ஹிஜ்ரி வருடம் 1436 ஷஃபான் பிறை 14
மன்மத வருடம் வைகாசி மாதம் 19ம் நாள் செவ்வாய்க்கிழமை

TUESDAY, JUNE 02 ,2015
வரு. 83 இல.129
 
சங்கமித்தையின் வருகையை நினைவு கூரும் பொசன் பண்டிகை

சங்கமித்தையின் வருகையை நினைவு கூரும் பொசன் பண்டிகை

,ன்று பொசன் பெளர்ணமி தினம் ஆகும். வெசாக் பூரணை யை அடுத்து வருவதே பொசன் பெளர்ணமி தினம் இந்து சமுத்திரத்தின் முத்தென அழைக்கப்படுகின்ற நம் நாட்டில் பெரும்பான்மை சமூகத்தினராக விளங்குபவர்கள் சிங்கள மொழியை தாய் பாஷையாகக் கொண்டுள்ள பெளத்தர்களே யாவர். புத்த சமயத்தில் இத்தினத்திற்கு ஆன்மிகரீதியில் முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.

இப்புனித பண்டிகையை கருத்திற் கொண்டு லேக்ஹவுஸ் நிறுவனம் இலங்கை மின்சார சபையின் அனுசரணை யுடன் மிஹிந்தலை ஆலோக பூஜையை நடத்தி வருகின்றது. ஜூன் மூன்றாம் திகதிவரை இடம்பெறவிருக்கும் இந் நிகழ்வை அமைச்சர் காமினிஜயவிக்கிரம பெரேரா வைபவரீதியாக ஆரம்பித்து வைத்தார்.

ஊடக அனுசரணையாளராக இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபவனம், சுயாதீன தொலைக்காட்சி லக்ஹண்ட வானொலி என்பன தமது பங்களிப்பினை நல்கி வருகின்றன. அபான்ஸ் நிறுவனம், டயலொக் நிறுவனம், இலங்கைவங்கி என்பனவும் அனுசரணை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

பொசன் பெளர்ணமி தொடர்பான உச்சகட்ட நிகழ்வுகள் மிஹிந்தலையில் இடம்பெற்று வருகின்றமையினால் இலங்கையின் ஏனைய பகுதிவாழ் பக்தர்கள் சிரமமின்றி கலந்து கொள்ளு முகமாக தொடர்ந்து இ.போ.ச. போன்ற வற்றின் சேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. பொசன் நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் மக்களின் நலன் கருதி அநுராதபுரத்திலிருந்து மிஹிந்தலை வரை இலவச ரயில் சேவையும் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

பொசன் நிகழ்வுகள் பக்திபூர்வமாக நடைபெறும் இக்கால கட்டத்தில் அனைத்து மதுபானசாலை, இறைச்சி விற்பனை நிலையம் போன்றவை மூடப்பட்டுள்ளன.

புனித வெள்ளரசு மரச்சுற்றாடல் ஜயஸ்ரீ மகாபோதி என்பவற்றில் பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் ஒன்று கூடுவதனால் சுற்றாடல் மாசடைய நிறைய வாய்ப்புக்கள் உருவாகலாம். எனவே மாவட்டச் செயலாளரின் பரிந்துரைக்கு அமைவாக காவல்துறை, சுகாதாரத் திணைக்களம் என்பவை சுற்றாடல் மாசு அடையாமல் இருக்க வேண்டிய சகல ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளன. பொசன் நிகழ்வுகளில் கலந்து கொண்டிருக்கும் பக்தர்களின் பாதுகாப்பை பொலிஸார் உறுதிப்படுத்தி வருகின்றனர்.

இன்றைய பொசன் பெளர்ணமி தினம் அரசாங்க பொது வர்த்தக வங்கிவிடுமுறை தினமாகும். பொசன் பெளர்ணமி புத்த மதத்தோடு நெருங்கிய தொடர்பினை கொண்டுள்ள நாளாகும்.

இனி உலகெங்கும் முதன் முதல் புத்த சமயம் உண்டான வரலாற்றை சிறிது நோக்குவோம். நேபாளத்தின் லும்பினி என்னும் இடத்தில் சித்தார்த்தர் என்னும் அரச குமாரர் அவதரித்தார். ஜோதிடர்கள் எழுதிய ஜாதகத்தின்படி இருபத்தொன்பது வயதை எட்டியதும் துறவறம் பூண்டு நிஷ்டையில் அமர்ந்தார். சித்தார்த்தரின் தவம் பலித்தது அவருக்கு ஞானோதயமும் கிட்டியது, இதனைத் தொடர்ந்து சித்தார்த்தர் போதி மரத்து மாதவன் என்றும் சிறப்புப் பெயருடன் புத்த சமயத்தை மக்களுக்கு போதிக்கத் தொடங்கினார்.

முதலில் வாசனாரி என்னும் இடத்தில் ஐந்து சீடர்களைத் தெரிவு செய்து புத்த சமயத்தின் கோட்பாடுகளை விளக்கினார். இதனைத் தொடர்ந்து பெளத்த மதத்தை உலகெங்கும் பரப்புவதற்கு வேண்டிய ஒழுங்குகளும் செய்யப்பட்டன. புத்தர் பிறந்த இந்தியாவில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் புத்த சமயத்திற்கு மாறினார்கள்.

பாரதத்தில் நடைபெற்ற கலிங்கத்துப் போரில் வெற்றிவாகை சூடிய அசோகச்சக்கரவர்த்தியும் பெளத்தராக மாறினார். இதற்குரிய காரணத்தை கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகின்றனர். அதாவது யுத்தம் நிறைவுபெற்ற கையோடு அசோக சக்கரவர்த்தி யுத்த களத்தைப் பார்வையிட புறப்பட்டுச் சென்றார். போர்வீரர் அங்கவீனர்களாகவும் குற்றுயிராகவும் அவஸ்தைப்படுவதைக் கண்டதும் அவரது மனம் பதறியது, பின்னர் அன்பு, கருணை நிறைந்த வாழ்வே மனநிம்மதியைத் தரும் என்பதையே புத்தசமயம் வெளிப்படுத்துகின்றன என்பதை நன்கு உணர்ந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து அரச குடும்பமே பெளத்த மதத்தைத் தழுவிக் கொண்டது. உடனடியாகவே மகன் மஹிந்தையையும் மகள் சங்கமித்தையையும் புத்த சமயத்தை பரப்பும் பணியில் ஈடுபடுத்தினார்.

இதன் பிரகாரம் இலங்கையில் புத்த சமயத்தைப் பரப்பும் நோக்கில் சங்கமித்தை இலங்கைக்கு வருகை தந்தார். துணைக்கு மஹிந்ததேரரையும் அழைத்து வந்த அவர் வெள்ளரசு மரக்கிளையொன்றினையும் எடுத்து வந்தார். பொசன் பெளர்ணமி தினத்தன்று அவர் தனது இலங்கை விஜயத்தின் ஞாபகார்த்தமாக வைபவ ரீதியாக அநுராதபுரத்தில் நாட்டிவிட்டுச் சென்றார். ஆகவே ஆண்டுதோறும் வருகின்ற பொசன் பெளர்ணமி தினத்தில் ஜயசிறி மகாபோதியில் புத்த சமய அனுஷ்டானங்கள் இடம்பெறுவதையும் காணக்கூடியதாகவுமுள்ளது.

புனித வெள்ளரசு மரத்தின் வளர்ச்சி தொடர்பான சகல அம்சங்களையும் அரசாங்கம் கவனித்து வருகின்றது.

இந்தியாவிலிருந்து பரப்பப்பட்ட புத்த சமயம் ஆசிய கண்டத்திலுள்ள பல பலநாடுகளுக்குச் சென்றடைந்தது. அவற்றுள் இலங்கை, மியான்மார் (பர்மா), திபெத், சீனா, கொரியா, ஜப்பான் என பட்டியல் நீண்டுகொண்டே செல்கின்றது.

இன்றைய தினத்தை இந்துக்கள் வைகாசி விசாகம் என அழைக்கின்றனர்.

சங்கமித்தை வருகையை நினைவு கூரும் பொசன் பெளர்ணமி தினத்தை யொட்டி அநுராதபுரம் மாவட்டத்திலுள்ள பாடசாலைகள் சில சுமார் ஐந்து நாட்கள் வரை மூடப்பட்டிருக்கின்றன.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி