புத் 64 இல. 10

கர வருடம் மாசி மாதம் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ர.ஆகிர் பிறை 11

SUNDAY MARCH 04,  2012

 

நாட்டை அபிவிருத்தி செய்யும் பணியில்

நாட்டை அபிவிருத்தி செய்யும் பணியில்

அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்
 

பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்'

மஹிந்த சிந்தனையின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வரும் கிராம அபிவிருத்திக்கு உதவிகளை வழங்கும் திட்டத்தின் கீழ் 2012 ஆம் ஆண் டுக்கு நுவரெலியா மாவட்டத்திற்கு 10631 இலட்சம் ரூபா பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் பெற்றுக்கொடுக்கப்படுமென பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார். கடந்த 2012.02.26 அன்று நுவரெலியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே பொருளாதார அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

நுவரெலியா மாவட்டத்தின் அபிவிருத்தி செயற்குழுக் கூட்டம் கால்நடை வள கிராமிய மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சரின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவராக அமைச்சர் தொண்டமான் செயற்பட்டு வருகிறார்.

இதன் போது கருத்துத் தெரிவித்த அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் 2012 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டின் மூலம் இந்த நிதி நுவரெலியா மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. “ஒரு கிராமத்திற்கு ஒரு வேலைத்திட்டம்” என்ற செயல் திட்டத்தின் கீழ் இவ் அபிவிருத்தித் திட்டம் நடைமுறைப்படுத்தப் பட்டு வருகின்றது.

அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் தலைவர்களுடனும் கலந்தாலோசித்து இவ்வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்யும் போது மக்களுக்கும் கிடைப்பதற்கு ஆவன செய்யப்படும்.

அதன்படி ஒரு கிராமசேவகர் பிரிவிற்கு ஒரு வேலைத்திட்டம் முன்வைக்க முடியும். பிரதேச சபை உறுப்பினர் ஒருவருக்கு ஏதாவது ஒரு கிராம சேவை பிரிவுக்கு ஒரு வேலைத்திட்டத்தையும் மாகாணசபை உறுப்பினர் ஒருவருக்கு குறிப்பிட்ட மாவட்டத்திற்குள் 15 கிராம சேவகர் பிரிவுகளுக்கு 15 வேலைத்திட்டங்கள் முன்வைக்க முடியும். விசேடமாக “ஜனசபா” ஊடாக வழங்கப்படும் யோசனைகள், வேலைத்திட்டங்களின் படி பிரதேசத்தைத் தொடர்புபடுத்தம் “ஜனசபா” தலைவர் ஊடாக வேலைத்திட்டங்களை முன்வைக்க முடியும்.

இதை விட சிறிய நகர அபிவிருத்திக்கு அதி மேதகு ஜனாதிபதியின் “புரநெகும” திட்டத்தின் கீழ் வலப்பனை, அம்பகமுவ பிரதேசங்களில் சிறிய இரண்டு நகரங்கள் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த 2011 ஆம் ஆண்டு காபட் பண்ணும் திட்டத்தின் கீழ் பல பாதைகள் திருத்தப்பட்டன. அதை விட 2012 ஆம் ஆண்டு பாதைகள் காபட் பண்ணப்பட உள்ளன. இச்செயல்பாடு வரலாற்றில் அதிகூடிய பாதைகள் காபட் போடப்பட்டு செப்பனிடப்பட்ட ஆண்டாக இருக்கும்.

ஒரு கிராமத்திற்கு ஒரு வேலை என்ற வேலைத்திட்டத்தின் கீழ் முன்வைக்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் 2012 மார்ச் மாதம் 23 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட வேண்டும். மக்களின் பிரதிநிதிகள் அரச உத்தியோகத்தர்கள் இவ்வேலையை மிகவும் பொறுப்புடன் செயல்படுத்துவீர்கள் என நம்புகின்றேன். நாம் செயல்படுத்தும் அனைத்து வேலைத்திட்டங்களும் மக்களின் அத்தியாவசிய வேலைத்திட்டங்களாகும். எனவே பொதுமக்களின் ஒத்துழைப்பும் இவ்விடயத்தில் மிகவும் அவசியம். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முறையாக நாட்டை அபிவிருத்தி செய்யும் நேரத்தில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டுமென கேட்டுக்கொள்கின்றேன்.

நுவரெலியா மாவட்டத்தில் தேர்தல் பிரிவுகளாக கொத்மலை, வலப்பனை, ஹங்குரன்கெத்த, நுவரெலியா, மஸ்கெலியா ஆகிய ஐந்து பிரதேச செயலகப் பிரிவு களுக்குட்பட்ட ஒரு மாநகர சபை இரண்டு நகர சபைகள் மற்றும் ஐந்து பிரதேச சபைகளும் இயங்கி வருகின்றன. கிராம சேவை பிரிவுகள் 491 இயங்கி வருகின்றன.

இந்த கிராம சேவக பிரிவுகளுக்கு கிராமத்திற்கான பாதை, சிறிய நீர் விநியோக திட்டம், பாலர் பாடசாலைகள், தொழில்நுட்ப நிலையம், நடைமுறையிலுள்ள சிறிய வைத்திய நிலைய விஸ்தரிப்பு மற்றும், ஒரு கிராம சேவைகர் பிரிவுக்கு ஒரு விளையாட்டு மைதானம் என்ற அடிப்படையில் ஒரு பிரிவுக்கு 10 இலட்சம் வீதம் கிராம சேவகர் பிரிவுகள் 491 இற்குமாக ரூபா 4910 இலட்சம் ஒதுக்கப்படவுள்ளது.

இது தவிர பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் ஊடாக நடைமுறைப்படுத்தப்படும் “புபுதும” திட்டத்தின் ஊடாக “கமநெகும” மூலம் கொத்மலைக்கு 1128 இலட்சமும், நுவரெலியா, மஸ்கெலியா மாவட்டங்களுக்கு 1214 இலட்சமும், வலப்பனை 2437 இலட்சமும், ஹங்குரன்கெத்த 942 இலட்ச ரூபா வீதம் மொத்தமாக 5721 இலட்ச ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களுக்கும் ஒதுக்கப்பட்ட நிதியின் மொத்த தொகை 10631 இலட்சமாகும்.

இந்த வேலைத்திட்டத்திற்கு அமைச்சர்களான ஆறுமுகன் தொண்டமான், சீ.பி. ரட்நாயக்க, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, பிரதியமைச்சர்களான நவீன் திஸாநாயக்க, முத்து சிவலிங்கம், மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான பி. இராஜதுரை, பி. திகாம்பரம், ஜே. ஸ்ரீரங்கா, நுவரெலியா மாவட்ட செயலாளர் டி.பீ.ஜீ. குமாரசிறி மற்றும் அரச உயர் அதிகாரிகள் பொறுப்பாக இருப்பர் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

நுவரெலியா மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மாகாண சபை, மாநகர சபை, நகர சபை, பிரதேச சபை உறுப்பினர்கள், தலைவர்கள், மத்திய மாகாண முதலமைச்சர், நுவரெலியா மாவட்ட செயலாளர், மற்றும் அரச உயர் அதிகாரிகள் பலரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.