ஹிஜ்ரி வருடம் 1434 துல்கஃதா மாதம் பிறை 24
விஜய வருடம் புரட்டாசி மாதம் 15ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY,OCTOBER ,01, 2013
வரு. 81 இல. 233
 

நியூயோர்க்கில் மன்மோகன் சிங், நவாஸ் ஷெரீப் சந்திப்பு; இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதிகளை ஒடுக்க வலியுறுத்தல்

எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல் பற்றி பேச்சு

நியூயோர்க்கில் மன்மோகன் சிங், நவாஸ் ஷெரீப் சந்திப்பு; இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதிகளை ஒடுக்க வலியுறுத்தல்

அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மன்மோகள் சிங், நியூயோர்க் நகரில் நடந்து வரும் ஐ. நா. பொதுச்சபை கூட்டத்தில் கடந்த சனிக்கிழமை கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவர், தீவிரவாதத்தின் மையமாக பாகிஸ்தான் செயல்படுவதாகக் குற்றம் சாட்டினார். இந்தியாவுக்கு எதிரான எல்லை தாண்டிய தீவிரவாத செயல்களை பாகிஸ்தான் நிறுத்தாத வரையில், அந்த நாட்டுடனான உறவுகள் மேம்படாது என திட்டவட்டமாக கூறினார். காஷ்மீர் இந்தியாவின் ஒருங் கிணைந்த பகுதி என்றும் மன்மோகன் சிங் உறுதிபட தெரிவித்தார்.

காஷ்மீர் உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளையும் பாகிஸ்தானுடன் சிம்லா உடன்படிக்கையின் அடிப்படையில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தி தீர்த்துக் கொள்ள இந்தியா உறுதி கொண்டுள்ளது எனவும் அவர் தெளிவுபடுத்தினார். எல்லை தாண்டிய தீவிரவாதத்தை இந்திய மண்ணில் ஊக்குவித்து வரும் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவின் கடுமையான நிலைப்பாட்டை பிரதமர் மன்மோகன் சிங் வெளிப்படுத்தினார்.

இந்த நிலையில் ஐ. நா. பொதுச்சபை கூட்டத்தின் இடையே நியூயோர்க் பெலஸ் ஹோட்டலில் பிரதமர் மன்மோகன் சிங், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் நேற்று முன்தினம் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது வெளியுறவுத்துறை மந்திரி சல்மான் குர்ஷித், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன், வெளியுறவுத்துறை செயலாளர் சுஜாதா சிங் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். பாகிஸ்தான் தரப்பில் பிரதமரின் வெளியுறவுத்துறை ஆலோசகர் சர்தாஜ் அஜீஸ், உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த சந்திப்பின் போது, பாகிஸ்தான் மண்ணில் இந்தியாவுக்கு எதிராக எல்லை தாண்டிய தீவிரவாதத்தை சதிசெய்து அரங்கேற்றி வரும் பிரச்சினையை நவாஸ் ஷெரீபிடம் பிரதமர் மன்மோகன் சிங் எழுப்பினார். எல்லை தாண்டிய தீவிரவாதத்தை ஒடுக்குவதற்கு பாகிஸ்தான் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களை மூட வேண்டும். அப்போது தான் இரு தரப்பு உறவு மேம்படும் என்று மன்மோகன்சிங் கண்டிப்புடன் கூறினார். இந்திய வீரர் தலையை பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் துண்டித்து எடுத்துச் சென்ற விவகாரத்தையும் பிரதமர் மன்மோகன்சிங் எழுப்பினார். மும்பை தாக்குதல் வழக்கில் சதிகாரர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டித்தே ஆக வேண்டும் எனவும் கூறினார்.

முதலில் அதிகாரிகள் குழுவினருடன் சேர்ந்து நவாஸ் ஷெரீப்புடன் பேச்சு நடத்திய பிரதமர் மன்மோகன் சிங் பின்னர் பாகிஸ்தான் பிரதமருடன் தனிப்பட்ட முறையிலும் பேசினார். அப்போது 'இந்தியாவின் கோரிக்கைகள் குறித்து கவனம் செலுத்துவேன்' என மன்மோகன் சிங்கிடம் நவாஸ் ஷெரீப் உறுதி அளித்தார். பேச்சுவார்த்தையின் போது, இந்தியாவுக்கு வருமாறு நவாஸ் ஷெரீப்புக்கு பிரதமர் மன்மோகன் சிங் அழைப்பு விடுத்தார். இதே போன்று மன்மோகன் சிங்கையும் பாகிஸ்தான் வருமாறு நவாஸ் ஷெரீப் அழைப்பு விடுத்தார். இந்த சந்திப்பை தொடர்ந்து இந்திய- பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரிகளும் சந்தித்துப் பேசினர்.

காஷ்மீரில் ஜம்மு பகுதியில் சில தினங்களுக்கு முன்பு பாகிஸ்தான் இராணுவ உடை அணிந்து வந்த தீவிரவாதிகள் இரட்டை தாக்குதல்கள் நடத்தி இராணுவ அதிகாரி, பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 10 பேரை சுட்டுக் கொன்றதால் பாகிஸ்தான் பிரதமர் நவாஷ் ஷெரீப்புடன் பிரதமர் மன்மோகன் சிங் பேச்சுவார்த்தை நடத்தக் கூடாது என எதிர்க்கட்சிகள் வலியுறுத்திய நிலையில், பிரதமர் மன்மோகன்சிங் நவாஸ் ஷெரீப் சந்திப்பு நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மன்மோகன் சிங் நேற்று முன்தினம் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசினாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். முதலில் அதிகாரிகள் குழுவுடன் இந்தப் பேச்சுவார்த்தை நடந்தது. தொடர்ந்து தனிப்பட்ட முறையில் ஷேக் ஹசீனாவை மன்மோகன் சிங் சந்தித்துப் பேசினார். அப்போது இதில் ஷேக் ஹசீனாவின் மகளும் வந்து சேர்ந்து கொண்டார் தனது நாட்டின் மின் பற்றாக்குறையை சமாளிக்க உதவியதற்காக இந்தியா உதவி செய்ததை ஷேக் ஹசீனா மனதார பாராட்டினார். இந்தியாவில் தோன்றி, பங்களாதேஷில் பாயும் தீஸத்தா நதிநீர் உடன்படிக்கை தொடர்பாகவும் இரு தலைவர்களும் விவாதித்தனர்.

எல்லைப் பிரச்சினை உடன்படிக்கை குறித்தும் மன்மோகன்சிங்கும், ஷேக் ஹசீனாவும் இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்த பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசினா, "எல்லை பிரச்சினை உடன்படிக்கையை தீவிரமாக எதிர்க்கிற இந்திய மக்கள் அரசியல் கட்சிகள் சாதகமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதைத்தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று கூறினார்.

நேபாள நாட்டின் இடைக்கால பிரதமர் கில்ராஜ் ரெக்மியையும் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று முன்தினம் சந்தித்துப் பேசினார். அப்போது மன்மோகன் சிங்கிடம் நேபாளத்தில் 2வது அரசியல் நிர்ணயசபை தேர்தல்கள் திட்டமிட்டபடி நவம்பர் 19ம் திகதி நடத்தப்படும் என்று நேபாள பிரதமர் கூறினார். இது தொடர்பான இந்தியாவின் ஆதரவுக்கு அவர் மன்மோகன்சிங்கிடம் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி