ஹிஜ்ரி வருடம் 1436 ஷஃபான் பிறை 14
மன்மத வருடம் வைகாசி மாதம் 19ம் நாள் செவ்வாய்க்கிழமை

TUESDAY, JUNE 02 ,2015
வரு. 83 இல.129
 
சூரியப் புயல்களால் பூமிக்கு பேராபத்து

சூரியப் புயல்களால் பூமிக்கு பேராபத்து

hpச்சர்ட் கேரிங்டன் என்ற வானியல் ஆய்வாளர் 1859, செப்டம்பர் 1 அன்று தனது வான் ஆய்வகத்திற்கு வந்தார். ஆறு வருடங்களாக சூரியனை பொறுமையாக தொலைநோக்கி வழியே ஆராய்ச்சி செய்து வந்த அவருக்கு அன்று ஒரு இன்ப அதிர்ச்சி.

சூரியனின் மேற்பரப்பில் இரண்டு சிறிய திப்பி போல ஏதோ தெரிந்தது. அதன் அளவு பூமியின் குறுக்களவைவிட 10 மடங்கு பெரியது. அவர் அதை கவனித்துக் கொண்டிருக்கையிலேயே அது வெடித்து பெரும் தீ நாக்குக் கிளம்பியது.

அதை இன்னொருவருக்கு காண்பித்துதான் கண்டது நிஜம்தான் என்பதை உறுதி செய்ய உடனே வெளியே ஓடினார். ஒரு நிமிடத்திற்குள் அவர் திரும்பி வந்து தொலை நோக்கி வழியே பார்த்த போது அந்த சுவாலையின் சீற்றம் வெகுவாக தணிந்துவிட்டிருந்தது. அவர் பார்த்தது சூரியப்புயல்.

இதுபோன்ற சூரியப் புயல்கள் அதன் பின் அவ்வப்போது நடந்திருக்கின்றன. 1989ல்ஏற்பட்ட சூரிய சுவாலைப் புயலால் கனடாவின் கியூபேக் பகுதியில் தகவல் தொடர்புகள் 90 வினாடிகள் செயலிழந்தன. 2003 இல் ஏற்பட்ட சூரியப்புயலால் பல செயற்கைக் கோள்கள் தற்காலிகமாக செயல் இழந்தன. சிலமின் நிலையங்கள், சேதமடைந்தன. விமானங்களின் வழித்தடங்களில் மாற்றம் ஏற்பட்டது. இதுபோன்ற சிறிய சூரியப் புயல்களால் பெரிய பாதிப்பிருக்காது. ஆனால் கேரிங்டன் பார்த்த அளவுக்கு சூரியப்புயல் கிளம்பினால் ஜி. பி. எஸ். முதல் மின்னணுசாதனங்கள் வரை பலவும் பாதிக்கப்படும்.

மின் மாற்றிகள் வெடிக்கக் கூடும். சில தொலைத்தொடர்பு பாதிப்புக்களில் இருந்து மீள பல மாதங்கள் ஆகக்கூடும்.

கேரிங்டன் அளவு சூரியப் புயல் இன்று நேர்ந்தால் அமெரிக்காவில் மட்டும் 600 பில்லியன் முதல் 2.6 ட்ரில்லியன் டொலர்கள் வரை பொருளாதார சேதம் ஏற்படும் என்றும் மதிப்பிடப்படுகிறது லண்டனைச் சேர்ந்த காப்பீட்டு நிறுவனமான லொயிட்ஸ்.

ஆனால், இதுபோன்ற சூரியப் புயல்கள் 150 வருடங்களுக்கு ஒரு முறை நேரலாம் என்றும் லொயிட்ஸ் கணித்துள்ளது. அதன்படி பார்த்தால் இனி எப்போதும் நிகழலாம். ஆனால், நாசா விஞ்ஞானிகள் பூமியை பாதிக்குமளவுக்கு சூரிய புயல்கள் 500 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் நிகழும் என்று சொலலியிருப்பது நமக்குப் பெரும் ஆறுதலான விஷயம்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி