ஹிஜ்ரி வருடம் 1434 துல்கஃதா மாதம் பிறை 24
விஜய வருடம் புரட்டாசி மாதம் 15ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY,OCTOBER ,01, 2013
வரு. 81 இல. 233
 

சிறுவர்கள் எமது அன்புக்குரியவர்கள்: அவர்கள்தான் நாளைய தலைவர்கள்

சிறுவர்கள் எமது அன்புக்குரியவர்கள்: அவர்கள்தான் நாளைய தலைவர்கள்

இன்று ஒக்டோபர் முதலாம் திகதி உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு இக்கட்டுரை பிரசுரமாகிறது

ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் 1ம் திகதி உலக சிறுவர் தினம் கொண்டாடப்பட்டு வருவதை நாம் அனைவரும் அறிகிறோம். சிறுவர் உரிமைகள் மறுக்கப்படுகின்ற சிறுவர் துஷ்பிரயோகங்கள் அதிகரித்து வருகின்ற இக்கால கட்டத்தில் வருடந்தோறும் சிறுவர் தினம் கொண்டாடப்பட்டு வருவது வரவேற்கக் கூடியதாகும்.

சிறுவர்கள் என்பவர்கள் எமது அன்புக்குரியவர்கள். அவர்களை ஆதரித்து பாதுகாத்து வளர்க்க வேண்டிய கடமை எம் அனைவருக்கும் உண்டு. இன்றைய சிறுவர்கள்தான் நாளை எமது வீட்டிலும் நாட்டிலும் முக்கிய பிரஜைகளாக வர இருப்பவர்கள் என எல்லா இடங்களிலும் எல்லோராலும் பேசப்பட்டு வருகின்ற முக்கிய கருத்தாகும்.

அதாவது, இன்றைய வித்துக்களாக இருக்கும் சிறுவர்கள்தான் நாளைய விருட்சங்களாக வளர்ந்து வர இருப்பவர்கள். இத்தகைய ஓர் உயர்ந்த இலக்கை எமது சிறுவர்கள் எதிர்காலத்தில் அடைய வேண்டுமானால் அவர்களது சிறுவர் பருவம் நிச்சயம் பாதுகாக்கப்பட வேண்டும்.

இது விஷயமாக பெற்றார்கள், ஆசிரியர்கள் முக்கிய பொறுப்பாளர்களாக இருந்து வழிகாட்ட வேண்டும். சிறுவர்கள் என்பவர்கள் எமது வீட்டையும் நாட்டையும் அழகுபடுத்துபவர்கள். அவர்கள்தான் எமது நாட்டின் வளங்கள், செல்வங்கள் என்பதை நாம் நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும். அதனால் நாம் அனைவரும் சிறுவர்களுக்கு அன்பு காட்டி ஆதரிப்பதற்கும் அவர்களது தேவைகளை நிறைவேற்றுவதற்கும் முன்வர வேண்டும்.

வீட்டில் வளரும் சிறுவர்கள்

வீட்டில் வளர்க்கப்படுகின்ற சிறுவர்கள் விஷயமாக பெற்றார்கள் மிகுந்த அக்கறையோடு இருக்க வேண்டும். பெற்றார்களின் செயல்பாடுகள் யாவும் பிள்ளைகளுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும். தாய், தகப்பன் தம் பிள்ளைகளின் முன்னிலையில் சண்டை போடுவது, தேவையற்ற வார்த்தைகளால் ஒருவருக்கொருவர் சாடிக் கொள்வது இவை யாவும் தவிர்க்கப்பட வேண்டியவையாகும். இதனால் பிள்ளைகளின் இளம் உள்ளங்களில் தவறான எண்ணங்கள் உருவாகலாம்.

இது விஷயமாக பெற்றார்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பிள்ளைகளிடம் சிகரட் வாங்கி வரச் சொல்வது, அவர்கள் முன் சிகரட் புகைப்பது, மது அருந்துவது, சூது விளையாடுவது போன்ற மோசமான நடத்தைகளில் ஈடுபடும் பெற்றார்கள் நிறையப் பேர் இன்று நாட்டின் பல பாகங்களிலும் இருக்கின்றார்கள். தம் பிள்ளைகள் மேல் உண்மையான பாசம் கொண்டவர்கள் இவ்வாறான செயல்களிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும்.

பெற்றார்கள் தம் பிள்ளைகளுடன் எப்போதும் அன்பாகக் கதைக்க வேண்டும். அவர்களுக்கு நல்ல பழக்க வழக்கங்களை கற்பித்துக் கொடுக்க வேண்டும். கல்வி, சமயம், ஒழுக்கம், சிநேகம் போன்ற உயர்ந்த வழிகளில் தம் பிள்ளைகளை வழி நடத்துவதற்கு பெற்றார்கள் உத்தரவாதமாக இருக்க வேண்டும். தம் பிள்ளைகள் மேல் உள்ள பாசத்தின் காரணமாக அவர்கள் செய்யும் எல்லாக் காரியங்களும் சரி என மதிக்கக்கூடாது.

ஏதும் தவறுகள் செய்தால் தண்டிக்கவும், நல்லவை செய்தால் அவர்களைப் பாராட்டவும் வேண்டும். அவ்வாறு செய்தால் பிள்ளைகள், தாம் தவறு செய்தால் பெற்றார்கள் தங்களைத் தண்டிக்கிறார்கள். நல்லவை செய்தால் பாராட்டுகிறார்கள் என்ற மன உணர்வை பெற்றுக்கொள்கிறார்கள். பிள்ளைகள் செய்யும் சிறு சிறு தவறுகளை பெரிதுபடுத்தி அதற்காக அவர்களை தண்டிப்பது அடிப்பது கூடாது. அதனால் அவர்களது இளம் உள்ளங்கள் வேதனைப்படக்கூடும்.

இது விஷயமாக பெற்றார்கள் புத்திசாலித்தனமாக நடந்து கொள்ள வேண்டும். பெற்றார்கள் தம் பிள்ளைகளை முன்வைத்துக் கொண்டு அவர் இவர் பற்றிய மட்டமான செய்திகள், கோள், புறம் என்பவற்றை கதைப்பது கூடாது. சில பிள்ளைகள் அடுத்தவர்கள் பற்றிய தேவையற்ற செய்திகளை வீட்டில் வந்து கதைக்கக் கூடும். அவற்றை நாம் விரும்பிக் கேட்டுக் கொண்டிருக்கக் கூடாது. அவற்றை உடன் தவிர்க்க வேண்டும். இல்லாவிடில் அவர்கள் அதனையே வழக்கமாகக் கொண்டு அடிக்கடி செய்திகளை கொண்டு வரச் செய்வார்கள். இதனை தடுக்காவிடில், பிள்ளைகள் தவறான போக்குகளில் செல்ல இடம் உண்டாகலாம்.

ஒரு வீடு என்று சொல்லும் போது அந்த வீட்டை சூழ இன்னும் அநேகமான வீடுகள் இருக்கக்கூடும். அந்த வீடுகளில் உள்ள சிறுவர்களுடன் எமது சிறுவர்களையும் சேர்ந்து பழகுவதற்கு, படிப்பதற்கு, விளையாடுவதற்கு சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அவ்வாறின்றி, எமது சொந்த கோப வெறுப்புக்கள் காரணமாக தமது பிள்ளைகளை அயல் வீட்டுப் பிள்ளைகளுடன் சேரக்கூடாது, பேசக்கூடாது போன்ற கட்டுப்பாடுகளை விதிக்கக்கூடாது.

இது ஆபத்தானது. எதிர்காலத்தில் எமது வீட்டுக்கும் நாட்டுக்கும் முக்கிய பிரஜைகளாக வர இருக்கும் எமது இன்றைய பிள்ளைகளின் இளம் உள்ளங்களில் தவறான எண்ணங்கள் வளர்ந்து விட பெற்றார்களே காரணமாக இருப்பது எவ்வளவு மோசமான காரியம் பாருங்கள்.

பிள்ளைகள் வளர்க்கும் விஷயமாக பெற்றார்களுக்கு சிறந்த அறிவு இருக்க வேண்டும். அது தொடர்பான நல்ல ஆலோசனைகளையும் கருத்துகளையும் தேடிப்படிக்க வேண்டும். சிறுவர் வளர்ப்பு விஷயமாக நடைபெறும் கருத்தரங்குகளில் தவறாது பெற்றார்கள் பங்கு கொள்ள வேண்டும். அது பற்றிய நூல்களை படிக்க வேண்டும். கீழ்வரும் அறிவுரைகளை பெற்றார்கள் அறிந்து வைத்திருப்பது நல்லது.

குறை கூறி வளர்க்கப்படும் சிறுவர்கள் வெறுப்பைக் கற்றுக்கொள்கின்றனர்.

அடக்கி வளர்க்கப்படும் சிறுவர்கள் சண்டை போட கற்றுக்கொள்கின்றனர்.

கேலி செய்யப்படும் சிறுவர்கள் வெட்கத்தோடு வளர்கின்றனர்.

சகிப்போடு வளரும் சிறுவர்கள் பொறுமையை கற்றுக்கொள்கின்றனர்.

அன்பு காட்டி வளர்க்கப்படும் சிறுவர்கள் இரக்க உணர்வை கற்றுக்கொள்கின்றனர்.

ஊக்குவிக்கப்படும் சிறுவர்கள் மனத்திண்மை பெறுகின்றனர்.

புகழப்படும் சிறுவர்கள் முன்னேறக் கற்றுக்கொள்கின்றனர்.

நட்போடு வளரும் சிறுவர்கள் பிறரை நேசிக்கக் கற்றுக்கொள்கின்றனர்.

பாடசாலையில் பயிலும் சிறுவர்கள்

பாடசாலையில் கல்வி பயிலும் சிறுவர்கள் மிக முக்கியமானவர்கள். எதிர்காலத்தில் சிறந்த மகான்களாக வெளிவருவதற்கான ஆரம்ப பயிற்சிகளை பெற்றுக்கொள்ளும் இடமாக பாடசாலை விளங்குகிறது. அதனால் மாணவர்களது பாடசாலை பருவம் அவர்களது எதிர்கால்ததை நிர்ணயிக்கும் முக்கிய காலகட்டமாக இருக்கிறது என்று சொல்லலாம். சுமார் ஆறு மணித்தியாலங்கள் வரையில் பாடசாலையில் பயிலும் சிறுவர்கள் ஆசிரியர்களின் பொறுப்பிலேயே இருக்கின்றனர்.

அதனால் இவர்களுக்கான கல்வியை மட்டுமல்ல சிறந்த ஒழுக்க விழுமியங்கள், நற்பழக்க வழக்கங்கள் அனைத்தையும் கற்றுக்கொடுக்க வேண்டியது ஆசிரியர்களின் முக்கிய பணியாகும். அது அவர்களது கடமையும் கூட. இது விஷயமாக ஆசிரியர்களுடன் சேர்ந்து பெற்றார்களும் ஒத்துழைக்க வேண்டியது மிக முக்கியம்.

இளமையில் கல்வி சிலையில் எழுத்து, தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை போன்ற பொன் மொழிகள் சிறுவர்களின் இளமைக்காலத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துகின்றன.

காற்றுள்ள போதே தூற்றிக் கொள் என்று சொல்வார்கள். அதனால் கல்வியை தொடர வேண்டிய காலத்தை தவற விடாது பாடசாலைக் கல்வியை ஒழுங்காக படித்து வருவதற்கு எமது சிறுவர்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும். கல்வியை முடித்து விட்டு வெளியேறுகின்ற ஒவ்வொரு சிறுவரும் சமூகத்தில் நல்ல பிரஜைகளாக மதிக்கப்பட வேண்டும். இது விஷயமாக சாத்தியம் பெறுவதற்கு பெற்றார்கள். ஆசிரியர்களின் பங்களிப்பு மிக முக்கியமானதாகும். சிறுவர்களின் எதிர்காலம் சிறந்து விளங்கும் போது எமது வீடும் நாடும் சுபீட்சம் பெறும் என்பதில் ஐயமில்லை.

இன்றைய சிறுவர்கள் நிலை

இன்றைய உலகம் எதிர்நோக்கியுள்ள பல பிரச்சினைகளில் சிறுவர் பிரச்சினைகள் பாரிய சவால்களாக தொடர்ந்து வருகின்றன. இன்று உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் சிறுவர் தொடர்பாக நடைபெறும் மோசமான சம்பவங்களை படிக்கும் போது அவர்கள் பாரிய சீரழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள் என்பது புலனாகின்றது. சிறுவர்கள் வாழ்க்கை முறையில் மாற்றம் காண்பதற்கான நடவடிக்கைகள் அவ்வப்போது எடுக்கப்பட்டாலும் கூட சிறுவர்கள் நிலையில் ஆக்க பூர்வமான மாற்றங்கள் ஏற்பட்டு வருவதாக இல்லை?

இன்று பெற்றோர்களால் கைவிடப்பட்ட நூற்றுக்கணக்கான சிறுவர்கள் தங்களுக்கு அன்பு காட்டி ஆதரவு கொடுக்க எவரும் இல்லாத நிலையில் அங்கும் இங்கும் அடிபட்டு அவதிப்பட்டு அநாதரவாக அலைந்து திரிகின்றார்கள். தங்களை தட்டிக்கேட்டு திருத்த யாரும் இல்லாத நிலையில் இந்தச் சிறுவர்கள் இழிவான நடத்தைகளில் ஈடுபட்டு வருவதையும் அவதானிக்க முடிகின்றது. இவர்கள் புகைத்தல், போதை வஸ்து பாவனை, திருட்டு உள்ளிட்ட பல துர்நடத்தைகளில் பழக்கப்பட்டு வருகின்றார்கள். இதனால் இவர்கள் தகுந்த வழிமுறைகளால் வழி நடத்தப்படாவிட்டால் எதிர்காலத்தில் பெரும் குழப்பங்களாக வெடித்து விடலாம்.

அதனால் சம்பந்தப்பட்டவர்கள் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு சிறுவர்கள் பாதுகாப்புக்கு வழி ஏற்படுத்த வேண்டியது மிகவும் அவசியம். அவ்வாறு இல்லாவிடில் இந்தச் சிறுவர்கள் கடைத்தெருக்கள், பஸ் நிலையங்கள், புகையிரத நிலையங்கள், மக்கள் சந்தைகள் உள்ளிட்ட பல இடங்களில் நிறைந்து காணப்படலாம். நாம் இவர்களை எதிர்காலத்திலே முடிச்சு மாறிகளாகவோ, திருடர்களாகவோ, சமூகத்துரோகிகளாகவோ வருவதற்கு இடம் வைக்கக்கூடாது. இவ்விதமாக இவர்களது நிலை இப்படியாக இருந்தால் அது நாட்டுக்கு பேராபத்தாக அமைந்து விடலாம். கவனம் தேவை! அதனால் எமது சிறுவர்கள் எதிர்கால நற்பிரஜைகளாக வருவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

சமய வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு பெற்றார்கள், ஆசிரியர்கள், பெரியார்கள் ஆகியோருக்கு மரியாதை செய்வதற்கு, நற்செயல்களில் பங்கு கொள்வதற்கு எமது சிறுவர்கள் வழிகாட்டப்பட வேண்டியது அவசியமும் அவசரமுமாகும். பெற்றார்களால் கைவிடப்பட்ட சிறுவர்களுக்கான அனாதை விடுதிகள், சிறுவர் பராமரிப்பு நிலையங்களை ஏற்படுத்தி அவர்களுக்கான எதிர்கால பாதுகாப்பு நடவடிக்கைகளை செயல்படுத்துவது அவசியம்.

சிறுவர் கொடுமையும் சிறுவர் துஷ்பிரயோகமும்

இன்று சில பெற்றார்கள் தங்களை வாட்டும் வறுமை, நோயின் வேதனை, கடன் தொல்லை மற்றும் இது போன்ற குடும்பப் பிரச்சினைகள் காரணமாக தங்கள் பிள்ளைகளை கற்பிப்பதில் ஆர்வம் காட்டுவதற்கு பதிலாக வருமானம் பெறுவதற்காக பிழைக்க விடுகின்றனர். இதனால் இந்தச் சிறுவர்கள் வீடுகள், கடைகள், ஹோட்டல்கள் போன்ற இடங்களில் கூலிக்காக அமர்த்தப்படுகின்றார்கள்.

இதுவெல்லாம் பெற்றார்கள் தங்கள் பிள்ளைகளுக்கு செய்யும் துரோகம் அல்லவா? இதனை அவர்கள் உணர்வதாக இல்லை. இதனால் இவர்கள் பஸ் நிலையங்கள், புகையிரத நிலையங்கள், சந்தை, தெருச்சந்திகள் உள்ளிட்ட பல இடங்களில் பிச்சை கேட்டுத்திரியும் காட்சிகளையும் நாம் காண முடிகிறது. இது என்ன அநியாயம். இது வெல்லாம் சிறுவர் துஷ்பிரயோகமாகும். இந்தச் சிறுவர்கள் வீட்டு எஜமான்களாலும் கடை முதலாளிமார்களாலும் துன்புறுத்தப்படும் செய்திகளும் வந்து கொண்டிருக்கின்றன.

சிறுவர் துஷ்பிரயோகம் என்று சொல்லும் போது அவற்றில் முக்கியமாக இடம்பெறுவது அவர்களது உரிமைகள் மறுக்கப்படுவதாகும். அதாவது அவர்களுக்குரிய கல்வியை வழங்காமை, தங்களது சக்திக்கு மேற்பட்ட வேலைகளை செய்யத் தூண்டுவது, பாரிய தண்டனைகள் வழங்குவது, அவர்களது சுதந்திரம் பறிக்கப்படுவது, கொடூரமான நடத்தைகளில் ஈடுபடுத்துவது, சிறுவர்களை விற்பது, சிறுவர்களை கடத்துவது இவையெல்லாம் சிறுவர் துஷ்பிரயோகங்களாகும்.

சிறுவர்கள் விஷயமாக இத்தகைய செயல்களுக்கு காரணமாக இருப்பவர்களை இனம் கண்டு அவர்கள் யாராக இருப்பினும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். தண்டனைகள் வழங்கப்பட வேண்டும். அவற்றுடன் சிறுவர் பாதுகாப்புக்கான உத்தரவாதம் நிச்சயம் இருப்பது அவசியம். அதற்காக சிறுவர் துஷ்பிரயோகங்களை தடுப்பதற்கான தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம்

சிறுவர் துஷ்பிரயோகங்களில் மிகவும் மோசமான, ஏற்றுக்கொள்ள முடியாத பெரும் குற்றமாக இருப்பது தான், இந்தப் பாலியல் துஷ்பிரயோகம் என்பது. இன்று எமது நாட்டின் நாலா திசைகளிலும் இப்படியான பாலியல் துஷ்பிரயோகம், பாலியல் வல்லுறவு என்பன தினமும் நடைபெற்று வரும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இவை இன்று சர்வ சாதாரணமான நிகழ்வுகளாக இருந்து வருவது எவ்வளவு வேதனைக்குரிய விடயமாகும்.

சிறுவர்களுடன் பாலியல் தொடர்பான கதைகளை தொடர்வது, ஆபாச படங்களை காட்டுவது, பாலியல் துஷ்பிரயோகங்களுக்காக எமது சிறுவர்கள் ஏமாற்றப்படுவது, கடத்தப்படுவது போன்ற கொடூர செயல்கள் எல்லாம் இன்று அடிக்கடி நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இவற்றுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். இத்தகைய செயல்களுக்கு காரணமாக இருப்பவர்கள் யாராக இருப்பினும் அவர்கள் அனைவரும் சமூகத்துரோகிகள் என்று சொன்னாலும் பிழையில்லை.

இளம் வாலிபர்கள், வயோதிபர்கள், படித்தவர்கள், படிக்காதவர்கள் என்றெல்லாம் இத்தகைய இழி செயல்களில் ஈடுபட்டு வருவதை அறியும் போது நாம் எல்லாம் தலைகுனிய வேண்டியிருக்கிறது. இதுவெல்லாம் எவ்வளவு கேவலமான காரியம் பாருங்கள்.

சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் என்பது சிறுவர்களை அழிவுப்பாதைக்கு கொண்டு செல்லும் மிக மோசமான நடைத்தையாகும். இத்தகைய குற்றங்களுக்குட்படுவோர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படுவதாக தினமும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

எனினும் இந்நிகழ்வுகள் குறைந்து செல்வதாக இல்லை. அதனால் நாங்கள் அனைவரும்

ஒரு சமுதாயத்தின் உயிர் நாடியாக விளங்கும் சிறுவர் உரிமைகளை பெற்றெடுப்போம்.

சிறுவர்கள் சுரண்டப்படுவதையும் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாவதையும் தடுப்போம்.

இவை உலகளாவிய ரீதியில் எம் அனைவரினதும் கடமை என்பதை உணர்வோம்.

உலக சிறுவர்கள் நலம் வாழ வாழ்த்துவோம்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி