண்டிய தேவையை நாம் உணர்த்தியுள்ளோம். வைத்தியசாலை ஊழியர்கள் தமது கடமைகளை செய்ய முறையாக முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றேன். இத்துறைசார்ந்த பணியாளரின் தனிப்பட்ட தேவைகளையும் குறைபாடுகளையும் தீர்க்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றேன். எமது நிர்வாகத்தில் உள்ள வைத்தியசாலைகளின் பெளதீக வளங்களை அதிகரிக்கவும் வசதிகளை மேம்படுத்தவும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறேன். டெங்கு போன்ற அபாயகரமான நோய்களையும் மற்றும் தொற்று நோய்கள் தொற்றாத நோய்களிலிருந்தும் மக்களைப் பாதுகாப்பதற்கான பல்வேறு உபாய நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றோம்.

மத்திய அரசின் கீழுள்ள வைத்தியசாலைகளுக்கும் மாகாண சேவையிலுள்ள வைத்தியசாலைகளுக்கும் இடையே சில வேறுபாடுகள் உள்ளன. மாகாண சேவையின் கீழுள்ள வைத்தியசாலைகளின் சேவை நேரடியாக மக்களுடன் தொடர்புபட்டதாக அமைந்துள்ளமையே சிறப்பான அம்சமாகும். கிழக்கு மாகாண சபையின் கீழுள்ள வைத்தியத்துறை சார்ந்த நடவடிக்கைகள் பூரணமாக மக்களுக்குப் பயன்பட வேண்டுமென்பதே என் இலட்சியமாகும்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.