ஹிஜ்ரி வருடம் 1434 ஜுமாதல் ஊலா மாதம் பிறை 09
நந்தன வருடம் பங்குனி மாதம் 09ம் திகதி வெள்ளிக்கிழமை
FRIDAYDAY ,MARCH,22, 2013
வரு. 81 இல. 70
 

மியன்மாரில் மீண்டும் கலவரம் 10க்கும் அதிகமானோர் பலி; கட்டடங்கள்

மியன்மாரில் மீண்டும் கலவரம் 10க்கும் அதிகமானோர் பலி; கட்டடங்கள்

தீக்கிரை; இரண்டாவது நாளாக ஊரடங்கு சட்டம்

மத்திய மியன்மாரில் ஏற்பட்டுள்ள இனக்கலவரத்தில் 10க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து இரண்டாவது நாளாகவும் நேற்றைய தினத்தில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

ஏற்கெனவே ரகினெ மாநிலத்தில் கடந்த ஆண்டு பெளத்தர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் ஏற்பட்ட கலவரத்தின் பதற்றம் இன்னும் தணியாத நிலையிலேயே அங்கு மீண்டும் மோதல் வெடித்துள்ளது. மக்டிலா நகரில் இடம்பெற்றுள்ள இந்த கலவரத்தில் கொல்லப்பட்டோரது உடல்களை காணக்கூடியதாக உள்ளது என மியன்மார் எதிர்க்கட்சி உறுப்பினரான வின் ஹிடைன் ஏ.எப்.பி. செய்திச் சேவைக்கு கூறியுள்ளார். “10க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்” என அவர் குறித்த நகரில் இருந்து தொலைபேசி ஊடே தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் ஒருவருக்கு சொந்தமான தங்கக் கடையில் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற வாய்த் தர்க்கமே கலவரமாக வெடித்துள்ளது. மியன்மார் பொலிஸ் படையின் பேஸ்புக் பக்கத்தில், 200க்கும் அதிகமானோர் வீதிகளில் மோதிக் கொண்டதாக கூறப்பட்டுள்ளது.

இந்த கலவரத்தில் ஒரு புத்த பிக்கு உட்பட இருவர் கொல்லப்பட்டதை பொலிஸார் உறுதி செய்துள்ளனர். இந்த கலவரம் காரணமாக பல கட்டடங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. பல பள்ளிவாசல்களும் தீமூட்டப்பட்டுள்ளன.

ஊரடங்குச் சட்டம் அமுலுக்கு வந்தபோதும் பல இடங்களிலும் மோதல் நீடிப்பதாகவும் அதனை கட்டுப்படுத்த நிர்வாகம் தடுமாறி வருவதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதில் உள்ளூர் வாசி ஒருவர் தமது பெயரை வெளிப்படுத்த வேண்டாம் என்ற கோரிக்கையுடன் ஏ.எப்.பிக்கு அளித்த தகவலில் தாம் பல இறந்த உடல்களை கண்டதாக குறிப்பிட்டுள்ளார். “நிலைமை மோசமாக இருக்கிறது. பொலிஸார் மக்களை கட்டுப்படுத்துவதில்லை. கத்தி, கம்புகளுடன் ஒரு சில குழுவினர் வீதிகளில் இருக்கிறார்கள்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கெனவே மியன்மாரில் முஸ்லிம்களுக்கும் பெளத்தர்களுக்கும் இடையில் பதற்றம் நீடித்து வருகிறது. ரகினெ மாநிலத்தில் இடம்பெற்ற கலவரத்தில் குறைந்தது 180 பேர் கொல்லப்பட்டதோடு 110,000க்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்து வாழ்ந்து வருகின்றனர்.

தற்போது கலவரம் வெடித்திருக்கும் மக்டிலா நகரில் சுமார் 30,000 முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர். இங்கு மொத்த சனத்தொகை சுமார் 80,000 ஆகும். இதற்கு முன்னர் இவ்வாறான ஒரு கலவரத்தை அனுபவித்ததில்லை என அந்நாட்டு எதிர்க்கட்சியான ஜனநாயகத்திற்கான தேசிய லீக் கட்சியின் உறுப்பினர் வின் ஹெடைன் குறிப்பிட்டார். இது கடந்த ஆண்டு ரகினெ மாநிலத்தில் இடம்பெற்ற கலவரத்தின் தாக்கமாக இருக்கலாம் எனவும் அவர் சந்தேகம் வெளியிட்டார்.

இந்த கலவரத்தில் ஒருசிலர் காயமடைந்ததாகவும் புதிதாக மோதல்கள் வெடித்திருப்பதாகவும் உள்ளூர் பொலிஸார் குறிப்பிட்ட போதும் அவர் மேலதிக எந்த தகவலையும் வெளியிடவில்லை.

சுமார் 60 மில்லியன் மக்கள் தொகை கொண்ட மியன்மாரில் பெரும்பாலான முஸ்லிம்கள் இந்தியா, சீனா மற்றும் பங்களாதேஷ் பூர்வீகத்தை கொண்டவர்களாகும். எனினும் கடந்த மூன்று தசாப்தங்களாக மியன்மாரில் சனத்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை.

பிரிட்டன் காலனித்துவ காலத்தில் தொழிலாளர்களாக இந்தியாவிலிருந்து பெரும்பாலான முஸ்லிம்கள் மியன்மாரில் குடியேறியுள்ளனர். எனினும் இவர்களது மொத்த சனத்தொகை குறித்து இதுவரை எந்த மதிப்பீடும் செய்யப்படவில்லை.

கடந்த காலங்களில் சிறு சிறு இனக்கலவரங்கள் ஏற்பட்ட போதும் ரகினெ மாநிலத்தில் கடந்த ஆண்டு இது பாரிய கலவரமாக உருவானது. இந்த கலவரத்திற்கு பின்னர் ரகினெ மாநிலத்தில் வாழ்ந்த ரொஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகளாக இடம்பெயர்ந்ததோடு நூற்றுக் கணக்கானோர் சட்டவிரோதமாக மலேஷியா போன்ற நாடுகளுக்கு படகு மூலம் தஞ்சம் புகுந்து வருகின்றனர்.

உலகில் துஷ்பிரயோகத்திற்குள்ளான சிறுபான்மையினராக ரொஹிங்கிய முஸ்லிம்களை ஐ.நா. அடையாளப்படுத்தி வருகிறது. மியன்மாரில் பங்களாதேஷில் இருந்து இடம்பெயர்ந்ததாக கூறப்படும் 800,000 க்கும் அதிகமானவர்கள் வாழ்ந்து வருவதாக நம்பப்படுகிறது. இவர்களுக்கு பிரஜா உரிமை வழங்க மியன்மார் அரசு மறுத்து வருகிறது. இதில் தங்கக் கடையொன்றில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின் போது ஒருவர் காயமடைந்ததை அடுத்தே கலவரம் தீவிரம் அடைந்ததாக மியன்மார் பொலிஸாரின் பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மோதலைத் தொடர்ந்து கலகக்காரர்கள் நகரில் இருக்கும் கட்டடங்களை தாக்க ஆரம்பித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த மோதல் காரணமாக 6 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் ஒரு பெளத்த பிக்கு மற்றும் முஸ்லிம் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் பொலிஸ் பேஸ்புக் பக்கத்தில் மேலும் குறிப்பிடப்பட்டு ள்ளது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி