ஹிஜ்ரி வருடம் 1434 துல்ஹிஜ்ஜஹ் மாதம் பிறை 02
விஜய வருடம் புரட்டாசி மாதம் 22ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, OCTOMBER , 08, 2013
வரு. 81 இல. 238
 

முதல்வர் விக்னேஸ்வரனுடன் சந்திப்பு; வீடமைப்பு திட்டத்தையும் பார்வையிடுவார்

சல்மான் குர்ஷித் இன்று யாழ். விஜயம்:

முதல்வர் விக்னேஸ்வரனுடன் சந்திப்பு; வீடமைப்பு திட்டத்தையும் பார்வையிடுவார்

இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளதுடன் வட மாகாண ஆளுநர் ஜீ. ஏ. சந்திரசிறி மற்றும் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

விஷேட விமானம் மூலம் இன்று நண்பகல் பலாலி சென்றடையும் இந்திய வெளிவிவகார அமைச்சர் யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பிரதேசத்தில் இந்திய அரசின் உதவியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் வீட்டுத் திட்டத்தை நேரில் சென்று பார்வையிடவுள்ளார்.

அதனைத் தொடர்ந்து வட மாகாண ஆளுநர் ஜீ. ஏ. சந்திரசிறியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். யாழ்ப்பாணத்திலுள்ள வட மாகாண ஆளுநரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது. இதன்போது, வட மாகாண ஆளுநரினால் இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு விஷேட பகல் போசன விருந்துபசாரமும் வழங்கப்படவுள்ளது.

இதனைத் தொடர்ந்து, வட மாகாண சபையின் புதிய முதலமைச்சருக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித்துக்கும் இடையில் சந்திப்பு ஒன்றும் இடம்பெறவுள்ளது. பிற்பகல் 2.30 மணியளவில் ரில்சோ ஹோட்டலில் நடைபெறவுள்ள இந்த விஷேட சந்திப்பின்போது வட மாகாண சபைக்காக புதிதாக தெரிவு செய்யப்பட்ட மாகாண சபை உறுப்பினர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.

வட மாகாண புதிய முதலமைச்சர் பதவி ஏற்ற பிறகு முதலாவது சந்திக்கும் வெளிநாட்டு பிரதிநிதி இவராவார்.

இதேவேளை, வடக்கில் நுண்கடன் திட்டத்தின் கீழ் சிறு வியாபாரம் மற்றும் வீட்டுத் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்க ப்பட்டோருக்கு இரண்டாவது கட்டமாக உதவி வழங்கவுள்ளார். இத்திட்டத்தின் கீழ் பெரும் எண்ணிக்கையானோர் நன்மையடையவுள்ளனர்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி