ஹிஜ்ரி வருடம் 1434 துல்ஹிஜ்ஜஹ் மாதம் பிறை 02
விஜய வருடம் புரட்டாசி மாதம் 22ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, OCTOMBER , 08, 2013
வரு. 81 இல. 238
 

சம்பூர் அனல் மின் திட்டம் தொடர்பில் இலங்கை - இந்தியா நேற்று ஒப்பந்தம்

சம்பூர் அனல் மின் திட்டம் தொடர்பில் இலங்கை - இந்தியா நேற்று ஒப்பந்தம்

ஐந்து உடன்படிக்கைகள் கைச்சாத்து

* 2018இல் பணிகள் பூர்த்தி

* ஒப்பந்தத்தால் இலங்கைக்கு பாதிப்பில்லை

* தாமத இழப்பு குறைக்கப்பட்டது

500 மெகா வோர்ட் மின்சாரம் உற்பத்தி செய்யும் சம்பூர் அனல் மின் நிலைய திட்டம் தொடர்பான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கூட்டு ஒப்பந்தம் நேற்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் கைச்சாத்திடப்பட்டது. இலங்கை சார்பாக இலங்கை மின்சார சபையும் இந்தியா சார்பாக இந்திய தேசிய அனல் மின் கூட்டுத்தாபனமும் இதில் கைச்சாத்திட்டன.

இந்த நிகழ்வில் அமைச்சர்களான ஜீ.எல். பீரிஸ், பசில் ராஜபக்ஷ, பவித்ரா வன்னியாரச்சி, லக்ஷ்மன் யாப்பா, இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் ஆகியோர் கலந்து கொண்டனர். இதன் போது இரு தரப்பினருக்குமிடையில் 5 ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன. 512 மில்லியன் டொலர் செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள சம்பூர் அனல் மின் நிலையப் பணிகள் 2018 இல் பூர்த்தி செய்யப்படவுள்ளன.

இரு நாடுகளும் இணைந்து ஆரம்பிக்கப்பட்டுள்ள வரையறுக்கப்பட்ட திருகோணமலை எரிசக்தி கம்பனி (TPCL) இனூடாக இதற்கான பணிகள் முன்னெடுக்கப்படும்

இருநாட்டு ஒப்பந்தத்தை தொடர்ந்து நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த மின்சக்தி எரிசக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி இலங்கைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டிருப்பதாக குறிப்பிட்டார். காலம் கடந்தாவது இந்த திட்டத்தை ஆரம்பித்ததன் மூலம் 2018 இல் ஏற்பட இருக்கும் மின்சார நெருக்கடி தவிர்க்கப்படுவதாக கூறிய அமைச்சர் ஐ.தே.க. தலைவர்கள் உரிய காலத்தில் அனல் மின் நிலையமொன்றை ஆரம்பிக்க தவறியதாகவும் குற்றங்சுமத்தினார். மேலும் கூறிய அவர்;

2005 இல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கொண்ட இந்திய விஜயத்தை அடுத்தே சம்பூரில் அனல் மின் நிலையம் அமைக்க அடித்தளமிடப்பட்டது. சர்வதேச தரத்திலான நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய அனல் மின் நிலையமொன்றை நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

ஜே.ஆர். ஜெயவர்தனவும், ஆர்.பிரேமதாஸவும் ஜனாதிபதிகளாக பதவி வகித்த போது, அனல் மின் நிலையம் அமைக்கும் முயற்சிகளை கைவிட்டனர். இதனாலே கூடுதல் செலவில் எரிபொருள் மூலம் மின் உற்பத்தி செய்ய நேரிட்டது.

நான் அமைச்சுப் பதவி ஏற்கையில் எரிபொருள் கொள்வனவு செய்ததற்காக 300 பில்லியன் ரூபா செலுத்த வேண்டி இருந்தது.

காலம் கடந்தாவது நாம் சம்பூர் அனல் மின் நிலையத்தை ஆரம்பிக்காவிட்டால், அதிகம் செலவாகும் எரிபொருள் மின் நிலையமொன்றையே ஆரம்பிக்க நேரிட்டிருக்கும். ஆனால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தூரதிருஷ்டியான நடவடிக்கையினால் எமக்கு குறைந்த செலவில் மின் உறபத்தி செய்யும் நிலையமொன்றை அமைக்க ஆரம்ப நடவடிக்கை எடுக்க முடிந்துள்ளது என்றார். அமைச்சின் செயலாளர் எம்.எம்.சி. பேர்டிணன்டஸ் கூறியதாவது,

2011 இலே இதற்கான ஆரம்பத்தில் ஒப்பந்தம் கைச்சாத்திட திட்டமிடப்பட்டது.

ஆனால் அது தாமதமானது. இது தொடர்பான ஒப்பந்தத்தில் எமக்கு பாதகமான சரத்துக்கள் இருப்பது பின்னரே கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோன்று ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டிருந்தால் இலங்கைக்கு 80 பில்லியன் ரூபா நஷ்டமேற்பட்டிருக்கும். ஆனால் அதனை இந்திய அரசுடன் இணைந்து சீர் செய்ததால் முதலாவது வருடத்தில் இலங்கைக்கு 1.3 பில்லியன் நஷ்டமே ஏற்படும்.

குறைந்த செலவில் சர்வதேச தரத்திலான அனல் மின் நிலையமொன்றை அமைக்கும் பொறுப்பு மின்சார சபைக்கு உள்ளது. இரு நாடுகளுக்கும் இதில் தலா 50 வீத பங்கு உள்ளது. ஆனால் அனல் மின் நிலையம் ஆரம்பிக்கப்பட்டு 12 வருடங்களின் பின் இது 100 வீதம் இலங்கைக்கு சொந்தமாகும் என்றார். இந்த நிகழ்வில் மின்சார சபை தலைவர் டபிள்யு.பி. கணேகலவும் கலந்து கொண்டார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி