புத் 64 இல. 10

கர வருடம் மாசி மாதம் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ர.ஆகிர் பிறை 11

SUNDAY MARCH 04,  2012

அவுஸ்திரேலியாவின் சவாலை முறியடிக்குமா இலங்கை?

அவுஸ்திரேலியாவின் சவாலை முறியடிக்குமா இலங்கை?

கொமன்வெல்த் முக்கோணத் தொடர் கடந்த 5ம் திகதி மெல்பர்ன் மைதானத்தில் அவுஸ்திரேலிய -இந்தியப் போட்டியுடன் ஆரம்பமானது.

ஆரம்பப் போட்டிகளில் இலங்கை அணி கடந்த போட்டித் தொடர் போலவே மிகவும் மோசமான ஆட்டத்தையே வெளிக்காட்டியது. பின் சுதாகரித்துக் கொண்ட இலங்கை அணியின் சிரேஷ்ட வீரர்களும், புதிய இளம் வீரர்களும் திறமையாக விளையாடி பல வெற்றிகளைச் சுவைத்தனர்.

அதே போல் ஆரம்பப் போட்டிகளில் திறமையாக விளையாடி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருந்த இந்திய அணி இடையில் சொதப்பியிருந்தது. அது இறுதிப் போட்டிக்குத் தெரிவாகுமா என்று ரசிகர்கள் மத்தியிலும், விமர்சகர்கள் மத்தியிலும் சந்தேகம் எழுந்தது.

ஆனால் அது கடைசியாக விளையாடிய லீக் போட்டியில் துடுப்புடனும், துடிப்புடனுடம் மீண்டெழுந்து இறுதிப் போட்டி வாய்ப்பைத் தக்கவைத்துள்ளது. ஆனால் வெள்ளிக்கிழமை அவுஸ்திரேலியா- இலங்கை மோதிய கடைசி லீக் போட்டியில் இலங்கை அணி 9 ஓட்டங்களினால் வெற்றி பெற்று ஏற்கனவே 19 புள்ளிகளுடன் இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ள அவுஸ்திரேலிய அணியுடன் இன்று தொடங்கும் 3 போட்டிகளைக் கொண்ட இறுதிப் போட்டியில் மோதுகின்றன. மற்றைய தொடர்களைப் போலவே இப்போட்டித் தொடரிலும் பல சுவாரஷ்யமான பல நிகழ்வுகள் நடைபெற்றன.

சமநிலையில் முடிந்த இலங்கை-இந்தியப் போட்டியின் போது 30வது ஓவரில் 5 பந்துவீச்சுடன் முடிவுக்கு வந்ததும் சிறுசிறு சலசலப்பை ஏற்படுத்தியது.

கடந்த பெப்ரவரி 5ம் திகதி ஆரம்பமான முதல் போட்டி அவுஸ்திரேலிய-இந்திய அணிகளுக்கிடையில் நடைபெற்றது. மழை குறுக்கிட்டதால் 32 ஓவராகக் குறைக்கப்பட்ட இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி மத்தியூ வெடே 67, டேவிட் ஹஸி ஆட்டமிழக்காமல் 61 ஓட்ட உதவியுடன் 5 விக்கட்டுகளை இழந்து 211 ஓட்டங்களைப் பெற்றது. பந்து வீச்சில் இந்திய அணி சார்பாக வினய் குமார் 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

212 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 151 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து 60 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. இந்திய அணி சார்பாக விராட் கோஹ்லி 31 ஓட்டங்களைப் பெற்றார். ஆட்ட நாயகனாக டேவிட் ஹஸி தெரிவானார்.

தொடரின் இரண்டாவது போட்டி பெப்ரவரி 8ம் திகதி இலங்கை- இந்திய அணிகளுக்கிடையில் பேர்த் வெகா மைதானத்தில் நடைபெற்றது. இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி 6 விக்கெட்டுகளை இழந்து 233 ஓட்டங்களைப் பெற்றது. இலங்கை அணி சார்பாக சந்திமால் 61 ஓட்டங்களையும், திலகரத்ன டில்ஷான் 46 ஓட்டங்களையும் பெற்றனர். இந்திய அணி சார்பாக பந்துவீச்சில் ஆர். அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் சஹீர் கான் இரண்டு விக்கெட்களையும் கைப்பற்றினர். பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி ஒரு கட்டத்தில் 176 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து இக்கட்டான நிலையிலிருந்தது. பின் ஜோடி சேர்ந்த ராமச்சந்திர அஸ்வினும் ரவீந்திர ஜடேஜாவும் இணைந்து 46.5 ஓவர்களில் வெற்றி இலக்கை அடைந்தனர்.

இதில் விராத் கோஹ்லி 71 ஓட்டங்களையும், சச்சின் டெண்டுல்கர் 48 ஓட்டங்களையும் பெற்றனர். சச்சின் டெண்டுல்கர் இப்போட்டியின் போது இலங்கை அணிக்கெதிராக 3000 ஓட்ட மைல்கல்லைக் கடந்தார். ஆட்ட நாயகனாக 3 விக்கெட்டுகளையும், ஆட்டமிழக்கா மல் 34 ஓட்டங்களையும் பெற்ற அஸ்வின் தெரிவானார். மூன்றாவது போட்டி பெப்ரவரி 10ஆம் திகதி பேர்த் நகரில் இலங்கை- அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையில் நடைபெற்றது. நாணயற் சுழற்சியில் வென்ற இலங்கை அணி தலைவர் அவுஸ்திரேலியாவை துடுப்பெடுத்தாடப் பணித்தார். 49.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 231 ஓட்டங்களைப் பெற்றனர். கிளார்க் 61 ஓட்டங்களைப் பெற்றார். பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியில் மீண்டும் அனுபவ வீரர்கள் சொதப்பினர். ஆனால் பின் வரிசைத் துடுப்பாட்டக்காரர்களின் போராட்டம் காரணமாக படுதோல்வியிலிருந்து தப்பியது. கடும் போட்டிக்கு மத்தியில் இலங்கை அணி 5 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. கடைசி வரை போராடிய அன்ஜலோ மெத்தியூஸ் 64 ஓட்டங்களைப் பெற்றார். போட்டியின் சிறப்பாட்டக்காரராக மைக்கல் கிளார்க் தெரிவானார்.

நான்காவது போட்டி அடிலேட் ஓவல் மைதானத்தில் பெப்ரவரி 12ஆம் திகதி அவுஸ்திரேலிய இந்திய அணிகளுக்கிடையில் நடைபெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 8 விக்கெட் இழப்புக்கு 269 ஓட்டங்களைப் பெற்றது. டேவிட் ஹஸி 71 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார். பந்துவீச்சில் இந்திய அணி சார்பாக வினய் குமார், உமேஷ் யாதவ் 2 விக்கெட் வீதம் வீழ்த்தினர். 270 என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 49. 4 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து இலக்கை அடைந்தது. ஆட்டநாயகன் விருது பெற்ற கெளதம் காம்பீர் 91 ஓட்டங்களைப் பெற்றார். கடைசிவரை விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் கடைசி ஓவரில் 13 ஓட்டங் கள் தேவைப்பட்டன. களத்தில் நின்ற இந்திய அணித் தலைவர் மஹேந்திர சிங் தோனி கடைசி ஓவரின் 4 வது பந்தில் அடித்த இமாலய சிக்ஸரின் மூலம் இந்திய அணிக்கு வெற்றி தேடிக் கொடுத்தார்.

தொடரின் ஐந்தாவது போட்டி அடிலேட் மைதானத்தில் இலங்கை-இந்திய அணிகளுக்கிடையில் 14ம் திகதி நடைபெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 9 விக்கெட்டுகளை இழந்து 236 ஓட்டங்களைப் பெற்றது. இலங்கை அணி சார்பாக தினேஷ் சந்திமால் 81, டில்சான் 48 ஓட்டங்களைப் பெற்றனர். வினய்குமார் 3 விக்கெட்டுகளையும், இர்பான் பதான் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இந்திய அணியும் 9 விக்கெட்டுகளை இழந்து 236 ஓட்டங்களைப் பெற்று போட்டி சம நிலையில் முடிவுற்றது. இந்திய அணி சார்பாக காம்பீர் 91 ஓட்டங்களையும், தோனி கடைசிவரை ஆட்டமிழக்காமல் 58 ஓட்டங்களைப் பெற்று ஆட்டநாயகன் விருதைப் பெற்றார்.

தொடரின் 6வது போட்டி பெப்ரவரி 17ம் திகதி சிட்டி ¨மானத்தில் இலங்கை- அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையில் நடைபெற்றது. நாணயச்சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. இடையில் மழை குறுக்கிட்டதால் 41 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட மேற்படி போட்டியில் இலங்கையணியினரின் அபார பந்துவீச்சுக்கு முகம் கொடுக்க முடியாத அவுஸ்திரேலிய அணி 40.1 ஓவர்களில் 158 ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுகளையும் இழந்தது. டேவிட் ஹஸி 58 ஓட்டங்களைப் பெற்றார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அணிக்குள் உள்வாங்கப்பட்ட பர்வீஸ் மஹ்ரூப் 16 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஆரம்ப துடுப்பாட்டவீரர் உபுல் தரங்க கடந்த போட்டிகளில் சோபிக்காததால் இப்போட்டியில் ஆரம்ப வீரராக தலைவர் மஹேல ஜயவர்தன களமிறங்கி அதிரடியாக ஆடி 24.1 ஓவர்களில் 2 விக்கெட்டை மாத்திரம் இழந்து போனஸ் புள்ளியுடன் வெற்றி இலக்கை அடைந்தனர். இதில் மஹேல ஆட்டமிழக்காமல் 61 ஓட்டங்களைப் பெற்றார். ஆட்ட நாயகனாக திஸர பெரேரா தெரிவானார்.

19ஆம் திகதி நடைபெற்ற 7வது போட்டியில் அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாடி 6 விக்கெட் இழப்புக்கு 288 ஓட்டங்களைப் பெற்றது. மைக் ஹஸி 59 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் இர்பான் பதான் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 178 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. தோனி 56 ஓட்டங்களைப் பெற்றார். 33 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய அவுஸ்திரேலிய வேகப் பந்துவீச்சார் ஹில்பென்ஹஸ் ஆட்ட நாயகனாகத் தெரிவானார்.

21ஆம் திகதி நடைபெற்ற 8வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 6 விக்கெட் இழப்புக்கு 288 ஓட்டங்களைப் பெற்றது. திரிமான்ன 67 ஓட்டங்களப் பெற்றார். 289 என்ற ஓட்ட இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்தியா நுவன் குலசேகரவின் அபார பந்துவீச்சினால் 238 ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுகளையும் இழந்தது. கோஹ்லி 66 ஓட்டங்களைப் பெற்றார். சிறப்பாட்டக்காரராக 40 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய நுவன் குலசேகர தெரிவானார்.

24ம் திகதி தொடரின் 9வது போட்டி இலங்கை- அவுஸ் திரேலிய அணிகளுக்கிடையில் நடைபெற்றது. போட்டித் தொடரின் முதலாவது சதமாக அவுஸ்திரேலிய வீரர் போரஸ்ட் 104 ஓட்டங்களைப் பெற்றார். அவ்வணி 6 விக்கெட் இழப்புக்கு 280 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி அபாரமாக ஆடி 7 விக்கெட் இழப்புக்கு வெற்றி இலக்கை அடைந்தது. இவ்வெற்றியானது இத் தொடரில் இலங்கை அணி தொடர்ச்சியாகப் பெறும் மூன்றாவது வெற்றியாகும். ஆரம்பத்துடுப்பாட்ட வீரராக வந்த இலங்கை அணித் தலைவர் மஹேல ஜயவர்தன அபாரமாக ஆடி 80 ஓட்டங்களைப் பெற்றார். ஆட்டநாயகனாகவும் அவரே தெரிவானார்.

10 வது போட்டி அவுஸ்திரேலிய- இந்திய அணிகளுக்கிடையில் 26ம் திகதி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி டேவிட் வோனர், டேவிட் ஹஸி, மைக் வோர்ட் ஆகியோரின் அரைச்சதங்களுடன் 252 ஓட்டங்களைப் பெற்றது. இந்திய அணி 39.2 ஓவர்களில் 165 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. வொட்சன் 9 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

ஆட்டநாயகனாக டேவிட் வோனர் தெரிவானார். கடந்த செவ்வாய்க்கிழமை ஓவல் மைதானத்தில் தொடரில் இறுதிப் போட்டிக்குத் தெரிவாகும் அணியைத் தீர்மானிக்கும் முக்கியமான போட்டியொன்று இலங்கை -இந்திய அணிகளுக்கிடையில் நடைபெற்றது. நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி இலங்கை அணியைத் துடுப்பெடுத்தாடப் பணித்தது. அதன்படி டில்ஷான் 160, சங்கக்கார 102 ஓட்டங்களின் உதவியுடன் 4 விக்கெட் இழப்புக்கு 320 ஓட்டங்களைப் பெற்றது. இந்திய அணி இறுதிப்போட்டி எதிர்பார்ப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டுமானால் இந்த இமாலய இலக்கை 37 ஓவர்களில் கடந்து போனஸ் புள்ளியுடன் வெற்றிபெற வேண்டும். இச்சவாலை ஏற்றுக்கொண்ட இந்திய அணி ஆரம்பம் முதலே அதிரடியில் இறங்கியது. செவாக் 16 பந்துகளில் 30 ஓட்டங்களுடனும், சச்சின் டெண்டுல்கார் 30 பந்துகளில் 39 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.

அதன் பின் ஜோடி சேர்ந்த காம்பீர் -கோஹ்லி இலங்கைப் பந்து வீச்சாளர்களைத் துவம்சம் செய்தனர். போட்டியின் 'ஹைலைட்ஸ்' (முக்கிய கட்டங்கள்) பார்ப்பதைப் போல் ரசிகர்களைப் பரவசப்படுதினர். காம்பீர் 64 பந்துகளில் 63 ஓட்டங்களைப் பெற்று ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். அதன் பின் ஜோடி சேர்ந்த சுரேஷ் ரைய்னா- கோஹ்லி ஓவருக்கு 10, 15 என்ற ஓட்ட வீதப்படி அடித்தாடி 3 விக்கெட் இழப்புக்கு இலங்கை நிர்ணயித்த இலக்கை 36.4 ஓவர்களில் கடந்தனர். ஆட்டநாயகனாகத் தெரிவான கோஹ்லி 86 பந்துகளில் 16 பவுண்டரி, 3 சிக்ஸருடன் 130 ஓட்டங்களைப் பெற்றார். இது ஒருநாள் போட்டியில் இவர் பெற்ற கூடிய ஓட்டங்களாகும். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இலங்கை பந்துவீச்சாளர் லசித் மலிங்க 7.4 ஓவர்கள் பந்து வீசி 96 ஓட்டங்கள் வாரிவழங்கியிருந்தார். இவர் வீசிய போட்டியின் 36வது ஓவரில் இந்திய அணியினர் 24 ஓட்டங்களைப் பெற்றனர்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.