ஹிஜ்ரி வருடம் 1434 துல்ஹிஜ்ஜஹ் மாதம் பிறை 02
விஜய வருடம் புரட்டாசி மாதம் 22ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, OCTOMBER , 08, 2013
வரு. 81 இல. 238
 

வடக்குத் தேர்தல் சிறந்த எதிர்காலத்துக்கான புதியதொரு ஆரம்பம்

வடக்குத் தேர்தல் சிறந்த எதிர்காலத்துக்கான புதியதொரு ஆரம்பம்

நல்லிணக்கப்பாட்டுக்கு அனைத்து மக்களின் ஒத்துழைப்பு அவசியம்

இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித்

வெற்றிகரமாக நடந்து முடிந்த வட மாகாண சபை தேர்தல் வட பகுதி மக்களின் சிறந்த எதிர்காலத்திற்கு புதிய ஆரம்பமாக அமையும் என்றும் விரைவில் அரசியல் தீர்வொன்றையும் தேசிய நல்லிணக்கப்பாட்டையும் யதார்த்தபூர்வமான அதிகார பகிர்வின் மூலம் ஏற்படுத்தி, இலங்கைத் தமிழ் சமூகம் உட்பட இந்நாட்டு பிரஜைகள் அனைவருக்கும் நீதியான, கெளரவமான மதிப்புக்குரிய மற்றும் சுயகெளரவமான வாழ்க்கையை நடத்துவதற்கு இந்தியா உதவுமென்று தாம் நம்புவதாக இலங்கைக்கு நேற்றுக்காலை வருகைதந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மா குர்ஷித் தெரிவித்தார்.

நேற்று பிற்பகல் ஊடகவியலாளர்களை கொழும்பில் சந்தித்த இந்திய வெளியுறவு அமைச்சர்; இந்தியா என்றும் இலங்கை யுடன் ஐக்கியமாகவும், ஒருமைப்பாட்டு டனும் இருக்க வேண்டும் என்பதில் அதிக ஆர்வம் கொண்டுள்ளது என்று கூறினார்.

தீர்க்க தரிசனமான தலைமைத்துவத்தின் மூலம், இலங்கையில் ஆயுதப் போராட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு பின்னர் வட மாகாண சபைத் தேர்தல் வெற்றி கரமாக நடத்தப்பட்ட இவ்வேளையில், உண்மையான நல்லிணக்கப்பாட்டிற்காக அனைவரும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும் என்றும் இந்திய அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

சல்மான் குர்ஷித் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்; இலங்கை அரசாங்கம் இந்தியாவுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் அரசியல் தீர்வொன்றை பதின் மூன்றாவது திருத்தத்தை முழுமையாக அமுலாக்கி ஏற்படுத்துவதில் திடமாக இருக்கி ன்றதென்பதை அறிவித்திருக்கிறதென்றும், இந்த பிரச்சினையை கூடிய விரைவில் தீர்த்து வைப்பதற்கு மீண்டும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுவதை இந்தியா விரும்புகிறதென்றும் கூறினார்.

இலங்கை அரசாங்கத்துடன் இந்திய அரசாங்கம் நட்புறவுடன் சகலவிதமான உதவிகளையும் செய்ய தயாராக இருக்கிறதென்றும் அவர் கூறினார்.

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்திருக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் நேற்று அமைச்சர் பீரிஸ¤டன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற கூட்டுச் செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

வடக்கில் நடந்து முடிந்த தேர்தல் சிறந்ததொரு எதிர்காலத்திற்கு புதியதொரு திருப்புமுனையாக அமையுமென சுட்டிக்காட்டிய அமைச்சர் குர்ஷித், மாகாண சபையின் பதவிகளை பொறுப்பேற்போர் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் நேர்மையான முறையில் பணிகளை முன்னெடுப்பரென இந்தியா எதிர்ப்பார்ப்பதாகவும் இதன் போது கூறினார்.

இதேவேளை, இலங்கை அரசாங்கம் இந்தியாவிற்கும் சர்வதேச நாடுகளுக்கும் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தினை முழுமையாக அமுல்படுத்துவதன் மூலம் அரசியல் தீர்வினை ஏற்படுத்தவிருப்பதாக பல சந்தர்ப்பங்களில் வலியுறுத்தியுள்ளது. குறிப்பிட்ட காலவரையறைக்குள் பேச்சுவார்த்தையின் மூலம் விரைவில் இதற்கு தீர்வு காணப்பட வேண்டுமென்பதே இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாடாகும். இதற்காக இலங்கை அரசாங்கத்துடன் தொடர்ந்தும் செயற்பட விரும்பும் அதேவேளை, எம்மால் இயன்ற அனைத்து உதவிகளை வழங்கவும் தயாராகவுள்ளோமென அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்தார்.

அர்த்தபுஷ்டியான அதிகார பரவலாக்கல் எனப்படும் போது அரசியலமைப்புக்கு உள்ளடங்கலான பேச்சுவார்த்தை மூலம் செயற்பாடுகளை முன்னெடுப்பதனையே நாம் குறிக்கின்றோம். தேர்தலினைத் தொடர்ந்து வடக்கில் நியமிக்கப்படும் மாகாண சபை, மத்திய அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதன் மூலம் தமது பங்குபற்றலை மேலும் வலுப்படுத்திக்கொள்ள வேண்டுமெனவும் அவர் விளக்கமளித்தார்.

செய்தியாளர் ஒருவர் எழுப்பிய வினாவிற்கு பதிலளிக்குகையிலேயே அமைச்சர் சல்மான் குர்ஷித் இது தொடர்பில் குறிப்பிட்டார். இந்தவேளையில், குறுக்கிட்ட அமைச்சர் ஜீ.எல். பீரிஸ், “நேற்றுக்காலை அலரிமாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் வட மாகாண சபை முதலமைச்சர் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டமை இதற்கான சிறந்ததொரு எடுத்துக்காட்டாகும்” என நினைவு கூர்ந்தார்.

அமைச்சர் பீரிஸ் இலங்கை மத்திய அரசாங்கம் வட மாகாண சபையுடன் இணைந்து செயற்படத் தயாரெனவும் இதன் போது தெரிவித்தார். அத்துடன் அரசியலமைப்புக்கு உள்ளடங்கலான விடயங்களை அமுல்படுத்துவது குறித்து பாராளுமன்றத் தெரிவுக்குழு ஆராய்ந்து தீர்மானம் எடுக்குமெனவும் அவர் கூறினார்.

அரசியல் தீர்வு மற்றும் அதிகார பரவலாக்கல் ஆகியவற்றை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் இந்திய அரசாங்கம் இலங்கைக்கு காலக்கெடு எதுவும் வழங்கியுள்ளதா? என இந்திய ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய வினாவிற்கு அமைச்சர் சல்மான் குர்ஷித் பதிலளிக்குகையில், இலங்கைக்கு இந்தியா காலக்கெடு விதிக்குமளவிற்கு எமது உறவு இல்லையெனக் கூறினார்.

வரலாற்று ரீதியாக நட்புறவு கொண்டிருக்கும் எமது நாடுகளுக்கிடையில் சிறந்த புரிந்துணர்வு காணப்படுகின்றது. எனவே, அந்த வகையில் அதிகார பரவலாக்கல் முக்கியமென இலங்கை அரசாங்கத்துக்கு வலியுறுத்தியுள்ளோமே தவிர காலக்கெடு விதிக்கப்பட வேண்டிய அவசியம் எமக்கில்லை.

அத்துடன், வடக்கு மக்களின் ஜனநாயகத்தினை நிலைநாட்டும் வகையில் இலங்கை அரசாங்கம் தேர்தலை முன்னெடுத்துள்ளது. இது போன்று இலங்கை அரசாங்கத்தினால் படிப்படியாக முன்னெடுக்கப்பட்டு வரும் விடயங்களை நாம் வெகுவாக பாராட்டும் அதேவேளை, தீர்மானங்கள் விரைவில் நடைமுறைப்படுத்தப்படுவது சிறப்பானதாக அமையுமென்பதையே நாம் வலியுறுத்தி வருகின்றோமெனவும் அமைச்சர் குர்ஷித் தெரிவித்தார்.

அரசியல் தீர்வு என்பது வெவ்வேறு கோணங்களில் அணுகப்படக்கூடியது. அது தொடர்பில் இலங்கை அரசாங்கமே தீர்மானம் எடுத்தாக வேண்டும். இந்தியா அதற்கான சகல ஒத்துழைப்புகளையும் தொடர்ந்தும் வழங்கி வருமெனவும் அவர் உறுதியளித்தார்.

இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கலந்துகொள்வாரா என்பது தொடர்பில் உரிய நேரத்தில் இலங்கைக்கு அறிவிப்போமெனவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் கேள்விகளுக்கு பதிலளிக்கையில் தெரிவித்தார்.

வெளிவிவகார அமைச்சரென்ற வகையில் தான் கலந்து கொள்ளவிருப்பதாக கூறிய அவர், பிரதமர் அலுவலகத்திலிருந்து அது தொடர்பில் இதுவரையில் தனக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லையெனவும் கூறினார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி