புத் 64 இல. 10

கர வருடம் மாசி மாதம் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ர.ஆகிர் பிறை 11

SUNDAY MARCH 04,  2012

 
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின்பால் திரும்பியிருக்கிறது

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின்பால் திரும்பியிருக்கிறது

இலங்கை மக்கள் அனைவரதும் கவனம்

ஒக்டோபர் வரை குறித்த விவகாரத்தை தள்ளி வைக்குமாறு இலங்கை கோரிய உத்தேச இலங்கை தொடர்பான அமெரிக்காவின் தீர்மானம் அல்லது பிரேரணை சுவிற்சர்லாந்து, ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் முன்வைப்பதற்கு ஏதுவாக ராஜதந்திர சமூக முக்கியஸ்தர்களிடமும் பேரவையின் அங்கத்துவ நாடுகளிடமும் கையளிக்கப்பட்டதான செய்தி ஒரு வகையில் பாராட்டத்தக்கதாகும்.

ஏனெனில் அவ்வாறு தீர்மானத்தை முன்னெடுப்பதற்கு அல்லது முன்னெடுக்காதிருப்பதற்கு சார்பான எதிரான கருத்துக்களை பிரஸ்தாபிப்பதற்கு ஏது நிலையை தோற்றுவித்துள்ளது. இலங்கைத் தூதுக் குழுவுக்குத் தலைமை தாங்கிச் சென்றுள்ள அமைச்சர் சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை அல்லது வரைவுகளை வெட்டி வாதிடுவதற்கு வாய்ப்பைத் தோற்றுவித்திருப்பதாக நோக்கர்கள் கூறுகின்றனர்.

இலங்கைக்கு எதிராக ஒரு தீர்மானம் நிறைவேற்றப்படுவது சர்வதேச ராஜாங்க ரீதியாக களங்கத்தையும் கலக்கத்தையும் நமது தேசத்துக்குத் தோற்றுவிக்கும் என்றடிப்படையிலும், அந்நிய சக்திகள் தாங்கள் விரும்பும் வகையில் அமைந்தவாறு அந்நியோன்யமாக காலூன்றிக்கொள்ள வசதியேற்பட்டு விடும் என்ற வகையிலும் ஆர்ப்பாட்டங்களிலும் பத்திரிகையாளர் சந்திப்புகளிலும் அமைச்சர்களும், அதிகாரிகளும், அறியாதவர்களுக்கும் அறியப் படுத்திய வண்ணமுள்ளனர்.

தேசம் தேசியம் என்று பேசி பிறசக்திகளுக்கு அடிபணியாதிருப்பதான தேச பக்தி அலைக்குள் உரிய கருத்துக்களை கூறி முறையாக மாட்டிக் கொள்வதன் மூலம் தோஷம் பிடித்தவர்கள் என்ற நச்சரிப்புக்குள்ளாகி விடக் கூடாது என்று எதிர்க் கட்சி அமைதிகாத்து நடுநிலை பேணினாலும், எப்படியேனும் ஜெனீவா பிரேரணை வரவேண்டும், நிறைவேற்றப்பட வேண்டும். அதுவே அரசின் நிலை குலைவுக்கு கால்கோளாயமைய வேண்டும் என்றெல்லாம் பிரதான எதிரணி நேர்ச்சையின்றி நேராயிருப்பர் என்று உறுதியாகக் கூற முடியாது.

வாக்கெடுப்பு - கணக்கெடுப்பு

மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ளதாக கூறப்படும் பிரேரணை இலங்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ள வேண்டிய இரண்டாவது தடவையாகும். 2009 மேயில், இலங்கைக்கு எதிராக தீர்மானமொன்றை நிறைவேற்றிக் கொள்ள மேற்குலக சக்திகள் முயற்சித்தன. தோல்வியே கிட்டியது. இது இரண்டாவது பெரிய பரீட்சை மாத்திரமன்றி வேதனையுடன் கூடிய சோதனையாகும்.

சமகாலத்தில் அணுகூலமான நிலமைகளும் உள் ளன. பிரதி கூலமான நிலைமைகளும் உள்ளன. கடந்த தடவை மனித உரிமைகள் பேரவையின் 47 நாடுக ளில், 29 நாடுகள் இலங்கைக்கு சார்பாக வாக்களித்தன. 12 நாடுகள் எதிராக வாக்களித்தன. 06 நாடுகள் வாக்களிப்பிலிருந்து தவிர்ந்து கொண்டன. பிரதி கூலமான செய்தி. யாதெனில் ஆதரவாக வாக்களித்த 29 நாடுகளில் 11 நாடுகளான அஸர் பைஜான், பஹ்ரெயின, பொலிவியா, பிறேஸில், எகிப்து, கானா, மடகாஸ்கார், நிக்கராகுவா, பாகிஸ்தான், தென்னாபிரிக்கா, ஸம்பியா போன்றன மனித உரிமை பேரவையில் தற்போது அங்கத்துவ நாடுகளாக இல்லையாம்.

அதேவேளையில் 2009 மேயில் இலங்கைக்கு எதிராக வாக்களித்த 12 நாடுகளில் 08 நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் தொடர்ந்து இல்லை. அவ்வாறு இல்லாமலாகும் நாடுகளில் கனடா, ஜேர்மன், நெதர்லாந்து, பிரான்ஸ், பிரிட்டன் போன்றவை முக்கியமானவையாகும். இத்தகைய நாடுகளே வெளிநாட்டுத் தமிழர்களின் அழுத்தத்துக்குள்ளாகியுள்ள நாடுகளாக குறிப்பிடப்படுகின்றன.

எவ்வாறாயினும் இலங்கைக்கு சார்பாக வாக்களித்த (2009 இல்) 18 நாடுகள் தற்போதும் பேரவையில் உள்ளன. ஆதலால் சிறந்த ஆரம்பம் ஒன்றைச் செய்ய இலங்கைக்கு வாய்ப்பில்லாமலில்லை. குறித்த இப்பதினெட்டு நாடுகளும் இலங்கையுடனேயே இருப்பதாக ஊகித்துக் கொண்டால், ஜெனீவாவில் தடை தாண்டுவதற்கு மேலும் 06 வாக்குகளே தேவை. மே 2009 இல் இருந்து 21 நாடுகளையும் விட குறைவான நாடுகளே மனித உரிமைகள் பேரவையில் இணைந்து கொண்டுள்ளனவாம். இத்தகைய நாடுகள் இலங்கைக்கு சார்பாக வாக்களிக்கும் என எதிர்பார்க்கலாம் என்கின்றனர் சர்வதேச நோக்கர்கள். ஏனெனில் இது குறித்த நாடுகள் 2009 இல் இருந்து சர்வதேசத்தில் என்ன நடக்கிறது என்பதை நோக்குமே ஒழிய அதற்கு முன்பு நடந்தவற்றை சீர்தூக்கிப் பார்க்க வேண்டிய தேவையிராது என்று புலமையாளர்கள் கூறுகின்றனர்.

அதேவேளை, தாய்லாந்து உகண்டா, மெரூட்டேனியா, பெனின் பொட்சுவானா, கொங்கோ, கொஸ்டரிக்கா, ஈக்குவடோர் கெளத்தமாலா, குவைட், கிர்கிஸ்தான், மாலைதீவு போன்ற நாடுகள் இலங்கைக்கு எதிராக வாக்களிப்பது சாத்தியமற்றது. மேற்குலகின் உதவியுடனேயே தற்போதைய அரசாங்கம் லிபியாவில் நிறுவப்பட்டது என்பதைக்கூட பொருட்படுத்தாமல், லிபியாவும் இலங்கைக்கு சார்பாகவே வாக்களிக்கலாம் என்று கூறப்படுகிறது.

அநேகமாக தற்போதைக்கு மூன்றாம் உலக நாடுகள் மேற்குலக நாடுகள் ஒரு நாட்டுக்கு எதிராக தீர்மானங்களை அனுசரணை பண்ணினால் மேலுமொரு நாடு பூரண ஏகாதியத்துக்குள் வீழ்ந்து போவதான முன்சாபம் அதுவே என்று உணர்ந்து கொண்டுள்ளன. அந்த வகையில் பேரவையில் வாக்கெடுப்பு என்ற நிலை தோன்றினால் இலங்கை வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

பேரவையில் உரை

இந்தப் பின்னணியில் ஒரு மாத காலம் வரையாக மார்ச் 23 ஆம் திகதி வரை நீண்டு செல்லக்கூடிய ஜெனீவா மனித உரிமைகள் பேரவை அமர்வுகளில் அமெரிக்க அனுசரணையுடனான உத்தேச நகல் தீர்மானம் பெப்ரவரி 27 ஆம் திகதி திங்கட்கிழமையே முன்வைக்கப்பட்டு விடும் என்ற தோரணையில் தேசம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடந்தேறிய தருணத்தே தேசத்து மக்கள் பெரும்பாலானவர்களின் கவனத்தையும் திசை திருப்பியிருந்தது. ஆனால் சம்பவ தினம் இலங்கையின் நிலைப்பாடுகள், எதிர்கால நடவடிக்கைகள், தேசத்தின் அபிலாஷைகள், சர்வதேசத்தின் கடமைப்பாடுகள், பேரவை இலங்கைக்கு வழங்கக்கூடிய ஒத்துழைப்புகள் போன்றன உள்ளடங்கியதான சிறப்புரையொன்றை இலங்கைத் தூதுக் குழுவுக்கு தலைமை தாங்கிச் சென்றுள்ள அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஆற்றினார். அவரது உரை, பேரவையாளர்கள் ஒவ்வொருவரும் தத்தமது நாடுகளின் கருத்துகளையும், நிலைப்பாடுகளையும் ஒட்டியும், வெட்டியும் முன்வைக்கக்கூடிய வாய்ப்புக்களைக் கொண்டுள்ளதாக உள்ளடக்கங்களின் அடிப்படையிலும் கால அவகாசத்தினடிப்படையிலும் கூறலாம்.

இலங்கையின் அபிலாஷை

சர்வதேச சமூகத்திடமிருந்து தற்போது இலங்கைக்குத் தேவை யாதெனில் நாட்டின் முயற்சிகளை மதிப்பீடு செய்வதில் கருத்துக்களும் ஒத்துழைப்புகளுமாகும். எல்லாவற்றையும் விட முன்னெடுக்கப்பட்ட முறைமை தடங்கலற்ற வகையில் முன்னகர அனுமதிக்கப்படுவதை நிச்சயப்படுத்திக்கொள்ள வேண்டிய தேவை இலங்கைக்குள்ளது.

வெற்றிகரமான அமுலாக்கத்தை சந்தேகத்துக்குட்படுத்தக்கூடிய தேவையற்ற படையெடுப்புகள் இலங்கைக்கு தேவையற்றது. மனித உரிமைகள் பேரவை முன்பாக அநாவசிய தீர்மானங்கள் வழிமுறையூடாக மேற்கொள்ளப்படக்கூடிய அத்தகைய தலையீடு 2009 இல் இலங்கை தொடர்பில் விசேட அமர்வுத் தீர்மானம் பற்றிய தீர்மான ஏற்புடைமையில் வெளிப்படுத்தப்பட்டமைக்கு ஏதுவாக நோக்குகையில், பேரவையின் மனோபாவங்களை பலஹீனமாகவேயாக்கும்.

தேசமும், தேசத்து மக்களும் இலங்கை பெற்ற அமைதிக்கு வழங்கிய விலையும் வாய்ப்பும் - உண்மையானதும், உறுதியானதும், திருப்தியானதுமான விதத்தில் சகல சமூகத்தவர்களதும் அபிலாஷைகள் கண்துடையப்படாவிட்டால் அல்லது கண்துடையப்படும் வரை யதார்த்தமான அமைதியாய் இருக்கமாட்டாது. இதுவரையில் வளர்ச்சியடைந்துள்ள தேசியப் பிரச்சினைக்கான இணக்கப்பாடுகள் சூத்திரம் நிலையானதும், உறுதியானதுமாக இருக்க வேண்டுமெனில் அது ஜனநாயகம் மிக்கதாகவும், யதார்த்த பூர்வமானதாகவும், உள்ளூரில் வளர்ந்ததாகவும் இருக்க வேண்டிய தேவையுள்ளது.

அமெரிக்காவின் தீவிரம்

இதேவேளையில் இலங்கைக்கு எதிரான பிரச்சாரத்தை அமெரிக்கா தீவிரப்படுத்தியிருப்பதாக ஜெனீவாவில் வைத்து பத்திரிகையாளர்களுக்கு கருத்துரைத்த அமைச்சர் பீரிஸ் தெரிவித்துள்ளார். இக்கட்டான தருணத்தில் அந்த நாடு உலகின் பல்வேறு தலை நகர்களில் தமது தூதர்களை அமர்த்தி எதிர்ச் செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இலங்கைக்கு எதிரான குறித்த தீர்மானத்துக்கு ஆதரவு நல்குமாறு சம்பந்தப்பட்ட நாடுகள் மீது அழுத்தம் கொடுப்பதற்காகவே அமெரிக்கா அவ்வாறு தங்களது சகபாடிகளை நிலை நிறுத்தியுள்ளது.

அமெரிக்க அனுசரணையுடனான அல்லது அமெரிக்காவே கொண்டுவர முனைகின்ற தீர்மானமானது நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையின் சிபாரிசுகளை அமுலாக்க இலங்கை தவறிவிட்டது என்பதை அடியொற்றியதாகும். உத்தேச பிரேரணையை முன்வைக்க முற்படும் இம் மாதத்தின் ஒரு திகதியில் ஆணைக்குழு அறிக்கை வெளியாகி 2 1/2 மாதங்கள் கூட ஆகியிராது. முப்பது வருடங்கள் பழமை வாய்ந்த விடயமொன்றோடு தொடர்புபட்ட விவகாரத்தை மூன்றே மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என எண்ணுகின்ற அமெரிக்கா - புலிகள் தோற்கடிக்கப்பட்ட பிறகு இதேபோன்றதொரு தீர்மானத்தை இலங்கைக்கு எதிராகக் கொண்டுவந்தது. அந்தத் தடவை பெரும்பான்மை வாக்குகளைக் கொண்டு தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது. 2009 இல் அமெரிக்க அனுசரணையுடனான தீர்மானம், அந்த நாட்டின் நெருங்கிய நண்பரான கனடாவால் முன்வைக்கப்பட்டது. இந்தத் தடவை அமெரிக்காவே முன்வைக்கத் தீர்மானித்துள்ளது. அநேகமான நாடுகள் ஆதரவளிக்கும் என்ற நம்பிக்கையிலேயே அமெரிக்கா இந்தத் தீர்மானத்தை எடுத்திருப்பதாக இலங்கை ராஜதந்திரிகள் கூறுகின்றனர்.

மனித உரிமைகள் பேரவை

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை 47 அங்கத்துவ நாடுகளைச் கொண்டுள்ளது. மனித உரிமை மீறல்கள் தொடர்பான நிலமைகளை ஆராய்ந்து அது தொடர்பாக அறிக்கையிடுவதை பிரதான நோக்கமாகக் கொண்டு 2006 மார்ச் 15ம் திகதி ஐ.நா. பொதுச்சபையால் உருவாக்கப்பட்டது. ஐ.நா. அங்கத்துவ 192 நாடுகளினதும் மனித உரிமைகள் நிலவரங்களை மதிப்பீடு செய்யும் உபாயமுண்டு. மனித உரிமைகள் தொடர்பில் முன்னைய ஆணைக் குழுவின் ஐ.நா. விசேட அணுகுமுறைகளுடன் இணைந்து பேரவை பணியாற்றுகிறது.

அழுத்தம் - அதிருப்தி

2012 பெப்ரவரி 13ம் திகதி கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை அமுலாக்குவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கவும் பொறுப்புக் கூறல் விவகாரங்களுக்கு உரிய முறையில் பரிகாரம் காணவுமாக இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் தீர்மானத்துக்கு தாங்கள் ஆதரவளிப்போம் என்று அமெரிக்கா கூறியது.

2012 பெப்ரவரி 15 இல், இலங்கை அரசாங்கம் மேற்படி தீர்மானத்துக்கு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் ஆதரவு நல்க அமெக்கா எடுத்த முடிவு தொடர்பில் தமது அதிருப்தியை வெளிப்படுத்தியது. குறித்த நல்லிணக்க ஆணைக் குழு அறிக்கை 2011 டிசம்பர் 16ம் திகதியே பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டிருப்பதால் அதனை அமுலாக்குவதற்கு மேலும் கால அவகாசம் தேவை என்பதை இலங்கை அரசாங்கம் கூறுகிறது.

இதேவேளையில் அமெ ரிக்காவின் ஜென்மவிரோ தியான கியூபா அந்த நாட்டின் பொய்யான குற்றச் சாட்டுகளை முறியடிக்க இலங்கைக்கு எந்தடிப்படை யிலேனும் உதவி செய்யத் தயாராக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.