ஹிஜ்ரி வருடம் 1434 துல்கஃதா மாதம் பிறை 24
விஜய வருடம் புரட்டாசி மாதம் 15ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY,OCTOBER ,01, 2013
வரு. 81 இல. 233
 

கே.ஆர்.விஜயாவுக்கு பதிலாக nஜயலலிதா நடித்த படம்

கே.ஆர்.விஜயாவுக்கு பதிலாக nஜயலலிதா நடித்த படம்

‘அம்மா என்றால் அன்பு’ அடிமைப்பெண்ணில் ஜெயலலிதா பாடிய பாடல்

1969ம் ஆண்டில் ‘அடிமைப் பெண்’, ‘நம் நாடு’ ஆகிய 2 படங்களில் எம். ஜி. ஆர். நடித்தார். இரண்டுமே வெற்றிப் படங்கள் என்றாலும், ‘அடிமைப்பெண்’ மெகாஹிட் படம். எம். ஜி. ஆரின் சொந்தப்படம். நாடோடி மன்னனுக்குப் பிறகு, அவர் பிரமாண்டமாக தயாரித்த படம். ஆனால், இதை எம். ஜி. ஆர். டைரக்டர் செய்யவில்லை. கே. சங்கர் டைரக்ட் செய்தார்.

அடிமைப் பெண்ணின் கதையை எம். ஜி. ஆர். பிக்சர்ஸ் கதை இலாகா எழுதியது. வசனத்தை சொர்ணம் எழுதினார். பாடல்களை வாலி, ஆலங்குடி சோமு, புலமைப்பித்தன், அவிநாசி மணி ஆகியோர் எழுத, கே. வி. மகாதேவன் இசை அமைத்தார்.

ஆரம்பத்தில், இப்படத்தின் கதாநாயகியாக கே. ஆர். விஜயா ஒப்பந்தம் செய்யப்பட்டார். சில காட்சிகளும் எடுக்கப்பட்டன. பின்னர், அவருக்கு பதிலாக ஜெயலலிதா நடித்தார். அசோகன் ஆர். எஸ். மனோகர், ‘சோ’, ஓ. ஏ. கே. தேவர், பண்டரிபாய், ஜோதிலட்சுமி, பேபி ராணி ஆகியோரும் நடித்தனர். ‘அடிமைப்பெண்’ கதை, நிறைய சம்பவங்களும், திருப்பங்களும் கொண்டது. செங்கோடன் (அசோகன்) கொடியவன். வேங்கை மலைத் தலைவி மங்கம்மா (பண்டரிபாய்) மீது மோகம் கொள்கிறான்.

அவள் வெறொருவரை மணந்து, தாயான பிறகும் அவளை அடைய முயற்சி செய்கிறான். ‘உன் குழந்தையைக் கொலை செய்வேன்’ என்று மிரட்டுகிறான். ஆனால் அவளோ புலியென மாறி, அவன் காலைத் துண்டாக்குகிறாள். ஒரு காலை இழந்த செங்கோடன், மங்கம்மாவை பழி தீர்த்துக்கொள்ள அவளுடைய 2 வயது மகன் வேங்கையனை கடத்திச் சென்று, ஒரு சிறு இருட்டறையில் அடைத்து வைக்கிறான். இதனால், வேங்கையன் கூனிக்குறுகி வளருகிறான்.

மங்கம்மா, செங்கோடன் கண்ணில் படாமல் மறைந்து வாழ்கிறாள். அவளைக் கண்டுபிடித்து அவள் கண் எதிரே வேங்கையனின் கால்களைத் துண்டிக்கப்போவதாக சபதம் செய்கிறான். செங்கோடன் பெண்களை அடிமையாக்கி, கால்களில் விலங்கு மாட்டுகிறான். எதிர்க்கும் ஆண்களின் தலை துண்டிக்கப்படுகிறது.

இருட்டறையில் கூனனாகவே வளர்ந்து வரும் வேங்கையன், வாலிபனான பிறகும் பேசக்கூட முடியாத அளவுக்கு குழந்தை போல் இருக்கிறான். ஒரு அழகி (ஜெயலலிதா) மூலம், அவனுக்கு விடிவுகாலம் ஏற்படுகிறது. கூன் நிமிர்ந்து, செங்கோடனுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்குகிறான். கொடியவர்களை ஒடுக்குகிறான். அடிமைப் பெண்களை விடுவிக்கிறான். 1.5.1969 வெளியான இந்தப் படத்தில், எம். ஜி. ஆர். மாறுபட்ட வேடத்தில் சிறப்பாக நடித்திருந்தார்.

ஆரம்பக் காட்சிகளில் முதுகை வளைத்து கூனனாக நடித்த காட்சிகளில், ரசிகர்களின் கைதட்டலைப் பெற்றார். பின்னர் கூன் சரியாகி வீரதீரச் செயல்கள் செய்யும்போது, வழக்கமான எம். ஜி. ஆரைக் கண்டு ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். இப்படத்தில் ஜெயலலிதா மிகச் சிறப்பாக நடித்ததோடு, ‘அம்மா என்றால் அன்பு’ என்ற வாலியின் பாடலை சொந்தக் குரலில் பாடினார்.

வாலி எழுதிய ‘ஏமாறாதே ஏமாற்றாதே’ என்ற பாடலும், ஆலங்குடி சோமு இயற்றிய ‘தாயில்லாமல் நானில்லை’ என்ற பாடலும் புலமைப்பித்தனின் ‘ஆயிரம் நிலவே வா’ பாடலும் ஹிட்டாகின.

‘ஆயிரம் நிலவே வா’ பாடல் மூலம் தான் எஸ். பி. பாலசுப்பிரமணியம் தமிழ்த் திரை உலகுக்குப் பின்னணி பாடகராக அறிமுகம் ஆனார். சண்டைக் காட்சிகள் புதுமையான முறையில் விறுவிறுப்பாக அமைந்தன. சிங்கத்துடன் எம். ஜி. ஆர். சண்டை போடும் காட்சி, மெய் சிலிர்க்கச் செய்தது.

‘அடிமைப்பெண்’ மதுரை சிந்தாமணி தியேட்டரில் 176 நாட்கள் ஓடி வெள்ளி விழா கொண்டாடியது. சென்னையில் மிட்லண்ட் உட்பட 4 தியேட்டர்களில் நூறு நாட்களுக்கு மேல் ஓடியது.

திருச்சி, கோவை, சேலம் உட்பட 9 நகரங்களில் 100 நாள் ஓடியது. நெல்லையில் சென்டரல் தியேட்டரில் 120 நாள் ஓடியது குறிப்பிடத்தக்கது. 1969ம் ஆண்டின் சிறந்த படத்துக்கான தமிழக அரசின் விருது இப்படத்துக்குக் கிடைத்தது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி