ஹிஜ்ரி வருடம் 1436 ஷஃபான் பிறை 14
மன்மத வருடம் வைகாசி மாதம் 19ம் நாள் செவ்வாய்க்கிழமை

TUESDAY, JUNE 02 ,2015
வரு. 83 இல.129

பொரளை பள்ளிவாசல் தாக்குதலின் உள்நோக்கம்

பொரளை பள்ளிவாசல் தாக்குதலின் உள்நோக்கம்

கொழும்பு, பொரளையில் உள்ள ஜும்மா பள்ளிவாசல் மீது கடந்த சனிக்கிழமை இரவு இனந்தெரியாத கும்பலொன்று கற்களை வீசித் தாக்குதல் நடத்தி விட்டுத் தப்பிச் சென்றுள்ளது. முகத்தை துணியால் மூடிக் கட்டிய படி வந்த சிலர் பள்ளிவாசலை நோக்கி கற்களை வீசிவிட்டு வாகனமொன்றில் தப்பிச் சென்றுள்ளனர்.

முன்னைய ஆட்சிக் காலத்தில் நாட்டின்பல இடங்களில் பள்ளிவாசல் கள் மீது இவ்வாறான தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. ஐந்தாறு மாதங்களுக்கு பின்னர் அதுபோன்றதொரு தாக்குதல் சம்பவம் பொரளையில் இடம்பெற்றுள்ளது.

பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்துவதென்பது மத நிந்தனைக் குரிய செயலாகும். இச்சம்பவமானது முஸ்லிம்களுக்கு மாத்திர மன்றி இன ஐக்கியத்தை விரும்புகின்ற அனைத்து மக்களுக்குமே வெறுப்பையையும் கவலையையும் அளிப்பதாகும். எந்தவொரு மதத்தையுமே இலக்கு வைத்து மேற்கொள்ளப்படுகின்ற இது போன்ற வன்முறை சம்பவங்களை இன, மத பேதங்களுக்கு அப் பால் நின்று அனைவருமே கண்டிக்க வேண்டும்.

முன்னைய ஆட்சிக்காலத்தின்போது பள்ளிவாசல்கள் மீது மேற் கொள்ளப்பட்ட தாக்குதலகளையும், பொரளையில் கடந்த சனிக் கிழமை இடம்பெற்ற சம்பவத்தையும் ஒரே தட்டில் நிகராக வைத்து அரசியல் ஆதாயம் தேடுவதற்கு சிலர் முயற்சிப்பது வெளிப்படையாகத் தெரிகிறது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான ஏ. எச். எம். அஸ்வர், பொரளை பள்ளிவாசல் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தை வன்மையாகக் கண்டித்திருக்கிறார். பள்ளிவாசல் மீது தாக்குதல் மேற்கொண்ட விஷமச் சக்திகளைக் கண்டிப்பதைப் பார்க்கிலும், இன்றைய அரசு மீது கண்டனம் தெரிவிப்பதிலேயே அஸ்வர் கூடுதல் கவனம் செலுத்தியிருப்பதை அவரது அறிக்கையின் மூலம் புரிந்துகொள்ள முடிகிறது.

‘பள்ளிவாசல் மீதான தாக்குதல் இன்றைய ஆட்சியிலும் இடம்பெறு கிறதா என முஸ்லிம்கள் கேள்வி எழுப்புவர்’ என்பதே அஸ்வ ரின் ஆதங்கமாக உள்ளது.

இன வாத சக்திகளை அவர் வன்மையாகக் கண்டித்திருக்க வேண் டும். கடந்த ஆட்சியில் கட்டியெழுப்பப்பட்ட இனவாத சக்திகள் மீண்டும் தலைதூக்குவதற்கு இடமளிக்கக் கூடாதென அவர் வலியுறுத்தியிருக்க வேண்டும். ஆனாலும் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென் பதே அஸ்வரின் கரிசனையாக உள்ளது. இவரது அறிக்கையையும் அரசியலாகவே நோக்க வேண்டியிருக்கிறது.

கடந்த ஆட்சிக் காலத்தின்போது இனவாதிகள் நூற்றுக்கணக்கில் கும்பலாகத் திரண்டு வந்து முஸ்லிம்களின் வணக்கத்தலம் மீது தாக்குதல் நடத்திய சம்பவங்களை இந்நாட்டு மக்கள் இன்னும் மறந்து விடவில்லை. முஸ்லிம்களுக்கு எதிரான இத்தகைய இன வாத அமைப்புகளை உருவாக்கியவர்கள் யாரென்பது வெளிப் படையாகவே தெரிவித்த விடயம். அந்த இனவாத அமைப்பு களின் பின்னணியில் இருந்த அதிகார சக்திகள் எவையென்பதும் தெரியாததல்ல.

பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்கள் அப்பட்டமான மத நிந்தனை ஆகும். முஸ்லிம்களின் உள்ளம் புண்பட்டிருந்த அவ்வேளைகளி லெல்லாம் “இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதுவித பிரச்சினை யுமே கிடையாது” என்று அறிக்கை வெளியிட்ட கேவலம் மிகுந்த அரசியல் பிரகிருதியையும் நாம் கண்டுள்ளோம். முஸ்லிம் சமூகத் திலிருந்து இவ்வாறான கருத்தை வெளியிட்டவரை நினைத்து சிறுபான்மை சமூகமே வெட்கித்தலைகுனிந்ததுண்டு. முஸ்லிம்க ளின் மனவேதனையைப் புரிந்துகொள்வதை விடுத்து, அரசியல் பிழைப்பையே முக்கியமெனக் கருதிய வெட்கக்கேடான மனிதர் களை சமூகப் பிரதிநிதிகளென்றோ, அரசியல் பிரதிநிதிகளென்றோ எவ்வாறு கருத முடியும்?

இப்போது இடம்பெற்றுள்ள பொரளை சம்பவத்தை இன, மத பேதங்களுக்கு அப்பால் அனைத்துத் தரப்பினருமே வன்மையா கக் கண்டிக்க வேண்டியது மிக அவசியம். அதேசமயம் இன்றைய அரசியல் சூழலில் இச்சம்பவத்தின் பின்னணி எதுவாயிருக்கு மென ஆழமாகச் சிந்தித்துப் பார்ப்பதும் அவசியமாகிறது.

ஆட்சி மாற்றத்தின் பின்னர் சிறுபான்மை மக்களுக்கும் அரசுக்கும் இடையேயான நல்லுறவு மிகவும் நெருக்கமடைந்து காணப்படு கிறது. வணக்கத்தலங்கள் மீதான தாக்குதல்கள் ஓய்ந்து போயுள் ளன. பெரும்பான்மை மக்கள் செறிந்துள்ள பிரதேசங்களுக்குள் அச்சத்தில் வாழ்ந்த முஸ்லிம்கள் ஆட்சி மாற்றத்தின் பின்னரே நிம்மதியுடன் வாழ்வதற்கான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இனவாத சக்திகளின் அட்டகாசம் ஆட்சி மாற்றத்தின் பின்னர் அமுங்கிப் போயுள்ளது. இன்றைய அரசாங்கத்தின் அரசியல் எதிரிகளைப் பொறுத்த வரை இது வாய்ப்பானதொரு சூழல் அல்ல. இன்றைய ஆட்சியில் சிறுபான்மையினருக்கு மத சுதந்திரம் கிடையாதென்ற தோற்றப்பாட்டை முஸ்லிம்கள் மத்தியில் ஏற்படுத்துவது அரசாங் கத்தின் அரசியல் எதிரிகளுக்கு வாய்ப்பானதாக அமையும். இதன் மூலம் அரசு மீது முஸ்லிம்கள் வெறுப்படைவதற்கான சூழ லொன்றை ஏற்படுத்த முடியும்.

இதற்கு மறுபுறத்தில் நோக்கும்போது, முஸ்லிம்கள் மீதான குரோத உணர்வை சிங்கள மக்கள் மத்தியில் விதைப்பதற்கு பள்ளிவாசல் மீதான தாக்குதல் சம்பவம் கைகொடுக்குமென அரசாங்க எதிர்ப் பாளர்கள் எதிர்பார்க்கக் கூடும்.

முஸ்லிம்களைச் சீற்றமூட்டி அரசு மீது வெறுப்புக் கொள்ளச் செய்தல், சிங்கள மக்கள் மத்தியில் மத குரோதத்தை ஏற்படுத்தி அரசியல் செல்வாக்குத் தேடுதல்....

பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்திய சக்திகளின் நோக்கத்தை இவ்வாறான கண்ணோட்டத்திலேயே நோக்க முடிகிறது.

பொதுத் தேர்தல் எதிர்நோக்கப்படுகின்ற இக்காலப் பகுதியில் இது போன்ற சம்பவங்களை ஓரளவு எதிர்பார்க்கவே முடியும். இது போன்ற வன்முறைகளால் உணர்ச்சிக் கொந்தளிப்புக்கு உள்ளாகு வோமானால் விஷம சக்திகளின் நோக்கத்துக்கு உதவுவதாகவே ஆகிவிடும். பொறுமை காப்பதும், விஷமத்தனமான அரசியல் சக்திகளை இனங்காண்பதுவுமே இவ்வேளையில் பிரதானம்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி