ஹிஜ்ரி வருடம் 1434 துல்கஃதா மாதம் பிறை 24
விஜய வருடம் புரட்டாசி மாதம் 15ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY,OCTOBER ,01, 2013
வரு. 81 இல. 233
 

5ஆவது கால்டன் கிண்ணம்: ஹம்பாந்தோட்டை அணி சம்பியன்

5ஆவது கால்டன் கிண்ணம்: ஹம்பாந்தோட்டை அணி சம்பியன்

ஹம்பாந்தோட்டை விளையாட்டுக் கழகம், இளைஞர்களுக்கான நாளைய அமைப்பு என்பன இணைந்து ஏற்பாடு செய்த 5வது கால்டன் கிண்ண கூடைப்பந்தாட்டத்தை ஹம்பாந்தோட்ட நீல அணி கைப்பற்றியது.

கொழும்பு ஹென்றி பேதீரிஸ் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் நடப்பு சம்பியனான கொழும்பு கூடைப்பந்தாட்ட அணியை 64-61 எனும் புள்ளி வித்தியாசத்தில் வீழ்த்தியே வெற்றியை தனதாக்கிக் கொண்டது. போட்டியின் முதல் பாதியில் கொழும்பு அணி 12-13 எனும் புள்ளி வித்தியாசத்தில் முன்னிலை வகித்தது.

இதேவேளை போட்டி முடிவடைவதற்கு 6 செக்கன் உள்ள நிலையில் ஹம்பாந்தோட்ட நீல அணி 55-52 எனும் புள்ளி வித்தியாசத்தில் வெற்றிபெறும் தறுவாயில் இருந்த நிலையில் கொழும்பு அணியின் வீரர் கடைசி நேரத்தில் 3 புள்ளியை பெற்றுக்கொடுத்ததால் போட்டியில் இரு அணிகளும் 55-55 எனும் கணக்கில் இருந்ததால் போட்டி சமநிலை அடைந்தது.

இதேவேளை போட்டியின் வெற்றி- தோல்வியை நிர்ணயிப்பதற்காக இரு அணிகளுக்கும் தலா 5 நிமிடம் வழங்கப்பட்டது. வழங்கப்பட்ட 5 நிமிடங்களில் ஹம்பாந்தோட்டை அணி வீரர்களின் சிறப்பான ஆட்டத்தின் காரணமாக 9-6 எனும் புள்ளிகள் பெற்று ஹம்பாந்தோட்டை அணி வெற்றிபெற்றது.

இதேவேளை ஹம்பாந்தோட்டை அணி சார்பாக மிலான் அபேசேகர 28 புள்ளிகளையும், கொழும்பு அணி சார்பாக கயான் 18 புள்ளிகளையும் பெற்றுக்கொடுத்தனர். அத்துடன் கடந்த வருடம் இடம்பெற்ற போட்டியில் ஹம்பாந்தோட்டை அணி கொழும்பு அணியிடம் தோல்வியைத் தழுவியமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை வெற்றி பெற்ற ஹம்பாந்தோட்டை அணிக்கு 2 இலட்சம் ரூபா பணப் பரிசும், இரண்டாமிடம் பெற்ற அணிக்கு ஒரு இலட்சம் ரூபா பணப்பரிசும் கிண்ணமும் வழங்கப்பட்டது.

இதேவேளை இச்சுற்றுப் போட்டியில் டிவிசன் 11 பிரிவில் கொழும்பு அணி வெற்றிபெற்றது. அதேநேரம் 14 வயதுக்குட்பட்ட பாடசாலைகளுக் கிடையிலான போட்டியில் கொழும்பு ரோயல் கல்லூரியும் பெண்களுக்கான போட்டியில் கொழும்பு லசியம் பாடசாலையும் வெற்றிபெற்றன.

கண்டி கிங்ஸ்வூட், காலி மஹிந்த, கொழும்பு இஸிபத்தானை, நீர்கொழும்பு ஆவே மேரியா மற்றும் கொழும்பு மஹநாம கல்லூரிகளுக்கு கூடைப்பந்தா ட்டத்தை அபிவிருத்தி செய்யும் நோக்கில் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான கூடைப்பந்தாட்ட உபகரணம் என்பன வழங்கப்பட்டது. இதேவேளை இப்போட்டியின் சிறந்த மக்கள் தெரிவு வீரராக ஹம்பாந்தோட்டை கறுப்பு அணியின் வீரர் செகானுக்கு மோட்டார் சைக்கிள் ஒன்றும் பரிசாக வழங்கப்பட்டது.

இறுதிப் போட்டிக்கு பிரதம அதிதியாக விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, உள்நாட்டு வர்த்தக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, இலங்கை கூடைப்பந்தாட்ட சம்மேளனத் தலைவர் சரத் ஏக்கநாயக்க, ஹம்பாந் தோட்ட மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, ஏயார் டெல் நிறுவன பிரதம நிறைவேற்று அதிகாரி சுரேன் குணவர்தன, இளைஞர்களுக்கான நாளைய அமைப்பின் செயலாளர் லலித் பீயும் பெரேரா ஆகியோர் கலந்துகொண்டனர். இப்போட்டியை கண்டுகளிப்பதற்கு அதிகளவான மக்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி