ஹிஜ்ரி வருடம் 1434 ஜுமாதல் ஊலா மாதம் பிறை 09
நந்தன வருடம் பங்குனி மாதம் 09ம் திகதி வெள்ளிக்கிழமை
FRIDAYDAY ,MARCH,22, 2013
வரு. 81 இல. 70
 

குவைட்டில் 4000 நாடற்றோருக்கு பிரஜா உரிமை வழங்கும் சட்ட மூலம் நிறைவேற்றம்

குவைட்டில் 4000 நாடற்றோருக்கு பிரஜா உரிமை வழங்கும் சட்ட மூலம் நிறைவேற்றம்

குவைட் பாராளுமன்றம் 4000 வெளிநாட்டினருக்கு பிரஜா உரிமை வழங்கும் சட்ட மூலத்திற்கு ஆங்கீகாரம் அளித்துள்ளது. இதன் மூலம் நாடின்றி வாழும் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என எம்.பி.க்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். எனினும் இந்த பிரஜா உரிமை சட்டத்தை அங்கீகரிக்க அந்நாட்டு எமீர் சட்ட மூலத்தில் கைச்சாத்திட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சட்ட மூலத்தில் 4000 நாடற்ற மக்கள் என்பதுக்கு பதில் 4000 வெளிநாட்டினர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. உள்நாட்டிலிருக்கும் ‘பெய்துன்’ இன மக்களுக்கு பிரஜா உரிமை வழங்கவே இந்த சட்ட மூலம் கொண்டுவரப்பட்டுள்ளது.

சுமார் 106,000 பெய்துன் இனத்தினர் தம்மை குவைட் நாட்டினர் என கோரி வருகின்றனர். ஆனால் அந்நாட்டு அரசு இவர்களை சட்டவிரோத குடியேற்ற வாசிகள் என்றே கருதி வருகிறது. அண்டிய நாடான ஐக்கிய அரபு இராச்சியத்தில் 10000 தொடக்கம் 100,000 வரையான பெய்துன் இனத்தினர் வாழ்கின்றனர்.

குவைட் 1961ல் சுதந்திரம் பெற்ற போது பெய்துன் இனத்தினர் உள்நாட்டு பிரஜைகளாக அங்கீகரிக்கப்படவில்லை. இவர்கள் பணி நிமிர்த்தம் குவைட்டில் குடியேறிவர்கள் என கருதப்படுகிறது. எனினும் 1960,70 களில் குவைட் பிரஜைகளைப் போன்றே இவர்களுக்கும் சமூக மற்றும் பொருளாதார சலுகைகள் வழங்கப்பட்டன. ஆனால் 1980 களில் பிராந்திய அரசியலில் ஸ்திரமின்மை ஏற்பட்டதைத் தொடர்ந்து இவர்களது சமூக அந்தஸ்து குறைக்கப்பட்டு சட்ட விரோத குடியேற்ற வாசிகளாக கருதப்பட்டனர்.

இதனால் பெரும்பாலான பெய்துன் இனத்தினர் வறுமையில் வாழ்கின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக தமது பிரஜா உரிமைக்காக பெய்துன் இனத்தினர் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை நடத்தி போராடி வருகின்றனர்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி