புத் 64 இல. 10

கர வருடம் மாசி மாதம் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ர.ஆகிர் பிறை 11

SUNDAY MARCH 04,  2012

கொழிமையிவீம் ழிமை!

கொழிமையிவீம் ழிமை!

ஒலுவில் எஸ். ஜலால்டீன்

அந்நாளின் ஞாபகங்கள் இன்னும்- வந்து
அலைமோதி நெஞசத்தில் பின்னும்- நீ
எந்நாளும் என்னுள்ளே
எண்ணத்தில் வாழுவதை
அறியாய்- அதைப்- புரியாய்!

கடலோரம் கைகோர்த்த காலம்- நாம்
கவிதை களையாத்த கோலம்- இன்னும்
உடலோடு உடல் சேர்த்து
உள்ளத்தா லிணைந்தெல்லாம்
மின்னும்- நெஞ்சி- லின்னும்!

வருடங்கள் பலமாறிப் போச்சு- நம்
வயதுகளும் ஐம்பதுக ளாச்சு- உன்
உருவங்கள் நான் தொட்டு
பூவிதழாய்ப் பார்த்ததெலாம்
மறவே- னின்னும்- அறவே!

பவளத்தால் செய்ததுன்றன் மேனி- நான்
பயணித்த நல்லதொரு தோணி- இப்
புவனத்தில் உன்னழகை
பூக்களுமே பெற்றதில்லை
சிலையே- பெருங்- கலையே!

பல்வரிசை பார்ப்பதற்கோர் இனிமை- அதை
பார்ப்பதற்கு வேண்டுமடி தனிமை- என்
இல்லாளாய்ப் பெற்றெடுக்க
இயலாமல் போனதொரு
கொடுமை- யிலுங்- கொடுமை!


சமுத்திரம்

மெய்யன் நடராஜ்

முத்துக்களை பதுக்கி
முரண்பாடுகளை செதுக்கி
பத்திரப்படுத்தியிருக்கிறாய்

திருட்டுப் போகாத
திமிங்கிலங்களை
திரிய விட்டு விட்டு
ஆமைபோல் ஊமையாய்
ஆரணங்குகளின் மனதாய்
ஆழமாய் ஓர்
அழகான ஆபத்து நீ
எங்கள் கொள்ளைக்காரர்களை
தவிர வேறு
எவரிடமும் எதுவும் இல்லை
மறைத்து வைக்க
ஆனால் உன்னில்
நாங்கள் தெரிந்து
கொண்டதை விடவும்
தெரியாததுகளே அதிகம்
என்றாலும் நீ
அடுத்தவர் பொருளுக்கு
ஆசைப்படாதவள்
அதனால்தான் எங்களில்
எவரை நீ உன்
வெள்ளை அலைகளால்
கடத்தி இழுத்துச் சென்றாலும்
மணம் கோராமல்
பிணமாக வெளியேற்றுகிறாய்

முன்போர் நாளில்
இந்த மண்ணின்
அடியடுப்பில் இயற்கை
பற்றவைத்த பிரளயத்தீயால்
நீ பொங்கிய பொங்கல்
எங்களில் பலரையே
சுவைத்து விட்டது
என்றாலும் நீ
இனியொரு தடவை அந்த
சுனாமி பொங்கலை
பொங்கி விடாதே

இன்னும் மனுதுக்குள்
பொங்கிக் கொண்டிருக்கும்
எங்கள் உறவுகள்
இனியும் பொங்குவதற்கு
பொங்கலென்று ஒன்று
இல்லாமல் போகும்

உன்னால் முடியுமானால்
கொஞ்சம் உப்பை மட்டும்
எங்கள் விழிகளுக்குள்
சேமித்துவிடு போதும்
சுகமான தண்ணீர்
இல்லாது போகும் போது
பொங்கிக் கொள்கிறோம்


விழுந்த காலம்...

எஸ். சிபானி முஹம்மட்

ரோஜா செடி முள்ளுடைத்து - பூ
இதழ்கள் கிழித்து இரத்தம் குடிக்கும்
சித்திரவதை கண்டு - பால் நிலா
அழுத கண்ணீர்...
சாட்சி சொல்லாமல் சாக்கடை
சேர்ந்ததோ...

நஞ்சு தடவிய கத்தியோடு - உயிரறுக்க
பக்கத்திலேயே- சில நன்றி கெட்ட
நட்புகள்...
உயிரோடு புதைக்க பாதாள - குழி
வெட்டுகின்றன பல - ஊழ்
உற்ற உறவுகள்...
விஷம் ஏற்றி கொஞ்சம் கொஞ்சமாய்க்
கொல்வதற்கு - பாவங்கள்
பல சேர்த்துக் கொண்டு ஊர்கின்ற
பதவிச்சட்டை போர்த்திய
பல விஷப்பாம்புகள்...
புரியாத வஞ்சனைகளின் வரவேற்புகளோ...
குள்ளநகரி கூட்டமொன்று
தெருவோரம் நின்று - சிறுத்த
மனதிலிருந்து - எய்யும்
காம அம்புகள்...
பள்ளிசெல்லும் பச்சைக்கிளி
கூட்டங்களின் - நடுவில்
மாறுகிறதோ...

சிறுமைகள் சிதறி
பழியுணர்ச்சி பரவி
பொய்மைகள் பெருகி
உண்மைகள் உருகி
கோபங்கள் உருப் பெருகி
வறுமைகள் செறிந்து
கெளரவம் சிதைந்து
உறவுகள் உடைந்து
புன்னகைகள் புண்டடும்
கறை விழுந்த காலம்


கொலை வெறி

காத்தான்குடி ஜெமஸ்த்

‘வை திஸ் கொலைவெறி’
இவ்வரி தமிழ் கொல்லும் வெறி...
வள்ளுவன் வந்து
வளர்த்த தமிழை
எள்ளளவாவது நீ
எண்ணியிருந்தால்
எவ்வாறு இதை
எழுதியிருப்பாய்...

இவ்வரி காண
கம்பன் இருந்திருந்தால்
வம் பெதெற்கென்று
வந்த வழியிலேயே மனம்
வெந்து நொந்து
திரும்பியிருப்பான்...

பாரதி செவியில், இந்த
பாவரி சென்றிருந்தால்
பாவி உன்னை அவன்
பாதணி கொண்டு
பதம் பார்த்திருப்பான்
பார்விட்டுப் பிரிந்ததால், நீ
பிழைத்துக் கொண்டாய்...

கண்ணதாசன் பிறந்த
மண்வாசனை, உன் இந்த
மந்த யோசனையை
பிறமொழியாசகமென்று
லேசாகவாவது உன்னிடம்
பேசிவைக்கவில்லையா?...

தமிழ் தாரம்
மட்டும் தொடும்
சரித்திர இலக்கிய
உத்தம புருஷர்கள்
இத்தனை உதாரணமிருக்க, காம
பித்தனையொத்த, இந்த
இலக்கிய விபச்சாரம்
உனக்கு தேவைதானா?...

இலட்சக்கணக்கில்
இரத்தினச் சொற்கள்
இங்கங்கென்று
இறைத்துக் கிடக்க, பிறமொழியில்
பிச்சை யெடுத்துப்பிழைக்க
நீ என்ன
பித்தனா? பாவியா?...

உன்னில் தமிழ்
வரட்சியா? இல்லை
நினைத்துக் கொண்டாய்
இது புரட்சியா?
புரிந்துகொள், உன்
புத்தியில் தான்
புரையோடிப் போயுள்ளது
மருட்சி ...

இளைஞர்கள் கிளர்ந்து
இவ்வரி இசைக்கின்றனர்
இதுகண்ட தமிழ் இனி
மலரப்போகும் காலமதில்
மடியப் போகுதேயென்று
மனம் தளர்ந்து, என்
மனசாட்சி மானத்திடம்
மடிப்பிச்சை கேட்கின்றது...

தரமிழந்த ரசனைகளை
விசுவாசங் கொண்டு
தறுதலைகளால்
உருவாக்கப்பட்ட இவ்
விரசவசாகங்களை
சும்மா கூட நீ
உச்சரித்தால், இனி
சும்மா தமிழை
அழிப்பவர்களில், நீயும் ஒரு
அங்கத்தவனென உனை
எச்சரிக்கிறேன்...

‘வைதிஸ் கொலைவெறி’
இவ்வரி தமிழ் கொல்லும் வெறி.


புன்னகை

அல் - கையிஸ்

அகத்திலே தோன்றி
முகத்திலே மலரும்
அழகிய மலரே புன்னகை

நற்குண மென்னும்
நன்னூலிற்கு
முன்னுரையாய் வருவது புன்னகை

பொன்னகையிலுஞ்
சிறந்த தோரணி கலன்
பெண்ணுக்குப் புன்னகை

பூவையின் முகத்திலே
மலரும் புன்சிரிப்பு
காளையர்க்குச்
செங்கம்பளம் விரிப்பு

கன்னியின் முகத்திலே
காணும் முறைப்பு
காடையர் சிரிப்புக்கொரு
முற்றுத் தரிப்பு


மிஞ்சுவது சோகமே!...

ஏ.ஆர். ஏ. லத்தீப்

விண்ணைத் தொடும் ஆசைகளை வளர்க்கின்றான்- மனிதன்
வித்தகன் தானென்ற நினைவில் மிதக்கின்றான்!
கண்ணை அதன் போக்கில் களிக்க விடுகின்றான்- விதியால்
கண்ணை இழந்தே கலங்கித் தவிக்கின்றான்!

வல்லவன் இறைவன்தான் என்பதை மறக்கின்றான்- தீய
வழிதனில் பொருள் தேடி வாழ நினைக்கின்றான்
சொல்ல வல்ல வார்த்தைகளை மறந்து வாழ்கின்றான்- திமிரான
வார்த்தைகளால் மற்றவரின் மனத்தை வதைக்கின்றான்!

சொகுசான வாழ்வு வந்தால் சொந்தங்களை மறக்கின்றான்- ஏழைகள்
சொரிகின்ற கண்ணீரிலே சுகம் காண விழைக்கின்றான்
வகுத்து வைத்த இறைவன் கட்டளையை மறக்கின்றான்- தான்
வானத்தளவு உயர்ந்து விட்டதாகத் துள்ளுகின்றான்!

அளவிலாச் சொத்துக்குச் சொந்தக்காரன் தான் என்கின்றான்- தனக்கு
ஆறடி நிலமே சொந்தமென்பதை மறந்து வாழ்கின்றான்
களவிலா உளங்கொண்டு வாழ மறுக்கின்றான்- என்றோ
காலனின் கோரப்பிடிக்குள் சிக்கத்தான் போகின்றான்!

அன்று உண்மை நிலை உணர்ந்து துடிக்கத்தான் போகின்றான்- ஆனால்
பயனில்லை, அவன் நிலைமை மறுமையில் பரிதாபந்தான்!
இன்றிருக்கும், நிலையினின்றும் அவன் இறங்கி விட்டால்... பாவம்
சொந்தங்களும் வருமோ? சொல்லொணாது, மிஞ்சுவது சோகமே!


பேனா முனையினிலே...

வரக்காமுறையூர் ராசிக்

யுக விடிவுக்காய்
கவி வடிக்க
பேனா பிடித்த
சமுதாய விடி வெள்ளிகளே!
விண் மீன்களை
விளக்குகளாக்கி
விதியின் விலாசங்களை
திருத்தி எழுதுங்கள்

சமுதாய சாக்கடைகளுக்கு
சமாதி கட்டி
சத்தியங்களுக்கு
உயிர் கொடுத்து
புனித பேனாக்களால்
புரட்சியை எழுதுங்கள்

யுத்தங்கள் செய்து
ரத்தங்கள் சிந்தி
ஊனமாகிப் போன
மனிதத்திற்கு
எழுது கோல் எடுத்து
ஊன்றுகோல் கொடுங்கள்

சாதிகள் பேசி
சமத்துவத்தற்கு
சமாதி கட்டும்
சமூக விரோதிகளை
சத்திய வரிகளால்
தகர்த்து எறியுங்கள்
பிரிந்தோடும்
மனித நதிகளுக்கு மேலே
ஒற்றுமை பாலம் அமைத்து
சகோதரத்துவ
நடமாட்டங்களுக்கு
வித்திடுங்கள்

வசந்தங்களை
தொலைத்துவிட்டு
வேதனை வீதிகளில்
விடிவுகளுக்காய்
கனவு காணும்
அகதிச் சகோதரங்களுக்காய்
பேனா முனைகளால்
குரல் கொடுங்கள்

காதரிடமும்
காமினியிடமும்
ஒரு துளி ரத்தம் வாங்கி
கந்தனைக் காப்பாற்றுங்கள்

கவிதையாய் அழுது
வீரியமாய் எழுந்து
பேனாக்களின்
வெளிச்சத்தில்
சமுதாய விதிகளைத்
திருத்தி எழுதுங்கள்


குழந்தை

கருணாகரன்

மரத்தின் இனிய சங்கீதத்தை மிஞ்சுமோர்
கீதத்தோடு பாடுகிறது. குயில்
மரம் அறியும். குயிலின் பாட்டு
இனியது. தன் கனியிலும்
கருணை மிகக்கொண்ட கனிவிலும் மிக என்று.

நான் கேட்டேன்.
குயிலின் கீதத்தை மரம் பாடியதை
அலைந்தலைந்து
கண்கள் குயிலைத் தேடிய போதும்
தோன்றவேயில்லைக் குயில்

மரமே பாடியதா குயிலின் பாடலை?
குயிலை மறைக்க மரம்
பாடலை மறைக்க முடியாமல்
கைவிரித்துச் சிரித்த குழந்தை


வானவில்லே

அனுஷா அkஸ்

இறைவன் அள்ளித்தந்த அற்புதங்களில்
வானில் நீ போடும் நிறக்கோலமும்
வசீகரத்தோற்றமும்
உன்னுடைய தனி அழகல்லவா...

வளியின் ஈரப்பதன்
காற்றோடு அள்ளி வந்து
நீ போடும் ஒளி வட்டம்
எத்தனை எத்தனை வர்ணஜாலங்களல்லவா...

எத்தனை நிறங்கள்
சூரியகதிர் குடும்பத்தோடு
பட்டுத்தெறித்து பரிவட்டம்போடும்
இயல்புகள் உன்னுடையதல்லவா...

எங்கு சென்றாலும்
ஈரத்தன்மை உண்டெனில்
அழகு உண்டு என்பதற்கு
நீயும் ஓர் உதாரணமல்லவா...

வானவில்லே
உன் அழகு நிறம் இவற்றுக்கே நிகரேது
மழைக்காலம் மட்டுமல்லாமல்
எக்காலத்திலும் பார்த்து ரசிக்க
வரம் தந்து உதவுவாயல்லவா...

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.