புத் 64 இல. 10

கர வருடம் மாசி மாதம் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ர.ஆகிர் பிறை 11

SUNDAY MARCH 04,  2012

ர~;ய அரசியலில் விளாதிமிர் புட்டின்

ர~;ய அரசியலில் விளாதிமிர் புட்டின்

ரஷ்யாவில் இன்று ஜனாதிபதித் தேர்தல்

ரஷ்யாவில் இன்று (04) ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுவதால் எல்லோருடைய கண்களும் கிரம்ளினுக்குள் மீண்டும் விளாதிமிர்புட்டின் நுழைவாரா என்பதையே பார்த்துக் கொண்டிருக்கின்றன. ரஷ்ய அரசியலில் விளாதிமிர் புட்டின் அணையா விளக்கு.

பிரதமராகவும், ஜனாதிபதியாகவும் மாறி மாறிப் பதவி வகித்து அயல் நாடுகளையும் அகிலத்தையும் ஒரு கலக்குக் கலக்கியவர். 1999 ஆம் ஆண்டு காலப் பகுதியில் ரஷ்யாவின் ஜனாதிபதியாக பொரிஸ்யெல்ஸ்ரின் கடமையாற்றும் போது பிரதமராகவிருந்து பிரபலம் பெறத் தொடங்கியவரே விளாதிமிர் புட்டின்.

பின்னர் 2000 ஆம் ஆண்டு முதல் 2008 வரை இரண்டு முறைகள் ஜனாதிபதியாகவிருந்தார். ரஷ்ய அரசியலமைப்பின் படி நான்கு வருடங்களுக்கு ஒருமுறை ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும். ஒருவர் எத்தனை முறைகளேனும் ஜனாதிபதியாக இருக்கலாம். ஆனால் தொடர்ந்து இரண்டு முறைகளுக்கு மேல் பதவி வகிக்க முடியாது.

மூன்றாவது முறையாகவும் பதவி வகிக்க விரும்பினால் ஒருமுறை விட்டுக் கொடுக்க வேண்டும். இதனால் 2008 ஆம் ஆண்டு ஜனாதிபதி ஆசனத்தை விட்டு கொஞ்சம் இறங்கியிருக்க நேர்ந்தது. இதனால்தான் மெத்விடிவ் 2008 முதல் 2012 வரை ஜனாதிபதியாகப் பதவி வகித்தார்.

அப்போதைய தேர்தலில் எதிர்க் கட்சிகள் பலமாகயிருந்தாலும் மெத்விடிவ் என்பவரை புட்டினே நெறிப்படுத்துகிறார் என்பதற்காகவே ரஷ்ய மக்கள் மெத்விடிவை ஜனாதிபதியாக்கினர்.

இவருடைய ஆட்சிக் காலத்தில் ரஷ்யாவில் பல பிரச்சினைகள் எழுந்த போதும் பிரதமராக புட்டின் இருந்து இயக்கியதால் சகல பிரச்சினைகளும் தீர்வுக்கு வந்தது.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் பாராளுமன்றத் தேர்தலின் போது புட்டின் கட்சி கடுமையான பின்னடைவைக் கண்டது. இந்நிலை மீண்டும் புட்டினையே ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை தோற்றுவித்தது. 2008 முதல் 2012 வரை மெத்விடிவ் ஜனாதிபதியாக இருந்த காலத்தில்கூட புட்டின் மெத்விடிவ் இடையே அடிக்கடி பனிப்போர் மூண்டதும் பின்னர் இணக்கம் வந்ததும் தெரிந்ததே.

புட்டின் தலைமை தாங்கும் ஐக்கிய ரஷ்ய கட்சியில் திறைமையில்லாத அனுபவமற்ற வேட்பாளரை களமிறக்கி இம்முறை எப்படியாவது தேர்தலில் வெற்றி பெற வேண்டுமென்பதற்காக எதிர்க் கட்சிகள் செய்யாத முயற்சிகளே இல்லை. புட்டினையும் மெத்விடிவையும் மோதவிட்டு ஐக்கிய ரஷ்யக் கட்சியை உடைக்க வேண்டுமென்ற முயற்சி வெற்றியடைய எதிர்க்கட்சிகள் வேண்டாத தெய்வமுமில்லை.

அமெரிக்கா உள்ளிட்ட ரஷ்யாவின் எதிரி நாடுகளிடமும் எதிரணிகள் ஆலோசனை கேட்டன. இதன் எதிரொலிகளே இப்போது ரஷ்யாவெங்கும் ஆர்ப்பாட்டங்கள்.

மேலைத்தேய நாடுகளின் தூண்டுதலினால் புட்டின் தலைமைதாங்கும் ஐக்கிய ரஷ்ய கட்சியை பிளவுபடுத்தவும், தோற்கடிக்கவும் பிரயத்தனங்கள் பிரயோகிக்கப்படுகின்றன. இவற்றையெல்லாம் கண்டும் காணாதது போல் பாவனை செய்யும் புட்டின் அண்மையில் கடுமையான தொனியில் எச்சரித்தார்.

மோசடிகள், கலகங்களூடாக ஐக்கிய ரஷ்யக் கட்சியை தோற்கடிக்க முடியாததெனவும் சூளுரைத்துள்ளார்.

இன்று நடைபெறும் தேர்தலில் 59.9 வீதமான வாக்குகளைப் பெற்று விளாதிமிர் புட்டின் மூன்றாவது முறையாகவும் ரஷ்யாவின் ஜனாதிபதியாவார் என்று கணிப்பீடுகள் காட்டியுள்ளன.

கொமினியூஸ்ட் கட்சி வேட்பாளர் ஷியாகனோ 15.1 வீத வாக்குகளையும் மற்றுமொரு கட்சி வேட்பாளர் 7.1 வீத வாக்குகளையும் பெறுவர் என்ற தகவல்கள் வெளியானதால் ரஷ்யாவுக்கெதிரான நாடுகள் அலட்டாகிவிட்டன.

செச்னிய தீவிரவாதிகளைக் கொண்டு புட்டினைக் கொலை செய்யவும் முயற்சிகள் நடந்துள்ளன. எதிரியை எவ்வாறாயினும் தேர்தல் களத்திலிருந்து வீழ்த்த வேண்டுமென்ற வேகத்தில் சில வெளிநாடுகள் ரஷ்ய ஜனாதிபதித் தேர்தலில் தலையை நுழைத்துள்ளன.

வழமையாக நான்கு ஆண்டுகளைக் கொண்ட ஜனாதிபதி பதவிக்காலம் இம் முறையிலிருந்து ஆறு ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளதாம். ஏற்கனவே ரஷ்யாவின் வளர்ச்சியை விண்ணளவுக்கு உயர்த்தியுள்ள விளாதிமிர் புட்டின் மீண்டும் ஜனாதிபதியாவது எதிரி நாடுகளுக்கு வயிற்றெரிச்சலே.

அரபு நாடுகள் மீதான மேற்குலகின் பார்வையிலிருந்து ரஷ்யா வேறுபட்டு நிற்கின்றமை, ஈரான் சிரியா விடயங்களில் ரஷ்யாவின் நிலைப்பாடுகள் அமெரிக்காவையும், மேற்குலகையும் கோபமூட்டியிருக்கும். எனவேதான் ரஷ்யாவில் நீண்ட காலமாகவுள்ள ஐக்கிய ரஷ்ய கட்சியின் ஆட்சியை வீழ்த்திப் பார்க்க ஆசைப்படுகின்றன.

ஆட்சியிலுள்ள கட்சியென்பதால் அரச வளங்களையும் இயந்திரங்களையும் புட்டின் நிறையவே கையாள்வார் என்ற விமர்சனங்களுக்கு மத்தியில் மாகாண ஆளுநர் ஒருவர் பதவி விலகியுள்ளார்.

உடல் நலக்குறைவு காரணமாகவே பதவியை இராஜினாமாச் செய்வதாக இவர் கூறினாலும் புட்டினுக்கு ஆதரவாக வேலை செய்தார் என்ற குற்றச்சாட்டுகளும் உள்ளன.

எப்படியாவது தேர்தலில் வென்றுவிட வேண்டும் என்பதற்காக மெத்விடிவ் காலத்து குறைகளை எல்லாம் களையும் நோக்கில் பம்பரம் போல் செயற்படுகின்றார் புட்டின். அண்மையில் இடிந்து வீழ்ந்த தொடர் மாடிக் குடியிருப்புப் பகுதிகளில் ஏற்பட்ட சேத விபரங்களை நேரடியாகச் சென்று விளாதிமிர் புட்டின் பார்வையிட்டதுடன் அம்மக்களுக்கு ஆறுதல் வார்த்தைகளையும் அள்ளி வீசினார்.

இப்போது ரஷ்யாவில் இடம்பெறும் ஆர்ப்பாட்டங்கள் புட்டினின் அரசியல் வாழ்வை பாதிக்குமா அல்லது ஐக்கிய ரஷ்யக் கட்சியை வீட்டுக்கு அனுப்பி வைக்குமோ தெரியாது. இவையெல்லாவற்றை யும் விட விளாதிமிர் புட்டினின் உயிரைப் பறித்துக் கொள்ளுமோ என்ற அச்சமும் ஆதரவாளரிடமுள்ளது. ஆனால் இவ்வாறான தாக்குதல்கள் அச்சுறுத்தல்களுக்கு அடங்கிப் போகும் கோழையுமல்ல புட்டின். ஏன் எனில் தொடர்ச்சியான அச்சுறுத்தல்கள் இல்லாது ஒரு அரசியல் வாதியால் வாழ முடியாது என்று புட்டின் கூறியுள்ளாரே.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.